வியக்க வைக்கும் மதிப்பில் உலகின் காஸ்ட்லியான டாப் 10 ராணுவ வாகனங்கள்!!

Written By:

பொருளாதாரத்தில் வளர்வதற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கிறதோ, அந்த அளவு ராணுவ பலத்தை பெருக்கிக் கொள்வதிலும் ஒவ்வொரு நாடும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டியிருக்கிறது.

இதனால், ஒவ்வொரு நாடும் ராணுவ பலத்தை பெருக்குவதற்கு மிகப்பெரிய அளவிலான தொகையை ஒதுக்கீடு செய்கின்றன. அந்த வகையில், தங்களது நாட்டின் படை பலத்தை பெருக்கிக் கொள்வதற்காக வாங்கப்பட்ட உலகின் மிகவும் காஸ்ட்லியான ராணுவத்திற்கான மோட்டார் வாகனங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கற்பனையிலும் எட்டாத தொகையை செலவழித்து வாங்கப்பட்ட அந்த மோட்டார் வாகனங்கள் உங்களையும் வியக்க வைக்கும்.

10. ஐஎன்எஸ் விக்ரமாதித்யா - ரூ.15,000 கோடி

10. ஐஎன்எஸ் விக்ரமாதித்யா - ரூ.15,000 கோடி

உலகின் காஸ்ட்லி மோட்டார் வாகன பட்டியலை எடுக்கும்போது, அதில் இந்தியா வாங்கிய மிகவும் காஸ்ட்லியான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பலும் இடம்பிடித்திருக்கிறது. ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட இந்த விமானம் தாங்கி கப்பல் 44,500 டன் எடையுடையது. மேலும், 932 அடி நீளமும், 200 அடி அகலமும், 60 மீட்டர் உயரமும் கொண்ட ஒரு மிதக்கும் விமானப் படை தளமாகவே குறிப்பிடலாம். 22 அடுக்குகள் கொண்ட இந்த கப்பலில் 20 மிக் 29 போர் விமானங்கள் மற்றும் 10 ஹெலிகாப்டர்களை நிறுத்த முடியும். 7,000 கடல் மைல் தொலைவு பயணிக்க எரிபொருள் இருக்கும். அத்துடன், 1,600 பணியாளர்கள் மற்றும் வீரர்கள் தங்குவதற்கான இடவசதியும், 16 டன் உணவு பொருட்களையும் வைக்க முடியும். நீர்மூழ்கி கப்பல்களையும், எதிரி நாட்டு போர் கப்பல்களையும் தாக்குவதற்கான ஏவுகணைகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கப்பலின் மூலம் இந்தியாவின் ராணுவ பலம் மிகவும் வலிமையாகியுள்ளது.

09. பி-2 ஸ்பிரிதி குண்டு வீச்சு விமானம்

09. பி-2 ஸ்பிரிதி குண்டு வீச்சு விமானம்

மதிப்பு: ரூ.15,840 கோடி

அமெரிக்காவின் அதிசக்திவாய்ந்த குண்டு வீச்சு விமானம். நீண்ட தூரம் சென்று தாக்குதலில் ஈடுபடும் வலிமை கொண்டது. 11,100 கிமீ தூரம் வரை பறக்கும் திறன் கொண்ட இந்த குண்டு வீச்சு விமானத்தின் இறக்கை டிசைன் எதிரி நாட்டு ரேடார்களில் புலப்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் அணுகுண்டுகளையும் எடுத்துச் சென்று தாக்குதல் நடத்த முடியும் என்பதுடன், அணுக்கதிர் வீச்சின் காரணமாக இந்த விமானத்திற்கும், விமானிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், விசேஷ பூச்சு பூசப்பட்டிருக்கிறது. மொத்தம் 22,800 கிலோ எடையுடைய ஆயுதங்களை சுமந்து செல்லும்.

Photo credit: Wiki Commons

 08. வர்யாக் விமானம் தாங்கி கப்பல்

08. வர்யாக் விமானம் தாங்கி கப்பல்

மதிப்பு: ரூ.15,850 கோடி

கடந்த 1988ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் 1990ல் வர்யாக் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1998ல் இந்த கப்பலை சீனா வாங்கியது. 2002ம் ஆண்டு சீனா கொண்டு வரப்பட்ட இந்த போர் கப்பலில் பல்வேறு மாற்றங்களை செய்து விமானம் தாங்கி கப்பலாக மாற்றப்பட்டது. தற்போது லியோனிங் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் தற்போது சீனாவின் இரண்டாவது மிகப்பெரிய போர் கப்பலாக இருக்கிறது. இந்த கப்பல் 53,050 டன் எடை கொண்டது. இந்த கப்பலில் சீன கடற்படையிந் ஜே-15 போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. சீனாவின் வலிமையை உலக அரங்கில் பரைசாற்றுவதில் இந்த கப்பல் முக்கிய பங்கு வகிக்கிறது.

Photo credit: N328KF/Wiki Commons

Recommended Video - Watch Now!
Royal Enfield Stealth Black Classic 500 Apparels Now On Sale - DriveSpark
07. வெர்ஜீனியா கிளாஸ் நீர்மூழ்கி கப்பல்

07. வெர்ஜீனியா கிளாஸ் நீர்மூழ்கி கப்பல்

ரூ.16,500 கோடி

அமெரிக்காவின் மிக நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட நீர்மூழ்கி கப்பல். மிக ஆழமான கடல்பகுதியிலும் தாக்குதல் நடத்தும் கட்டமைப்பு கொண்டது. அணுசக்தியில் இயங்கும் இந்த நீர்மூழ்கி கப்பலில் ஒரு முறைக்கு 16 நடுத்தர தூர வகை ஏவுகணைகளை செலுத்த முடியும். 7,800 டன் எடை கொண்ட நீர்மூழ்கி கப்பலில் அதிநவீன சோனார் கண்காணிப்பு சாதனம் உள்ளது. கடலுக்கடியில் 1,600 மீட்டர் ஆழம் வரை செல்லக்கூடிய இந்த கப்பல் மணிக்கு 47 கிமீ வேகம் வரை செல்லும். இந்த கப்பலில் 120 பணியாளர்கள் உள்ளனர்.

Photo credit: Wiki Commons

6. யுஎஸ்எஸ் அமெரிக்கா

6. யுஎஸ்எஸ் அமெரிக்கா

ரூ.22,400 கோடி

அமெரிக்காவின் அதி நவீன விமானம் தாங்கி போர் கப்பல். இந்த கப்பலில் 34 விமானங்கள் நிறுத்த முடியும். இந்த கப்பலிருக்கும் வீரர்களை ஹெலிகாப்டர் மூலமாக எளிதாக அருகிலிருக்கும் தரைப்பகுதிக்கும் கொண்டு சென்று தரைத் தாக்குதலும் நடத்த முடியும். 45,000 டன் எடை கொண்ட இந்த கப்பலில் ஆயுதங்கள் மற்றும் விமானங்களை மேற்புறத்திற்கு கொண்டு வருவதற்காக 6 பிரம்மாண்ட மின் தூக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.

Photo credit: Wiki Commons

05. சார்லஸ் டி கல்லி விமானம் தாங்கி போர்க்கப்பல்

05. சார்லஸ் டி கல்லி விமானம் தாங்கி போர்க்கப்பல்

மதிப்பு: ரூ.26,400 கோடி

பிரான்ஸ் நாட்டின் முதல் அணுசக்தியில் இயங்கும் விமானம் தாங்கி போர்க்கப்பல் இது. 1.17 லட்சம் கிலோவாட் மின்சக்தியை உருவாக்கும் ஆற்றல் வாய்ந்த இரண்டு அணு உலைகள் பொருத்தப்பட்டுள்ளன. 40 விமானங்களையும், 1,900 பணியாளர்களையும் சுமந்து செல்லும் திறன் கொண்டது. 859 அடி நீளம், 206 அடி அகலம் கொண்ட இந்த போர் கப்பல் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளையும், பிரச்னைகளையும் சந்தித்து வருகிறது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக இந்த விமானம் தாங்கி போர் கப்பலை அனுப்ப பிரான்ஸ் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Photo credit: Wiki Commons

04. எச்எம்எஸ் ஆஸ்டியூட்

04. எச்எம்எஸ் ஆஸ்டியூட்

மதிப்பு: ரூ.33,000 கோடி

இங்கிலாந்து நாட்டின் அதிநவீன நீர்மூழ்கி கப்பல். அணுசக்தியில் இந்த நீர்மூழ்கி கப்பல் 1,400 கிமீ தொலைவுக்கு ஏவுகணைகளை செலுத்தும் வல்லமை கொம்டது. 30 கிமீ தொலைவுக்கு அப்பால் உள்ள போர் கப்பல்களையும் அழிக்கும் ஆற்றல் கொண்ட தொழில்நுட்பங்களை பெற்றிருக்கிறது. இங்கிலாந்து கடற்படையின் வலு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Photo credit: Paul Halliwell/Wiki Commons

03. டிடிஜி 1000 ஜும்வால்ட் க்ளாஸ் போர் கப்பல்

03. டிடிஜி 1000 ஜும்வால்ட் க்ளாஸ் போர் கப்பல்

மதிப்பு: ரூ.46,200 கோடி

எதிரி நாட்டு ரேடார் கண்களில் மண்ணை தூவி எளிதாக தாக்குதல் நடத்தி விட்டு திரும்பும் வல்லமையும், தொழில்நுட்ப அம்சங்களையும் பெற்றிருக்கிறது. மேலும், பணியாளர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்கும் அளவுக்கு அதிகளவில் தானியங்கி கட்டுப்பாட்டு வசதியை கொண்டுள்ளது. அதிக அளவில் ஏவுகணைகளை எடுத்துச் செல்லும் அளவுக்கு வசதி கொண்ட இந்த போர் கப்பல், தரை தாக்குதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல சிறப்பு தொழில்நுட்ப வசதிகளை பெற்றிருக்கிறது. 600 அடி நீளமும், 80.7 அடி அகலமும் கொண்ட இந்த போர் கப்பல் எதிரிநாட்டு ரேடார்களில் ஒரு மீன்பிடி படகு அளவுக்குத்தான் காட்சி தருமாம். இதனால், இந்த போர் கப்பலை கண்டுபிடிப்பதே பெரிய சவாலாக இருக்கும் என்று பெருமை கூறுகின்றனர்.

 02. எச்எம்எஸ் குயின் எலிசபெத்

02. எச்எம்எஸ் குயின் எலிசபெத்

மதிப்பு: ரூ.61,380 கோடி

இங்கிலாந்து நாட்டின் மிகப்பெரிய போர் கப்பல். 918 அடி நீளமும், 229 அடி நீளமும் கொண்டது. 65,000 டன் எடை கொண்ட இந்த போர் கப்பலில் ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பினால், 1,650 கிமீ தூரம் வரை பயணிக்குமாம். 1,600 பணியாளர்களை கொண்ட இந்த போர் கப்பலை, தானியங்கி கட்டுப்பாட்டு வசதிகளை ஏற்படுத்தி, 679 பணியாளர்களை வைத்து இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

Photo credit: HMS Gannet/Wiki Commons

 01. யுஎஸ்எஸ் ஜெரால்டு ஃபோர்டு

01. யுஎஸ்எஸ் ஜெரால்டு ஃபோர்டு

மதிப்பு: ரூ.85,800 கோடி

கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடியை நெருங்கும் மதிப்பு கொண்ட அமெரிக்காவின் இந்த விமானம் தாங்கி போர் கப்பல்தான் உலகின் மிகவும் காஸ்ட்லியான ராணுவ வாகனமாக கூறலாம். 1,106 அடி நீளம் கொண்ட விமானம் தாங்கி போர் கப்பலை எதிரி நாட்டு ரேடார்கள் அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியாது. இரண்டு விமான ஓடுபாதைகள் கொண்டது. 5,000 பணியாளர்களை கொண்டது. 2019ம் ஆண்டில் முழு அளவிலான பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இந்த விமானம் தாங்கி போர் கப்பலின் தயாரிப்பு செலவீனம் பல்வேறு தாமதங்களால் 3 பில்லியன் டாலர் அதிகரித்து விட்டதாம்.

Photo credit: Wiki Commons

 
மேலும்... #ராணுவம் #military
English summary
The Ten Most Expensive Military Vehicles In The World.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark