கடந்த மாதம் நடந்த சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125சிசி ஸ்கூட்டர் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. ஐரோப்பிய நாடுகளில் புகழ்பெற்ற மேக்ஸி ரக ஸ்கூட்டர் போன்ற டிசைன் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும், இந்த ஸ்கூட்டரின் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது குறித்தும் ஆவல் எழுந்தது.
இந்தநிலையில், அடுத்த மாத மத்தியில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125சிசி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக மோட்டார்ஆக்டேன் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இந்திய மார்க்கெட்டில் இப்போது இருக்கும் ஸ்கூட்டர் மாடல்களிலிருந்து இதன் டிசைன் வேறுபட்டு மிகவும் தனித்துவமாக இருக்கிறது.
குறிப்பாக, முன்புறத்தில் பாடி பேனல்கள் மிகவும் பிரம்மாண்டமான ஸ்கூட்டர் போன்ற தோற்றத்தை தருகிறது. இந்த ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட்டுகள் இடம்பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது. விண்ட் ஸ்க்ரீன் கண்ணாடியும், வித்தியாசமான ஹேண்டில்பார் உள்ளிட்டவையும் கவனித்தக்க விஷயங்கள்.
இந்த ஸ்கூட்டரின் இருக்கை அகலமாக இருப்பதால் ஓட்டுனரும், பின்னால் செல்பவரும் வசதியாக அமர்ந்து செல்ல உதவும். இந்த ஸ்கூட்டரின் இருக்கையும், கால் வைப்பதற்கான பகுதியும் சிறப்பாக இருப்பதால் ஓட்டுனருக்கு சிறந்த ரைடிங் பொசிஷனை தரும்.
இந்த ஸ்கூட்டரில் பின்புறத்தில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட டெயில் லைட் க்ளஸ்ட்டர் அழகு சேர்க்கிறது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், முன்சக்கரத்திற்கு டிஸ்க் பிரேக் போன்றவை மிக முக்கிய அம்சங்களாக இருக்கும்.
புதிய சுஸுகி பர்க்மேன் 125சிசி ஸ்கூட்டரில் 124.3சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்த ஸ்கூட்டர் எஞ்சினின் சக்தியை வெளிப்படுத்தும் திறன் குறித்த தகவல் இல்லை.
புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் முன் சக்கரத்தில் 12 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 10 அங்குல சக்கரமும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் ரூ.60,000 எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் 125சிசி ஸ்கூட்டர் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா க்ரேஸியா, டிவிஎஸ் என்டார்க் உள்ளிட்ட மாடலுக்கு போட்டியாக இருக்கும்.
வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark