பெனெல்லி மோட்டார் சைக்கள் நிறுவனம் திவாலானதாக அறிவித்த நீதிமன்றம்... காரணம் என்ன?

Written By: Krishna

இத்தாலியைச் சேர்ந்த பெனெல்லி மோட்டார் சைக்கிள் நிறுவனம், அந்நாட்டில் கணிசமான வாடிக்கையாளர் எண்ணிக்கையையும், விற்பனையையும் கொண்டுள்ளது. கேடிஎம் லிமிடெட்டின் துணை நிறுவனமான டபிள்யூபி சஸ்பென்ஸன் என்ற கம்பெனிதான் பெனெல்லி மோட்டார் சைக்கிள்களுக்குத் தேவையான சில பாகங்களை விநியோகித்து வந்தது.

இந்த நிலையில்தான் பெனெல்லி நிறுவனம் புதிய சர்ச்சையொன்றில் சிக்கியது. அதாவது, டபிள்யூபி சஸ்பென்ஸன் கம்பெனிக்குக் கொடுக்க வேண்டிய தொகையைத் தராமல் நீண்ட நாள்களாக இழுத்தடித்து வந்ததாக பெனெல்லி மீது குற்றச்சாட்டு எழுந்தது.

பெனெல்லி பைக்

கிட்டத்தட்ட 1.20 லட்சம் யூரோ கடன் தொகை நிலுவையில் இருப்பதாகத் தெரிகிறது. அதன் விளைவு, கடைசியாக நீதிமன்றத்தில் போய் முடிந்திருக்கிறது. இத்தாலியின் பெசாரோ நீதிமன்றத்தின் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.

குறிப்பிட்ட காலத்துக்குள் கடன் தொகையை டபிள்யூபி சஸ்பென்ஸன் நிறுவனத்துக்கு வழங்குமாறு பெனெல்லியிடம் அறிவுறுத்தியுள்ளது நீதிமன்றம். அதன் பிறகும் உரிய தொகையை திருப்பித் தராததால் பெனெல்லி நிறுவனம் திவாலாகி விட்டதாக நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும், கடன் தொகையை உடனடியாக செலுத்துமாறும் பெனெல்லி நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிவித்த பிறகு அந்நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகள் கடன் தொகைக்காக பறிமுதல் செய்யப்படும். மேலும், பல்வேறு சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இத்தாலியில் உற்பத்தி செய்யப்பட்ட பெனெல்லி நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு நடுவே பெனெல்லியின் தாய் நிறுவனமான குயான்ஜியாங் கம்பெனி இந்தத் தீர்ப்பை எதிர்த்துள்ளது. சீனாவில் செயல்படும் இந்த நிறுவனம், பெனெல்லி திவாலாகவில்லை என்றும், அதன் பொருளாதார நிலை சீராக இருக்கிறது என்றும் தன்னிலை விளக்கம் அளித்துள்ளது.

பெசாரோ நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாகவும் குயான்ஜியாங் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆக மொத்தத்தில் இத்தாலி உள்பட சர்வதேச அளவில் பெனெல்லியின் பெயர் டேமேஜாகி உள்ளது. அதனை சரி செய்து மோட்டார் சைக்கிள் உலகில் மீண்டு(ம்) வருமா பெனெல்லி? என்பதற்கு காலம்தான் விடை சொல்ல வேண்டும். இந்தியாவில் டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனத்தின் கூட்டணியில் பிரிமியம் பைக் மாடல்களை பெனெல்லி விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Benelli Declared Bankrupt By Italian Court; What’s Going On?

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark