ட்ரையம்ப் டேடோனா 675 பைக் உற்பத்தி நிறுத்தம்?

Written By: Krishna

ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள்கள் நெருப்புடா ரகம்... அதை வைத்திருப்பவர்களும், ஓட்டிச் செல்பவர்களும் கிட்டத்தட்ட ஹீரோ ரேஞ்சுக்கு கருதப்படுவர். பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்போர்ட் பைக் நிறுவனமான ட்ரையம்ப், சர்வதேச அளவில் வெற்றிகரமாகக் கால் பதித்து இயங்கி வருகிறது.

அந்நிறுவனத்தின் தயாரிப்புகளான பெரும்பாலான பைக்குகள் மாஸ் ஹிட்டாகியுள்ளன. இந்த நிலையில், ஐரோப்பிய மாசுக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உள்பட்டு தனது டேடோனா 675 பைக்கின் உற்பத்தியை ட்ரையம்ப் நிறுவனம் நிறுத்தி விட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ட்ரையம்ப் டேடோனா 675 பைக் உற்பத்தி நிறுத்தம்?

இந்த மாசுக் கட்டுப்பாட்டு விதிகள் ஐரோப்பிய நாடுகளின் பெரும்பாலான மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர்களைப் பாதித்துள்ளன என்றே கூறலாம். 600 சிசிக்கு அதிகமாக திறன் கொண்ட வாகனங்களின் உற்பத்தியை நிறுத்திக் கொள்ள அந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில்தான் ட்ரையம்ப் நிறுவனத்தின் டேடோனா தொடர்பான செய்திகளும் வெளியாகியுள்ளன. டேடோனா மாடலில் 676 சிசி இன்லைன் 3 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 116.88 பிஎச்பி முறுக்கு விசையையும், 70.2 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. மொத்தம் 6 கியர்களைக் கொண்ட கியர் பாக்ஸ் இந்த மாடலில் இடம்பெற்றுள்ளது.

பொதுவாகவே ட்ரையம்ப் நிறுவன பைக்குகளில் ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி பிரேக் லாக் சிஸ்டம், சறுக்கி விழாமல் இருப்பதற்காக ஸ்லிப் அஸிஸ்ட் கிளட்ச், குயிக் ஸ்விஃப்ட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்படுகின்றன.

அது போன்ற அம்சங்கள் டேடோனா 675 சிசி பைக்கிலும் உள்ளது. இந்த பைக் மாடலின் உற்பத்தியை நிறுத்தி விட்டதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் இதுவரை வெளிவிடவில்லை. அதேவேளையில், இதுதொடர்பாக வெளியாகும் செய்திகளையும் அந்நிறுவனம் மறுக்கவில்லை.

இதற்கு நடுவே, மேம்படுத்தப்பட்ட புதிய டேடோனா 765 மாடலை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப் போவதாக ட்ரையம்ப் நிறுவனம் அறிவித்திருந்தது. 800 சிசி திறன் கொண்ட 3 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் அது. இந்த நிலையில், ஐரோப்பிய மாசுக் கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக, அந்த மாடலை மார்க்கெட்டில் களமிறக்கும் முடிவை ட்ரையம்ப் நிறுவனம் திரும்பப் பெற்றுக் கொண்டதாகவும் சில வதந்திகள் உலா வருகின்றன.

ஆக மொத்தத்தில், ட்ரையம்ப் நிறுவனத்தின் படு ஸ்டைலான ஸ்போர்ட் மாடல்களின் உற்பத்தி நிறுத்தம் தொடர்பாக வெளியாகும் செய்திகள், ஆட்டோ மொபைல் ஆர்வலர்களை ஏக்கமடையச் செய்துள்ளது.

English summary
Triumph Daytona 675 Production Stopped; Is It The End Or Not.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark