பெட்ரோல், டீசல் கார்களின் தயாரிப்பை முழுசா கை விட இருக்கும் முன்னணி நிறுவனங்கள்! இந்த பிராண்டும் கைவிட போகுதா!
வாகன உற்பத்தி நிறுவனங்கள் சில பெட்ரோல் மற்றும் டீசல் என ஒட்டுமொத்தமாகவே எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் உற்பத்தியை முழுமையாக கைவிட இருப்பதாக அறிவித்து இருக்கின்றன. இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கும் டாப் ஐந்து பிராண்டுகள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.
மிக முக்கியமாக அந்த பிராண்டுகள் இவ்வாறு அறிவிப்பதற்கான காரணம் என்ன? எப்போதில் இருந்து அவை ஐசிஇ (ICE) எஞ்சின் கொண்ட வாகனங்களின் உற்பத்தியை கைவிட இருக்கின்றன? இதுமாதிரியான முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஜாகுவார் (Jaguar): பெட்ரோல், டீசல் வாகன உற்பத்தியை கை விட இருக்கும் முன்னணி நிறுவனங்களில் இதுவும். உலக புகழ் பெற்ற இந்த சொகுசு கார் உற்பத்தி நிறுவனம் வெகு விரைவிலேயே இந்த நடவடிக்கையில் ஈடுபட இறுக்கின்றது. இதற்கான காலக் கெடுவாக அது வருகின்ற 2025 ஆம் ஆண்டை இலக்காக நிர்ணயித்து இருக்கின்றது.
ஐசிஇ வாகன உற்பத்தியை கை விட்டு அது முழுமையாக மின்சார வாகன தயாரிப்பில் ஈடுபட இருக்கின்றது. ஆகையால், அது வெகு விரைவில் தற்போது உற்பத்தியில் உள்ள அனைத்து ஐசிஇ மாடல்களையும் கை கழுவி விட இருக்கின்றது. அதாவது, அவற்றின் உற்பத்தியை நிறுத்த இருக்கின்றது.

இதைத் தொடர்ந்து, 3 புதிய எலெக்ட்ரிக் கார்களை அது விற்பனைக்குக் களமிறக்கும். மூன்றில் ஒன்று எஸ்யூவியாகவும், இரண்டாவது ஒன்று செடான் வகை எலெக்ட்ரிக் காராகவும், மூன்றாவது மாடல் 4 கதவுகள் கொண்ட கிராண்ட் டூரர் வகை மின்சார காராகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.
ஆல்ஃபா ரோமியோ (Alfa Romeo): ஜாகுவாரைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் வாகன உற்பத்தியை கை விட இருக்கும் மற்றுமொரு உலக புகழ்பெற்ற பிராண்டே இதுவாகும். இந்த நிறுவனம் 2027 ஆம் ஆண்டிற்கு முன்னரே இந்த நடவடிக்கையில் களமிறங்க இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதுவும் முழுமையாக எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை மட்டுமே 2027இல் இருந்து மேற்கொள்ள இருக்கின்றது.

லோட்டஸ் (Lotus): இந்தியாவில் இந்த நிறுவனம் சமீபத்திலேயே அதன் கால் தடத்தைப் பதித்தது. இந்த பிராண்டு 2028 ஆம் ஆண்டில் இருந்து முழுமையாக மின்சார கார் உற்பத்தியை நோக்கி நகர இருக்கின்றது. இது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகும். வருகின்ற 2028ஆம் ஆண்டிலேயே இந்த நிறுவனம் 80 ஆம் ஆண்டு தினத்தைக் கொண்டாட இருக்கின்றது. இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆண்டிலேயே அது வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கின்றது.
வால்வோ (Volvo): உலக புகழ் பெற்ற மற்றும் பலரால் அறியப்படக் கூடிய ஓர் நிறுவனமே வால்வோ ஆகும். இந்த நிறுவனம் ஏற்கனவே டீசல் வாகன உற்பத்தியை முழுமையாக கைவிட்டு இருக்கின்றது. மேலும், அது தற்போது பெரும்பாலும் ஹைபிரிட் வசதிக் கொண்ட கார்களையே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த மாதிரியான சூழலிலேயே முற்றுலுமாக அது எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு மாற இருப்பதாக அறிவித்து இருக்கின்றது. இந்த நடவடிக்கையை அது முழுமையாக 2030ம் ஆண்டில் இருந்து மேற்கொள்ள இருக்கின்றது. அதிக பாதுகாப்பிற்கும், சொகுசு வசதிகளுக்கும் பெயர்போன தயாரிப்பா வால்வோவின் கார் மாடல்கள் இருக்கின்றன.
இதன் இந்த நடவடிக்கை மின் வாகன பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என நம்பப்படுகின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் வால்வோ கார் மாடல்களைப் போலவே எதிர்காலத்தில் விற்பனைக்கு வர இருக்கும் எலெக்ட்ரிக் கார்களும் அதிக பாதுகாப்பானதாக இருக்கும் என நம்பப்படுகின்றது.

பென்ட்லீ (Bentley): உலக புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பென்ட்லீயும் விரைவில் ஐசிஇ கார் தயாரிப்பை கைவிட இருக்கின்றது. இந்த நிறுவனமும் வால்வோவைப் போலவே 2030ம் ஆண்டையே இலக்காக நிர்ணயித்து இருக்கின்றது. இந்த ஆண்டில் இருந்து அது முழுக்க முழுக்க மின்சார காரை மட்டுமே உற்பத்தி செய்ய இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி ஏற்கனவே டீசல் வாகன உற்பத்தியை முழுமையாக கைவிட்டிருக்கின்றது. இந்த பிராண்ட் தற்போது பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் ஹைபிரிட் கார்களுக்கு ஆதரவளித்து வருகின்றது. அதேவேளையில், மாருதி, டாடா மற்றும் மஹிந்திரா போன்ற நிறுவனங்களும் இந்த மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









