உயிர்களை காவு வாங்கும் தொப்பூர் கணவாய்... இனியாவது விமோசனம் பிறக்குமா?

தர்மபுரி: சேலம் - பெங்களூர் நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் பகுதியில் இன்று நடந்த பயங்கர சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து உயிர்களை காவு வாங்கும் தொப்பூர் கணவாய்!

அபாயகரமான சாலை

தர்மபுரி- சேலம் இடையிலான நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொப்பூர் கணவாய் வாகன ஓட்டிகளுக்கு எப்போது அபாயகரமான பகுதியாகவே இருந்து வருகிறது. தொப்பூர் பகுதிக்கு சாலை விபத்து ஒன்றும் புதிதான விஷயமல்ல. ஆனால், இன்று நடந்த விபத்து மிக மோசமானதாக அமைந்துள்ளது.

பயங்கர விபத்து

தர்மபுரியிலிருந்து சேலம் நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முன்னால் மற்றும் அருகில் வந்த கார்கள் மீது பயங்கரமாக மோதி நசுக்கியது. இதில், பல கார்கள் அப்பளம் போல நொறுங்கி உருக்குலைந்தன. இந்த பயங்கர விபத்தில் கார்களில் சிக்கியவர்கள் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து அறிந்த போலீசாரும், நெடுஞ்சாலைத் துறையினரும் விரைந்து வந்த மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

வாடிக்கையான விபத்துக்கள்

அப்போது, சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்தார். இந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடைபெறுவது வாடிக்கையான நிகழ்வாக மாறி இருக்கிறது.

மலைச் சாலை

சேலம் - பெங்களூர் இடையிலான நெடுஞ்சாலையில் தர்மபுரி அருகே தொப்பூர் கணவாய் பகுதி அமைந்துள்ளது. இந்த தொப்பூர் பகுதியில் மலைக்கு ஊடாக இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. தர்மபுரியிலிருந்து செல்லும்போது, தொப்பூருக்கு முன்னால் உள்ள மலைச்சாலையானது அபாயகரமான வளைவுகளுடன் சில கிலோமீட்டர் தூரம் சரிவாக செல்கிறது.

வேகத்தால் விபரீதம்

இதனால், தர்மபுரியிலிருந்து சேலம் நோக்கி செல்லும் வாகனங்கள் இந்த பகுதியை மிக கவனமாகவும், வேகத்தை குறைத்தும் கடக்க வேண்டியது அவசியம். இதற்காக அங்கு பல எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், பெரும்பாலான வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் இந்த பகுதியில் வேகமாக செல்வதால் அடிக்கடி இந்த பகுதியில் விபத்து நேரிடுகிறது.

கனரக வாகன ஓட்டுனர்களுக்கு சவால்

மிக மோசமான வளைவுகள் கொண்ட இந்த பாதையில் அதிக பாரம் சுமந்து வரும் வாகனங்களும் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதும் இங்கு தொடர்கதையாகவே உள்ளது. அத்துடன், தொப்பூர் கணவாய் இறக்கத்தில் அமைந்துள்ள குறுகலான பாலமும் மிகவும் அபாயகரமானதாகவும், வளைவில் அமைந்துள்ளதால் கனரக வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிர்களை காவு வாங்கி வருகிறது.

பாதுகாப்பை அதிகரிக்க கோரிக்கை

இந்த சாலையின் வடிவமைப்பில் உரிய மாற்றங்கள் அல்லது அகலப்படுத்தி பாதுகாப்பை அதிகரித்தால் மட்டுமே விபத்துக்களை தவிர்க்க வழிபிறக்கும். இந்த விபத்தின் மூலமாவது அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கவனம் செலுத்தி, இந்த சாலையின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் என்று கருதப்படுகிறது.

விமோசனம் பிறக்குமா?

இன்று விபத்துப் பகுதியில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கார்த்திகா, இந்த இடத்தில் சாலைப் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இனியாவது விமோசனம் பிறக்குமா என்று இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளும், அப்பகுதி மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Most Read Articles
 

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Accident is nothing new to the Thoppur ghat near Dharmapuri.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X