டாடாவை விட மஹிந்திரா டாப் கியரில் தூக்கிட்டு போகும்னு நெனைச்சோமே... இந்த எலெக்ட்ரிக் கார் மட்டும் வந்துச்சுனா!
மஹிந்திரா (Mahindra) தனது அடுத்த தலைமுறை எலெக்ட்ரிக் காரை 2027ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த உறுதி செய்துள்ளது. இது 2022 ஆகஸ்ட் 15 அன்று முதன்முதலில் காட்சிப்படுத்தப்பட்ட பிஇ.07 கான்செப்ட் (BE.07 Concept) மாடலின் உற்பத்தி வடிவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில், 2026இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த எலெக்ட்ரிக் காரின் வெளியீட்டு காலக்கெடுவில் தற்போது சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
பிஇ.07 ஆனது மஹிந்திராவின் 'பிஇ' எலெக்ட்ரிக் கார்கள் வரிசையில் 'பிஇ 06'-க்குப் பிறகு வரும் இரண்டாவது மாடலாகும். மேலும், இது எக்ஸ்இவி 9இ (XEV 9e), பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9எஸ் ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு அடுத்ததாக, மஹிந்திராவின் நான்காவது 'Born-Electric' வாகனமாக இணையவுள்ளது. இந்த வாகனம், மஹிந்திரா பிராண்டின் பிரத்யேக 'இங்லோ' (INGLO) பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும்.

இது தற்போதைய பிஇ 06 காரை விட அளவில் பெரியதாகவும், அதிக உட்புற இடவசதியுடனும் மேம்பட்ட சௌகரியத்துடனும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியை பொறுத்தவரை, பிஇ.07 நடுத்தர அளவிலான எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் பிரிவில் டாடா ஹாரியர் இவி (Tata Harrier EV) மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப்7 (Vinfast VF7) போன்ற எலெக்ட்ரிக் கார்களுக்கு நேரடிப் போட்டியாக அமையக்கூடும்.
இது 60 kWh முதல் 80 kWh வரையிலான பெரிய பேட்டரி ஆப்ஷன்கள் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேட்டரிகள் செயல்திறன் மற்றும் வரம்பிற்கு இடையே ஒரு வலுவான சமநிலையை வழங்கும். கான்செப்ட் வாகனங்களின் பல வடிவமைப்பு அம்சங்களை உற்பத்தி செய்யப்படும் கார்களில் கொண்டு வருவதில் மஹிந்திராவுக்கு நீண்ட கால வரலாறு உண்டு.

எனவே, பிஇ.07 அதன் கான்செப்ட் பதிப்பில் இருந்து பல முக்கிய வடிவமைப்பு அம்சங்களைத் தக்கவைத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. உட்புறத்தில், மூன்று ஸ்கிரீன் அமைப்பு, பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், டூயல்-ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், லெதரெட் அப்ஹோல்ஸ்டரி, பவர்டு & வென்டிலேட்டட் முன் இருக்கைகள், சாய்த்து கொள்ளக்கூடிய பின் இருக்கைகள், ஒரு பெரிய பனோரமிக் சன்ரூஃப் மற்றும் பல வண்ணங்களில் கேபின் விளக்குகள் போன்ற வசதிகள் இடம்பெறலாம்.
மஹிந்திரா தற்போது மாதந்தோறும் 4,000 முதல் 6,000 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து, இவி பிரிவில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. பிஇ 06 இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை வாங்குபவர்களிடையே குறிப்பிடத்தக்க பிரபலத்தைப் பெற்றுள்ளது. மேலும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எக்ஸ்இவி 9எஸ், இந்தியாவின் மிகவும் மலிவு விலையிலான ஏழு இருக்கைகள் கொண்ட எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
செயல்திறன் மற்றும் சொகுசான பயணத்தை மையமாகக் கொண்ட எக்ஸ்இவி 9இ, மஹிந்திராவின் எலெக்ட்ரிக் கார்கள் வரிசையை மேலும் பலப்படுத்துகிறது. மஹிந்திரா & மஹிந்திராவின் நிர்வாக இயக்குனர் மற்றும் CEO ஆன ராஜேஷ் ஜெஜூரிகர், "பிஇ O7 தற்போதைய எங்கள் மூன்று எலெக்ட்ரிக் கார்களுக்கு மேல் ஒரு பெரிய விற்பனை ஈர்ப்பாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் நடப்பு ஆண்டில் மாத சராசரி எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையை 6,000-7,000 யூனிட்டுகளாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. பிஇ 07 அறிமுகமானதும், இது மஹிந்திராவின் நான்காவது 'Born-Electric' காராக அதன் இவி வரிசையில் இணையும். வரும் ஆண்டுகளில் தனது எலெக்ட்ரிக் கார்களின் வரிசையை மேலும் விரிவுபடுத்தி, வாடிக்கையாளர்களுக்கு அதிக ஆப்ஷன்களை வழங்கி, ஒட்டுமொத்த விற்பனையை அதிகரிக்க நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.
எலெக்ட்ரிக் கார்களைத் தவிர, மஹிந்திரா தனது ஸ்கார்பியோ என் (Scorpio N) எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பையும், ஸ்கார்பியோ என் அடிப்படையிலான பிக்-அப் டிரக்கையும் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. தற்சமயம் தீவிர சோதனை ஓட்டங்களில் இருக்கும் இந்த பிக்-அப் டிரக் வாகனம் இசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் (Isuzu D-Max V-Cross) மற்றும் டொயோட்டா ஹிலுக்ஸ் (Toyota Hilux) போன்ற பிக்-அப் டிரக் மாடல்களுடன் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றப்படி, இந்த 2026இல் புதியதாக எந்த எலெக்ட்ரிக் காரையும் அறிமுகப்படுத்தும் திட்டம் மஹிந்திராவிடம் இல்லை.


Click it and Unblock the Notifications








