பாலத்திற்கு அடியில் மிக் விமானத்தை செலுத்திய துணிச்சலான போர் விமானி!

Written By:

சாதாரண விமானங்களை இயக்குவதே பெரும் சாகசமான காரியமாக பார்க்கப்படுகிறது. அதிலும், போர் விமானங்களை இயக்குவது என்பது அதிக பயிற்சி, கூடுதல் விழிப்புணர்வுடன், சமயோஜிதமாக செயல்படும் புத்தி கூர்மையும் இருக்க வேண்டியது அவசியம்.

அதிவேகத்தில் இயக்கப்படும் போர் விமானங்களை இயக்குவது கர்ணம் தப்பினால் மரணம் என்பதற்கு ஒப்பான விஷயம். ஆனால், சில பைலட்டுகள் இதையெல்லாம் தாண்டி ஒருபடி மேலே போய் இந்த போர் விமானங்களின் முழு திறனையும், தங்களது திறமையையும் சேர்த்து நிரூபிக்கும் விதத்தில் சில சாகசங்களை செய்திருக்கின்றனர்.

அந்த வகையில், கடந்த 1965ம் ஆண்டில் சோவியத் யூனியனின் விமானப்படையை சேர்ந்த வாலன்டின் பிரிவாலோவ் என்ற பைலட் ஒரு சாகசத்தை நிகழ்த்தினார். இதனை சாகசம் என்பதைவிட அதிசய நிகழ்வாகவே பார்க்கலாம்.

ஆம், மிக்-17 ரக போர் விமானம் ஒன்றை ஆற்று பாலத்திற்கு ஊடாக செலுத்தி உலகையே திரும்பி பார்க்க வைத்தார். பைலட்டுகளையே ஆச்சரியப்பட வைத்த இந்த நிகழ்வை மேற்கு சைபீரியாவில் ஓடும் ஓப் ஆற்றில் உள்ள பாலத்தில் நிகழ்த்திக் காட்டினார்.

1965ம் ஆண்டு ஜூன் மாதம் 4ந் தேதி சோவியத் யூனியன் தனது விமானப்படை சாகச நிகழ்ச்சியை ஓப் ஆற்றின் அருகே நடத்தியது. இதனை காண ஆற்றின் கரைகளில் பெரும் கூட்டம் கூடியிருந்தது. அது சாதாரண விமான சாகச கண்காட்சியாகவே நடத்த திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், வாலன்டின் தனது விமானம் ஓட்டும் திறமை காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில், அதிகாரிகளிடம் முன் அனுமதி பெறாமலேயே இந்த சாகசத்தை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அங்குள்ளவர்கள் பிரமித்து போனார்கள். கை தட்டல் அடங்கவே வெகுநேரமானதாம்.

ஆனால், அவர் முன் அனுமதி பெறாமல் இவ்வாறு சாகசம் நிகழ்த்தியது அவரது மேல் அதிகாரிகளை கோபமடைய செய்துள்ளது. உடனடியாக, அவரது பைலட் உரிமம் ரத்து செய்யப்பட்டதோடு, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்பட்டதாம்.

அப்போதைய சோவியத் யூனியனின் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த மார்ஷல் ரோடியோன் இந்த சாகசத்தை பார்த்து வியந்து போய் அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சோவியத் யூனியனின் புகழ்மிக்க குபின்கா மிலிட்டரி ஏர்பீல்டில் செயல்பட்ட விமானப் படை சாகச அணியில் சேர்க்கப்பட்டதுடன், பல உயரிய பதவிகளையும் வகித்தார்.

வாலன்டின் சாகசம் நிகழ்த்திய ஆற்று பாலத்தின் நடுபகுதி 120 மீட்டர் அகலமும், 30 மீட்டர் உயரமும் கொண்டது. மணிக்கு 700 மைல் வேகத்தில் அவர் அந்த போர் விமானத்தை செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுஒருபுறம் இருக்க, இந்த சாகச நிகழ்வு குறித்த புகைப்படங்கள் மீது சந்தேகக் கணைகள் வீசப்பட்டன. மேலும், இது வெற்று புகழுக்காக சோவியத் யூனியனால் பரப்பப்பட்ட செய்தி என்றும், எனவே, இதனை ஆவணப்படுத்த முடியாது என்ற கூற்றும் சாதனை நிகழ்வு பதிவு அமைப்பினரிம் வாதமாக இருக்கிறது.

ஆனாலும், சோவியத் யூனியின் முக்கிய எதிரியான அமெரிக்க பத்திரிக்கைகள் கூட இந்த செய்தியை இரு மாதங்கள் கழித்து வெளியிட்டதாக ரஷ்ய மீடியாக்கள் தெரிவிக்கின்றன.

மேலும்... #ராணுவம் #military
English summary
Soviet Pilot Flew a MiG 17 Under A Bridge. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos