மெர்சிடிஸ் பென்ஸ் மியூசியத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய டாப் 10 கார்கள்!

By Saravana

உலகின் மிக பழமையான கார் தயாரிப்பு நிறுவனங்களில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் ஒன்று. நெடிய பாரம்பரியம் கொண்ட மெர்சிடிஸ் பென்ஸ் பல்வேறு கட்டங்களை தாண்டி இன்று உலகின் மிகப்பெரிய கார் தயாரிப்பு சாம்ராஜ்யமாக உருவெடுத்து இருக்கிறது.

இந்த நிலையில், தனது வரலாறையும், பாரம்பரியத்தையும் அடுத்தடுத்த தலைமுறை தெரிந்து கொள்ளும் விதத்திலும், வாடிக்கையாளர்களின் மனதில் பூரிப்பை ஏற்படுத்தும் விதத்திலும், தனிச்சிறப்புமிக்க தனது பழமையான கார் மாடல்களை ஜெர்மனியில் ஓர் பிரம்மாண்ட அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாத்து வருகிறது.

இந்தநிலையில், அந்த மியூசியத்திற்கு சென்றால் கட்டாயம் பார்க்க வேண்டிய அல்லது தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்பு வாய்ந்த 10 கார்களின் விபரங்களை உங்களுக்கு இன்றைய ஸ்பெஷலாக வழங்குகிறோம்.

மெர்சிடிஸ் பென்ஸ் மியூசியம்

மெர்சிடிஸ் பென்ஸ் மியூசியம்

ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் போர்ஷே கார் நிறுவனத்தின் அருங்காட்சியகத்திலிருந்து கூப்பிடு தூரத்தில்தான் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் வாகன அருங்காட்சியகமும் அமைந்திருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார்கள் மற்றும் இதர வாகனங்கள் 9 நிலைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அதில், கார்கள், வேண்கள், ஆஃப்ரோடு வாகனங்கள், டிரக்குகள், பஸ்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் என பலவிதமான பழமையும், பாரம்பரியமும் மிக்க வாகனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தநிலையில், மெர்சிடிஸ் பென்ஸ் மியூசியத்திற்கு சென்றால் தவறாமல் காண வேண்டிய 10 கார்களை ஸ்லைடரில் காணலாம்.

Photo Credit: Wikipedia

10. மெர்சிடிஸ் பென்ஸ் எம்எல் 320 [1997]

10. மெர்சிடிஸ் பென்ஸ் எம்எல் 320 [1997]

முதல் தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் எம்எல் கிளாஸ் எஸ்யூவி முதல்முறையாக ஜுராஸிக் பார்க் படத்தில் பயன்படுத்தப்பட்டது. இதற்காக, பல விசேஷ உபகரணங்களும் பொருத்தப்பட்டு இருந்தன. இதன்மூலம், மெர்சிடிஸ் பென்ஸ் எம்எல் எஸ்யூவிக்கு மிகப்பெரிய பிரபலம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

09. மெர்சிடிஸ் பென்ஸ் ஆட்டோ 2000 கான்செப்ட் [1981]

09. மெர்சிடிஸ் பென்ஸ் ஆட்டோ 2000 கான்செப்ட் [1981]

1980களில் மேற்கு ஜெர்மனி அரசு அதிக திறன்வாய்ந்த காரை உருவாக்குவதற்கு ஓர் போட்டியை அறிவித்தது. நிபந்தனைகளுடன் 4 பேர் செல்வதற்கான கார் மாடலாக அதனை உருவாக்க கேட்டுக்கொண்டது. அதன்படி, மெர்சிடிஸ் பென்ஸ் உருவாக்கிய ஆட்டோ 2000 கான்செப்ட் மாடல் 1981ல் பிராங்க்பர்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. மிகச் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் கொண்டதாக வடிவமைக்கப்பட்ட இந்த கார் 2000ம் ஆண்டில் கார்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டது. மொத்தம் மூன்று புரோட்டோடைப் மாடல்கள் மட்டும் தயாரிக்கப்பட்டன. ஒன்றில் 3.8 லிட்டர் வி8 எஞ்சினும், இரண்டாவது மாடலில் 3.3 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு எஞ்சினும், மூன்றாவது மாடலில் டர்பைனும் பொருத்தப்பட்டு இருந்தது.

08. மெர்சிடிஸ் பென்ஸ் 280இ ராலி கார் [W123]

08. மெர்சிடிஸ் பென்ஸ் 280இ ராலி கார் [W123]

சொகுசுக்கு பெயர் பெற்ற மெர்சிடிஸ் பென்ஸ் 280இ செடான் காரை அனைத்து சாலைநிலைகளிலும் செல்லத்தக்க ராலி ரேஸ் கார் மாடலாக மாற்றுவதை சவாலாக ஏற்று மெர்சிடிஸ் பென்ஸ் தயாரித்த மாடல்தான் 1977 மெர்சிடிஸ் பென்ஸ் 280இ ராலி கார். மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இந்த முயற்சி வீண் போகவில்லை. லண்டனிலிருந்து சிட்னி வரையிலான இரண்டாவது மாரத்தான் ராலி கார் போட்டியில் முதல் இடத்தை பெற்று அசத்தியது.

07. மெர்சிடிஸ் பென்ஸ் இஎஸ்எஃப்22

07. மெர்சிடிஸ் பென்ஸ் இஎஸ்எஃப்22

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் [W116] காரின் அடிப்படையில், பாதுகாப்பு சோதனைகளுக்காக உருவாக்கப்பட்ட கார் மாடல். கிராஷ் டெஸ்ட்டுகளுக்கு உட்படுத்தப்பட்டு இந்த காரின் பாதுகாப்பு அம்சங்கள் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டன. முன்பகத்தை 64 கிமீ வேகத்திலும், பக்கவாட்டில் 35 கிமீ வேகத்திலும், பின்புறத்தில் 49 கிமீ வேகத்திலும் மோதச் செய்து சோதனைகள் செய்யப்பட்டன. இந்த காரில் சேர்க்கப்பட்ட கூடுதல் உபகரணங்களால் சாதாரண எஸ் கிளாஸ் காரைவிட 286 கிலோ கூடுதல் எடை கொண்டதாக இருந்தது. இந்த கார் தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்லப்படவில்லை. ஆனால், இந்த காரில் சோதிக்கப்பட்ட ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஓட்டுனர் பக்க ஏர்பேக் ஆகியவை படிப்படியாக மெர்சிடிஸ் பென்ஸ் தயாரித்த புதிய கார்களில் பொருத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

06. மெர்சிடிஸ் பென்ஸ் சி111 கான்செப்ட்

06. மெர்சிடிஸ் பென்ஸ் சி111 கான்செப்ட்

1969 முதல் 1979ம் ஆண்டு வரை மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகம் செய்த கான்செப்ட் கார் வரிசைகளில் இடம்பெற்ற கான்செப்ட்டுகளில் ஒன்று. மூன்று ரோட்டார்கள் கொண்ட எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கான்செப்ட் கார் அதிகபட்சமாக 330 எச்பி பவரை அளிக்க வல்லது. 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 5 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்டதாக இருந்தது. அந்த காலக்கட்டத்தில் ஆட்டோமொபைல் பிரியர்கள் சிலாகித்து பேசிய கான்செப்ட் கார் மாடல் என்ற பெருமை இதற்கு உண்டு.

05 மெர்சிடிஸ் பென்ஸ் 300 எஸ்எல் கூபே

05 மெர்சிடிஸ் பென்ஸ் 300 எஸ்எல் கூபே

1954ல் நியூயார்க் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட மாடல். 1950ம் ஆண்டுகளில் அதிவேகத்துக்கு புகழ்பெற்ற எஸ்எல் வம்சத்தில் உருவாக்கப்பட்ட மாடல் இது. இந்த காரில் 212 எச்பி பவரை வழங்க வல்ல 3.0 லிட்டர் எஞ்சின் இருந்தது. 1954 முதல் 1957 வரை 1,400 கார்கள் தயாரிக்கப்பட்டன.

04. மெர்சிடிஸ் ரென்டிரான்ஸ்போர்ட்டர்

04. மெர்சிடிஸ் ரென்டிரான்ஸ்போர்ட்டர்

வாகனங்களை எடுத்துச் செல்வதற்கான டோ டிரக்காகவும், மறுபுறம் ஓர் ஸ்போர்ட்ஸ் காராகவும் பரிமாணம் கொண்ட மாடல். 1954ல் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயங்களில் கார்களை அப்புறப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டது. இந்த வாகனத்தில் 3.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. மணிக்கு 168 கிமீ வேகம் வரை செல்லக்கூடிய வல்லமை கொண்டது. ஆனால், 1955ம் ஆண்டு நடந்த 24 ஹவர்ஸ் லீ மான்ஸ் கார் பந்தயத்தின்போது நடந்த பயங்கர விபத்தை தொடர்ந்து இந்த கார் பயன்பாட்டை மெர்சிடிஸ் பென்ஸ் விலக்கிக் கொண்டது. அந்த விபத்தில் பலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

03. மெர்சிடிஸ் பென்ஸ் புல்மேன் செடான்

03. மெர்சிடிஸ் பென்ஸ் புல்மேன் செடான்

முதல்முறையாக டீசல் எஞ்சினுடன் அதிக அளவிலான தயாரிப்பு இலக்குடன் அறிமுகம் செய்யப்பட்ட கார் மாடல்தான் 1938 மெர்சிடிஸ் பென்ஸ் 260- டி புல்மேன் செடான். 1936ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரில் இருந்த 4 சிலிண்டர் 2.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 44 எச்பி பவரை வழங்க வல்லது. மணிக்கு 96 கிமீ வேகம் வரை செல்லக்கூடியது. 1940ல் உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில், மொத்தமாக 2,000க்கும் குறைவான எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்பட்டது.

02. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எஸ்கே ஸ்போர்ட்ஸ்

02. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எஸ்கே ஸ்போர்ட்ஸ்

இரண்டாம் உலகப்போருக்கு முன்னால் பிரபலமான கார் மாடலாக குறிப்பிடப்படுகிறது. 1928ல் வெளியிடப்பட்ட இந்த கார் மாடல் குறிப்பாக, மலையேற்ற பந்தயங்களில் பங்குபெறுவோரிடையே பெரும் வரவேற்பை பெற்றதாக இருந்தது. இந்த காரில் இருந்த 7.1 லிட்டர் 6 சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின் அதிகபட்சமாக 221 எச்பி பவரை அளிக்கும் வல்லமை கொண்டது. மேலும், இதில், சூப்பர் சார்ஜர் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 35 கார்கள் தயாரிக்கப்பட்டன. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திற்கு பேர் வாங்கி கொடுத்த கார்களில் மிக முக்கியமானதாக குறிப்பிடப்படுவதுடன், அந்நிறுவனத்தின் அரிதான மாடலாகவும் கருதப்படுகிறது.

01. மெர்சிடிஸ் - சிம்பிளெக்ஸ் [1902]

01. மெர்சிடிஸ் - சிம்பிளெக்ஸ் [1902]

மெர்சிடிஸ் - சிம்பிளெக்ஸ் 40 பிஎஸ் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் வரலாற்றில் முக்கியமானது. இந்த காரில் 6.8 லிட்டர் எஞ்சின் கொண்டதாக வெளியிடப்பட்டது. 1,100 எஞ்சின் சுழல் வேகத்தில் அதிகபட்சமாக 38 எச்பி பவரை அளிக்க வல்லது. மணிக்கு 80 கிமீ வேகம் வரை செல்லக்கூடியதாக இருந்தது. மிக எளிதாக கையாளக்கூடிய கார் என்பதை உணர்த்தும் விதத்தில் சிம்பிளெக்ஸ் என்று குறிப்பிடப்பட்டது. இது ஒரு புதிய விளம்பர யுக்தியாக பின்னாளில் மாறியது.

இதர சுவாரஸ்ய செய்திகள்

01.ரோட்டில் மட்டுமல்ல கடலிலும் சீறும் கார் நிறுவனங்கள்!l

02. மெர்சிடிஸ் பென்ஸ் அங்கமான ஏஎம்ஜி பிராண்டின் வரலாறு...

03. உலகின் விலையுயர்ந்த டாப் 10 சொகுசு படகுகள்...

Most Read Articles
English summary

 Top 10 Classic Cars From Mercedes benz Museum.
Story first published: Thursday, November 12, 2015, 13:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X