நெக்ஸானா இது!.. என்னங்க இப்படி மாத்தி வச்சிருக்கு இந்த டாடா.. ரைடு செஞ்சு பார்த்ததுல மிரண்டு போயிட்டோம்!
2017 ஆம் ஆண்டு அது ஒட்டுமொத்த இந்திய வாகன உலகமும் மறக்க முடியாத ஆண்டு அது. இந்த ஆண்டிலேயே இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் (Tata Motors), காம்பேக்ட் எஸ்யூவி (Compact SUV) உலகில் தன்னுடைய கால் தடத்தைப் பதித்தது.
நெக்ஸான் (Nexon) கார் மாடலின் அறிமுகத்தின் வாயிலாகவே இந்த பிரிவில் தன்னுடைய என்ட்ரியை டாடா மோட்டார்ஸ் பதிவு செய்தது. மிகவும் அழகிய காம்பேக்ட் எஸ்யூவி ரக காரே நெக்ஸான் ஆகும். இது தற்போது பலரின் மனம் கவர்ந்த வாகனமாக மாறி இருக்கின்றது.

சொல்லப்போனால் இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் (அதிகம் விற்பனையாகும்) கார் மாடலாகவும் அது மாறி இருக்கின்றது. இதற்கு நெக்ஸான் காரின் அழகிய தோற்றம் மட்டுமே காரணம் அல்ல. அதன் பாதுகாப்பு திறனும் இன்னொரு காரணமாக இருக்கின்றது. இது ஓர் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி ரக காராகும்.
இந்த காரை ஐசிஇ மற்றும் எலெக்ட்ரிக் என இரு வெர்ஷன்களில் டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேய இந்த காரின் பக்கம் இந்தியர்களைக் கூடுதலாக ஈர்க்கும் பொருட்டு அதன் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் தற்போது விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

இதனை ரைடு ரிவியூ செய்து பார்க்கவே அண்மையில் டாடா மோட்டார்ஸிடம் இருந்து எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த அழைப்பின் பேரில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் 2023 நெக்ஸான் காரை ஜெய்பூரில் வைத்து ரைடு செய்து பார்த்தோம். இதன் வாயிலாக கார் பற்றிய பல்வேறு சுவாரஷ்யமான தகவல்கள் எங்களுக்குக் கிடைக்க வந்தது. அதையே இந்த பதிவில் நாங்கள் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
புதிய டாடா நெக்ஸானின் வடிவமைப்பு எப்படி இருக்கின்றது? டாடா மோட்டார்ஸ் பழைய வெர்ஷன் நெக்ஸானிடம் இருந்து புிய அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன் மாறுபட்டுக் காட்சியளிக்க செய்யும் விதமாக பல்வேறு மாற்றங்களைச் செய்திருக்கின்றது. உள் மற்றும் வெளிப்புறம் என இரண்டிலும் கணிசமான மாற்றங்களைச் செய்திருக்கின்றது.

வெளிப்புறத்தை கர்வ் கான்செப்ட் மாடலை தழுவி நிறுவனம் அப்டேட் செய்திருப்பதை நம்மால் காண முடிகின்றது. ஸ்பிளிட் வகை க்ரில் மற்றும் ஹெட்லேம்ப் உள்ளிட்டவை கர்வ் இடமே பெறப்பட்டு இருக்கின்றது. இத்துடன் காரின் பான்னெட் மற்றும் க்ரில் இணையும் இடத்தில் மெல்லிய இழை போன்ற பகல் நேரத்தில் ஒளிரும் மின் விளக்கு ஒன்று வழங்கப்பட்டு இருக்கின்றது.
இது காரின் முகப்பு பகுதிக்கு வேற லெவல் அழகிய தோற்றத்தை வழங்கும் வகையில் இருக்கின்றது. இந்த லைட் சமயத்தில் இன்டிகேட்டராகவும் செயல்படும். இந்த காரின் அடிப்பக்கத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பம்பர் காருக்கு கூடுதல் ஸ்போர்ட்ஸ் தோற்றத்தை வழங்குகின்றது. இரு துண்டாக இருக்கும் க்ரில்லின் மற்றொரு பகுதியிலேயே ஹெட்லேம்ப் மற்றும் முதன்மை டர்ன் இன்டிகேட்டர்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

சி வடிவ ஹெட்லைட்டே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன், ஃபாக்ஸ் பாஷ் பிளேட் சில்வர் நிறத்தில் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று பல்வேறு மாற்றங்களை புதிய நெக்ஸானில் டாடா மேற்கொண்டிருக்கின்றது. ஆனால், பக்கவாட்டு பகுதியில் பெரிய அளவில் மாற்றத்தைப் பார்க்க முடியவில்லை.
16 அங்குல அலாய் வீல்களே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஏரோ இன்செர்ட்டுகளைக் கொண்டதாக அந்த அலாய் வீல்கள் இருக்கின்றன. இந்த வீல்களில் வெள்ளை அல்லது கருப்பு நிற தேர்வை டாடா வழங்க இருக்கின்றது. உயர்நிலை தேர்வை பொருத்து இந்த நிற மாறுபாடு இருக்கும்.

நெக்ஸானின் முகப்பு பகுதியில் செய்யப்பட்டு இருப்பதைப் போலவே பின் பகுதியிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், Y வடிவ எல்இடி லைட்டுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அது லைட் பாருடன் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த லைட் பார் காரின் பின் பக்கத்தை முழுமையாக அளக்கும் வகையில் இடம் பெற்றிருக்கின்றது.
ஒட்டுமொத்தமாக ஆறு விதமான ஒற்றை நிற தேர்வுகளில் நெக்ஸான் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. ஃபியர்லெஸ் பர்பிள் (Fearless Purple), கிரியேட்டீவ் ஓசோன் (Creative Ocean), பிரிஸ்டைன் ஒயிட் (Pristine White), ப்யூர் கிரே (Pure Grey), டேடோனா கிரே (Daytona Grey) மற்றும் ஃப்ளேம் ரெட் (Flame Red) ஆகியவையே அவை ஆகும்.

இதுதவிர, ஃப்ளேம் ரெட் மற்றும் டேடோனா கிரே ஆகிய நிற தேர்வுகளுடன் வெள்ளை மற்றும் கருப்பு நிற ரூஃப் ஆப்ஷனையும் டாடா விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. அதேவேளையில், பிரிஸ்டைன் ஒயிட் மற்றும் ஃபியர்லெஸ் பர்பிள் நிற தேர்வுகளுடன் கருப்பு நிற ரூஃப்பை மட்டுமே அது ஆப்ஷனலாக வழங்க இருக்கின்றது.
பின் பக்கம், பக்கவாட்டு பகுதி மற்றும் முன் பக்கங்களைப் போலவே இந்த காரின் உட்பக்கத்திலும் டாடா மோட்டார்ஸ் மாற்றங்களைச் செய்து இருக்கின்றது. இதன் டேஷ் மூன்று லேயர்களைக் கொண்டதாக இருக்கின்றது. மூன்று டோன்களைக் கொண்டதாக உட்பக்கம் இருக்கின்றது. குறிப்பாக, மைய பகுதிக்கு இருக்கை என்ன நிறத்தில் இருக்கின்றதோ அந்த நிறத்தையே அதற்கு டாடா வழங்கி இருக்கின்றது.

நாங்கள் புதிய நெக்ஸானின் உயர் நிலை தேர்வையே ஓட்டி பார்த்தோம். இது வேற லெவலில் அழகானதாக மாற்றப்பட்டு இருந்தது. குறிப்பாக, ஏகப்பட்ட பிரீமியம் அம்சங்களை அது தாங்கி இருந்தது. 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதி உடன் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
இதன் இன்ஃபோடெயின்மென்ட் திரை 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம் இணைப்பு வசதி உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், 10.25 அங்குல முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இது பன்முக முக்கிய தகவல்களை வழங்கும் திறன் கொண்டது.

இதுதவிர, நேவிகேஷன் தகவலையும் இந்த கார் வழங்கும். இந்த திரைக்கு முன் பக்கத்திலேயே ஸ்டியரிங் வீல் நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றது. 2 ஸ்போக்குகள் கொண்ட ஸ்டியரிங் வீலே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த ரக ஸ்டியரிங் வீலை முன்னதாக கான்செப்ட் மாடல்களில் மட்டுமே டாடா பயன்படுத்தி வந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த ஸ்டியரிங் வீலில் டாடாவின் லோகோ மட்டுமில்லைங்க, டச் மற்றும் ஸ்குரோல் பட்டன்களும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இவற்றின் வாயிலாக இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் திரைகளக் கன்ட்ரோல் செய்துக் கொள்ள முடியும். இந்த அம்சங்களுடன் சேர்த்து புதிய டாடா நெக்ஸானில் வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

இத்துடன், கூல்டு குளோவ் பாக்ஸ், ஃபேன்சி ஷிஃப்டர், ரியர் பகுதிக்கான ஏசி வெண்டுகள், இரண்டாம் தலைமுறை ஐஆர்ஏ இணைப்பு தொழில்நுட்பம், எலெக்ட்ரிக் சன்ரூஃப் (குரல் கட்டளை வசதி உடன்) மற்றும் 382 லிட்டர் பூட் ஸ்டோரேஜ் ஆகியவையும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
இதில் பல அம்சங்களை இப்போது விற்பனையில் இருக்கும் நெக்ஸானிலும் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல் பாதுகாப்பு விஷயத்திலும் புதிய நெக்ஸான், இப்போது விற்பனையில் இருக்கும் நெக்ஸானைப் போலவே மிக சிறந்ததாக இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக பல்வேறு சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் புதிய நெக்ஸானில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

ஆறு ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஏபிஎஸ், இபிடி, ஐசோஃபிக்ஸ் சைல்டு இருக்கை ஆங்கரிங் பாயிண்டுகள், பார்க்கிங் சென்சார்கள், அவசரக கால மற்றும் பிரேக் டவுண் கால் அசிஸ்டன்ஸ் என ஏகப்பட்ட அம்சங்களையும் டாடா வழங்கி இருக்கின்றது. இந்த அம்சங்கள் வாயிலாக புதிய நெக்ஸான் அதிக பாதுகாப்பான மற்றும் சொகுசான ரைடு அனுபவத்தை வழங்கக் கூடியதாக உருவாக்கப்பட்டு இருக்கின்றது என்பது தெளிவாக தெரிகின்றது.
2023 நெக்ஸான் எஞ்ஜின், கியர்பாக்ஸ் மற்றும் பரிமாண விபரங்கள்: புதிய டாடா நெக்ஸான் 3,995 mm நீளம், 1,804 mm அகலம் மற்றும் 1,620 mm உயரம், 2,498 mm நீள வீல் பேஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றது. இது தற்போது விற்பனையில் இருக்கும் நெக்ஸானைக் காட்டிலும் அதிக நீளம் ஆகும்.

2 mm நீளம், 7 mm ஸ்லிம்மானதாகவும், 4 mm உயரமானதாகவும் இருக்கின்றது. இத்துடன் புதிய நெக்ஸானில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்ஜின் தேர்வுகளே வழங்கப்பட இருக்கின்றது. இதில், பெட்ரோல் மோட்டார் 118.2 பிஎச்பி மற்றும் 170 என்எம் டார்க்கை வெளியேற்றும்.
இதன் டீசல் மோட்டார் ஆப்ஷன் 113.3 பிஎச்பி மற்றும் 260 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். பெட்ரோல் மோட்டார் தேர்வில் 5 மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஏஎம்டி மற்றும் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆகிய டிரான்ஸ்மிஷன் தேர்வுகளும், டீசல் மோட்டாரில் மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படுகின்றது.

அனைத்தும் 6 ஸ்பீடு கொண்டவை ஆகும். புதிய நெக்ஸான் ஓட்டுவதற்கு எப்படி இருந்தது: மேலே சொன்னது எல்லாம் ஓகே தாங்க. இந்த காரை வாங்குவதற்கான அனைத்து பொருத்தங்களும் இருக்கின்றன. இதேபோல், ஓட்டுவதற்கு எப்படி இருக்கின்றது என்கிற சந்தேகமும் உங்களுக்கு எழும்பி இருக்கக் கூடும்.
எங்களைப் பொருத்த வரை இந்த விஷயத்திலும் இந்த கார் மிக சிறப்பாக செயல்பட்டது. நாங்கள் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வசதிக் கொண்ட நெக்ஸானை ஓட்டி பார்த்தோம். சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் இல்லை என்றாலும் டீசன்டா பிக்-அப் வேகத்தை இந்த மோட்டார் வெளிப்படுத்தியது.

2,000 ஆர்பிஎம்மிலேயே மிக சிறந்த இந்த எஞ்ஜினை வெளிப்படுத்தியது. எனவே நகர்புறத்தில் உல்லாச பயணங்களையும், நெடுஞ்சாலைகளில் அதிக வேதத்தை எட்டவும் இந்த மோட்டார் பெரும் உதவியாக இருக்கும். இதன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மிகவும் மென்மையானதாக தெரிகின்றது.
ஆனால், மேலே, கீழே என மாறி மாறி இயக்கும்போது சந்தையில் தற்போது விற்பனைக்குக் கிடைக்கும் மற்ற டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ்களை அது விரைவாக செயல்படவில்லை. புதிய ஸ்டியரிங் வீலுக்கு பின்னால் பேடில் ஷிஃப்டர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. எஞ்ஜின் மற்றும் கியர்பாக்ஸில் உள்ள அழுத்தத்தைக் குறைக்க, மேனுவல் பயன்முறையில் இருக்கும்போது நெக்ஸானின் டிசிஏ பாக்ஸ் தானாகவே கியர்களை மாற்றும்.

இந்த அம்சத்தில் மட்டும் இல்லைங்க, சஸ்பென்ஷன் விஷயத்திலும் புதிய நெக்ஸான் அசத்தலாக இருக்கின்றது. நமது இந்திய சாலைகளுக்கு ஏற்றதாகவே நெக்ஸானின் சஸ்பென்ஷன் செட்-அப் இருக்கின்றது. மிகப் பெரிய அளவில் இல்லை என்றாலும் போதுமான அளவிலான சொகுசான ரைடு அனுபவத்தை அது வழங்கும்.
என்விஎச் அளவுகள் டீசன்டான அளவில் இருக்கின்றது. அதாவது காருக்குள் பயணிக்கும்போது பெரிய அளவில் அதிர்வுகள், சத்தம் உள்ளிட்டவை தெரியாது. ஆனால், 4,000 ஆர்பிஎம்மை தாண்டிய உடன் புதிய நெக்ஸானுக்குள் சத்தம் மற்றும் அதிர்வுகள் ஏற்படும். இதன் மைலேஜ் திறன் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. மேலும், எங்களுக்கும் குறைவான நேரமே ஒதுக்கப்பட்டதால் இதை துள்ளியமாக அறிந்துக் கொள்ள முடியவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முதல் முறை எஸ்யூவி கார் பயன்பாட்டிற்கு மாற விரும்புபவர்களுக்கு ஏற்ற காராக இது இருக்கும். குறிப்பாக, கேபினுக்குள் இடம் பெற்றிருக்கும் அம்சங்கள் உங்களின் பயணத்தை மிகுந்த சுவாரஷ்யமானதாக மாற்ற உதவும். தற்போது விற்பனையில் இருக்கும் நெக்ஸானைக் காட்டிலும் சற்று அதிக விலையைக் கொண்டதாக புதியது எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், புதிய நெக்ஸான் அனைத்திலும் மிக சிறந்த காராக இருக்கும். குறிப்பாக, பாதுகாப்பு விஷயத்தில் மிகமிக சிறந்த தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









