2022 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 கார் ரிவியூ... பழைய மாடலை விட புது மாடல் சூப்பர்... விலை எவ்ளோனு தெரியுமா?
மாருதி சுஸுகி எர்டிகா இந்தியாவின் மிகச்சிறந்த எம்பிவி கார்களில் ஒன்றாக இருந்து வருகிறது. வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் நடைமுறை பயன்பாடு மற்றும் நம்பகத்தன்மை ஆகிய இரண்டு பாக்ஸ்களையும் இந்த எம்பிவி 'டிக்' அடிக்கிறது. கூடுதலாக விலையும் கூட வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதுதான். எர்டிகாவை விட இன்னும் பிரீமியமான ஒரு எம்பிவி கார் வேண்டும் என எதிர்பார்ப்பவர்களுக்காக, எக்ஸ்எல்6 காரை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது.
கடந்த 2019ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்எல்6, எர்டிகா அடிப்படையில் உருவான ஒரு 'ஹேண்ட்ஸம்' எம்பிவி ஆகும். எர்டிகாவை விட மேலாக நிலைநிறுத்தப்பட்ட இந்த எம்பிவி காரில் கூடுதல் வசதிகளும் வழங்கப்பட்டன. இந்த சூழலில் தற்போது புதிய எக்ஸ்எல்6 விற்பனைக்கு வந்துள்ளது. ஆம், 2022 எக்ஸ்எல்6 எம்பிவி காரை மாருதி சுஸுகி நிறுவனம் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
2022 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் ஆரம்ப நிலை ஜெட்டா வேரியண்ட்டின் விலை 11.29 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆல்பா+ ட்யூயல்-டோன் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டின் விலை 14.55 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். பழைய மாடலை காட்டிலும், எக்ஸ்எல்6 காரின் டிசைன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
டிசைன் மாற்றங்கள் மட்டுமல்லாது, முன்பை காட்டிலும் அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்க கூடிய புதிய இன்ஜினையும் புதிய மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 பெற்றுள்ளது. இந்த புதிய எம்பிவி காரை ஒரு சில மணி நேரங்கள் ஓட்டும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களையும், இந்த புதிய எம்பிவி கார் குறித்த விரிவான தகவல்களையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

டிசைன் மற்றும் ஸ்டைல்
நேர்த்தி மற்றும் கம்பீரம். புதிய மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரை பார்த்தவுடன் நினைவிற்கு வரும் வார்த்தைகள் இவைதான். பழைய மாடலில் இருந்த ஹெட்லேம்ப்கள் அப்படியே தக்க வைக்கப்பட்டுள்ளன. அவை எல்இடி யூனிட்கள் ஆகும். டர்ன் சிக்னல் இன்டிகேட்டர்கள் மட்டுமே ஹாலோஜன் பல்புகளில் எரிகின்றன. முன் பகுதியில் ஹெட்லேம்ப்களை தவிர மற்ற அனைத்து மறு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன.
இதில் புதிய க்ரில் அமைப்புதான் மிகப்பெரிய மாற்றமாக தெரிகிறது. இந்த க்ரில் அமைப்பின் டிசைன் எளிமையாக உள்ளது. ஆனால் இதில் சேர்க்கப்பட்டிருக்கும் க்ரோம், கவர்ச்சியை கூட்டுகிறது. நீங்கள் க்ரோமை அதிகம் விரும்ப கூடியவர் என்றால், புதிய எக்ஸ்எல்6 காரின் முன் பகுதியை நிச்சயமாக விரும்புவீர்கள்.

க்ரில் அமைப்பின் மேல் பகுதியிலும், கீழ் பகுதியிலும் க்ரோம் பட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் க்ரில் அமைப்பிற்கு கிடைமட்டமாக பெரிய மற்றும் அடர்த்தியான க்ரோம் பட்டை கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மைய பகுதியில் பெரிய சுஸுகி லோகோ கொடுக்கப்பட்டுள்ளது. இந்த லோகோ நீங்கள் நினைப்பதை விட பெரியதாக இருக்கிறது. அத்துடன் இந்த காரின் பம்பரும் மறு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த காரின் மேட் பிளாக் க்ளாடிங்கும் காரை கவர்ச்சியாக காட்டுகிறது.

பக்கவாட்டு பகுதியை பொறுத்தவரையில், புதிய அலாய் வீல்கள்தான் உங்களின் கவனத்தை ஈர்க்கும் முதல் விஷயமாக இருக்கும். இவை 16 இன்ச் ட்யூயல்-டோன் அலாய் வீல்கள் ஆகும். அதே நேரத்தில் இந்த காரில், எம்ஆர்எஃப் வாண்டரர் எகோட்ரட் டயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த காரின் க்ரோம் டோர் ஹேண்டில்களும் கவனம் பெறுகின்றன. பக்கவாட்டு பகுதியை பொறுத்தவரையில், க்ரோம் உடன் இருக்கும் ஒரே ஒரு அம்சம் இது மட்டுமே. புதிய யூவி கட் விண்டோக்களை சேர்த்திருப்பது, குறிப்பிட வேண்டிய விஷயம் ஆகும். தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களை அவை வடிகட்டி விடுகின்றன. அதே நேரத்தில் இந்த காரில், மேட் சில்வர் நிறத்தில் ரூஃப் ரெயில்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பின் பகுதியிலும் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனினும் புதிய டெயில்லேம்ப்கள்தான் கவனம் ஈர்க்கின்றன. இந்த டெயில்லேம்ப்கள் பழைய மாடலின் அதே டிசைனைதான் பெற்றுள்ளன. இருப்பினும் சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டெயில்கேட்டில் கருப்பு நிற பட்டையை புதிய எக்ஸ்எல்6 பெற்றுள்ளது. இதில் க்ரோம் பட்டையும் இருக்கிறது. டெயில்கேட்டில் XL6 மற்றும் SmartHybrid பேட்ஜ்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலே ஒருங்கிணைந்த ஸ்டாப் லேம்ப் மற்றும் விண்டுஸ்க்ரீன் வாஷர் உடன் ஸ்பாய்லர் கொடுக்கப்பட்டுள்ளது. கீழ் பகுதியில் செங்குத்தான ரெஃப்லெக்டர்களுடன், மறு வடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர் இடம்பெற்றுள்ளது. ஒட்டுமொத்தத்தில் பழைய மாடலை காட்டிலும் புதிய மாடலின் டிசைன் அமர்க்களப்படுத்துகிறது.

காக்பிட் மற்றும் இன்டீரியர்
மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் பொதுவாக விசாலமான இடவசதியுடனும், நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற வகையிலும் இருக்கும். 2022 எக்ஸ்எல்6 காரும் அதற்கு விதிவிலக்கு அல்ல. க்ரோம் டோர் ஹேண்டில்களை திறந்து உள்ளே சென்றால், எக்ஸ்எல்6 காரின் கருப்பு நிற இன்டீரியர் உங்களை வரவேற்கிறது.
இந்த காரின் டேஷ்போர்டு முழுமையாக கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் ஏசி வெண்ட்கள் ஸ்டைலாக இருக்கின்றன. டேஷ்போர்டின் மைய பகுதியில், 7.0 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இதனுடன் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இவை வயர்லெஸ் கிடையாது. வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஸ்மார்ட்பிளே ப்ரோ யூனிட் ஆகும். எனவே நிறைய கனெக்டட் கார் தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன.

டேஷ்போர்டில் இந்த திரைக்கு கீழே, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோலுக்கான கண்ட்ரோல் பேனல்கள் வழங்கப்பட்டுள்ளன. க்ளைமேட் கண்ட்ரோலின் செட்டிங்குகளை காட்டுவதற்காக, இது சிறிய எல்சிடி திரையை பெற்றுள்ளது. இதன் பக்கவாட்டில் ஃபேன் ஸ்பீடு மற்றும் டெம்ப்ரேச்சர் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்காக 2 நாப்கள் (Knobs) கொடுக்கப்பட்டுள்ளன.
இதற்கு கீழேதான் சென்டர் கன்சோல் தொடங்குகிறது. இங்கே 12V சாக்கெட் மற்றும் USB போர்ட் வழங்கப்பட்டுள்ளன. சீட் வென்டிலேஷன் (Seat Ventilation) வசதிக்கான கண்ட்ரோல்களும் இங்கேதான் இடம்பெற்றுள்ளன. இங்கே உங்கள் ஸ்மார்ட்போனை வைத்து கொள்வதற்கான இடவசதி உள்ளது. ஆனால் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படாதது ஒரு பின்னடைவு. அதே நேரத்தில் கியர் லிவருக்கு பின்னால், டிரைவர் மற்றும் முன் பக்க பயணிக்கான அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஆர்ம்ரெஸ்ட் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரின் இருக்கைகள் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த காரின் வென்டிலேட்டட் இருக்கைகள் கோடை காலங்களில் வரப்பிரசாதமாக இருக்கும். தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டியரிங் வீல் காம்பேக்ட் ஆகவும், ஸ்போர்ட்டியாகவும் இருக்கிறது. ஆடியோ, க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் வாய்ஸ் கமாண்டுகள் ஆகியவற்றுக்கான கண்ட்ரோல்களை இது பெற்றுள்ளது.
அதே நேரத்தில் இந்த காரில் டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. மைய பகுதியில் முழு கலர் எம்ஐடி திரை இடம்பெற்றுள்ளது. நிகழ்நேர எரிபொருள் சிக்கனம், சராசரி எரிபொருள் சிக்கனம், ரேஞ்ச் உள்பட பல்வேறு தகவல்களை இது காட்டுகிறது. இந்த இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் 'மாடர்ன்' ஆக உள்ளது.

நடைமுறை பயன்பாடு, சௌகரியம் மற்றும் பூட் ஸ்பேஸ்
நடைமுறை பயன்பாடு என்ற விஷயத்தில் புதிய மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காருக்கு நல்ல ரேங்க் கொடுக்கலாம். இந்த காரின் டோர் பாக்கெட்கள் ஆழமாக இருக்கின்றன. அவை ஒவ்வொன்றிலும் 1 லிட்டர் பாட்டிலை வைக்க முடியும். அத்துடன் மேலும் சில சிறிய பொருட்களையும் வைத்து கொள்ளலாம்.
அதேபோல் டேஷ்போர்டில் உள்ள க்ளவ்பாக்சிலும் கூட ஏராளமான பொருட்களை வைத்து கொள்ள முடியும். மேலும் நாங்கள் ஏற்கனவே கூறியபடி சென்டர் கன்சோலிலும் ஸ்மார்ட்போன் போன்றவற்றை வைத்து கொள்வதற்கு இடவசதி உள்ளது. அத்துடன் கப் ஹோல்டர்களும் வழங்கப்பட்டுள்ளன. அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஸ்லைடிங் ஆர்ம்ரெஸ்ட்டிற்கு கீழேயும் ஏதாவது ஒன்றை வைத்து கொள்வதற்கு தேவையான இடவசதி இருக்கிறது. இரண்டாவது வரிசை பயணிகளின் பயன்பாட்டிற்காகவும் 12V சாக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. இருக்கைகளுக்கு பின்னால் உள்ள பாக்கெட்களில் செய்திதாள்களை வைத்து கொள்ள முடியும். அத்துடன் மூன்றாவது வரிசை பயணிகளுக்கும் 12V சாக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் சௌகரியம் என்ற விஷயத்தில்தான் புதிய மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 அதிக மதிப்பெண்களை ஸ்கோர் செய்கிறது. இது ஏற்கனவே சௌகரியமான எம்பிவி கார்தான். இருப்பினும் 2022 மாடல் இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. குறிப்பாக டிரைவர் மற்றும் முன் பக்க பயணியின் இருக்கைகள் மிகவும் சௌகரியமாக மாறியுள்ளன. மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் முன் பகுதியில் தற்போது வென்டிலேட்டட் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. வெயில் சுட்டெரிக்கும் சமயங்களில் இது மிகவும் உதவிகரமாக இருக்கும். நாங்கள் இந்த காரை சோதனை செய்து கொண்டிருந்தபோது வெயில் சுட்டெரித்தது. ஆனால் இந்த காரின் ஏசி சிஸ்டம் சிறப்பாக வேலை செய்ததால், டிரைவ்ஸ்பார்க் குழு குளிர்ச்சியாக இருக்க முடிந்தது.

முன் பகுதி இருக்கைகளில் தொடை மற்றும் முதுகுக்கு நல்ல சப்போர்ட் கிடைக்கிறது. ஓட்டுனரின் இருக்கைக்கு உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இரண்டாவது வரிசையில் உள்ள கேப்டன் இருக்கைகளைதான் மிகவும் சௌகரியமான இருக்கைகள் என நாங்கள் கூறுவோம். ஒவ்வொரு இருக்கைக்கும் தனியாக ஆர்ம்ரெஸ்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால் மூன்றாவது வரிசை இருக்கைகள் அவ்வளவு சௌகரியமாக இல்லை. மூன்றாவது வரிசை இருக்கைகளுக்கு செல்வதும், வருவதும் எளிமையாகதான் இருக்கிறது. இருப்பினும் கேப்டன் இருக்கைகள் பின்னால் தள்ளப்பட்டால், போதிய அளவிற்கு லெக் ரூம் கிடைப்பதில்லை. ஆனால் இரண்டாவது வரிசையில் கிடைக்கும் இடவசதியை வைத்து பார்க்கும்போது, கேப்டன் இருக்கைகளை பெரிதாக பின்னால் தள்ள தேவையில்லை.

ஆனால் மற்ற ஒரு சில எம்பிவி கார்களின் மூன்றாவது வரிசை இருக்கைகளை காட்டிலும், 2022 எக்ஸ்எல்6 காரின் மூன்றாவது வரிசை இருக்கைகள் சிறப்பாக உள்ளன என்பதை குறிப்பிட்டாக வேண்டும். இந்த காரின் மூன்றாவது வரிசை இருக்கைகளை சாய்த்து கொள்ளலாம். அத்துடன் மடக்கி வைத்து கொள்ளவும் முடியும். அப்படி மடக்கி வைத்து கொண்டால், பூட் ஸ்பேஸ் அதிகரிக்கிறது. அனைத்து இருக்கைகளும் உயர்ந்து இருக்கும் நிலையில், புதிய எக்ஸ்எல்6 காரின் பூட் ஸ்பேஸ் 209 லிட்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது வரிசை இருக்கைகளை மடக்கி வைத்து கொண்டால், பூட் ஸ்பேஸ் 560 லிட்டர்களாக அதிகரிக்கும். அத்துடன் இரண்டாவது வரிசையில் உள்ள கேப்டன் இருக்கைகளையும் மடக்கி வைத்து கொள்ள முடியும். இதன் மூலம் பூட் ஸ்பேஸ் 692 லிட்டர்களாக அதிகரிக்கும்.

இன்ஜின் செயல்திறன் மற்றும் ஓட்டுதல் அனுபவம்
செயல்திறன் மற்றும் துடிப்பான ஆக்ஸலரேஷன் ஆகியவற்றை பொறுத்தவரையில், மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 அவ்வளவு சிறப்பான கார் கிடையாது. மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் டார்கெட் ஆடியன்ஸ்களும், அவ்வளவு சிறப்பான செயல்திறனை எதிர்பார்ப்பது கிடையாது. எனவே 2022 எக்ஸ்எல்6 காரில் பொருத்தப்பட்டுள்ள புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினும், சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தாது என்றுதான் ஆரம்பத்தில் நாங்களும் நினைத்தோம். ஆனால் நாங்கள் நினைத்தது தவறாகி விட்டது. ஆம், 2022 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 கார் மிக சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துகிறது.
புதிய மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரில், 1462 சிசி, நான்கு-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 101.6 பிஹெச்பி பவரையும், 4,400 ஆர்பிஎம்மில் 136.8 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ், பழைய மாடலில் இருந்து தக்க வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் புதியது ஆகும்.

இந்த காரில், இன்ஜின் சத்தம் பெரிதாக கேட்கவில்லை. ஆனால் அதிக ஆர்பிஎம்களில் இன்ஜின் சத்தத்தை கேட்க முடிகிறது. கியர் பாக்ஸில் 'D' மோடை போட்ட பிறகு, இந்த கார் எந்த தயக்கமும் இல்லாமல் முன்னோக்கி செல்கிறது. 'ஜெர்க்குகள்' எதுவும் உணரப்படவில்லை. பயணம் மென்மையாக இருக்கிறது. 'D' மோடில் ஓரளவிற்கு வேகமாக செல்லும்போது உற்சாகமாக இருக்கிறது. கியர்ஷிஃப்ட்கள் மிகவும் அரிதாகவே உணரப்படுகிறது. கியர் பாக்ஸ் தனது அனைத்து வேலைகளையும் அமைதியாக செய்கிறது. இந்த காரில் பேடில் ஷிஃப்டர்களும் வழங்கப்பட்டுள்ளன. 'M' மோடிலும் கியர் பாக்ஸ் சிறப்பாக வேலை செய்கிறது. பின்னடைவுகள் எதுவும் இல்லை. இதன் செயல்திறன் சிறப்பாக இருக்கிறது என்றாலும், கார் ஆர்வலர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு இல்லை.
மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 உயரமான கார் ஆகும். கார்னர்களில் இதனை உணர முடிகிறது. அத்துடன் பாடி ரோலையும் சற்று உணர முடிகிறது. ஆனால் பெரிய அளவிற்கு எல்லாம் இல்லை. குறைவான வேகத்தில் ஸ்டியரிங் இலகுவாக உள்ளது. இது நல்ல விஷயம். ஆனால் அதிக வேகத்திலும் ஸ்டியரிங் தொடர்ந்து இலகுவாகவே இருப்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதிக வேகத்தில் ஸ்டியரிங் சிஸ்டம் இறுக்கம் பெற்றால்தான், டிரைவரால் நம்பிக்கையுடன் காரை ஓட்ட முடியும். இதுபோன்ற ஒரு சில குறைகளை தவிர்த்து விட்டு பார்த்தால், 2022 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 கார் ஓட்டுவதற்கு நன்றாக இருக்கிறது.

பாதுகாப்பு மற்றும் முக்கியமான வசதிகள்
மாருதி சுஸுகி நிறுவனம் சமீப காலமாக தனது கார்களில் பாதுகாப்பு வசதிகளை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வகையில் புதிய எக்ஸ்எல்6 காரிலும், மாருதி சுஸுகி நிறுவனம் நிறைய பாதுகாப்பு வசதிகளை வழங்கியுள்ளது.
பாதுகாப்பு வசதிகள்
- Suzuki-TECT பாடி
- இபிடி உடன் ஏபிஎஸ்
- 4 ஏர்பேக்குகள்
- எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம்
- வென்டிலேட்டட் இருக்கைகள்
- வென்டிலேட்டட் கப் ஹோல்டர்கள்
- எல்இடி பனி விளக்குகள்
- ஆட்டோ ஓஆர்விஎம்கள்
- இரண்டாவது வரிசை ஏசி வெண்ட்கள்
- கேப்டன் இருக்கைகள்
- வேரியண்ட்கள், விலை மற்றும் வண்ண தேர்வுகள்
- எக்ஸ்எல்6 ஜெட்டா - 11,29,000 ரூபாய்
- எக்ஸ்எல்6 ஆல்ஃபா - 12,29,000 ரூபாய்
- எக்ஸ்எல்6 ஜெட்டா ஆட்டோமேட்டிக் - 12,79,000 ரூபாய்
- எக்ஸ்எல்6 ஆல்ஃபா+ - 12,89,000 ரூபாய்
- எக்ஸ்எல்6 ஆல்ஃபா ஆட்டோமேட்டிக் - 13,79,000 ரூபாய்
- எக்ஸ்எல்6 ஆல்ஃபா+ ஆட்டோமேட்டிக் - 14,55,000 ரூபாய்
- நெக்ஸா ப்ளூ
- ஓபுலெண்ட் ரெட்
- பிரேவ் காக்கி
- கிராண்டர் க்ரே
- ஸ்பிலெண்டிட் சில்வர்
- ஆர்டிக் ஒயிட்
- கருப்பு நிற மேற்கூரையுடன் ஓபுலெண்ட் ரெட்
- கருப்பு நிற மேற்கூரையுடன் பிரேவ் காக்கி
- கருப்பு நிற மேற்கூரையுடன் ஸ்பிலெண்டிட் சில்வர்
முக்கியமான வசதிகள்

6 வேரியண்ட்கள் மற்றும் 9 வண்ண தேர்வுகளில், புதிய மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 கிடைக்கும்.
வேரியண்ட்கள் வாரியான விலை விபரத்தை நீங்கள் கீழே காணலாம்.
வண்ண தேர்வுகள்

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?
பழைய மாடலை காட்டிலும் புதிய மாடல் மிகவும் சிறப்பாக இருக்கிறது. புதிய வசதிகள் மற்றும் புதிய ட்ரைவ்ட்ரெயினை இது பெற்றுள்ளது. விலை நிர்ணயமும் சிறப்பாக இருக்கிறது. கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தேர்வாக இந்த கார் இருக்கும்.


Click it and Unblock the Notifications








