இந்தியாவில் பிரியோ அடிப்படையிலான புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்த ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இதற்கு ஏதுவாக, ராஜஸ்தானின் தபுகெராவில் அமைக்கப்பட்டு வரும் ஆலையில், கூடுதலாக ரூ.2,500 கோடியை முதலீடு செய்யவும் அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கிரெட்டர் நொய்டாவிலுள்ள ஆலையில் உற்பத்தி நெருக்கடி நிலவுகிறது. எனவே, புதிய மாடல்களை அறிமுகம் செய்வதற்கு முன்னதாக ராஜஸ்தான் ஆலையின் உற்பத்தி திறன் மற்றும் வசதிகளை சரியாக அமைத்துக் கொள்ளும் முயற்சிகளை ஹோண்டா எடுத்து வருகிறது.
அமேஸ்
பிரியோ அடிப்படையிலான அமேஸ் கார் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையில் சக்கைபோடு போட்டு வருகிறது. இதுவரை 57,000 அமேஸ் கார்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளது. கிரேட்டர் நொய்டா ஆலையில் 3 ,ஷிப்ட்களில் உற்பத்தி நடப்பதால், அமேஸ் காரின் காத்திருப்பு காலம் வெகுவாக குறைந்திருக்கிறது. இருப்பினும், புதிய கார்களை உற்பத்தி செய்வதற்கான திறன் இந்த ஆலையில் தற்போது இல்லை.
மொபிலியோ
அமேஸ் காரை அடுத்து பிரியோ அடிப்படையிலான மொபிலியோ எம்பிவி காரை ஹோண்டா அறிமுகம் செய்ய உள்ளது. இது மாருதி எர்டிகா போட்டியாளராக கருதப்படுகிறது. ராஜஸ்தான் ஆலையில் இந்த காரை உற்பத்தி செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இதற்கு தகுந்தாற்போல் அந்த ஆலையில் கட்டமைப்பு வசதிகளை ஹோண்டா செய்து வருகிறது.
காம்பெக்ட் எஸ்யூவி
மொபிலியோ காரைத் தொடர்ந்து அடுத்ததாக பிரியோ அடிப்படையிலான புதிய காம்பெக்ட் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்துகிறது ஹோண்டா. ஜப்பானில் சமீபத்தில் விற்பனைக்கு வந்த வெஸல் எஸ்யூவி இந்தியாவிலும் ஹோண்டா விற்பனைக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விலை நிர்ணயத்தில் உள்ள சிக்கல்களையடுத்து, பிரியோ அடிப்படையிலான காம்பெக்ட் எஸ்யூவி ஹோண்டா அறிமுகம் செய்ய உள்ளது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், ரெனோ டஸ்ட்டருக்கு போட்டியாக இந்த கார் இருக்கும். இந்த காரும் ராஜஸ்தான் ஆலையில்தான் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தபுகெரா ஆலை
ராஜஸ்தானின் தபுகெராவில் அமைக்கப்பட்டிருக்கும் ஆலையில் தற்போது கார் எஞ்சின் பாகங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. உள்நாடு மட்டுமின்றி, தாய்லாந்து மற்றும் ஐரோப்பிய சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில், கார் தயாரிப்புக்கான கட்டமைப்பு வசதிகளுக்காக கூடுதல் முதலீடு செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
ரூ.2,500 கோடி முதலீடு செய்யப்பட உள்ளதாக ஹோண்டா தெரிவித்துள்ள ராஜஸ்தான் ஆலையில் உற்பத்தி துவங்கும்போது 2,200 பேருக்கு நேரடியாகவும், ஆயிரக்கணக்கானோருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications