இந்தியாவின் நம்பகமான டாப்- 5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்கள்!

மின்சார ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செயல்திறன், போதுமான பயணத்தை தூரத்தை வழங்குவதால், வாடிக்கையாளர்களும் அதிக வரவேற்பு கொடுக்கத் துவங்கி இருக்கின்றனர். இதனால், மின்சார ஸ்கூட்டர் சந்தையில் ஏராளமான நிறுவனங்கள் கால் பதித்து வருகின்றன. பிரபலமான இருசக்கர வாகன நிறுவனங்கள் மட்டுமின்றி, பல புதிய நிறுவனங்களும் மின்சார ஸ்கூட்டர் சந்தையில் களமிறங்கி உள்ளன. இதனால், மின்சார ஸ்கூட்டரை வாங்கும்போது சரியான பிராண்டை தேர்வு செய்வது கடினமான விஷயமாக மாறி இருக்கிறது.

இந்த சூழலில், இந்தியாவின் நம்பகமான மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அவை விற்பனை செய்யும் சிறந்த மின்சார ஸ்கூட்டர் மாடல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். இந்த நிறுவனங்கள் சிறந்த நன்மதிப்பை பெற்றிருப்பதுடன், இந்திய சாலை நிலைக்கு ஏற்ற அம்சங்கள், போதுமான செயல்திறன் மற்றும் பயண தூரத்தை வழங்கும் மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன. இந்தியாவின் நம்பகமான டாப்-5 மின்சார ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனங்கள் குறித்த விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

01. ஹீரோ எலெக்ட்ரிக்

இந்திய மின்சார ஸ்கூட்டர் சந்தையில் முன்னோடி நிறுவனமாக ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தை குறிப்பிடலாம். அடிப்படை அம்சங்கள் கொண்ட மின்சார ஸ்கூட்டர்களுடன் சந்தையில் கால் பதித்த ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம், தொடர்ந்து தீவிர முயற்சிகளை செய்து தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, இன்று சிறந்த தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட மாடல்களை விற்பனை செய்து வருகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு ரகங்களில் ஹீரோ மின்சார ஸ்கூட்டர்கள் கிடைக்கின்றன.

ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

நாட்டின் 25 மாநிலங்களில் 500க்கும் மேற்பட்ட டீலர்கள் மற்றும் சர்வீஸ் மையங்களுடன் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஹீரோ நிறுவனத்தின் ஃப்ளாஷ், ஆப்டிமா, நைக்ஸ் உள்ளிட்ட மின்சார மாடல்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வலுவான வாடிக்கையாளர் அடித்தளத்தை பெற்றுள்ளது. விரைவில் பல புதிய மின்சார ஸ்கூட்டர் மாடல்களையும் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

02. ஏத்தர் எனெர்ஜி

இந்திய மின்சார ஸ்கூட்டர் மார்க்கெட்டில் செயல்திறன் மிக்க மின்சார ஸ்கூட்டர் மாடல்களுடன் இளைய சமுதாயத்தினரை வெகுவாக கவர்ந்துவிட்டது ஏத்தர் நிறுவனம். பேட்டரி, சேஸீ மற்றும் உதிரிபாகங்களை சொந்தமாக தயாரித்து வருவதுடன், தொடுதிரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ரிவர்ஸ் அசிஸ்ட், எல்இடி விளக்குகள் என பல அசத்தலான அம்சங்களுடன் மின்சார ஸ்கூட்டர்களை கொண்டு வந்து வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது ஏத்தர் எனெர்ஜி. தவிரவும், ஏத்தர் மின்சார ஸ்கூட்டர்களின் செயல்திறனும் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்த விஷயமாக இருக்கிறது.

ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு தக்கவாறு ஏத்தர் நிறுவனம் தொடர்ந்து தனது மின்சார ஸ்கூட்டர்களை மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது அதிக தொழில்நுட்ப சிறப்புகள் கொண்ட 450எக்ஸ் என்ற மின்சார ஸ்கூட்டரை ஏத்தர் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. மிக குறுகிய காலத்தில் வாடிக்கையாளர் மத்தியில் அதிக நம்பகத்தன்மையும், நன்மதிப்பையும் பெற்ற நிறுவனமாகவும் மாறி இருக்கிறது.

03. ஒகினவா

கடந்த 2015ம் ஆண்டு துவங்கப்பட்ட ஒகினவா நிறுவனம் இந்தியாவின் நம்பர்-1 மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமாக மாற வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம், பிவாடியில் மின்சார ஸ்கூட்டர் தொழிற்சாலையை அமைத்தது. இதைத்தொடர்ந்து,, 2017ல் ரிட்ஜ் மற்றும் பிரெய்ஸ் என்ற இரண்டு மின்சார ஸ்கூட்டர் மாடல்களை ஒகினவா அறிமுகம் செய்தது. அதன்பிறகு ஏராளமான மாடல்களை அறிமுகப்படுத்தியது.

ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

அண்மையில் ஆர்30 மற்றும் லைட் என்ற இரண்டு புதிய மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்த ஒகினவா அடுத்து மின்சார மோட்டார்சைக்கிளையும் களமிறக்க ஆயத்தமாகி வருகிறது. மேலும், பல புதிய மாடல்களை களமிறக்கவும் திட்டமிட்டுள்ளது. குறுகிய காலத்தில் பல்வேறு திட்டங்களுடன் வாடிக்கையாளர்களிடத்தில் அதிக நம்பிக்கையை பெற்றுள்ளது ஒகினவா.

04. பிகாஸ்

மின்சாதன உற்பத்தியில் பிரபலமான ஆர்ஆர் குளோபல் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் பிகாஸ் நிறுவனம் கடந்த ஆண்டு சந்தையில் இறங்கியது. முதலாவதாக ஏ2 மற்றும் பி8 என இரண்டு புதிய மின்சார ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகப்படுத்தியது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், இன்டர்நெட் வசதி, சிறந்த மின்னணு பொறியியல் அம்சங்களுடன் வந்த பிகாஸ் ஸ்கூட்டர்கள் இன்றைய நவநாகரீக உலகில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை கச்சிதமாக பூர்த்தி செய்யும் வகையில் இருக்கிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வுகளை வழங்கும் விதத்தில் பல புதிய மின்சார ஸ்கூட்டர் மாடல்களையும் கொண்டு வருவதற்கு பிகாஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் நம்பகமான 5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்கள்!

பிகாஸ் ஏ2 ஸ்கூட்டர் வடிவமைப்பில் தனித்துவமாக இருப்பதுடன், அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தில் செல்லும் திறனையும், ஒருமுறை சார்ஜ் ஏற்றினால் 75 கிமீ தூரம் பயணிக்கும் வாய்ப்பையும் வழங்கும். இந்த மாடலானது லீட் ஆசிட் பேட்டரி அல்லது லித்தியம் அயான் பேட்டரி கொண்ட மாடல்களில் கிடைக்கிறது. அடுத்து பிகாஸ் பி8 ஸ்கூட்டரானது பிரிமீயம் மாடலாக உள்ளது. இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 50 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருப்பதுடன், பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 70 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

பிகாஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் அசத்தலான தொழில்நுட்ப வசதிகள் கொடுக்கப்படுகின்றன. பாக்கெட்டில் சாவியை வைத்திருந்தால் பொத்தானை அழுத்தி ஸ்டார்ட் செய்வதற்கான 'புஷ் பட்டன் ஸ்டார்ட்' வசதி, இரண்டு சக்கரங்களுக்கும் சரியான விகிதத்தில் பிரேக் பவரை செலுத்தி, வாகனத்தை பாதுகாப்பாக நிறுத்தும் 'கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம்', பார்க்கிங் வளாகங்களில் ஸ்கூட்டர் எங்கு நிற்கிறது என்பதை எளிதாக கண்டறிவதற்கான 'ஃபைன்டு யுவர் ஸ்கூட்டர்' தொழில்நுட்ப வசதி, தூரத்தில் இருந்தே பூட்டி திறப்பதற்கான வசதியை அளிக்கும், ரிமோட் லாக் மற்றும் அன்லாக் வசதி, வேகத்தை அதிகரிப்பதற்கான பூஸ்ட் ஸ்பீடு வசதி, மின்மோட்டார் திருடு போவதை தவிர்ப்பதற்கான பூட்டு வசதி, ஸ்கூட்டர் திருடு போவதை தவிர்ப்பதற்கான ஆன்ட்டி தெஃப் அலாரம் என வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பை வழங்கும் அம்சங்களுடன் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது பிகாஸ். இதனால், மிக குறுகிய காலத்தில் வாடிக்கையாளர்களின் அதிக நம்பிக்கையை பெற்ற நிறுவனமாகவும் மாறி இருக்கிறது.

05. ஆம்பியர் எலெக்ட்ரிக்

இந்தியாவின் முன்னணி மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக ஆம்பியர் உள்ளது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், பல்வேறு மாடல்களை விற்பனை செய்து வருகிறது. கடந்த 2008ம் ஆண்டு துவங்கப்பட்ட ஆம்பியர் நிறுவனம், அதே ஆண்டில் மூன்று மின்சார மாடல்களை அறிமுகம் செய்தது. அதன்பிறகு, ஏராளமான மின்சார ஸ்கூட்டர் மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்தது.

ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஆம்பியர் நிறுவனம் தற்போது ரியோ, ரியோ எலைட், வி சீரிஸ், எம் சீரிஸ், ஸீல் இஎக்ஸ் மற்றும் மேக்னஸ் புரோ ஆகிய மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இந்த மாடல்கள் மணிக்கு 25 கிமீ முதல் 55 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றவையாக உள்ளன. அதேபோன்று, பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 65 கிமீ தூரம் முதல் 90 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். மின்சார ஸ்கூட்டர் மார்க்கெட்டில் தனது இடத்தை தக்க வைப்பதற்காக, தொடர்ந்து பல புதிய மாடல்களை ஆம்பியர் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

Tamil
English summary
This list of the most trusted electric scooter manufacturers in India includes some of the best electric scooters you can buy right now. These electric scooters’ manufacturers have a good reputation, and they provide decent range and performance, making them ideal for use under Indian road conditions.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X