ரயில்கள் தடம்புரண்டு விபத்தில் சிக்குவதற்கான காரணங்கள்!

உலகின் இரண்டாவது மிகப்பெரிய கட்டமைப்பை பெற்றிருக்கும் இந்திய ரயில்வே நம் நாட்டு போக்குவரத்தில் முதுகெலும்பாக விளங்குகிறது. ஆனால், அண்மை காலமாக ரயில்கள் தொடர்ந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளாகி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சமீபத்தில் கான்பூர் அருகே ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 145 பேர் பலியானார்கள். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். அப்பாவி உயிர்கள் கொத்து கொத்தாக பலியாகும் இதுபோன்ற கோர விபத்துக்கள் ரயில் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், ரயில்கள் அடிக்கடி தடம்புரண்டு விபத்துக்குள்ளாவதற்கான காரணங்களை இங்கே பார்க்கலாம்.

தடம்புரள்வதற்கான முக்கிய காரணங்கள்

ரயில் தண்டவாளங்களில் ஏற்படும் விரிசல், தண்டவாளங்களில் நிலச்சரிவு, வலுவிழந்த தண்டவாளங்கள், தண்டவாளங்கள் உடைக்கப்பட்டு நடக்கும் சதி, பணியாளர்களின் கவனக்குறைவு, ரயிலின் சக்கரங்களில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள், அதிவேகம் என பல காரணங்கள் அடுக்கப்படுகின்றன.

வலுவிழந்த தண்டவாளங்கள்

இந்தியாவில் ரயில்கள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாவதற்கு முக்கிய காரணமாக, வலுவிழந்த ரயில் தண்டவாளங்களே குறிப்பிடப்படுகின்றன. அதுபோன்று, பணியாளர்களின் கவனக்குறைவும் முக்கிய காரணமாக இருக்கிறது.

விபத்து ஆபத்து

ரயில் தண்டவாளங்களில் ஏற்படும் சிறிய விரிசல்களால் ரயில் தடம்புரள்வதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால், பெரிய அளவிலான விரிசல்களை உரிய நேரத்தில் பணியாளர்கள் கண்டுபிடித்து சரிசெய்வது அவசியம். மேலும், பழைய தண்டவாளங்கள் அதிக அளவில் இருப்பதுடன், பராமரிப்பும் குறைவாக இருக்கிறது.

'விஐபி' ரயில் பெட்டிகள்

மற்றொரு காரணம்தான் அதிர்ச்சி தருகிறது. அதாவது, சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்கள் 'விஐபி' அல்லாத பிரிவில் சேர்க்கப்பட்டு இருக்கின்றதாம். ராஜ்தானி, சதாப்தி உள்ளிட்ட ரயில்கள் விஐபி பிரிவின் கீழ் வருகின்றன.

தீவிர ஆய்வுகள்

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலும், சாதாரண ரயில்களும் ஒரே தண்டவாளத்தில், ஒரே சிக்னல் சிஸ்டத்தை பயன்படுத்தித்தான் செல்கின்றன. ஆனால், ராஜ்தானி, சதாப்தி ரயில்கள் விஐபி பிரிவில் இருப்பதால், அந்த ரயில்கள் செல்வதற்கு முன்னர் தண்டவாளங்களை பணியாளர்கள் ஆய்வு செய்த பின்னரே அனுமதிக்கப்படுகிறது.

வலுவான பெட்டிகள்

அதுமட்டுமல்ல, ராஜ்தானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் எல்எச்பி என்ற நவீன பாதுகாப்பு கட்டமைப்பு கொண்ட ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரயில் பெட்டிகளின் கட்டுமானம் மிகவும் வலுவானவை.

விசேஷ கட்டுமானம்

இவை எளிதாக தடம்புரளாது என்பதுடன், இந்த பெட்டிகள் தடம்புரண்டு ஒன்றுடன் ஒன்று மோதினால் கூட மோதல் தாக்கத்தை உள்வாங்கிக் கொண்டு பயணிகளை காக்கும் நவீன கட்டுமானம் கொண்டவை. அதாவது, காரில் க்ரம்பிள் ஸோன் என்ற விசேஷ கட்டுமான தொழில்நுட்பத்துடன் இந்த பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.

தொழில்நுட்ப பிரச்னை

ராஜ்தானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் பெட்டிகள், எஞ்சின் ஆகியவை தினசரி பராமரிப்பிற்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. ஆனால், சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு பராமரிப்பு குறைவாக இருப்பதும், அதிலுள்ள தொழில்நுட்ப பிரச்னைகளை கண்டறிந்து உடனுக்குடன் சரிசெய்யாததும், இதுபோன்ற கோர விபத்துக்கு வழிகோலுகின்றன.

போதிய அவகாசம் இல்லை

ரயில் பெட்டிகளையும் தொடர்ந்து இயக்கப்படுவதால், அவற்றை பராமரிப்பதற்கான போதிய அவகாசம் இருப்பதில்லை. இதனால், அவற்றில் அடிக்கடி தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, ரயில் பெட்டிகளை சரியான இடைவெளியில் ஆய்வு செய்வதும் அவசியமாகிறது.

நவீன பாதுகாப்பு வசதிகள்

மேலும், ரயில் தண்டவாளங்களில் continuous track circuiting (CTC) என்ற மின்னணு தொழில்நுட்ப சாதனங்களை நாடுமுழுவதும் அனைத்து ரயில் தண்டவாளங்களிலும் நிறுவ வேண்டியதும் அவசியமாக கூறப்படுகிறது. இதன்மூலமாக, தண்டவாளங்களில் இருக்கும் விரிசல்கள், தடைகளை எளிதாக கண்டறிந்து விபத்துக்களை தடுக்க முடியும்.

முன்னாள் ரயில் மந்திரியின் ஆதங்கம்

இதுகுறித்து முன்னாள் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி கூறுகையில்," இதுபோன்ற விபத்துக்குள் மிகவும் வேதனையையும், துயரத்தையும் அளிக்கின்றன. இதுபோன்ற விபத்துக்களை தடுக்க நீண்ட கால பயன்பாட்டில் உள்ள பழைய தண்டவாளங்களையும், சிக்னல் சிஸ்டத்தை மாற்ற வேண்டும்.

நவீனப்படுத்துங்கள்...

விபத்து என்றால் கேங் மேனையும், ஸ்டேஷன் மாஸ்டரையும் பதவி நீக்கம் செய்தால், பிரச்னை சரியாகிவிடாது. அந்த பணியாளருக்கு ரயில் தண்டவாளத்தின் தரம் உள்ளிட்டவை குறித்த அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, பராமரிப்பிற்கும், நவீனப்படுத்துவதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

அப்படி பார்க்காதீங்க...

ரயில்வே துறையை லாப நோக்கம் கொண்ட வர்த்தக நிறுவனமாக பார்க்காமல், அதனை நாட்டின் அடிப்படை போக்குவரத்து வசதியை தரும் நிறுவனமாக பார்க்க வேண்டும். மேலும், வருவாய் பற்றாக்குறையால் பராமரிப்புப் பணிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டு வருகிறது.

வர்த்தகம் குறைகிறது...

இது பேராபத்தில் போய் முடியும். மேலும், சரக்கு போக்குவரத்தும், பயணிகள் போக்குவரத்தும் வெகுவாக குறைந்து வருகிறது. அவற்றை ஆய்வு செய்து உடனடியாக ரயில்வே துறையை நவீனப்படுத்துவது அவசியம்.

ஒப்பீடு

குறிப்பாக, நவீன எல்எச்பி ரயில் பெட்டிகளை அதிக அளவில் உற்பத்தி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதும் அவசியம். மேலும், 1964ம் ஆண்டு ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்ட சின்கன்சென் அதிவேக ரயில்களுடன் இந்திய ரயில்வே துறையை ஒப்பிட்டு நவீனப்படுத்த வேண்டும்.

ஒரே தீர்வு

சின்கன்சென் ரயில்வேயில் இதுவரை ஒரு சிறு விபத்து கூட இதுவரை நடந்ததில்லை. போதிய பராமரிப்பும், நவீனப்படுத்துவதற்கும் அரசு முக்கியத்துவம் தர வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற உயிரிழப்புகளை தவிர்க்க வழி பிறக்கும்," என்று கூறியிருக்கிறார்.

தொடர்புடைய தகவல்கள்
  • ரயில் எஞ்சின்கள் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள்!
  • இந்தியாவின் அதிசக்திவாய்ந்த ரயில் எஞ்சின் WAP-7 பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!
  • இந்தியாவின் அதிவேக ரயிலின் WAP- 5 எஞ்சின் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!
Most Read Articles

English summary
Former Railway Minister and All India Trinamool Congress party leader, Dinesh Trivedi, explained in detail about the issues plaguing the Indian Railways.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X