இந்தியாவில் ஃபார்முலா-1 கார் பந்தயங்களுக்கு சாவு மணி அடித்த உச்சநீதிமன்றம்..!

Written By:

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக ஃபார்முலா ஒன் பந்தயங்களுக்கான எதிர்காலம் இந்தியாவில் கேள்விக்குறியாகியுள்ளது.

உலகில் கார்பந்தய போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது ‘பார்முலா 1' கார் பந்தயமாகும்.

காற்றை கிழித்துச் செல்லும் வேகத்தில் பறக்கும் கார்களை பார்க்கும் போதும், அதன் இஞ்சின் சத்தத்தை கேட்கும் போதும் ஒருவித சிலிர்ப்பு ஏற்படும்.

1950ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஃபார்முலா 1 பந்தயங்களுக்கென பிரத்யேக ரசிகர் கூட்டம் உலகம் முழுவதும் உள்ளது.

கிரிக்கெட்டுக்கு உலகக் கோப்பை போல, டென்னிஸில் விம்பிள்டன் போல, சினிமாவுக்கு ஆஸ்கர் போல, இசைக்கு கிராமி போல கார் பந்தயங்களில் ஃபார்முலா 1 தான் உச்சம்.

இதில் கலந்து கொள்ளும் வீரர்கள், கார்கள் என அனைத்திலும் ஒரு வரைமுறை உள்ளது. அதனை பின்பற்றியே இந்த பந்தயங்கள் நடைபெறுகிறது.

இதேபோல ஃபார்முலா 1 பந்தயங்களை சாதாரண பந்தயத்தடங்களில் நடத்திவிட முடியாது.

இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சர்க்யூட்களில் மட்டுமே ஃபார்முலா 1 போட்டிகள் நடைபெறும்.

இவை கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகள் என்றழைக்கப்படுகிறது. ஒரு ஃபார்முலா 1 போட்டித் தொடர் பல சுற்றுகளை கொண்டதாக உள்ளது. இவை பல்வேறு நாடுகளில் நடத்தப்படுகின்றன.

ஃபார்முலா 1 பந்தயங்கள் ஆஸ்திரேலியா, ஐரோப்பியா, கனடா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் மிகவும் பிரபலம்.

ஃபெராரி, ரெட் புல், ஃபோர்ஸ் இந்தியா, மெர்சிடிஸ், வில்லியம்ஸ், மெக்லாரன் போன்ற அணிகள் இதில் பங்குகொள்கின்றன.

ஃபார்முலா 1 பந்தயங்கள் நடத்த பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பந்தய தடங்கள் உலகத்திலேயே 71 மட்டுமே உள்ளன.

இந்தியாவில் ‘புத் இண்டர்நேஷனல் சர்க்யூட்' என்ற ஒரே ஒரு ஃபார்முலா ஒன் கார் பந்தய சர்க்யூட் மட்டுமே உள்ளது.

இது 2011 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் ஜெய்பீ நிறுவனத்தினரால் உருவாக்கப்பட்டது. டெல்லியில் இருந்து 40 கிமீ தொலைவில் இது அமைந்துள்ளது.

ஃபார்முலா 1 உலக சாம்பியன்ஷிப் என்ற அமைப்பின் மூலம் ஜெய்பீ நிறுவனத்தினரால் 2011ஆம் ஆண்டு இந்த சர்க்யூட் கட்டமைக்கப்பட்டது.

புத் சர்க்யூட்டை கட்டுமானம் செய்த ஜெய்பீ நிறுவனம், இதில் 5 ஆண்டுகளுக்கு ஃபார்முலா 1 பந்தயம் நடத்த ஃபார்முலா 1 உலக சாம்பியன்ஷிப் அமைப்பிடம் ஒப்பந்தம் செய்துள்ளது.

எனினும் 2011, 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகள் மட்டுமே இதில் ஃபார்முலா 1 பந்தயங்கள் நடைபெற்றது.

வரி வசூல் தொடர்பாக உத்தரபிரதேச அரசுடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக 2013ஆம் ஆண்டு முதல் இங்கு போட்டிகள் தொடர்ந்து நடைபெறவில்லை.

வரிவசூல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு இந்த வழக்கில் தற்போது புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

==புத் இண்டர்நேஷனல் சர்க்க்யூட்டை நிர்வகித்து வரும் ஜெய்பீ நிறுவனம் 2011 முதல் 2013 வரை நடத்திய 3 போட்டிகளுக்கும் வரி செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் தன் உத்தரவில் கூறியுள்ளதாவது, "விதிமுறைகளின்படி வணிகத்தில் நிரந்தரமான அமைப்புகள் மூலம் வருவாய் பெறப்படுகிறது. இது அந்தந்த மாநில வரைமுறைப்படி வரி வசூலுக்கு உகந்த ஒன்றாகும்"

புத் இண்டர்நேஷனல் சர்க்யூட் மூலம் ஜெய்பீ நிறுவனம் வருவாய் ஈட்டிவருவதால் அதற்கு கட்டாயம் வரி செலுத்தியே ஆக வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இதன்படி, மொத்த வருவாயில் 40 % அளவுக்கு வரி விதிக்கப்படும் என்று தெரிகிறது. இதனோடு கூடுதல் காலகட்டத்தை கணக்கிட்டு வட்டியும் சேர்த்து செலுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் இந்தியாவில் ஃபார்முலா 1 பந்தயங்கள் நடைபெறும் சாத்தியக்கூறுகள் மங்கிவிட்டதாகவே தெரிகிறது.

வரிவிதிப்பு காரணமாக போட்டிகளை மற்ற நாடுகளில் நடத்த அதிக வாய்ப்பு இருப்பதால் இந்தியாவின் ஒரே ஃபார்முலா1 சர்க்யூட் இழுத்து மூடப்படும் என்றே தெரிகிறது. இது கார் பந்தய ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Story first published: Thursday, April 27, 2017, 13:51 [IST]
English summary
Read in Tamil about Formula 1 race future becomes dull in india as supreme court orders to collect tax from buddh international circuit.
Please Wait while comments are loading...

Latest Photos