திருப்பதி பக்தர்களின் அன்னதான திட்டத்திற்கு ரூ.2 கோடி வழங்கிய டிவிஎஸ் நிறுவனம்...!

Written By: Krishna

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில், இந்த ஜகத்தை அழித்திட வேண்டும் என்றான் முண்டாசுக் கவிஞன். ஆனால், மானுடராய் பிறந்த அனைவருக்கும் பசிக்கு உணவு கிடைக்கிறதா? என்றால் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.

சுமார் 2.5 கோடி இந்தியர்கள் இரவில் பசியுடன் தூங்கச் செல்கிறார்கள் எனக் கூறுகிறது ஓர் ஆய்வு. அன்னசத்திரம் ஆயிரம் கட்டினாலும், அதற்கும் பொருளுதவி வேண்டும் இல்லையா? பல பிரசித்தி பெற்ற கோயில்களில் அன்னதானம் நாள்தோறும் வழங்கினாலும், ஒரு கட்டத்துக்கு மேல் அதற்குத் தேவையான நிதியுதவிக்கு அரசையோ, அல்லது தொழிலதிபர்களையோ நாட வேண்டிய நிலை கோயில் நிர்வாகத்துக்கு ஏற்படும்.

டிவிஎஸ் கம்பெனி

அது பெரிய கோயில்களாக இருந்தாலும் கூட அதே நிலைதான். ஆனால், திருப்பதி திருமலை கோயில் மட்டும் இதற்கு விதிவிலக்கு. ஏழுமலையானின் அருளால் நிர்வாகத்துக்குத் தேவையான நிதி மட்டுமின்றி ஆந்திர அரசின் வளர்ச்சிக்கே தேவையான நிதி திருப்பதி கோயில் மூலம் கிடைக்கிறது.

நெடுந்தொலைவு கடந்து வந்து பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு இலவச உணவையும் திருப்பதி தேவஸ்தானம் வழங்கி வருகிறது. அந்த அன்னதானத் திட்டத்துக்கு ரூ.2 கோடி நன்கொடை வழங்கி அசத்தியிருக்கிறது நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம்.

நம்ம ஊரு வண்டி.... ராசியான வண்டி... என தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அறியப்பட்ட எக்ஸ் எல் சூப்பர் வாகனத்தைத் தயாரித்து வரும் டிவிஎஸ் நிறுவனம்தான் இந்த நற்செயலைச் செய்துள்ளது.

டிவிஎஸ் மோட்டார்ஸ் மற்றும் சுந்தரம் கிளேடன் ஆகிய இரு நிறுவனங்களின் சார்பில் தலா ரூ.1 கோடி நன்கொடை திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவர் கே.என்.ராதாகிருஷ்ணன், சுந்தரம் கிளேடன் நிறுவனத்தின் தலைவர் டி.ஏ.ரங்கநாதன் ஆகியோர் ரூ.2 கோடிக்கான கேட்பு வரைவோலையை (டிமாண்ட் டிராஃப்ட்) திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் டி.சாம்பசிவ ராவிடம் அண்மையில் வழங்கினர்.

அன்னதானத் திட்டத்துக்கு அந்தத் தொகையைச் செலவிடுமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

பக்தர்களின் மனதையும் பசியையும் ஆற்றும் அரும்பணியில் பங்கெடுத்த டிவிஎஸ் நிறுவனத்துக்கு டிரைவ் ஸ்பார்க்கின் பாராட்டுகள்...

English summary
TVS Group offers Rs 2 cr to Tirupathi Lord Venkateswara temple.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark