தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக சொகுசு வசதிகள் நிறைந்த எஸ்யூவி ரக கார் மாடல்களில் ஜீப் விராங்ளர் (Jeep Wrangler)-ம் ஒன்றாகும். இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் மத்தியில் இந்த கார் மாடலுக்கு கணிசமான அளவு நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் விதமாக ஜீப் நிறுவனம் விராங்ளரின் ஃபேஸ்லிஃப்ட் (புதுப்பிக்கப்பட்ட) வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.
இந்த புதுப்பிக்கப்பட்ட விராங்ளர் (Wrangler Facelift)-ஐ சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே அந்நிறுவனம் பொதுப் பார்வைக்குக் கொண்டு வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதையே ஓராண்டு இடைவெளிக்கு பின்னர் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது, ஜீப். முந்தைய வெர்ஷன் சரியாக 7 ஆண்டுகள் இந்தியாவில் விற்பனையில் இருந்த நிலையிலேயே புதுப்பிக்கப்பட்ட விராங்ளர் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதையே சமீபத்தில் ரைடு ரிவியூ செய்து பார்க்கும் வாய்ப்பு தயாரிப்பு நிறுவனத்தின் வாயிலாக எங்களுக்கு சமீபத்தில் கிடைத்தது. அப்போது, இந்த கார்குறித்து நாங்கள் அறிந்துக் கொண்ட முக்கிய விபரங்களையே உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள முன் வந்துள்ளோம். அனைத்து விபரங்களையும் இந்த பதிவில் விரிவாக தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
புதுப்பித்தலின்கீழ் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன? இந்த காரை புதுப்பித்தலுக்கு உட்படுத்தி இருக்கின்றோம் என்பதைக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக சில மாற்றங்களை இந்த காரின் வெளிப்புறத்தில் ஜீப் செய்திருக்கின்றது. இதன் அடிப்படையில் கிரில் மற்றும் அலாய் வீல் ஆகியவற்றில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.

ஏற்கனவே இந்த காரின் கிரில் கவர்ச்சியான தோற்றத்திலேயே இருக்கும். இது சற்று லேசாக கூடுதல் மெருகேற்றப்பட்டு இருக்கின்றது. இத்துடனேயே புதிய டிசைன் கொண்ட அலாய் வீல் 17-18 அங்குல தேர்வுகளுடன் வழங்கப்படுகின்றன. இத்துடன், வேரியண்டைப் பொருத்து கொரில்லா கிளாஸ் விண்ட்ஷீல்டை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதியும் புதிய விராங்ளரில் வழங்கப்படுகின்றது.
இதன் கிரில் மெருகேற்றப்பட்டு இருந்தாலும் 7 ஸ்லேட்டுகளை அடுக்கி வைத்ததைப் போல் இருக்கும் அதன் உருவத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது இங்கேக் கவனிக்கத்தகுந்தது. ஆனால், அது முன்பு இருந்ததைக் காட்டிலும் சற்று மெல்லியதாக மாற்றப்பட்டு இருக்கின்றது. அத்துடன் முழுக்க முழுக்க கருப்பு நிறத்தால் அது அலங்காரம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இத்துடன் முன் பக்க பார்க்கிங்கிற்கான சென்சார்களும் இந்த கிரில் பகுதியிலேயே வழங்கப்பட்டு இருக்கின்றன. புதுப்பித்தலின்கீழ் 2024 ஜீப் விராங்ளரின் உட்பக்கத்திலும் லேசமாக மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த மாற்றத்தால் காரின் உட்பக்கம் மேலும் ஸ்போர்ட்டியான லுக்கிற்கு மாறியிருக்கின்றது. புத்தம் புதிய 12.3 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஜீப் யு-கன்னெக்ட் 5 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த திரை ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய சாஃப்ட்வேர்களையும் சப்போர்ட் செய்யும். ஆமாங்க, இந்த வசதியையும் இந்த திரையில் பெற்றுக் கொள்ள முடியும். இந்த புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்காக நடு பகுதியில் இருக்கும் ஏசி வெண்டுகள் மறு வடிவமைப்பு செய்யப்பட்டு இருக்கின்றன.

பெரிய ஏசி துவாரங்களுக்கு பதிலாக சிறிய செவ்வக வடிவம் அதற்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் துளைகளும் மெல்லியதாகவே உள்ளன. இருப்பினும், மிக சிறப்பான குளிர்விக்கும் பணியை அந்த ஏசி சிஸ்டம் செய்யும். இந்த துளைக்கு மேல் பக்கத்திலேயே இன்ஃபோடெயின்மென்ட் திரை அமர வைக்கப்பட்டு இருக்கின்றது.
இத்துடன், புதிதாக 12 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட இருக்கைகள் முன் பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இது முன் பக்க பயணிகளுக்கு சௌகரியமான ரைடு அனுபவத்தை வழங்கும் பொருட்டு வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக அதிக கவர்ச்சியான அம்சங்கள் நிறைந்த கார் விராங்ளர் என்பது துள்ளியமாக தெரிய வந்திருக்கின்றது. அதேவேளையில் பாதுகாப்பு விஷயத்திலும் இந்த கார் மிக சிறந்ததாக இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

இந்த காரில் ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காக வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன் சிஸ்டம் (ADAS), ஆறு ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப், டயரில் உள்ள காற்றைக் கண்கானிக்கும் கருவி மற்றும் முன்-பின் பக்கத்தில் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமிராக்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
2024 ஜீப் விராங்ளரின் எஞ்சினை பற்றிய விபரங்கள்: 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் ஃபியட் நிறுவனத்தின் தயாரிப்பாகும். 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே இதில் வழங்கப்படுகின்றது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 270 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

இந்த காரின் அனைத்து வீல்களும் இயங்கும் திறன் கொண்டது. ஜீப் நிறுவனம் அதன் செலெக்-டிராக் (Selec-Trac) எனும் 4 வீல் இயக்கம் சிஸ்டத்தை பயன்படுத்தியே இந்த திறனை விராங்ளருக்கு வழங்கி இருக்கின்றது. இந்த காரில் ஆஃப்-ரோடு பயணங்களைச் சமாளிக்கும் விதமாக, அதாவது, கரடு-முரடான பாதைகளைச் சமாளிக்கும் பொருட்டு புதிய ஆஃப்-ரோடு டிரைவிங் மோட் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த காரை ஓட்டி பார்த்த அனுபவம் எப்படி இருந்தது? இந்த காரை ஓட்டி பார்க்க எங்களுக்கு மிகவும் குறைவான நேரமே ஒதுக்கப்பட்டது. அந்த நேரத்திற்குள் சில முக்கிய தகவல்களை அந்த கார் பற்றி அறிந்துக் கொண்டாம். குறிப்பாக, இந்த கார் ஆஃப்-ரோடுகளை கையாள்வதில் கை தேர்ந்த தயாரிப்பு என்பதை நாங்கள் அறிந்துக் கொண்டோம்.

கரடு-முரடான சாலையில் வைத்து இயக்கி பார்த்தபோது மிக சிறப்பான இயக்க அனுபவத்தை வழங்கியது. குறிப்பாக, ஸ்வேபார் டிஸ்கன்னெக்ட் மோட், மிக மோசமான ரைடை மேற்கொள்ள பெரும் உதவியாக இருந்தது. இந்த மோடில் தேவைக்கேற்ப எஞ்சினை சீறி பாய செய்ய முடியும். எனவே, இந்த காரை சாலையில் வைத்து இயக்குவதைவிட ஆஃப்-ரோடில் வைத்து இயக்கும் இன்னும் உற்சாகமான ரைடு அனுபவத்தை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2024 ஜீப் விராங்களர் ஃபேஸ்லிஃப்ட்-ஐ நீங்கள் முதல் முறையாக பார்க்கின்றீர்கள் என்றால், அது ஓர் சாதுவான பையனைப் போல தோன்றும். ஆனால், அதன் திறனை சோதித்து பார்க்கும் விதமாக செயல்பட்டீர்கள் என்றால், அது பூனையில் போர்வைக்குள் இருக்கும் புலி என்பது உங்களுக்கு தெரிய வரும். மேலும், தினந்தோறும் சாகசம் நிறைந்த ரைடு அனுபவத்தை பெறவும் இந்த வாகனம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

அதேவேளையில் சொகுசு வசதிகளும் இந்த காரில் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன. எனவே, சொகுசு மற்றும் சாகசான ரைடு அனுபவம் இரண்டும் புதிய ஜீப் விராங்ளரில் கிடைக்கும். இந்த காரின் மேற்கூரையை வேண்டும் எனில் நீக்கிக் கொள்ள முடியும். அதேவேளையில், எளிதிலேயே அந்த மேற்கூரையை அதில் சேர்க்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே அனைத்து விதமான ரைடுக்கும் உகந்த காராக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









