இனி வரும் புதிய ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் நேவிகேஷன் வசதி
இனி அறிமுகமாக இருக்கும் புதிய ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட்டிவிட்டி வசதி அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நடுத்தர வகை பைக் மார்க்கெட்டில் ராயல் என்ஃபீல்டு மிக வலுவான வர்த்தகத்தை வைத்திருக்கிறது. மிக நீண்ட பாரம்பரியம் மிக்க ராயல் என்ஃபீல்டு பைக்குகளை வாங்குவது பலரின் கனவாகவும் இருந்து வருகிறது. ராயல் என்ஃபீல்டு பைக்குகளை வாங்குவதை லட்சியமாகவும் வைத்துள்ளனர்.

இந்த நிலையில், ராயல் என்ஃபீல்டு தயாரிப்புகளை குறிவைத்து பல புதிய மாடல்கள் தொடர்ந்து அறிமுகமாகி வருகின்றன. ராயல் என்ஃபீல்டு பைக்குகளை விட அதிக மதிப்பை வழங்கும் விதத்தில், ஏராளனமான தொழில்நுட்ப வசதிகள் கொடுக்கப்படுகின்றன.

இந்த வசதிகளை ராயல் என்ஃபீல்டு வழங்கவில்லை என்ற ஆதங்கம் வாடிக்கையாளர்களுக்கு உள்ளது. இதனை மனதில் வைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் தனது புதிய பைக் மாடல்களை களமிறக்க ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளது.

இதன்படி, இனி அறிமுகப்படுத்த இருக்கும் புதிய பைக் மாடல்களில் புளூடூத் இணைப்பு வசதியை அளிக்க முடிவு செய்துள்ளது. மேலும், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும் வழங்கப்பட உள்ளது. இதன்மூலமாக, நேவிகேஷன் வசதியை நேரடியாக பெறும் வாய்ப்பும் கொடுக்கப்படும். க்ரூஸர் வகை பைக்குகளுக்கு நேவிகேஷன் சிறந்ததாக இருக்கும்.

தண்டர்பேர்டு 350 மாடலுக்கு மாற்றாக புதிய தலைமுறை மாடலாக வரும் மீட்டியோர் 350 மாடலில் இந்த புளூடூத் இணைப்பு மற்றும் நேவிகேஷன் வசதிகள் அளிக்கப்படும் என்று பைக்வாலே தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

புளூடூத் மற்றும் நேவிகேஷன் வசதிகள் தவிர்த்து, பைக் இயக்கம் குறித்த சில தகவல்களை பெறுவதற்கான வாய்ப்பையும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மூலமாக வழங்குவதற்கும் ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு நன்மை பயக்கும் விஷயமாக இருக்கும்.

சில மாடல்களில் எல்சிடி திரையுடன் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதியும் அளிப்பதற்கு ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளது. இந்த வசதிகளை அளித்தாலும் விலையை மிக சவாலாக நிர்ணயிக்கவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.

இதன் மூலமாக போட்டியாளர்களைவிட மதிப்புமிக்க மாடலாக மாறுவதோடு, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் விதமாக அமையும் என்று ராயல் என்ஃபீல்டு கருதுகிறது. வாடிக்கையாளர்கள் முகம் சுழிக்காத அளவுக்கு விலையை நிர்ணயிக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








