இந்தியர்களை இந்த காரு கட்டாயம் வசியம் பண்ணும்! கொரியர்களின் கை வண்ணத்தில் தயாரான புதிய கிரெட்டா எப்படி இருக்கு
இப்போது வேண்டுமானால் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா கார் நமக்கு மிகுந்த பரீட்சையமான கார் மாடலாக இருக்கலாம். ஏன் நம்மில் ஒரு சிலர் இந்த காரை பயன்படுத்திக் கொண்டும் இருக்கலாம். ஆனால், 2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் வரை கிரெட்டா என்றால் என்ன என்பதே இந்தியர்களுக்கு தெரியாது ஒன்றாக இருந்தது.
இந்த நிலையிலேயே தென்கொரிய கார் உற்பத்தி நிறுவனம் இந்தியர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக 2015 ஆம் ஆண்டில் முதல் முறையாக கிரெட்டா-வை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. தற்போது இந்தியர்களின் ஃபேவரிட் எஸ்யூவி ரக கார் மாடலாக கிரெட்டா காட்சியளிக்கின்றது. எஸ்யூவி கார் என்றாலே கிரெட்டா என மனதில் தோன்றும் அளவிற்கு அது இந்தியர்கள் மத்தியில் பிரபலமடைந்துக் காணப்படுகின்றது.

இத்தகைய அமோக வரவேற்பு இந்தியாவில் கிடைத்ததன் தொடர்ச்சியாக 2015 ஆம் ஆண்டிற்கு பின்னர், அதாவது அறிமுகமான ஐந்தாண்டுகள் கழித்து 2 ஆம் தலைமுறை கிரெட்டாவை விற்பனைக்குக் களமிறக்கி இந்தியர்களின் கவனத்தைக் கூடுதலாக கவர்ந்திழுத்தது, ஹூண்டாய். இது, அக்காருக்கு கிடைத்துக் கொண்டிருந்த டிமாண்டை இரட்டிப்பாக்கியது என்றே கூறலாம்.
இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியர்கள் ஒவ்வொருவரின் கவனத்தையும் தன் வசம் ஈர்க்கும் பொருட்டு மேலும் மெருகேற்றப்பட்ட கார் மாடலாக ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டாவின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை தற்போது இந்திய எஸ்யூவி சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இந்த காரையே சமீபத்தில் ரைடு ரிவியூ செய்து பார்க்க எங்களுக்கு அழைப்பு வந்தது.

இதன் அடிப்படையில் ஜோத்பூர் கிளம்பிய நமது டிரைவ்ஸ்பார்க் குழு, பனி மூட்டம் சூழ்ந்த சூழலில் அந்த புதுப்பிக்கப்பட்ட கிரெட்டா-வை பலநிலைகளில் வைத்து ரைடு ரிவியூ செய்தது. அப்போது கார் பற்றி நாங்கள் அறிந்துக் கொண்ட தகவல்களையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் இந்த ஃபேஸ்லிஃப்ட் கிரெட்டா ஓட்டி பார்க்க எப்படி இருந்தது? புதிதாக செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் இந்த காருக்கு பிளஸ்ஸாக அமைந்திருக்கின்றதா? இல்லையா? என்பதைப் பற்றியும் பார்க்கலாம்.
2024 ஹூண்டாய் கிரெட்டாவின் புதிய டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய விபரம்: ஒரு காலத்தில் மிகுந்த கவர்ச்சியான தோற்றம் கொண்டதாக கிரெட்டா காட்சியளித்தது. ஆனால், காலம் மாறுகின்றது அல்லவா. பழக பழக பாலும் புளிக்கும் என்பார்கள். அதைப் போலவே பழைய கிரெட்டாவின் லுக் இன்றைய கால தலைமுறையினர்களுக்கு பிடிக்காமல் போக தொடங்கிவிட்டது.

இந்த நிலை தொடரக் கூடாது எனும் நோக்கத்திலேயே ஹூண்டாய் தற்போது அதன் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரெட்டாவை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கி இருக்கின்றது. முன் மற்றும் பின் பக்கங்களில் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த மாற்றங்கள் அனைத்தும் அமெரிக்காவில் விற்பனையில் கொடிக் கட்டி பறக்கும் பாலிசேட் எஸ்யூவி-யை தழுவியே செய்யப்பட்டு உள்ளன.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் பாலிசேட் எஸ்யூவி போட்டி குட்டியைப் போல கிரெட்டா காட்சியளிக்கின்றது. சதுரமான மற்றும் சீர் நேரான தோற்றமே இத்தகைய தோற்றத்தை அக்காருக்கு வழங்கி இருக்கின்றது. இந்த சதுரமான தோற்றத்திற்கு கூடுதல் பிளஸ்ஸாக அமையும் வகையில் அதே சதுர வடிவில் ஹெட்லைட் வழங்கப்பட்டு இருக்கின்றது.

மேலும், இதன் முகப்பு பகுதியில் தனித்துவமான லுக்கில் பகல்நேரத்தில் ஒளிரக் கூடிய லைட்டுகள் வழங்கப்பட்டு இருக்கின்றது. 'ட'-வை தலைகீழாக கவிழ்த்துப் போட்டதைப் போல இரண்டு பக்க முனைகளிலும் ரெண்டு ரெண்டு எல்இடி லைட்டுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடனேயே, மிக நெருக்கமாக இன்டிகேட்டர் லைட்டுகளும் வழங்கப்பட்டு இருக்கின்றன.
அது செவ்வக வடிவத்தில் காட்சியளிக்கின்றது. இந்த லைட்டுகளை ஒளிரவிட்ட வண்ணம் மாலை நேரத்தில் பயணித்தால் கட்டாயம் சாலையில் உள்ள ஒருமுறையாவது அதன் அழகை திரும்பி திரும்பி பார்த்து ரசிப்பார்கள் அத்தகைய கவர்ச்சியான தோற்றத்திலேயே அனைத்து லைட்டுகளும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் ட வடிவ பகல்நேர லைட்டுகளை பிரதிபலிக்கும் அதே ஸ்டைலிலேயே காரின் முகப்பு பக்க கிரில்லும் அமைந்திருக்கின்றது.

இந்த கிரில்லிற்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக இரு வண்ணம் வழங்கப்பட்டு இருக்கின்றது. கருப்பு மற்றும் கிரே நிறங்களே அங்கு பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதே நிறத்தாலான கிளாடிங்கே அடிப்பக்க பம்பரில் பொருத்தப்பட்டு இருக்கின்றது. இரண்டு பக்கத்திலும் உள்ள காற்று நுழையும் துளைகளையும் இணைக்கும் வகையில் அது இடம் பெற்றிருக்கின்றது.
இந்த துளைகளுக்கு மேலேயே அதிக பிராகசத்தில் ஒளிரும் ஹெட்லைட்டுகள் இடம் பெற்றிருக்கின்றன. இத்தகைய மிகப் பெரிய மாற்றத்தையே முன் பக்கத்தில் கிரெட்டா பெற்றிருக்கின்றது. ஆனால், இதன் பக்கவாட்டு பகுதியில் பெரிய மாற்றம் செய்யப்படவில்லை. பெரும்பாலும் பழைய கிரெட்டாவை பிரதிபலிக்கும் வகையிலேயே ஃபேஸ்லிஃப்ட் கிரெட்டாவும் காட்சியளிக்கின்றது.

ஆனாலும் அது முன்பைவிட இப்போது கவர்ச்சியானதாகக் காட்சியளிக்கின்றது. அதற்கு புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்களே காரணமாக இருக்கின்றது. அதேவேளையில், பின் பக்கத்தில் மிகப் பெரிய மாற்றங்களை ஹூண்டாய் செய்திருக்கின்றது. சொல்லப் போனால் முன் பக்கத்தைப் போலவே மிகப் பெரிய மாறுதலுக்கு பின் பக்கம் உட்படுத்தப்பட்டு இருக்கின்றது.
நீளமான சிவப்பு ஸ்டாப் லைட், கிரே நிற கிளாடிங் கொண்ட பம்பர் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதில் ஹைலைட் என்னவென்றால் ஸ்டாப் லைட்டுகள் தான். இரு முனைகளிலும் சி வடிவத்திலும், மைய பகுதியில், அதாவது, டெயில்கேட்டின் முழு நீளத்தையும் அளக்கும் வகையிலும் அந்த லைட் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இந்த நீளமான ஸ்டாப் லைட் 'ப'-வை கவிழ்த்துபோட்டு நீளமாக இழுத்து வைத்ததைப் போல இருக்கின்றது. இது இரவு நேரத்தில் ஒளிரும் மிக அட்டாகாசமாகக் காட்சியளிக்கின்றது. இந்த லைட்டிற்கு நடுவிலேயே ஹூண்டாயின் சின்னம் இடம் பெற்றிருக்கின்றது. காரை ரிவர்ஸ் செய்யும்போது உதவுவதற்காக ஓர் ரிவர்ஸ் லைட்டு காரின் பின் பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த லைட் அந்த கிரே நிற கிளாடிங்கின் மைய பகுதியிலேயே இடம் பெற்றிருக்கின்றது. இதுமாதிரியான மாபெரும் மாற்றமே உட்பக்கத்திலும் செய்யப்பட்டு இருக்கின்றது. காருக்குள் நுழைந்த உடன் நம் மனதையும், கவனத்தையும் கவரும் வகையில் அதன் டேஷ்போர்டு அமைந்திருக்கின்றது. 10.25 அங்குல இன்ஃபோடெயிமென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் திரைகள் இந்த டேஷ்போர்டிலேயே வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதில், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் தொடுதிரை வசதிக் கொண்டது ஆகும். வழக்கமான இணைப்பு வசதிகள் அனைத்தும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. போஸ் சவுண்ட் சிஸ்டமும் இதனுடன் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த சவுண்ட் சிஸ்டம் பிரீமியமான இசை அனுபவத்தை பெற்றுக் கொள்ள உதவும்.
இணைப்பு அம்சத்தின் வாயிலாக இந்திய மொழிகளைப் பயன்படுத்தி நாங்கள் சில கட்டளைகளை வழங்கினோம். ஆனால், அதற்கு ஆங்கிலத்திற்கு கிடைத்த அளவிற்கு பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. அதேவேளையில், காரின் உட்பக்கம் மனதைக் கவர தவறவில்லை. இரண்டு துளைகள் குளிர்ச்சியான காற்று கேபினுக்குள் விரைந்து வரும் விதமாக முன் பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

டூயல் ஜோன்களுக்கான ஏசி வெண்ட் சிஸ்டமே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இரண்டும் மிக சிறப்பாக வேலை செய்ததை எங்களால் உணர முடிகின்றது. இத்துடன், இரண்டு விதமான வண்ணங்களால் இந்த கார் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இன்னும் பிரீமியம் லுக்கை காருக்கு வழங்கும் விதமாக பெரிய சன்ரூஃப் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இது வான்வெளியை ரசித்த வண்ணம் பயணிக்க பெரும் உதவியாக இருக்கும். மேலும், நேரடியாக இயற்கையான வெளிச்சம் காருக்குள் நுழையவும் இந்த சன்ரூஃப் பெரும் உதவியாக இருக்கும். இதுதவிர, சாஃப்ட் டச்சாலும் இந்த கார் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. இது மேலும் ஒரு படி பிரீமியத்திற்கு 2024 கிரெட்டாவை உயர்த்தி இருக்கின்றது.

இதுமட்டுமில்லைங்க, ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர், காற்றோட்டத்தை உறுதி செய்யும் வசதிக் கொண்ட இருக்கைகள், ஆம்பியன்ட் லைட் என ஏகப்பட்ட பிரீமியம் தர அம்சங்களை 2024 கிரெட்டாவில் ஹூண்டாய் வாரி வாரி வழங்கி இருக்கின்றது. பாதுகாப்பை பற்றி சொல்லவே வேண்டாம். இதில் தன்னுடைய தாராள மனதை ஹூண்டாய் காண்பித்து இருக்கின்றது.
அது 6 ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சைல்டு மவுண்ட், ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் உள்ளிட்டவற்றை இந்த காரில் வழங்கி இருக்கின்றது.

இவை அனைத்தும் உலக தரம் வாய்ந்த பாதுகாப்பு அம்சங்கள் ஆகும். இதுபோதாதென்று கூடுதல் அம்சமாக புதுப்பித்தலின்கீழ் அடாஸ் எனும் அதிநவீன தொழில்நுட்பத்தையும் ஹூண்டாய் வழங்கி இருக்கின்றது. இதன் வாயிலாக பாதசாரிகள், சைக்கிள்கள் மற்றும் பிற வாகனங்கள்களுடன் மோதும் முன்னரே அது குறித்த எச்சரிக்கையை பெற்றுக் கொள்ள முடியும்.
இதுதவிர, பிளைண்ட் ஸ்பாட்டுகள் பற்றிய எச்சரிக்கை, லேன்களை தவறவிடாமல் பயணிப்பதற்கான உதவி மற்றும் வாகனங்கள் முந்திச் செல்வது குறித்த எச்சரிக்கை ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும். இத்துடன், நிற்றல் மற்றும் பயணித்தல் ஆகியவற்றுடன் கூடிய ஸ்மார்ட் க்ரூஸ் கன்ட்ரோல் வசதியையும் அடாஸ் அம்சத்தின் வாயிலாக நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.

2024 ஹூண்டாய் கிரெட்டாவில் வழங்கப்படும் பவர்டிரெயின் ஆப்ஷன்கள் பற்றிய விபரம்: இந்த காரில் வழங்கப்படும் மிக முக்கியமான எஞ்சின் ஆப்ஷனாக 1.5 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டார் இருக்கின்றது. இதில் பிரத்யேகமாக 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் வழங்கப்படுகின்றது. முன்னதாக 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் தேர்வே வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இது 158 பிஎச்பி பவரையும், 252 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் மைலேஜ் திறன் லிட்டருக்கு 18.4 கிமீ ஆகும். இதற்கு அடுத்தபடியாக 1.5 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மோட்டாரும் இந்த காரில் வழங்கப்படுகின்றது. இது அதிகபட்சமாக 113 பிஎச்பி பவரையும், 144 என்எம் டார்க்கையும் வழங்கும்.

இதில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதன் மைலேஜ் திறன் லிட்டருக்கு 17.4 கிமீ - 17.7 கிமீ ஆகும். இதைத்தொடர்ந்து, 1.5 லிட்டர் டர்போ டீசல் ஆப்ஷனும் இந்த காரில் வழங்கப்படுகின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 114 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.
இதில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படுகின்றது. இதில், 6 எம்டி கியர்பாக்ஸ் தேர்வு லிட்டருக்கு 21.8 கிமீ மைலேஜையும், 6ஏடி கியர்பாக்ஸ் தேர்வு 19.1 கிமீ மைலேஜையும் வழங்கும். மைலேஜ் விபரங்கள் அராய் வெளியிட்டது ஆகும்.

ரைடு ரிவியூ விபரம்: 2024 கிரெட்டாவில் மூன்று விதமான மோட்டார் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டாலும் எங்களின் கைகளுக்கு 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதிக் டர்போ டீசல் மோட்டார் கொண்ட கிரெட்டாவே கிடைத்தது. இதையே நாங்கள் ஜோத்பூரில் வைத்து ரைடு செய்து பார்த்தோம்.
டர்போசார்ஜ் செய்யப்பட்ட இந்த மோட்டார் மிகவும் மென்மையான இயக்க அனுபவத்தை வழங்கியது. துளியும் அதிர்வுகள் இல்லாத ரைடையே இதில் பெற்றோம். உங்கள் பாதையில் மிகுந்த காலியான நெடுஞ்சாலை இருக்கும் எனில் உற்சாகமான ரைடை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும். மணிக்கு 100 கிமீ வேகத்தை சுலபமாக எட்டிவிடலாம்.

அதிக வேகத்திலும் அதிர்வுகள் மற்றும் சத்தங்களை எங்களால் இதில் பெரிய அளவில் உணர முடியவில்லை. இதற்கு ஹூண்டாய் பயன்படுத்தி இருக்கும் இரைச்சல் மற்றும் அதிர்வை குறைக்கும் யுக்தியே காரணமாக உள்ளது. தொடர்ந்து ரைடை மிகவும் இனிமையானதாக மாற்றும் விதமாக சஸ்பென்ஷன் அமைப்பில் சிறிது மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது.
அதேவேளையில், லேசாக கடினமாக இருப்பதையும் நாங்கள் உணர்ந்தோம். இதனால் பள்ளம்-மேடுகளில் இந்த சஸ்பென்ஷன் சரியாக வேலை செய்யாதோ என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். திருப்பங்களிலும் இது மிக சிறப்பாக வேலை செய்கின்றது. குறிப்பாக, ரோலிங்காவமல் இருப்பதை இது உறுதி செய்திருக்கின்றது. முக்கியமாக அதிக கனமாக இருப்பதைப் போன்ற ஃபீலை ஸ்டியரிங் வழங்குவது, அதிக வேகத்தின்போது நம்பிக்கையான ரைடிங்கிற்கு உதவியாக இருக்கின்றது.

இதற்கு கூடுதல் பிளஸ்ஸாக அமையும் விதமாக நான்கு சக்கரங்களிலும் டிஸ்க்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இது அதிக வேகத்தைகூட மிக சுலபமாக கட்டுப்படுத்துவிடுகின்றது. மேலும், 2024 கிரெட்டாவில் வழங்கப்பட்டு இருக்கும் புதிய அம்சமான லெவல் 2 வகை அடாஸ் மிக சிறப்பாகவே வேலை செய்கின்றது.
ஏதோ மார்க்கெட்டில் அனைவரும் வழுங்குகிறார்கள், அதற்கு நாமும் வழங்குவோம் என்று அதனைக் கொடுக்கவில்லை. ஜோத்பூரின் மோசமான போக்குவரத்து சூழிலேயே மிக சிறப்பாக அந்த அம்சம் வேலை செய்தது. முக்கியமாக அவசரகால பிரேக்கிங் சிஸ்டம் மெய்சிலிர்க்கும் வகையில் வேலையை செய்ததை பார்த்து நாங்கள் வியந்தே போய்விட்டோம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இப்போது புதிய கிரெட்டாவிற்கான புக்கிங் பணிகள் தொடங்கி இருக்கின்றன. ரூ. 11 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். முந்தைய வெர்ஷனைப் போலவே இதற்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









