ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது.... கேரள அரசின் அதிரடி அறிவிப்பு....

Written By: Krishna

காலையில் எழுந்து பேப்பர் படிப்பது போல, தினமும் ஓரிரு சாலை விபத்துகளைப் பார்த்துச் செல்வதும், ரோட்டில் உயிருக்குப் போராடும் நபரைக் கடந்து செல்வதும் நமக்கு மிக சாதாரணமாகி விட்டது.

அதற்குக் காரணம் சாலை விபத்துகள் அன்றாடம் நடக்கும் அற்ப விஷயமாக மாறிவிட்டதுதான். அண்மையில் வெளியான சர்வே ஒன்றின் முடிவுகள் நம்மை வியப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கின்றன.

ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது: கேரள அரசு அதிரடி!

இந்தியாவில் நாள்தோறும் 1,214 சாலை விபத்துகள் நிகழ்கின்றன என்றும், அதில் சராசரியாக 377 பேர் உயிரிழக்கின்றனர் என்றும் அந்த சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

உயிரிழப்பவர்களில் 25 சதவீதத்துக்கும் மேற்பட்டவர் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் என்கிறது அந்த புள்ளிவிவரம்.

ஹெல்மெட் அணியாததால்தான் அவர்களில் பெரும்பாலானோர் பலியாகின்றனர் என்பதும் முகத்தில் அறையும் மற்றொரு உண்மை.

என்னதான் ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்கினாலும், மக்களின் அலட்சியம், விழிப்புணர்வு இன்மை காரணமாக அதை முறையாக அமலாக்க முடிவதில்லை. கடந்த ஆண்டு கேரளத்தில் மொத்தம் 14,482 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அதில் 1,330 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, டூ விலரில் செல்பவர்களை கட்டாயம் ஹெல்மெட் அணிய வைக்க ஒரு அதிரடி அறிவிப்பை அந்த மாநில அரசு அண்மையில் அறிவித்தது.

அதாவது, ஹெல்மெட் அணியாவிட்டால் கேரளத்தில் உள்ள எந்த பெட்ரோல் பங்க்கிலும் பெட்ரோல் நிரப்ப முடியாது.

இதுதொடர்பாக அந்த மாநில போக்குவரத்துத் துறை ஆணையர் டோமின் ஜே தச்சங்கிரி கூறியதாவது:

இந்த நடைமுறையை அமலாக்குவது குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுடன் மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. ஹெல்மெட் இல்லாமல் வரும் எவருக்கும் பெட்ரோல் வழங்கக் கூடாது என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும். முதல்கட்டமாக திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் இது நடைமுறைப்படுத்தப்படும். பிறகு படிப்படியாக மாநிலம் முழுவதும் அமலாக்கப்படும் என்றார் அவர்.

கேரளத்தில் நிகழும் விபத்துக்களில் 50 சதவீதம் மோட்டார் சைக்கிள் விபத்துகள்தான் என்றும் அதில் உயிரிழப்பவர்களில் 80 சதவீதம் பேர் தலைக்கவசம் அணியாதவர்கள் என்றும் புள்ளிவிவரம் கூறுகிறது.

அதன் காரணமாகவே கேரள இரசு இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதுபோன்ற அதிரடி திட்டங்களை அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் இப்போதைய இன்றியமையாத தேவை.

English summary
Kerala To Implement ‘No Helmet, No Fuel’ Rule From August 1, 2016.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark