விற்பனையில் இந்தியாவின் டாப் - 10 இருசக்கர வாகனங்கள்... நம்பர்- 1 இடத்திற்கு கடும் போட்டி!

Written By:

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வரும் தந்திராஸ் தினத்தன்று வாகன விற்பனை அமோகமாக இருக்கும். அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக கருதி, தந்திராஸ் தினத்தன்று கார், பைக், ஆபரணங்களை வாங்குவது வட இந்தியர்களின் வழக்கமாக இருந்து வருகிறது.

அதன்படியே, இந்த ஆண்டும் தந்திராஸ் னத்தன்று இருசக்கர வாகன விற்பனை அமோகமாக இருந்தது. இதனால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தைவிட, இந்த ஆண்டு ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருசக்கர வாகன விற்பனை 8.72 சதவீதம் உயர்ந்தது. இந்தநிலையில், கடும் சந்தைப் போட்டிக்கு மத்தியிலும் விற்பனையில் டாப் - 10 இடங்களை பிடித்த இருசக்கர வாகனங்களை இந்த செய்தியில் காணலாம்.

 10. பஜாஜ் பிளாட்டினா

சரியாக 23 மாதங்களுக்கு பிறகு டாப் - 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளது பஜாஜ் பிளாட்டினா பைக். கடந்த மாதத்தில் 50,531 பிளாட்டினா பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது, பிளாட்டினாவின் விற்பனை 60 சதவீதம் உயர்ந்து புத்தெழுச்சி பெற்றிருக்கிறது. குறைவான விலை, அதிக மைலேஜ் என்பது இதன் பலம்.

 09. டிவிஎஸ் ஜுபிடர்

டிவிஎஸ் நிறுவனத்தின் விற்பனையில் மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது டிவிஎஸ் ஜுபிடர். ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஆக்டிவாவுக்கு அடுத்து அதிக விற்பனையாகும் ஸ்கூட்டர் என்ற பெருமையை இந்த ஸ்கூட்டர் பெற்றிருக்கிறது. கடந்த மாதத்தில் 63,014 ஜுபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி உள்ளன. ஸ்டைல், மைலேஜ், விலை என அனைத்திலும் சிறப்பான மாடல்.

08. பஜாஜ் பல்சர்

இளைஞர்களின் பேராதரவுடன் தொடர்ந்து டாப் 10 பட்டியலில் இடம்பிடித்து வருகிறது பஜாஜ் பல்சர் பிராண்டு. கடந்த மாதத்தில் 63,287 பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. ஆனாலும், விற்பனை கடந்த ஆண்டு அக்டோபரைவிட இந்த அக்டோபரில் 10 சதவீதம் குறைந்துவிட்டது. ஸ்டைல், செயல்திறன், பட்ஜெட் என சரியான சாய்ஸ்.

07. ஹீரோ கிளாமர்

ஹீரோ கிளாமர் பைக் 7வது இடத்தை பிடித்தது. கடந்த மாதத்தில் 75,320 கிளாமர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. கடந்த ஆண்டு அக்டோபரைவிட இந்த அக்டோபரில் விற்பனை 21 சதவீதம் கூடுதல். சிறந்த எஞ்சின், அதிக மைலேஜ் இதன் சிறப்பம்சங்கள்.

06. ஹோண்டா ஷைன்

125சிசி மார்க்கெட்டில் தொடர்ந்து முதன்மையான சாய்ஸாக இருந்து வருகிறது. கடந்த மாதத்தில் 82,753 ஷைன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபரைவிட 8 சதவீதம் விற்பனை குறைந்துவிட்டது. ஆனாலும், கவர்ச்சியான டிசைன், மென்மையான எஞ்சின் போன்றவை இதன் சிறப்புகள்.

 05. ஹீரோ பேஷன்

பட்ஜெட் விலையில் கவர்ச்சிகரமான பைக் மாடல். கடந்த மாதத்தில் 87,489 பேஷன் பைக்குகள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு அக்டோபரைவிட விற்பனை 9 சதவீதம் குறைவு. ஆனாலும், வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வில் உள்ள மாடல்.

 04. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

இந்தியாவின் ஒரே மொபட் மாடல். தற்போது 4 ஸ்ட்ரோக் எஞ்சினுடன் வந்துவிட்டதால், விற்பனை தொடர்ந்து சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. கடந்த மாதத்தில் 87,746 எக்ஸ்எல் சூப்பர் மொபட்டுகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. மேலும், விற்பனை 34 சதவீதம் அதிகரித்துள்ளது. குறைவான விலை, பன்முக பயன்பாடு இதன் மிகப்பெரிய பலம்.

03. ஹீரோ டீலக்ஸ்

கடந்த மாதத்தில் 1,33,986 ஹீரோ டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. விற்பனை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. குறைவான விலையில் கிடைக்கும் அசத்தலான பைக். அதிக மைலேஜ், நம்பகமான எஞ்சின் இதன் பலம்.

 02. ஹோண்டா ஆக்டிவா

ஹீரோ ஸ்பிளென்டரை வீழ்த்தி விற்பனையில் இந்தியாவின் நம்பர்- 1 மாடலாக இருந்து வந்த ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் 2,50,681 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனையாகி உள்ளது. விற்பனை 6 சதவீதம் வரை கூடுதல். டிசைன், எஞ்சின், தரம் மற்றும் மறுவிற்பனை மதிப்பு என அனைத்திலும் நம்பர்- 1 ஸ்கூட்டர்.

01. ஹீரோ ஸ்பிளென்டர்

சரியாக 9 மாதங்கள் தீராத போராட்டத்திற்கு பின் ஆக்டிவா ஸ்கூட்டரை வீழ்த்தி நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது ஸ்பிளென்டர். கடந்த மாதத்தில் 2,54,813 ஸ்பிளென்டர் பைக்குகள் விற்பனையாகி உள்ளன. சிறிய வித்தியாசம் என்றாலும், நம்பர் - 1 ரேஸில் நீண்ட இடைவெளிக்கு பின் வெற்றி கிடைத்துள்ளது. பட்ஜெட் விலையில் கிடைக்கும் அருமையான பைக் மாடல்.

English summary
Hero Splendor becomes the best selling two wheeler in October 2016 by overtaking Honda Activa.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark