"சாம்பியன்கள் காலையில் OATS தான் சாப்பிடுவார்கள்” - மறைமுகமாக ராஜீவ் பஜாஜை கலாய்த்த ஏத்தர் எனர்ஜி

பஜாஜ் ஆட்டோ நிறுவனர் ராஜீவ் பஜாஜின் குற்றச்சாட்டை மறைமுகமாக கிண்டலடிக்கும் விதமாக ஏத்தர் எனர்ஜி நிறுவனம் பதிவு ஒன்றை டுவிட்டர் பதிவிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

புனேவில் சாகான் தொழிற்சாலையின் மூலம் செயல்பட்டு வருகின்ற பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் புதிய பல்சர் 250 பைக்குகளை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த அறிமுக நிகழ்ச்சியின் போது பேசிய பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் பஜாஜ் ஓலா, ஏத்தர், டோர்க் மற்றும் ஸ்மார்ட் இ போன்ற வளர்ந்துவரும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை தாக்கி சில கருத்துகளை பேசினர்.

அதாவது, இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பணத்தை விழுங்கக்கூடியவைகளாக இருக்கின்றன. ஆனால் பஜாஜ் போன்ற பழைய நிறுவனங்கள் பண புழக்கத்திற்கு வித்திடுகின்றன என்பதுபோல் கருத்து தெரிவித்தார். மேலும் பேசியவர், "சாம்பியன்கள் காலை உணவாக ஓட்ஸ் (OATS)-ஐ தான் சாப்பிடுவார்கள்" என கூறினார். இதில் OATS என்பது மறைமுகமாக Ola, Ather, Tork and Smart E என்பதை குறிக்கின்றன.

இதில் பஜாஜின் நேரடி போட்டி ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்துடன் தான். இருப்பினும் ராஜீவ் பஜாஜின் கிண்டலான கருத்திற்கு ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தான் முதலாவதாக பதில் அளித்துள்ளது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் வேகமாக பிரபலமாகிவரும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், சாம்பியன்களுக்கான ஓட்ஸ் என்ற புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது காலையை விரைவாகவும், ஸ்மார்டாகவும் துவங்குவதற்கான உறுதியினை அளிக்கிறது எனவும் இந்த டுவிட்டர் பதிவில் ஏத்தர் தெரிவித்துள்ளது. இதையெல்லாம் விட முக்கியமாக, நிபுணத்துவம் பெற்றவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என மறைமுகமாக ராஜீவ் பஜாஜை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்த பதிவின் மூலம் கலாய்த்துள்ளது. அதாவது சாம்பியன்கள் ஓட்ஸ் சாப்பிடுவார்கள் என்பதையே தனது வணிகத்திற்காக எத்தர் எனர்ஜி பயன்படுத்தி கொண்டுள்ளது.

ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் லோகோ உடன் இந்த படத்தில் காட்டப்பட்டுள்ள ஓட்ஸ் பாக்கெட்டின் மீது, ‘உங்களுக்கு உடனடி பிக்-அப் தேவைப்படும்போது' என குறிப்பிட்டுள்ளனர். உடனடி தேவை என்பது எலக்ட்ரிக் இரு-சக்கரங்களை குறிக்கின்றது. பல்சர் 250 பைக்கின் அறிமுக நிகழ்ச்சியில் மேலும் பேசிய ராஜீவ் பஜாஜ், ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தற்போதுவரையில் ஒரு சிங்கிள் யூனிட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கூட வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யாததையும் தாக்கி பேசினார்.

வாடிக்கையாளர்களை காத்திருக்க வைப்பதுதான் அவர்களது பாணி என பேசிய ராஜீவ் பஜாஜ், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 75 ஆண்டுகால பழமை வாய்ந்தது. இத்தனை வருடங்களில் பல சவால்களை கடந்து வந்துள்ளது. பஜாஜ், என்ஃபீல்டு மற்றும் டிவிஎஸ் போன்ற சாம்பியன்கள் எப்போதும் வளர்ந்துவரும் சந்தை இயக்கவியலுக்கு ஏற்றவாறு மாறக்கூடியவை எனவும் கூறினார்.

செலவு, போட்டி மற்றும் புதிய விதிமுறைகள் என பல்வேறு முனைகளில் அவை வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மேலும் இவை வளர்ந்துவரும் இவி சுற்றுச்சூழல் அமைப்பிற்கு ஏற்றவாறு மாறக்கூடிய திறன்களையும் கொண்டுள்ளன. இருப்பினும் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களையும் இலகுவாக எடுத்து கொள்ளக்கூடாது எனவும் ராஜீவ் பஜாஜ் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இவி-களின் விற்பனை இன்னமும் ஆரம்ப கட்ட நிலையில் தான் உள்ளது. இருந்தாலும் மத்திய, மாநில அரசாங்கங்களின் முயற்சியால் நாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவது மக்களிடையே மெல்ல மெல்ல துளிர்விட்டு வருகிறது. பெட்ரோல் & டீசல் விலைகளை உயர்த்தியுள்ள மத்திய அரசாங்கம் மறுப்பக்கம் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியங்களை வாரி இறைத்து வருகிறது.

மத்தியில் ஆளும் அரசாங்கம் மட்டுமின்றி, மாநில அரசாங்கங்களும் தங்களது மாநிலத்தில் எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய துவங்கும் நிறுவனங்களுக்கு மானியங்களை அறிவித்து வருகின்றன. இதனால் குறிப்பாக எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எலக்ட்ரிக் வாகனங்களை விற்பதில் தற்போது உள்ள பிரச்சனைகளில் ஒன்று பேட்டரி சார்ஜிங் நிலையங்கள் மற்றும் பேட்டரியை கழற்றி மாட்டும் கட்டமைப்பு முழுமையாக நாடு முழுவதும் இல்லாததே ஆகும். ஆனால் இந்த நிலை நீண்ட வருடத்திற்கு இருக்க போவதில்லை. ஏனெனில் முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்களை தாண்டி ஓலா, ஏத்தர் எனர்ஜி போன்ற ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் சார்ஜிங் நிலையங்களை இந்தியா முழுவதும் கொண்டுவரும் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் பஜாஜ் ஆட்டோ போன்ற சாம்பியன்களின் கிண்டல்களையும் சமாளித்தாக வேண்டும். ராஜீவ் பஜாஜின் கருத்திற்கு ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் சார்பில் எந்தவொரு கருத்தும் இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தை தாழ்த்தி ஒருவர் பதிவிட்ட பதிவிற்கு ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் ஃபையர் விட்டுள்ளார்.

Most Read Articles

மேலும்... #ஏத்தர் #ather energy
English summary
Ather Electric Scooter OATS For Champions – In Response Rajiv Bajaj’s Comment
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X