புதிய ட்ரையம்ஃப் டைகர் 850 ஸ்போர்ட் பைக்கின் இந்திய அறிமுக தேதி வெளியானது!
புதிய ட்ரையம்ஃப் டைகர் 850 ஸ்போர்ட் பைக்கின் இந்திய அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ட்ரையம்ஃப் நிறுவனத்தின் டைகர் வரிசையில் அட்வென்ச்சர் ரக பைக் மாடல்கள் விற்பனையில் வைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களின் விருப்பம் மற்றும் விலை அடிப்படையில் பல வேரியண்ட்டுகளில் கிடைக்கின்றன.

ட்ரையம்ஃப் டைகர் வரிசையில் விலை குறைவான மாடலாக டைகர் 900 மாடல் உள்ளது. இந்த நிலையில், இந்த மாடலுக்கு மாற்றாக புதிய டைகர் 850 ஸ்போர்ட் என்ற புதிய மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

இந்த மாடலுக்கு வரும் 9ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. டைகர் 900 மாடலில் இருந்த அதே 888சிசி எஞ்சின்தான் இந்த பைக்கிலும் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 84 பிஎச்பி பவரையும், 82 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

டைகர் 900 பைக்கில் இருந்தே அதே எஞ்சின் என்றாலும், இதன் பவர் 10 பிஎச்பி வரையிலும், டார்க் திறன் 5 என்எம் வரையிலும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

இந்த பைக்கில் ரெயின், ரோடு என்ற இரண்டு ரைடிங் மோடுகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தவிரவும், சுவிட்சபிள் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவையும் இடம்பெற்றிருக்கின்றன.

முன்புறத்தில் மர்சோச்சி அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் ப்ரீலோடு அட்ஜெஸ்ட் வசதியுடன் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. முன்புறத்தில் இரண்டு 320 மிமீ டிஸ்க்குகள் கொண்ட பிரேக்கும், பின்புறத்தில் 255மிமீ விட்டமுடைய டிஸ்க் கொண்ட பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய டைகர் 850 ஸ்போர்ட் மாடலானது சாதாரண சாலைகளின் பயன்பாட்டிற்கு ஏற்ற பல அம்சங்களை பெற்றுள்ளது. இந்த மாடலில் டயர்கள், அட்ஜெஸ்ட் வசதி இல்லாத சஸ்பென்ஷன், 6 ஆக்சிஸ் ஐஎம்யூ யூனிட் ஆகியவை வழங்கப்பட உள்ளன. முழுமையான எல்இடி பல்புகள் கொண்டதாக வருகிறது.

கிராஃபைட்- டயாப்லோ ரெட் மற்றும் க்ராஃபைட்-காஸ்பியன் புளூ ஆகிய இரண்டு வண்ணத் தேர்வுகளில் வர இருக்கிறது. புதிய ட்ரையம்ஃப் டைகர் 850 பைக் ரூ.9.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலானது பிஎம்டபிள்யூ எஃப்-750 ஜிஎஸ் மாடலுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








