கிராஷ் டெஸ்ட்டில் 3 நட்சத்திர தர மதிப்பீடு பெற்ற ஹோண்டா மொபிலியோ கார்!

Written By:

குளோபல் என்சிஏபி நடத்திய கிராஷ் டெஸ்ட் எனப்படும் காரின் பாதுகாப்பு தரத்தை ஆய்வு செய்வதற்கான மோதல் சோதனைகளில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார் மாடல்கள் தொடர்ந்து பல்பு வாங்கி வருகின்றன. சமீபத்தில் ரெனோ க்விட் காரை கிராஷ் டெஸ்ட் நடத்தி பார்த்ததில், அந்த கார் பாதுகாப்பு தரத்தில் ஒற்றை நட்சத்திர மதிப்பீட்டை பெற்று அதிர்ச்சி கொடுத்தது.

இந்தநிலையில், இந்தியாவில் விற்பனையாகும் ஹோண்டா மொபிலியோ காரும் கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. சில மாதங்களுக்கு முன் ஹோண்டா மொபிலியோ காரின் பேஸ் மாடலை குளோபல் என்சிஏபி அமைப்பு கிராஷ் டெஸ்ட் சோதனை நடத்தியது.

அதில், ஹோண்டா மொபிலியோ கார் பாதுகாப்பு தரத்தில் ஒரு நட்சத்திர மதிப்பீட்டை கூட பெறாமல் ஏமாற்றம் தந்தது. இதனால், ஹோண்டா பிராண்டின் மீதான நம்பகத்தன்மை வாடிக்கையாளர்களிடத்தில் குறையும் வாய்ப்பு எழுந்தது.

இதனை கண்டு சுதாரித்துக் கொண்ட ஹோண்டா நிறுவனம் ஏர்பேக் பொருத்தப்பட்ட ஹோண்டா மொபிலியோ காரை கிராஷ் டெஸ்ட் செய்யுமாறு குளோபல் என்சிஏபி அமைப்பிடம் கோரிக்கை வைத்தது.

மேலும், ஏர்பேக் பொருத்தப்பட்டால் பயணிகளுக்கு எந்த அளவுக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும் என்பதை வாடிக்கையாளர்களும் அறிந்து கொள்ள வழி ஏற்படும் என்ற ஒரு நியாயமான காரணத்தையும் முன் வைத்தது. இதனை ஏற்றுக் கொண்டு இரண்டு ஏர்பேக்குகள் பொருத்தப்பட்ட ஹோண்டா மொபிலியோ காரை கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தியது.

இதில், ஓட்டுனர் மற்றும் முன் இருக்கை பயணிக்கான இரண்டு ஏர்பேக்குகள் பொருத்தப்பட்ட ஹோண்டா மொபிலியோ கார் 3 நட்சத்திர தர மதிப்பீட்டை பெற்றிருக்கிறது. ஏர்பேக்குகள் பொருத்தப்பட்ட மாடலில் ஓட்டுனர் மற்றும் முன் இருக்கை பயணியின் தலை மற்றும் கழுத்துப் பகுதிக்கு சிறப்பான பாதுகாப்பு கிடைப்பதாக ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

அதேநேரத்தில், ஓட்டுனரின் நெஞ்சுப் பகுதிக்கு போதிய பாதுகாப்பு கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், டேஷ்போர்டின் வடிவமைப்பு ஓட்டுனர் மற்றும் முன் இருக்கை பயணியின் முழங்கால்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

ஆறுதல் தகவல் என்னவெனில் ஹோண்டா மொபிலியோ காரின் பாடி ஷெல் எனப்படும் உடற்கூடு மிகச்சிறப்பானதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பெரியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் 3 நட்சத்திரங்களை பெற்றிருக்கும் ஹோண்டா மொபிலியோ கார் சிறியவர்களுக்கான பாதுகாப்புத் தரத்தில் 2 நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருக்கிறது.

[குறிப்பு: வெள்ளை நிற ஹோண்டா மொபிலியோ கார் ஏர்பேக் இல்லாத மாடல்]

Story first published: Wednesday, September 21, 2016, 11:01 [IST]
English summary
Honda Mobilio Receives Three-Star Ratings In The Latest Crash Test. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos