புது மாருதி ஆல்டோ கே10 மறுபடியும் ஒரு ரவுண்டு வருமா? புக் பண்றதுக்கு முன்னாடி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
அறிமுகமே தேவைப்படாத அளவிற்கு இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஆல்டோ. இந்திய சாலைகளில் 43 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆல்டோ கார்கள் ஓடி கொண்டிருக்கின்றன. தினசரி பயணங்களுக்கு பலரும் விரும்பும் காராக ஆல்டோ இருப்பதுதான், அதன் சிறப்பான விற்பனைக்கு காரணம். இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் வாய்ந்த மாருதி சுஸுகி ஆல்டோ காரில் கே10 சீரிஸ் 1.0 லிட்டர் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டு வந்தது. மாருதி சுஸுகி ஆல்டோ கே10 என்ற பெயரில் இந்த கார் விற்பனையாகி கொண்டிருந்தது.
Recommended Video
ஆனால் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் காரணமாக, மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார், கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விற்பனையில் இருந்து விலக்கப்பட்டது. ஆனால் சிறிய கார்களுக்கு வரவேற்பு குறைந்து வரும் நிலையில், மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது ஆல்டோ கே10 காரை புதிய அவதாரத்தில் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. புதிய 2022 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (2022 Maruti Suzuki Alto K10) காரை கேரள மாநிலம் கொச்சியில் வைத்து நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களையும், இந்த கார் பற்றிய முக்கியமான தகவல்களையும் இந்த செய்தியின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

க்யூட்டான டிசைன்! சூப்பரான வசதிகள்!
2022 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் டிசைன் மிகவும் சிம்பிள்-ஆக உள்ளது. எனினும் நம்மை கவர்ந்து இழுக்கும் ஒரு சில டிசைன் அம்சங்கள் இருக்கின்றன. இந்த டிசைன் அம்சங்கள், மாருதி சுஸுகி ஷோரூம்களுக்கு வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி செலிரியோ போன்று உள்ள, புதிய ஆல்டோ காரின் டிசைன் முதல் முறையாக கார் வாங்குபவர்களை கவரலாம்.

புதிய மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் முன் பகுதியில் பெரிய க்ரில் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மேலே சுஸுகி பேட்ஜ் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் புதிய ஹாலோஜன் ஹெட்லைட்களையும், 2022 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார் பெற்றுள்ளது. பானெட்டின் நுனிகளில் ஹெட்லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதே சமயம் இந்த புதிய காரின் பக்கவாட்டு பகுதியில் ஷோல்டர் லைன் நம்மை வசீகரிக்கிறது. பக்கவாட்டு பகுதியில் உள்ள ஃபெண்டர்களில் இன்டிகேட்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த சிறிய கார் சிறிய 13 இன்ச் ஸ்டீல் வீல்களை பெற்றுள்ளது.

பின் பகுதியை பொறுத்தவரையில், சிறிய ஒருங்கிணைந்த ஸ்பாய்லர் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று முன் பகுதியை போல் பின் பக்க பம்பரும் கவனம் ஈர்க்கும் வகையில் இருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் இந்த சிறிய காரின் டிசைன் 'க்யூட்' ஆக உள்ளது என்று சொல்லலாம்.

அதே சமயம் கதவுகளை திறந்து உள்ளே சென்றால், பெரும்பாலும் கருப்பு நிற தீம் கொண்ட இன்டீரியர் நம்மை வரவேற்கிறது. அது என்ன 'பெரும்பாலும்' என நீங்கள் நினைப்பது புரிகிறது. விதிவிலக்காக ஸ்டியரிங் வீல் மற்றும் புதிய இன்ஃபோடெயின்மெண்ட் திரையை சுற்றிலும் சில்வர் ஹைலைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட்டை பொறுத்தவரையில், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வசதிகளுடன் 7 இன்ச் டச்ஸ்க்ரீன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 4 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டத்துடன், இந்த இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய ஆல்டோ காரின் டாப் மாடலான VXi+ வேரியண்ட்டில், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக புதிய ஸ்டியரிங் வீல் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், போன் மற்றும் வால்யூம் ஆகியவற்றுக்கான கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய 2022 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் இருக்கைகள் சௌகரியமாக உள்ளன. இந்த காரின் டிரைவர் இருக்கையில், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பின் இருக்கையில் 3 பெரியவர்கள் அமர்வது சற்று நெருக்கடியான உணர்வை தரலாம். எனினும் பின் இருக்கைகளில், வழக்கமான இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் கால்களை வைப்பதற்கான இடவசதியும், போதுமான அளவிற்கு ஹெட்ரூமும் உள்ளது.

பாதுகாப்பை பொறுத்தவரையில் இந்த செக்மெண்ட் கார்களுக்கு ஏற்ற வகையில் அடிப்படையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், ட்யூயல் ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. அதே சமயம் புதிய 2022 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார் மொத்தம் 6 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். அவை பின்வருமாறு:
- சாலிட் ஒயிட்
- சில்க்கி சில்வர்
- க்ரானைட் க்ரே
- சிஸ்லிங் ரெட்
- ஸ்பீடி ப்ளூ
- எர்த் கோல்டு

இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ்!
புதிய ஆல்டோ கே10 காரில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் லேட்டஸ்ட் கே10சி, 1.0 லிட்டர், ட்யூயல்ஜெட், ட்யூயல் விவிடி மூன்று-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய 998 சிசி இன்ஜின் அதிகபட்சமாக 5,500 ஆர்பிஎம்மில் 66 பிஹெச்பி பவரையும், 3,500 ஆர்பிஎம்மில் 89 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இன்ஜின் உருவாக்கும் சக்தி இவற்றின் மூலம், முன் சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது. இதில், புதிய மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 24.39 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், ஏஎம்டி கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 24.90 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அராய் அமைப்பு சான்று வழங்கியுள்ள மைலேஜ் ஆகும்.

புதிய மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் நீளம் 3,530 மிமீ ஆகும். அதே நேரத்தில் இந்த காரின் அகலம் 1,490 மிமீ ஆகவும், உயரம் 1,520 மிமீ ஆகவும் உள்ளது. அதே சமயம் இந்த காரின் வீல்பேஸ் நீளம் 2,380 மிமீ ஆகவும், எடை 1,150 கிலோவாகவும் இருக்கிறது. புதிய மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார் ஹார்டெக்ட் (Heartect) பிளாட்பார்ம் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலை காட்டிலும் இந்த புதிய மாடல் 85 மிமீ நீளமானது, 45 மிமீ உயரமானது. அதேபோல் வீல்பேஸ் நீளமும் 20 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஓட்றதுக்கு எப்படி இருக்கு?
நகர சாலைகளில் எளிமையாக செல்வதற்கு தேவையான பவரை, இந்த சிறிய ஹேட்ச்பேக் காருக்கு, புதிய ட்யூயல்ஜெட் ட்யூயல்விவிடி இன்ஜின் வழங்குகிறது. அதேபோல் நெடுஞ்சாலைகளில், மூன்று இலக்க வேகத்திலும் பயணம் செய்ய முடிகிறது. ஆனால் லோடு அதிகமாக இருந்தால், இதுபோன்ற வேகத்தை எட்டுவதற்கு புதிய மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார் சற்று நேரம் எடுத்து கொள்கிறது. அதேபோல் அதிக ஆர்பிஎம்களில் இன்ஜின் சத்தம் அதிகமாக இருக்கிறது.
அதேநேரத்தில் கியர்பாக்ஸை பொறுத்தவரையில், இந்த இரண்டில் மேனுவல் சற்று சிறப்பானதாக உள்ளது. ஷிஃப்ட் செய்வது சில சமயங்களில் கடினமானதாக இருந்தாலும் கூட, க்ளட்ச் இலகுவாக இருக்கிறது. புதிய ஆல்டோ காரை தாங்களாகவே ஓட்ட வேண்டும் என நினைப்பவர்கள் மேனுவல் கியர் பாக்ஸ் மாடலை தேர்ந்து எடுக்கலாம். அதே நேரத்தில் தினசரி நகர பயணங்களை தொல்லையில்லாமல் மேற்கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் ஏஎம்டி கியர் பாக்ஸ் மாடலை தேர்வு செய்யலாம்.

அதே சமயம் இந்த காரின் பிரேக்குகள் மிகவும் சிறப்பாக உள்ளன. ஆல்டோ போன்ற எடை குறைவான காருக்கு, இது தேவைக்கு அதிகமான பிரேக் என்றே சொல்லலாம். பிரேக் பெடல் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக இருக்கிறது. அத்துடன் சஸ்பென்ஸனும், புதிய 2022 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் சிறப்பான விஷயமாக உள்ளது. அதே சமயம் இந்த கார் எடை குறைவானது என்பதால், பாடி ரோல் பெரிதாக இல்லை. எனவே வளைவுகளில் நம்பிக்கையுடன் ஓட்ட முடிகிறது. இது ஆரம்ப நிலை காராக இருந்தாலும் கூட என்விஹெச் லெவல்கள் சிறப்பாக உள்ளன. அதிக ஆர்பிஎம்களில் மட்டுமே இன்ஜின் சத்தம் அதிகமாக கேட்கிறது. ஆனால் ரியர் வியூ கேமரா இல்லாதது ஒரு குறை. முதல் முறையாக கார் வாங்குபவர்களை குறிவைத்துதான் இந்த கார் களமிறக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக கார் வாங்குபவர்கள் நெருக்கடியான இடங்களில் பார்க்கிங் செய்ய தடுமாறக்கூடும். அப்படி இருக்கும்போது ரியர் வியூ கேமராவை வழங்கியிருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து!
நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, குறைவான விலையில் முதல் முறையாக ஒரு புதிய காரை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர சாலைகளில் தினசரி ஓட்டுவதற்கு ஒரு சிறிய காரை எதிர்பார்ப்பவர்களுக்கும், 2022 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 மிகச்சிறந்த தேர்வாக இருக்கலாம். சூப்பரான லுக், புதிய இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்ப்ளே மற்றும் நல்ல மைலேஜை வழங்க கூடிய இன்ஜின் ஆகியவை புதிய ஆல்டோ கே10 காரின் ப்ளஸ் பாயிண்ட்கள்.


Click it and Unblock the Notifications








