ஆசியாவின் முதன்மையானதும், உலகின் 2வது பெரிய ஆட்டோமொபைல் கண்காட்சியாக டெல்லி ஆட்டோ எக்ஸ்போ எனப்படும் இந்திய வர்த்தக வாகனக் கண்காட்சி சிறப்பு பெற்றுள்ளது.
இன்று விஸ்வரூபம் எடுத்துள்ள இந்திய வாகனத் துறையின் பலத்தை பரைசாற்றும் வகையில் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ கண்காட்சி பற்றிய வரலாற்றுத் தகவல்களை சுருக்கமாக ஸ்லைடரில் காணலாம்.
ஏற்பாட்டாளர்கள்
இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII), சியாம் எனப்படும் இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கம்(SIAM) மற்றும் வாகன உதிரிபாக தயாரிப்பாளர்கள் சம்மேளனம்(ACMA) ஆகியவை இணைந்து இந்த சர்வதேச கண்காட்சியை சீரூம், சிறப்புமாக நடத்தி வருகின்றன.
தொடக்கம்
கடந்த 1985ம் ஆண்டு டெல்லி ஆட்டோமொபைல் கண்காட்சி நடத்துவதற்கான முயற்சிகள் துவங்கப்பட்டன. 1986ம் ஆண்டு முதன்முறையாக உள்நாட்டு கண்காட்சியாக டெல்லி ஆட்டோ எக்ஸ்போ நடத்தப்பட்டது. அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி இந்த 9 நாட்கள் திருவிழாவை தொடங்கி வைத்தார்.
வளர்ச்சி
முதல் முறை உள்நாட்டு நிறுவனங்களுக்கான கண்காட்சியாக துவங்கப்பட்டாலும், அடுத்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போ சர்வதேச தரத்திற்கு உயர்ந்தது. 1993ல் நடத்தப்பட்ட 2வது கண்காட்சியில் 7 நாடுகள் பங்கெடுத்தன.
இரண்டாண்டுக்கு ஒருமுறை
1996ம் ஆண்டு முதல் இரண்டாண்டுக்கு ஒருமுறை டெல்லி சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
2000 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ
2000ம் ஆண்டு கண்காட்சியை மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் துவங்கி வைத்தார். இதில், 20 நாடுகளை சேர்ந்த வாகனத் துறை தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். டெல்லி பிரகதி மைதானத்தில் 18 அரங்குகளில் நடந்தது. மேலும், சிறிய கார் தயாரிப்பாளர்களுக்கு முக்கியத்துவம் தரும் கண்காட்சியாக அமைந்தது. உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் பல சிறிய கார் மாடல்கள் அறிமுகமாகின.
நானோ கார்
2008ம் ஆண்டு நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில்தான் உலகின் மிகக் குறைந்த விலை காரான டாடா நானோ மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு லட்ச ரூபாய் கார் என்ற பிரகடனத்துடன் வந்த டாடா நானோ இந்தியா மட்டுமின்றி உலக ஆட்டோமொபைல் துறையினரின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. தவிர, 1900 உதிரிபாக சப்ளையர்கள், கார் அலங்கார நிறுவனங்கள் என ஆட்டோமொபைல் துறையை மையமாக கொண்டு இயங்கும் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்றன.
2010 ஆட்டோ எக்ஸ்போ
2010ம் ஆண்டு டெல்லி எக்ஸ்போ வெள்ளி விழா கண்டது. இதில், ஏராளமான வெளிநாட்டு கார் நிறுவனங்கள் துணிந்து இந்திய மண்ணில் காலடி பதித்தன. 30 நாடுகளை சேர்ந்த 800 நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை பார்வைக்கு வைத்தன. 19 நாடுகளை சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் இந்த விழாவில் பார்வையிட வருகை தந்தனர்.
2012 ஆட்டோ எக்ஸ்போ
சிறிய கார் மாடல்களின் மார்க்கெட்டாக கருதப்பட்டு வந்த இந்திய கார் சந்தையில் சொகுசு மற்றும் ஆடம்பர ரக கார்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதை பார்த்து முதல்முறையாக ஃபெராரி உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை பார்வைக்கு வைத்தன. பீஜோவும் முதன்முறையாக தனது தயாரிப்புகளை பார்வைக்கு வைத்தது. 50க்கும் மேற்பட்ட புதிய கார் மாடல்களும், 20 புதிய இருசக்கர வாகன மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டன. ஒரு கோடி ரூபாய் வரை போலி அனுமதி சீட்டுகள் விற்பனையானதாக பரபரப்பு ஏற்பட்டதும் நினைவிருக்கலாம்.
2014 ஆட்டோ எக்ஸ்போ
ஒவ்வொரு முறையும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ புதிய பரிமாணத்தில் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. அடுத்த மாதம் 5ந் தேதி முதல் 11ந் தேதி வரை நடைபெற இருக்கும் 12வது டெல்லி சர்வதேச ஆட்டோ எக்ஸ்போ முதல்முறையாக இரண்டு இடங்களில் நடைபெற உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, உதிரிபாக தயாரிப்பாளர்களுக்கான கண்காட்சி பிரகதி மைதானத்திலும், முக்கியமான வாகனக் கண்காட்சி கிரெட்டர் நொய்டாவிலும் நடைபெற உள்ளது. முதல் இரண்டு நாட்கள் பத்திரிக்கையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கும், 7ந் தேதி முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.
புதிய மாடல்கள்
30க்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் பங்கேற்க இருக்கும் இந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் 70 புதிய கார் மாடல்களும் 25க்கும் அதிகமான புதிய இருசக்கர வாகனஙக்களும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர, வாகன சந்தைக்கான புதிய தொழில்நுட்ங்கள் மற்றும் ஆக்சஸெரீஸ்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
நேரடி கவரேஜ்
கடந்த 2012ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவை போன்றே இந்த ஆண்டு கண்காட்சியையும் டிரைவ்ஸ்பார்க் தளம் நேரடியாக கவரேஜ் செய்ய உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வுகளை உடனுக்குடன் தருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.


Click it and Unblock the Notifications