தென் இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகின் பிதாமகன் கோவை கரிவர்தன்!

தென் இந்திய மோட்டார் உலகின் பிதாமகன்களில் ஒருவராக கோவையை சேர்ந்த சுந்தரம் கரிவர்தன் அழைக்கப்படுகிறார். கோவை, லெட்சுமி மில்ஸ் குடும்பத்தின் வாரிசான இவர் மிக திறமைவாய்ந்த கார் பந்தய வீரர் மட்டுமின்றி ரேஸ் கார்களை வடிவமைப்பதிலும் வல்லவர்.

இந்தியாவின் இன்றைய முன்னணி கார் பந்தய வீரர்களான நரேன் கார்த்திகேயன், கரூண் சந்தோக் மற்றும் அர்மான் இப்ராஹீம் போன்றவர்களுக்கு கரிவர்தன் வடிவமைத்து கொடுத்த குறைந்த விலை ரேஸ் கார்கள்தான் அடித்தளம் அமைத்துக் கொடுத்தன.

கார் பந்தய வீரர், ரேஸ் கார் வடிவமைப்பாளர் போன்ற பல முகங்களை கொண்டு இந்திய மோட்டார்ஸ்போர்ட்ஸ் களத்தில் நீங்கா இடம் பிடித்தார். இவரது நினைவாகவே கோவை மோட்டார்ஸ்போர்ட்ஸ் ஓடுதளம், கரி மோட்டார் ஸ்பீட்வே என்றழைக்கப்படுகிறது. இந்திய மோட்டார்ஸ்போர்ட்ஸ் உலகின் பிதாமகன்களில் ஒருவான கரிவர்தன் பற்றிய சிறப்பு செய்தித் தொகுப்பு.

பாரம்பரியம்

பாரம்பரியம்

கரி என்று அன்போடு அழைக்கப்படும் கரிவர்தன் கோவை லெட்சுமி மில்ஸ் அதிபரின் புதல்வராவார். 1954ம் ஆண்டு பிறந்த கரிவர்தன் கோவையில் பள்ளிப்படிப்பையும் மற்றும் பிஎஸ்ஜி கல்லூரியில் தொழில்நுட்பப் கல்வியையும் முடித்தார். இதையடுத்து, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம் படித்தார்.

ரேஸ் ஆர்வம்

ரேஸ் ஆர்வம்

இளம் பிராயத்திலேயே கார் ரேஸ் ஆர்வம் மிகுந்த கரி இங்கிலாந்தில் உள்ள ஜிம் ரசெல் ரேஸ் பள்ளியில் இணைந்து பயிற்சி பெற்றார். பின்னர், இந்தியா திரும்பிய அவர் 1970களின் மத்தியில் சென்னை சோழவரம், கோல்கட்டா பாரக்பூர் ஓடுதளங்களில் நடந்த கார் பந்தய போட்டிகளில் பங்கேற்றார்.

முதல் கிராண்ட் ஃப்ரீ

முதல் கிராண்ட் ஃப்ரீ

1973ல் முதன்முறையாக சோழவரம் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியின் மூலம் களமிறங்கினார். அதுமுதல் 1995ம் ஆண்டு வரை தொடர்ந்து அனைத்து பந்தயங்களிலும் தனது சொந்த வடிவமைப்பில் உருவான கார்களுடன் கலந்து கொண்டார்.

பயன்படுத்திய கார்கள்

பயன்படுத்திய கார்கள்

பிரிமியர் பத்மினி, டட்சன் 510, சிபானி டால்பின், ஃபார்முலா அட்லாண்டிக் உள்ளிட்ட பல கார்களை தனது பாணியில் மாற்றி பந்தயங்களில் பயன்படுத்தினார். ஃபார்முலா - 3 அம்சங்கள் கொண்ட கார் கூட இவரது முயற்சியில் உருவானது.

 பந்தய கார் வடிவமைப்பு

பந்தய கார் வடிவமைப்பு

ஆரம்ப காலங்களில் இவர் தயாரித்த பிளாக் பியூட்டி என்ற 300 பிஎச்பி எஞ்சின் கொண்ட பார்முலா அட்லாண்டிக் செவ்ரோன் பி40 கார் மிகவும் புகழ்பெற்றது. 1980கள் வரை பணக்காரர்கள் மட்டுமே மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையில் இறங்க முடியும் என்ற நிலை இருந்தது. இதனை மாற்றுவதற்காக புதிய முயற்சிகளை கரி துவங்கினார். குறைந்த செலவில் மாருதி 800 எஞ்சினுடன் கரி உருவாக்கிய சிங்கிள் சீட்டர் ஃபார்முலா ஃபோர்டு என்று பெயரிடப்பட்ட கார் ரேஸ் வட்டாரத்தினரை திரும்பி பார்க்க வைத்தது. இரண்டாவதாக, இவர் டிசைன் செய்த இரண்டு இருக்கை கொண்ட மெக்டவல் 100 காரில் மாருதி ஜிப்ஸியின் 1.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு வந்தது.

ஃபார்முலா மாருதி

ஃபார்முலா மாருதி

1988ல் ஃபார்முலா மாருதி என்ற பெயரில் சிங்கிள் சீட்டர் கார்களுக்கான புதிய மோட்டார் பந்தயம் துவங்கப்பட்டது. சென்னை, பார்க் ஷெரட்டன் ஓட்டலில் நடந்த விழாவில் பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர். புதிய டிரைவர்களுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் வகையில் இந்த போட்டிகள் அமைந்தன. இன்றைய முன்னணி வீரர்களான நரேன் கார்த்திகேயன், கரூண் சந்தோக், அர்மான் இப்ராஹீம் உள்ளிட்டோர் இந்த போட்டிகளின் மூலம் அறிமுகமானவர்கள்தான். 2006ம் ஆண்டு இந்த சிறிய ரக கார்களுக்கான பந்தயம் நிறுத்தப்பட்டது.

ராலி பந்தயம்

ராலி பந்தயம்

கரிவர்தன் சில ராலி ரேஸ்களிலும் பங்கேற்றுள்ளார். ராலி ரேஸ் பந்தயங்களில் எம்ஆர்எஃப் டயர் நிறுவனம் கோலோய்ச்சி வந்த நிலையில், கரியின் துணையுடன் ஜேகே டயர்ஸ் நிறுவனமும் ராலி பந்தயங்களில் களமிறங்கியது. 1992ல் இதற்காக ஜேகே ராலி டீம் என்ற அணியை கரிவர்தன் உருவாக்கினார்.

 ரேஸ் டீம்

ரேஸ் டீம்

சூப்பர்ஸ்பீட்ஸ் என்ற பெயரில் கரி வர்தனின் ரேஸ் அணிக்கு லட்சுமி மில்ஸ் ஸ்பான்சர் வழங்கியது. துவக்க காலங்களில் கரி வர்தனின் ரேஸ் கார்கள் வெள்ளை மற்றும் நீல நிற பெயிண்ட்டிங்கில் வந்தன. பின்னர், அவை கருப்பு மற்றும் தங்க நிறத்திற்கு மாற்றப்பட்டன.

விமான தயாரிப்பு

விமான தயாரிப்பு

செல்வ செழிப்பு மிக்க பாரம்பரியத்தில் வந்த கரிவர்தன் குடும்பத்தினரிடம் சொந்தமாக செஸ்னா ரக விமானம் இருந்தது. இதனால் என்னவோ, கரி வர்தனுக்கு விமான தயாரிப்பிலும் ஆர்வம் இருந்தது. 1989ம் ஆண்டு சிறிய பவர் கிளைடர் விமானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அவர் நிறுவினார். அதில், யெஸ்டி மோட்டார்சைக்கிளின் 250சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட சிறிய கிளைடர் ரக விமானங்களை உருவாக்கும் பணிகள் நடந்தன. தனது தயாரிப்பில் உருவான கிளைடர் விமானங்களை ஊட்டி, திண்டுக்கல், கோவில்பட்டி மற்றும் கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் வைத்து கரி சோதனைகளை நடத்தியுள்ளார்.

 கார் தயாரிப்பு

கார் தயாரிப்பு

லெட்சுமி குழுமத்தின் கீழ் செயல்படும் பல்வேறு நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளை கரிவர்தன் கவனித்து வந்தார். புதிய துறைகளில் தயங்காமல் கால் பதித்து வெற்றி ஈட்டும் திறமையானவராக கருதப்பட்டார். 1990களில் இங்கிலாந்தை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து ஃபோர்டு ஜிடி40, லோட்டஸ் 7 மற்றும் ஏசி கோப்ரா உள்ளிட்ட கார்களின் மாதிரி மாடல்களை தயாரிப்பதற்கான உரிமத்தை பெற்றார். ஆனால்,,,,

 விபத்தில் மரணம்

விபத்தில் மரணம்

1995ம் ஆண்டு ஆகஸ்ட் 24ந் தேதி புஷ்பக் பயிற்சி விமானத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்தில் கரி வர்தன் மரணமடைந்தார். 41 வயதில் மரணத்தை தழுவிய கரி வர்தனின் மறைவு இந்திய மோட்டார்ஸ்போர்ட்ஸ் களத்தில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியது.

 எளிமையானவர்

எளிமையானவர்

செல்வாக்கும், செல்வ வளமும் மிக்க குடும்பத்தில் பிறந்தாலும், எளிதாக அணுகக்கூடியவராக கரி புகழப்பெறுகிறார். இளம் தலைமுறை வீரர்களை எளிதாக இனம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்துவதிலும் காரிக்கு நிகர் அவர்தான் என்கின்றனர் நெருங்கியவர்கள். அவரது மறைவு இளம் கார் பந்தய வீரர்களுக்கு பேரிழப்பாகவே இதுநாள் வரை இருந்து வருகிறது.

கரி மோட்டார் ஸ்பீடு வே

கரி மோட்டார் ஸ்பீடு வே

கோவை, செட்டிபாளையத்தில் அமைந்துள்ள கரி மோட்டார் ஸ்பீடு வே முதலில் கரி வர்தனின் சிறிய விமான தயாரிப்பு நிறுவனத்தின் சோதனை ஓட்ட தளமாக பயன்படுத்தப்பட்டது. இதன்பின்னர், 2002ல் இந்த ஓடுதளத்தை முன்னாள் கார் பந்தய வீரர் விஜய் குமார் வாங்கியதோடு, கார் பந்தய ஓடு தளமாக மாற்றினார். பின்னர் 3.2 கிமீ நீளம் கொண்ட இந்த ஓடுதளம் 2003ம் ஆண்டு திறக்கப்பட்டது. தேசிய அளவிலான பல மோட்டார் பந்தயங்கள் இங்கு நடைபெற்று வருகின்றன.

டாடா கார்கள் சோதனை

டாடா கார்கள் சோதனை

மோட்டார் பந்தயங்கள் தவிர்த்து பல புதிய கார்களை சோதனை நடத்தும் தளமாகவும் இந்த ஓடுதளம் தற்போது பயன்படுத்தப்படுகிறது. டாடா கார்களின் எஞ்சின்களை ட்யூனிங் செய்து தரும் கோவையை சேர்ந்த ஜெயம் ஆட்டோமோட்டிவ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்த ஓடுதளத்தில் வைத்து தற்போது கார்களை சோதனை நடத்துகின்றன.

டெஸ்ட் டிரைவ்

டெஸ்ட் டிரைவ்

ஆட்டோமொபைல் உலகை சேர்ந்த பத்திரிக்கையாளர்களும் இந்த ரேஸ் டிராக்கில் வைத்து கார்களை சோதனை செய்து காரின் சாதக, பாதகங்களை அலசி பார்க்கின்றனர்.

வித்திட்ட கரி

வித்திட்ட கரி

மோட்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் வாகன தயாரிப்பு துறையில் கரி வர்தன் துவங்கிய பல புதிய பணிகளை அவர் பாதியிலேயே விட்டுச் சென்றாலும், அவர் விதைத்த விதைகள் இப்போது பல ரூபங்களில் ஆலமரம் போல் பல்வேறு ரூபங்களில் விழுது விட்டு நிற்கின்றன என்றால் மிகையாகாது.

Most Read Articles
English summary
Before Narain Karthikeyan, Karun Chandhok, Gaurav Gill there was Karivardhan. We take a walk down memory lane and visit the legendary Karivardhan's garage. The man, the machine, Kari!
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X