வேகத்தடைன்னு சுவரே கட்டி வச்சிருந்தாலும் அசால்டா தாண்டிட்டு போகும்! ஃபோர்ஸ் கூர்கா 5 டோர் ரிவியூ!
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் தயாரிப்புகளான டெம்போ, டிரக்ஸ், டிராவலர், அர்மேனியா போன்ற தயாரிப்புகளுக்கு பிரபலமான நிறுவனமாக இருக்கிறது. இது மட்டுமல்லாமல் இந்நிறுவனம் மெர்சிடிஸ் நிறுவனத்திற்கான இன்ஜின்களையும் தயாரித்து வழங்குகிறது. இந்நிலையில் கடந்த 2008ம் ஆண்டு இந்நிறுவனம் முதன்முதலாக ரக்கட் எஸ்யூவி கார் ஒன்றை தயாரித்தது.
ஃபோர்ஸ் கூர்கா என பெயரிடப்பட்ட அந்த கார் ஒரு 3டோர் காராக உருவாக்கப்பட்டது. இந்நிலையில் மக்கள் மத்தியில் இந்த காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மஹிந்திரா தார் காருக்கு போட்டியாக இந்த கார் சிறப்பான விற்பனையை பெற்றது. ரக்கட் எஸ்யூவி செக்மென்டை விரும்பும் மக்கள் மத்தியில் இந்த கார் நல்ல பெயரையும் பெற்றது.

இந்நிலையில் இந்த ஃபோர்ஸ் காரில் 5 டோர் வெர்ஷனை உருவாக்க அந்நிறுவனம் முடிவு செய்தது. அதற்கான தயாரிப்புகளையும் தயார் செய்து விற்பனைக்காக அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் எங்கள் டிரைவ்ஸ்பார்க் குழுவை அழைத்திருந்தது. இந்த காரை ஓட்டிப் பார்த்து ரிவ்யூ செய்வதற்காக கோவாவிற்கு நாங்கள் சென்றிருந்தோம் 5 டோர் வெர்ஷன் கார் எப்படி இருக்கிறது? என்ற விமர்சனத்தை தான் நாம் இங்கே காண போகிறோம்.
புதிய ஃபோர்ஸ் கூர்கா காரில் ஏற்கனவே இருக்கும் கார் போல பக்கவாட்டில் இரண்டு டோர்கள் எக்ஸ்ட்ராவாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ஃபோர்ஸ் கூர்கா எஸ்யூவி காரின் லுக் கிட்டத்தட்ட அப்படியே தான் இருக்கிறது. ஜி.வாகன் என்ற காரை இன்ஸ்பயர் செய்துதான் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தற்போது வெளியாகி உள்ள அப்டேட்டில் பழைய டிசைனிலிருந்து புதிய அப்டேட்டில் பல்வேறு சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த மாற்றங்களை பற்றி பார்க்கும் போது முன் பக்கத்தில் புதிய எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது. அதை சுற்றி வட்ட வடிவிலான டிஆர்எல் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஹெட்லைட்டுக்கு நடுவே கிரில் பகுதி இருக்கிறது. அதில் கூர்கா என்ற பெயரும் இடம் பெற்றுள்ளது. முன்பக்க பம்பரில் கார்னரிங் லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் இருட்டான பகுதியில் செல்லும் போது கூடுதலான வெளிச்சம் கிடைக்கும்.
இந்த காரின் பக்கவாட்டை பொருத்தவரை ஏர் இன்டெக் பகுதி இருக்கிறது. இது கண்களை கவரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக 18 இன்ச் அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது. இது 255/65 R 18 சைஸ் டயரில் பொருத்தப்பட்டுள்ளது. 3 டோர் வெர்ஷனிலிருந்து 5 டோர் வெர்ஷனாக இந்த கார் மாற்றப்பட்டுள்ளதால் எக்ஸ்ட்ரா 2 டோருக்காக இந்த காரின் வீல் பேஸ் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் வீல் பேஸ் அதிகரிக்கப்பட்டுள்ளதால், இந்த காரில் தற்போது 7 பேர் வரை பயணம் செய்ய முடியும். இதற்கு முன்னர் இருந்த 3 டோர் காரில் 4 பேர் மட்டுமே பயணம் செய்யக் கூடிய சூழ்நிலை இருந்தது. தற்போது மூன்று வரிசை சீடர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் பின்பக்க உள்ள சீட் கேப்டன் சீட்டுகளாகவும், நடுவில் உள்ள சீட் பென்ச் சீட்டாகவும் வழங்கப்பட்டுள்ளன.
இந்தக் காரில் மூன்று வரிசை சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதால் இடம் குறைவாக இருக்கும் என எண்ண வேண்டாம். தாராளமான இடவசதி இருக்கிறது. இருந்தாலும், அதிகம் உயரம் கொண்ட பயணிகள் இதில் சிரமப்பட வாய்ப்பு இருக்கிறது. அவர்களுக்கு போதுமான அளவுக்கு காலை மடக்கி வைக்க இடம் இருப்பது சந்தேகம்தான். ஆனால் சாதாரணமான மனிதர்களுக்கு எந்த விதமான பிரச்சினையும் இருக்காது. அவர்கள் தாராளமாக இதில் சொகுசாக பயணம் செய்யலாம்.

இந்த காரை அப்டேட் செய்யும் போது இந்த காரில் உட்புறம் உள்ள வசதிகளையும் அப்டேட் செய்துள்ளது முக்கியமாக இதன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் 9 இன்ச்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்பளே ஆகிய அம்சங்களை சப்போர்ட் செய்யும் விதமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரில் உள்ள ஸ்டேரிங் வீல் டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் அட்ஜஸ்டபிள் ஆப்ஷன் உடன் விற்பனைக்கு வருகிறது. இதனால் டிரைவர்கள் அவர்களின் தேவைக்கு ஏற்ப இதை அப்டேட் செய்ய முடியும். இதுபோக ஸ்டேரிங் வீலுக்கு பின்னால் மற்றொரு டிஜிட்டல் டிஸ்ப்ளே டிரைவருக்காக வழங்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து தகவல்களும் இடம் பெற்றுள்ளன.

முக்கியமாக இந்த காரில் உள்ள டிரைவர் டிஸ்ப்ளேயில் எரிபொருள் அளவு முதல் டயர் பிரஷர் மானிட்டிங் சிஸ்டம் வரை பல்வேறு தகவல்களிடம் பெறுகின்றன. இதனால் டிரைவருக்கு பல விஷயங்கள் இருந்த இடத்திலிருந்து தெரிந்து கொள்ள முடியும் வகையில் உள்ளது. இது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இந்தக் காரில் உள்ள மத்திய பகுதியில் கியர் போக கூடுதலாக உள்ள 4 வீல் டிரைவ் ஆப்ஷனை தேர்வு செய்ய ஸ்டிக்கை வழங்காமல் வட்டமான டயலை வழங்கியுள்ளார்கள். இதில் 2 வீல் ஹை , 4 வீல் லோ, 4 வீல் ஹை ஆப்ஷனை தேர்வு செய்ய முடியும்.

இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை இரண்டு ஏர் பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இரண்டு ஏர் பேக்குகளுடன் கூடுதலாக இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது. டயர் பிரஷர் மானிட்டன் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் கொடுத்த தகவல்கள் டிரைவர் டிஸ்ப்ளேயில் இடம்பெறும் வகையில் தொழில்நுட்பமும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக இந்த காரின் லுக் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்றாலும் சிறப்பாகவே இருக்கிறது.
ஸ்பெக் மற்றும் டைமென்ஷன்: இந்த 5 டோர் போர்ஸ் காரில் 3 டோர் வெர்ஷன் காரை விட சில அம்சங்கள் இதில் மாற்றப்பட்டுள்ளன. முக்கியமாக இதன் வீல் பேஸ் அதிகரிக்கப்பட்டுள்ளதால், இரண்டு ஆக்ஸிலுக்கும் இடையிலான தூரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. இது இதனால் இந்த காரின் உயரமும் சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 4390 மிமீ நீளமும், 1865 மிமீ அகலமும், 2095 மிமீ உயரமும், 2825 மிமீ வீல் பேசஸூம் வழங்கப்பட்டுள்ளது. 3 டோர் வெர்ஷன் கொண்ட காரில் வெறும் 3965 மிமீ நீளமும், 1865 மிமீ அகலமும், 2020 மிமீ உயரமும், 2400 மிமீ வீல் பேஸூம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த 5டோர் வெர்ஷன் காரிலிருந்து 3டோர் வெர்ஷன் கார் 15மிமீ உயரம் குறைவாகவும், 425மிமீ நீளம் குறைவாகவும் இருக்கிறது. தற்போது 3125கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. ஆனால் 3டோர் வெர்ஷன் கொண்ட கார் 2800கிலோ எடை கொண்டதாக மட்டுமே இருந்தது. இவையெல்லாம் இந்த காரின் அளவுகளில் இருக்கும் மாற்றங்களாக இருக்கிறது. இது ஐந்து டோர் கொண்ட காராக இருப்பதால் இந்த மாற்றங்கள் எல்லாம் வந்துள்ளது.
இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை ஃபோர்ஸ் நிறுவனம் மெர்சிடீஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்ற 2.6 லிட்டர் ஓஎம் 616 டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 138 பிஎச்பி பவரை 3200 ஆர்பிஎம்மிலும், 320 என்எம் டார்க் திறனை 1400 - 2600 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் காரில் பொருத்தப்பட்டுள்ள ஓஎம்616 மெர்சிடிஸ் பென்ஸ் இன்ஜினின் பவரை பொருத்தவரை 49பிஎச்பி வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. டார்க்கை பொறுத்தவரை 70என்எம் டார்க் திறன் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது தற்போதும் இந்த கார் 5ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 4வீல் டிரைவ் ஆப்ஷன் உடன் விற்பனைக்கு வருகிறது. இதனால் இந்த கார் ஒரு பவர்ஃபுல்லான காராகவே இருக்கிறது. ஆஃப் ரோடு கார் என்பதால் வழக்கமாக பவர்ஃபுல் இன்ஜின் தான் பொருத்தப்படும்.
ரைடிங் இம்ப்ரசன்: இந்த காரை ஓட்டும் போது இன்ஜினில் கூடுதல் பவர் இருப்பதால் கூடுதல் பவரை நாம் உணர முடியும் என எதிர்பார்த்தால் அது நடக்கவில்லை. இது ஒரு 5 டோர் கார் என்பதால் இந்த காரின் ஒட்டு மொத்த எடையும் அதிகமாகியுள்ளது.
இதனால் அந்த பவர் அதிகமாக அதற்குத்தான் செலவாகிறது. இதனால் இந்த காரில் பழைய காரை விட பவர்ஃபுல்லாக பயணம் செய்யலாம் என்ற நினைப்பு இருந்தால் அதை மறந்து விடுங்கள். இந்த காரை வைத்து ஓவர்டேக் அடிப்பது யோசித்து செய்ய வேண்டிய காரியமாகும்.
நல்ல பிக்கப் இருக்கும் ஒரு எஸ்யூவி காரை தேடிக்கொண்டு இருந்தீர்கள் என்றால் இந்த கார் உங்களுக்கானது அல்ல. இந்த கார் மெதுவாக தான் பிக்கப் ஆகிறது. இந்த கார் செல்ல செல்ல ஸ்டேரிங் வீல் லைட்டாக மாறுகிறது. சஸ்பென்ஷன் செட்டப் சாஃப்டாக வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருப்பங்களில் அதிகமாக அதிகமான பாடி ரோலும் இந்த காரில் தெரிகிறது.
ஆனால் நீங்கள் ஆஃப் ரோடிற்கு சென்று விட்டால் மேலே உள்ள இந்த எந்த பிரச்சினையும் உங்கள் கண்ணுக்கு தெரியாது. ஆஃப் ரோட்டில் இந்த கார் சிறப்பாக செயல்படுகிறது என்பதால் அதை மட்டுமே மையமாக வைத்து இந்த காரை வடிவமைத்துள்ளார்கள். ஆஃப் ரோடு விரும்பிகளுக்கு இந்த கார் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை.
பெரிய பள்ளமேடுகளையும் அசால்டாக தாண்டி செல்கிறது. 233 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருப்பதால் எந்த இடத்திலும் சிக்க வாய்ப்பில்லை. முன்பக்கம் தனியாகவும் பின்பக்கம் தனியாகவும் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளதால் அனைத்து ஆங்கிலிலும் இந்த கார் சிறப்பாக பயணம் செய்யும். சேறு, சகதி, பள்ளமேடு, மலைப்பகுதிகள் என எந்த விதமான ஆஃப் ரோடாக இருந்தாலும் சரி இந்த கார் அசால்டாக தாண்டி செல்லும்.
இறுதி தீர்ப்பு: ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்த கூர்கா காரை அதிக பிராக்டிகல் அம்சம் கொண்ட காராக உருவாக்கியுள்ளது. கூடுதலான டோரை வழங்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் இதன் போட்டி கார்களுக்கும் இணையான வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் மாருதி சுஸூகி ஜிம்னி மற்றும் மஹிந்திரா தார் 5 டோர் ஆகிய கார்களுக்கு போட்டியாக மார்க்கெட்டில் களமிறங்குகிறது.
ஆஃப் ரோடு அம்சங்கள் மட்டும்தான் வேண்டும் என நினைத்தால் இந்த கார் நல்ல சாய்ஸ் தான். முக்கியமாக மலைப்பகுதிகளில் பயணிப்பவர்கள் இந்த காரை துணிந்து தேர்வு செய்யலாம். இந்த காரில் தற்போது எக்ஸ்ட்ரா சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதால் நீங்கள் குடும்பத்துடன் பயணம் செய்ய இந்த கார் ஒரு நல்ல ஆப்ஷனாக தான் இருக்கும்.


Click it and Unblock the Notifications









