மஹிந்திரா இ2ஓ பிரிமியம் எலக்ட்ரிக் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

சுற்றுச்சூழல் நண்பனாக போற்றப்படும் எலக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு பல நாடுகளில் அதிகம் இருக்கிறது. ஜப்பான், அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகளில் எலக்ட்ரிக் கார்களுக்கு இருக்கும் மவுசு அவற்றின் விற்பனை புள்ளிவிபரங்கள் மூலமாக பட்டவர்த்தனமாக தெரிகின்றன. அதேவேளை, எலக்ட்ரிக் கார் விற்பனையை ஊக்குவிப்பதற்காக அந்நாட்டு அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன. இதனால், அந்த நாடுகளில் மொத்த கார் விற்பனையில் எலக்ட்ரிக் கார்கள் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகின்றன.

ஜப்பானில் விற்பனையாகும் மொத்த கார்களில் 28 சதவீதம் எலக்ட்ரிக் கார்கள். இதே அமெரிக்காவில் 26 சதவீத பங்களிப்பை எலக்ட்ரிக் கார் மற்றும் இதர எலக்ட்ரிக் வாகனங்கள் கொண்டுள்ளன. தவிரவும், மேற்கண்ட நாடுகளில் குறைந்தது 25 எலக்ட்ரிக் கார் மாடல்கள் விற்பனையில் உள்ளன. ஆனால், இந்தியாவில் நிலைமை வேறு. எலக்ட்ரிக் கார்களுக்கான போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாதது மற்றும் அதிக விலை போன்றவை இந்திய வாடிக்கையாளர்களை கவரவில்லை.

அரசாங்கமும் சலுகைகளை மீண்டும் நடைமுறைப்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்திய மார்க்கெட்டில் தற்போது ஒரே ஒரு எலக்ட்ரிக் கார் மாடலாக மஹிந்திரா ரேவா இ2ஓ கார் விற்பனையாகி வருகிறது. கடந்த 2001ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ரேவா ஐ எலக்ட்ரிக் காருக்கு மாற்றாக இந்த புதிய மாடலாக இது விற்பனைக்கு வந்தது. மேலும், மஹிந்திராவின் கீழ் ரேவா நிறுவனம் வந்தபின் அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாடல் என்பதும் முக்கியமானது.

அதிக விலை, பவர் ஸ்டீயரிங் இல்லை என்பதுடன் அரசு மானியம் உள்ளிட்ட சலுகைகள் இல்லாததும் வாடிக்கையாளர்களிடம் மஹிந்திரா ரேவா இ2ஓ கார் எடுபடவில்லை. இந்த நிலையில், இ2ஓ எலக்ட்ரிக் காரில் எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் மற்றும் கூடுதல் ரேஞ்ச் கொண்ட புதிய மாடலை சமீபத்தில் மஹிந்திரா- ரேவா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது.

இந்த புதிய இ2ஓ பிரிமியம் எலக்ட்ரிக் காரை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு சமீபத்தில் டிரைவ்ஸ்பார்க் டீமுக்கு கிடைத்தது. அதில், இந்த காரின் முக்கிய சிறப்பம்சங்கள், குறைகள், பெட்ரோல், டீசல் கார்களுடனான ஒப்பீட்டுத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

மஹிந்திரா இ2ஓ பிரிமியம் டெஸ்ட் டிரைவ்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் டெஸ்ட் டிரைவ் செய்த அனுபவங்களின் அடிப்படையிலானத் தகவல்களை காணலாம். தமிழக மார்க்கெட்டில் இல்லாவிட்டாலும், பெங்களூர் உள்பட இ2ஓ எலக்ட்ரிக் கார் விற்பனையில் இருக்கும் பிற நகரங்களில் இருக்கும் வாசகர்களுக்கு பயன்படும் வகையில் இந்த டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை வழங்குகிறோம்.

டெஸ்ட் டிரைவ்: சந்தோஷ் ராஜ்குமார்

படங்கள்: ராஜ்கமல்

தமிழாக்கம்: சரவணராஜன்

 டிசைன்

டிசைன்

வாத்து உருவத்தை மனதில் வைத்து இந்த காரை டிசைன் செய்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. சிறப்பான டிசைன் கொண்ட காராக இருந்தாலும், சாதாரண கார் டிசைனுடன் இந்த எலக்ட்ரிக் கார் டிசைனை ஒப்பிடும்போது சிறப்பாக கூற முடியாது. எனவே, அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை கச்சிதமாக பூர்த்தி செய்யும் டிசைனாக கூற முடியாது. இந்த கார் ஏபிஎஸ் பாடி பேனல்களை கொண்டிருப்பதால் வலுவானதாகவும், கீறல்கள் விழாது என்பது சிறப்பு.

அடக்கமான டிசைன்

அடக்கமான டிசைன்

நகர்ப்புறத்தில் ஓட்டக் கூடிய கார் என்பதால் மிகச்சிறப்பாகவும், அடக்கமாகவும் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. எனவே, போக்குவரத்து நெரிசலில் செல்லும்போதும், பார்க்கிங் செய்வதற்கும் சிறப்பானதாக உள்ளது.

டிரைவிங் அனுபவம்

டிரைவிங் அனுபவம்

சாதாரண கார்களை ஓட்டுவதைவிட ஒரு புதுவித குதூகலத்தை ஏற்படுத்துகிறது. சஸ்பென்ஷன் அமைப்பு மிக மென்மையாக இருக்கிறது. பள்ளம் மேடுகளில் கூட அதிர்வுகளை உள்வாங்கி சிறப்பான பயணத்தை வழங்குகிறது. சிறப்பான டார்க்கை அளிப்பதால் சிக்னலில் இருந்து கிளம்பும்போதும், போக்குவரத்து நெரிசலில் செல்லும்போதும் வெகு எளிதாக பிக்கப்பாகிறது.

 பூஸ்ட் ஆப்ஷன்

பூஸ்ட் ஆப்ஷன்

அதிக பெர்ஃபார்மென்ஸை விரும்புபவர்களுக்காகவும், போக்குவரத்து நெரிசலை பொறுத்தும் மாற்றிக் கொள்ளும்வகையில், பூஸ்ட் என்ற டிரைவிங் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. ஓவர்டேக் செய்யும்போது இது உதவிகரமாக இருக்கிறது. அதேவேளை, தொடர்ந்து ஆக்சிலேட்டரில் நம் திராணியை நிரூபிக்க முயன்றால் பேட்டரி சார்ஜ் வெகு வேகமாக கீழே இறங்க துவங்கிவிடுகிறது.

முதல் குறை

முதல் குறை

டிரைவிங் ஆப்ஷன்களை தேர்வு செய்யும் சுவிட்சில் பேக்லிட் கொடுக்கப்படவில்லை. இதனால், இரவில் புதிதாக ஓட்டுபவர்கள் டிரைவ் ஆப்ஷன் சுவிட்சை தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். அடுத்ததாக எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் கொடுக்கப்பட்டும் அவ்வளவு இலகுவாக இல்லை. இந்த விஷயத்தில் மஹிந்திரா நிறுவனம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மேலும், பிரேக்குகள் போதுமான நம்பிக்கையை தரவில்லை.

 கேபின்

கேபின்

கேபினில் இடவசதி சிறப்பாக இருக்கிறது. 4 பேர் வசதியாக அமர்ந்து செல்லலாம். உயரமானவர்கள் அமர்ந்தால் கூட தலை இடிப்பதில்லை. இருக்கை அமைப்பும் நன்றாகவே உள்ளது. முன் இருக்கை ஆர்ம்ரெஸ்ட் அமைப்பு சரியாக இல்லை. கதவுகளை மூடும்போது மென்மையாக இல்லை. கனமான கதவுகள், சீட்பெல்ட் அமைப்பு ஆகியவற்றை இன்னும் மேம்படுத்தினால் சிறப்பாக இருக்கும். இதன் 4 டோர் மாடலை மஹிந்திரா உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அப்படி வந்தால் பின் இருக்கை பயணிகளுக்கு மிகச் சிறப்பானதாக அமையும்.

வசதிகள்

வசதிகள்

மஹிந்திரா இ2ஓ பிரிமியம் மாடலில் 6.2 இஞ்ச் டச்ஸ்கிரீன் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் டச்ஸ்கிரீனை விரலால் கொஞ்சம் வேகமாக அழுத்தினால்தான் பணிந்து செயல்புரிகிறது. இல்லாவிட்டால் நம் கட்டளைகளை ஏற்க மறுத்து அடம்பிடிக்கிறது. ஜிபிஎஸ் நேவிகேஷன் சிஸ்டம், டிவிடி பிளேயர், புளூடூத் வசதி, ஐபாட் இணைப்பு வசதிகள் உள்ளன. இந்த காரின் மற்றொரு சிறப்பம்சம் முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளது. எளிதாக படிக்கும் விதத்தில் பேக்லிட் கொடுக்கப்பட்டுள்ளது. கீலெஸ் என்ட்ரி, ரிவர்ஸ் கேமரா போன்ற வசதிகளும் உள்ளன.

இதர வசதிகள்

இதர வசதிகள்

மொபைல்போன் அப்ளிகேஷன் மூலம் சில கூடுதல் வசதிகளை பெறலாம். ரிமோட் லாக், ஏசி.,யை ஆன் செய்வது, எமர்ஜென்சி ரேஞ்ச் போன்ற சில முக்கிய வசதிகளை ஸ்மார்ட்போன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

நிற்க...

நிற்க...

வசதிகள், டிசைன் எல்லாம் சரி. பெட்ரோல், டீசல் கார்களுடன் இதனை எவ்வாறு ஒப்பிடுவது. அவற்றைவிட இது சிறந்ததா என்பதை தெரிந்துகொள்ள ஒரு சிறிய ஒப்பீட்டை வழங்குகிறோம். மாருதி ஸ்விஃப்ட் காரின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களின் பராமரிப்பு மற்றும் எரிபொருள் செலவீனத்துடன், மஹிந்திரா இ2ஓ பிரிமியம் மாடலின் செலவீனத்தை ஒப்பிட்டு பார்க்கலாம்.

 இ2ஓ பிரிமியம் ரேஞ்ச்

இ2ஓ பிரிமியம் ரேஞ்ச்

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இ2ஓ எலக்ட்ரிக் காரைவிட சமீபத்தில் விற்பனைக்கு வந்த புதிய இ2ஓ பிரிமியம் மாடலின் ரேஞ்ச் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் புதிய மாடல் 120 கிமீ தூரம் வரை செல்லும் என மஹிந்திரா தெரிவிக்கிறது. ஒருமுறை முழுமையாக பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 10 யூனிட்டுகள் மின்சாரம் செலவாகும் என மஹிந்திரா ரேவா தெரிவித்துள்ளது. இருப்பினும், எமது டெஸ்ட் டிரைவின்போது ஒரு முழு சார்ஜில் 92 கிமீ தூரம் சென்றது. ஆனால், டெஸ்டின்போது பூஸ்ட் டிரைவிங் ஆப்ஷனை அதிகம் பயன்படுத்தியதுடன் பாதி தூரம் ஏசி.,யை ஆன் செய்தும் ஓட்டினோம். எனவே, சீரான டிரைவிங்கில் புதிய பிரிமியம் மாடல் ஒரு முழு சார்ஜ்க்கு 100 கிமீ வரை செல்லும் என்று கூறலாம்.

"ரன்னிங் காஸ்ட்'!!

நாள் ஒன்றுக்கு 45 கிமீ தூரம் செல்வதாக கணக்கிட்டால் பராமரிப்பு மற்றும் சர்வீஸ் செலவீனத்தை தவிர்த்து மாருதி ஸ்விஃப்ட் பெட்ரோல் மாடலுக்கு எரிபொருள் செலவீனமாக ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாயும், டீசல் மாடலுக்கு 70,200 ரூபாயும் ஆகும். அதே ஓர் ஆண்டில் மஹிந்திரா இ2ஓ காருக்கான மின் செலவு ரூ.9,000 வரை செலவாகும்.

5 ஆண்டுகளுக்கு...

5 ஆண்டுகளுக்கு...

5 ஆண்டுகளுக்கான ஒப்பீட்டை பார்க்கும்போது, மாருதி ஸ்விஃப்ட் பெட்ரோல் மாடலுக்கு ஆண்டுக்கு பராமரிப்பு செலவீனமாக ரூ.10,000 வரையிலும், டீசல் மாடலுக்கு ரூ.12,000 வரையிலும் ஆகும். அதேவேளை, மஹிந்திரா இ2ஓ காருக்கு ஆண்டுக்கு 800 ரூபாய் மட்டுமே பராமரிப்பு செலவீனமாக இருக்கும் என மஹிந்திரா ரேவா தெரிவிக்கிறது. இதன்படி, 5 ஆண்டுகளுக்கான எரிபொருள் மற்றும் பராமரிப்பு செலவீனத்தை கணக்கீடு செய்யும்போது, ஸ்விஃப்ட் பெட்ரோல் காருக்கு ரூ.5,54 லட்சமும், ஸ்விஃப்ட் டீசல் காருக்கு ரூ.4,11 லட்சமும், இ2ஓ காருக்கு ரூ.49,000 செலவாகும்.

ஆனால்...

ஆனால்...

ஆனால், 5 ஆண்டுகளின் முடிவில் மஹிந்திரா இ2ஓ காருக்கு புதிய பேட்டரி மாற்ற வேண்டும். அதன் விலை ரூ.1.80 லட்சம் என்று தெரிவிக்கப்படுகிறது. சிறப்பாக பராமரிக்கும்போது அடுத்த ஒரு 80,000 கிமீ தூரம் வரை ஓட்ட முடியும்.

ஒரு கிமீ.,க்கான செலவு

ஒரு கிமீ.,க்கான செலவு

நாள் ஒன்றுக்கு 45 கிமீ சராசரியாக பயன்படுத்துவோம் என்று வைத்துக் கொண்டால், ஆண்டுக்கு 16,200 கிமீ தூரம் பயணிக்கும். 5 ஆண்டுகளில் 81,000 கிமீ.,க்கான எரிபொருள் செலவீனத்தையும், பராமரிப்பு செலவீனத்தையும் கணக்கிட்டால் ஸ்விஃப்ட் பெட்ரோல் காருக்கு ஒரு கிலோமீட்டருக்கு சராசரியாக ரூ.6.84 செலவு செய்ய வேண்டியிருக்கும். ஸ்விஃப்ட் டீசல் மாடலுக்கு ரூ.5.06 வரையிலும் செலவிட வேண்டும். மஹிந்திரா இ2ஓ எலக்ட்ரிக் காருக்கு ஒரு கிலோமீட்டருக்கு வெறும் 60 பைசா மட்டுமே செலவாகும் என்பதையும் பார்க்க வேண்டும்.

சார்ஜிங் பாயிண்ட்

சார்ஜிங் பாயிண்ட்

எரிபொருள் மற்றும் பராமரிப்பு செலவீனம் மிக குறைவான காராக இருந்தாலும், சார்ஜ் செய்வதற்கு வசதியாக சிறப்பான கட்டமைப்பு மிக அவசியமாக வேண்டியிருக்கிறது. தற்போது சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பணிகளை மஹிந்திரா தீவிரமாக செய்து வருகிறது. பெங்களூர், டெல்லி ஆகிய நகரங்களில் முழு வீச்சில் புதிய சார்ஜ் ஏற்றும் நிலையங்களை திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

பெங்களூரில் கட்டமைப்பு வசதி

பெங்களூரில் கட்டமைப்பு வசதி

பெங்களூரில் 100 சார்ஜ் ஏற்றும் நிலையங்களும், டெல்லியில் 150 சார்ஜ் நிலையங்களும் உள்ளதாக மஹிந்திரா ரேவா தெரிவித்துள்ளது.

சாய்ஸ்

சாய்ஸ்

மஹிந்திரா இ2ஓ பிரிமியம் மாடலின் ஆன்ரோடு விலை ரூ.8 லட்சத்தை எட்டுகிறது. நகர்ப்புற பயன்பாடுக்காக இரண்டாவது அல்லது மூன்றாவது கார் வாங்க விரும்புவர்களுக்கு சிறந்த சாய்ஸ். அதேவேளை, இது இருபாலருக்கும் சிறந்த டிசைன் கொண்ட மாடல் என்றும் கூற முடியாது. இப்போது நம் கண்முன்னே டாடா நானோவும், மாருதி ஆல்ட்டோவும் மாறி மாறி வந்துபோகின்றன. அரசு மானியத் திட்டம் வந்தால் மட்டுமே இந்த காருக்கான உண்மையான வரவேற்பை அறிந்து கொள்ள முடியும்.

பேட்டரி வாடகை திட்டம்

பேட்டரி வாடகை திட்டம்

காரின் விலையை குறைக்கும் விதமாக பேட்டரியை மட்டும் வாடகைத் திட்டத்தில் பெறும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.6.15 லட்சம் ஆன்ரோடு விலையை செலுத்தி காரை வாங்கிவிட்டால் பேட்டரியை மட்டும் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். இதற்காக, மாதம் தோறும் ரூ.3,000ஐ பராமரிப்பு கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த திட்டம் வாடிக்கையாளர்களிடத்தில் எந்தளவு வரவேற்பை பெறும் என்று சொல்வதற்கில்லை. இதன் எரிபொருள் செலவீனம், பராமரிப்பு செலவீனம் குறைவாக இருந்தாலும், ரீசேல் மதிப்பு எந்தளவு இருக்கும் என்பதும் வாடிக்கையாளர்களை தயங்க வைக்கும் விஷயமாக உள்ளது.

முந்தைய டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

முந்தைய டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

புதிய மாடலின் ரேஞ்ச் மற்றும் பவர் ஸ்டீயரிங்கை தவிர்த்து இதர பிற வசதிகளை தெரிந்துகொள்ள எங்களது முந்தைய டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை படித்துக் கொள்ளலாம்.

Most Read Articles
English summary
So when we were asked to drive the latest version of Mahindra's e2o, the e20 Premium, there was naturally a lot of scepticism in the office, about whether or not the refreshed car would actually be an improvement over the old one, and if it is indeed an economically-viable replacement for a conventional petrol or diesel car in the long run. So, will the new Mahindra e2o variant deliver towards its goal of becoming the Future of Mobility? Let's see, shall we?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X