கொரியன் காரங்க உருவாக்குன கார் என்றால் சும்மாவா!! கியா சொல்லி, சொல்லி அடிக்குது - 2024 சொனெட் ரிவியூ!

கியா (Kia), தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனம். 2019இல் செல்டோஸின் மூலம் இந்திய மார்க்கெட்டில் நுழைந்த கியா அதன்பின் 2020ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சொனெட் காரை அறிமுகப்படுத்தியது. கொரோனா வைரஸ் பரவலினால் நஷ்டத்தை சந்தித்துவந்த கியா நிறுவனத்துக்கு சொனெட் காரின் அறிமுகம் மிக பெரிய உந்துதலை அளித்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனெனில் தற்சமயம், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்களுள் ஒன்றாக கியா சொனெட் உள்ளது. இருப்பினும், அறிமுகம் செய்யப்பட்டு 3 வருடங்கள் ஆனதை அடுத்து, கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் சொனெட் ஃபேஸ்லிஃப்ட் காரை கியா நிறுவனம் வெளியீடு செய்தது. புதிய சொனெட் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவுகளும் இந்தியாவில் துவங்கப்பட்டு உள்ளன.

2024 kia sonet facelift review

விருப்பப்படுவோர் ரூ.25,000ஐ செலுத்தி காரை முன்பதிவு செய்துக் கொள்ளலாம். இந்த நிலையில், 2024 கியா சொனெட் காரை ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பு நமது டிரைவ்ஸ்பார்க் குழுவுக்கு கிடைத்தது. இதன்படி, மத்திய பிரதேசத்தின் தலைநகர் போபாலில் புதிய சொனெட் காரை நாங்கள் ஓட்டிப் பார்த்தோம். அப்போது, இந்த காரை பற்றி எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை ரிவியூவாக வழங்கியுள்ளோம்.

புதிய சொனெட்டின் அப்டேட்கள்: கியா சொனெட் காரில் புதிய 2024ஆம் ஆண்டிற்காக வெளியே மற்றும் உள்ளே என இரு பக்கங்களிலும் கணிசமான அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, காரின் முன்பக்கத்தில் வழக்கத்தை காட்டிலும் பெரிய அளவில், புலி மூக்கு வடிவில் அப்டேட்டான கிரில் பகுதி கொடுக்கப்பட்டுள்ளது. கிரில்லுக்கு இரு பக்கங்களிலும், 3 பல்புகளை கொண்ட எல்இடி ஹெட்லைட் சிஸ்டம் உள்ளது.

2024 kia sonet facelift review

ஹெட்லைட்களை சுற்றி, புதுமையான 'ஸ்டார் மேப்' டிசைனில் எல்இடி டிஆர்எல்-கள் கொடுக்கப்பட்டுள்ளன. அப்படியே கீழே சென்றால், பம்பரில் புதிய ஃபாக் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. முன்பக்க பம்பரின் வடிவமும் மாற்றப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் இருந்து காரின் பக்கவாட்டு பகுதிக்கு சென்றால், இங்கு பெரியதாக எந்த மாற்றமும் இல்லை. முன்பு விற்பனையில் பழைய சொனெட் காரின் சைடு பகுதியையே புதிய சொனெட்டின் பக்கவாட்டு பகுதி ஞாபகப்படுத்துகிறது.

காரின் சைடில் ஒரேயொரு மாற்றமாக, புதிய 16-இன்ச் க்ரிஸ்டல்-கட் ட்யூயல்-டோன் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்பக்கத்தை போலவே, காரின் பின்பக்கத்திலும் நிறைய அப்டேட்களை காண முடிகிறது. ஹெட்லைட்களை போலவே, பின்பக்கத்திலும் டெயில்லைட்கள் 'ஸ்டார் மேப்' டிசைனில் உள்ளன. டெயில்லைட்கள் இரண்டும் லைட் பார் ஒன்றின் மூலமாக இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான டெயில்லைட்கள் இன்றைய கால மாடர்ன் கார்களில் பரவலாக வழங்கப்பட்டு வருகின்றன.

2024 kia sonet facelift review

பின்பக்க பம்பரில் கொடுக்கப்படும் ஃபாக்ஸ் பிளேட்களின் வடிவம் மாற்றப்பட்டுள்ளது. 2024 சொனெட் காரின் ஜிடிஎக்ஸ் மற்றும் எக்ஸ்-லைன் வேரியண்ட்களில் மட்டும் கொடுக்கப்பட உள்ள ரியர் ஸ்பாய்லரின் டிசைனும் மாற்றப்பட்டுள்ளது. அப்படியே காருக்கு உள்ளே சென்றால், நிறைய அப்டேட்களை நம்மால் காண முடிகிறது. முக்கியமாக, ஸ்டேரிங் சக்கரத்துக்கு பின்னால் புதிய 10.25-இன்ச் ஃபுல்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக ஓட்டுனர் தனக்கு தேவையான விபரங்களை பெற்றுக் கொள்ளலாம். இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை போன்று புதிய இன்ஃபோடெயின்மெண்ட் திரையும் 10.25-இன்ச்சில் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே கனெக்ட்டிவிட்டி ஆப்ஷன்களை இன்ஃபோடெயின்மெண்ட் திரை வழங்கக்கூடியதாக உள்ளது. மேலும், கியா கனெக்ட் சூட்டின் மூலமாக ஆட்டோமேட்டிக் ஏசி மற்றும் ஓவர்-தி-ஏர் அப்டேட்களை பெற முடிகிறது.

2024 kia sonet facelift review

ஏசி காற்று வெளிவரும் துளைகள், ஸ்மார்ட் ஏர் ப்யூரிஃபையர் சிஸ்டம், 4-வே பவர் டிரைவர் சீட் மற்றும் 7-ஸ்பீக்கர் போஸ் பிரீமியம் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவற்றிலும் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால் இவை எல்லாவற்றையும் விட முக்கியமான அப்டேட்கள் அனைத்தும் 2024 சொனெட் காரின் பாதுகாப்பு அம்சங்களில் வழங்கப்பட்டுள்ளன.

முக்கியமாக, 2024 சொனெட் காரில் லெவல் 1 அடாஸ் (ADAS)-ஐ கியா நிறுவனம் வழங்கியுள்ளது. இதன் மூலமாக, காரின் முன்பக்கமாக ஏற்படும் மோதலை எச்சரிக்கும் & தடுக்கும் வசதி, இயங்கும் பாதையில் இருந்து கார் விலகினால் அதுகுறித்து டிரைவருக்கு எச்சரிக்கும் & தடுக்கும் வசதி மற்றும் ஓட்டுனரால் பார்க்க முடியாத காரை சுற்றிய பகுதிகளை கண்காணிக்கும் வசதி என 10 விதமான தானியங்கி வசதிகளை புதிய சொனெட் காரில் பெற முடிகிறது.

2024 kia sonet facelift review

புதிய சொனெட் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் கிடைக்கும். எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் அசிஸ்ட் & வைகல் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட், முன்பக்க & பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், 360-டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம் மற்றும் அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்டவை புதிய சொனெட் ஃபேஸ்லிஃப்ட் காரின் மற்ற முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள் ஆகும்.

2024 சொனெட்டில் மாற்றப்படாதவை: புதிய சொனெட் ஃபேஸ்லிஃப்ட் கார் தோற்றத்தில் மட்டுமே மாற்றப்பட்டு உள்ளதே தவிர்த்து, மெக்கானிக்கல் பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை. குறிப்பாக, காரின் என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இல்லை. டீசல் என்ஜினை மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் உடன் வாங்கும் வாய்ப்பை மட்டும் கியா நிறுவனம் சொனெட் காரில் மீண்டும் கொண்டுவந்துள்ளது.

2024 kia sonet facelift review

2024 சொனெட் கார் 2 பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் மற்றும் 1 டீசல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. விலை குறைவான சொனெட் கார் வேரியண்ட்களில், 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 82 பிஎச்பி மற்றும் 115 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் என்ற ஒரேயொரு கியர்பாக்ஸ் ஆப்ஷனை மட்டுமே பெற முடியும்.

மற்றொரு பெட்ரோல் என்ஜின் 998சிசி, டர்போசார்ஜ்டு, 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் ஆகும். டர்போ என்ஜினான இது அதிகப்பட்சமாக சுமார் 182 பிஎச்பி மற்றும் 172 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை காருக்கு வழங்கும். கியா சொனெட் காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கும் இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு இண்டெலிஜண்ட் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7-ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெறலாம்.

2024 kia sonet facelift review

ஒரேயொரு டீசல் என்ஜினான 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் மூலம் 114 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை கார் பெற முடியும். ஏற்கனவே கூறியதுபோல், இனி இந்த டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை பெறலாம். அல்லது, வழக்கமாக வழங்கப்பட்டு வந்த 6-ஸ்பீடு இண்டெலிஜண்ட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என்ற இரண்டில் ஒன்றுடனும் டீசல் என்ஜினை பெற முடியும்.

டிரைவிங் அனுபவம்: எங்களுக்கு டீசல் என்ஜின் உடன் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை கொண்ட 2024 சொனெட் கார் வழங்கப்பட்டது. கியாவின் 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் உண்மையில் மிகவும் மென்மையாக இயங்கியது. என்ஜினை சற்று அதிக ஆர்பிஎம் வேகத்தில் இயக்கிய போது மட்டும் சற்று கரகரப்பான சத்தங்களை எங்களால் கேட்க முடிந்தது.

2024 kia sonet facelift review

2,000 ஆர்பிஎம் வேகத்தில் இருந்து கியரை மாற்ற என்ஜின் அனுமதிக்கிறது. இந்த எஸ்யூவி கார் எளிதாக 100kmph வேகத்தை எட்டுகிறது. என்ஜின் உடன் இணைக்கப்பட்டுள்ள 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என்ஜினின் ஆற்றலை எளிய முறையில் காரின் சக்கரங்களுக்கு வழங்குகிறது. இருப்பினும், பெடில் ஷிஃப்டர்களை உபயோகப்படுத்தும் போது மட்டும் கியரின் ரெஸ்பான்ஸ் சற்று குறைவது போன்று தோன்றியது.

சஸ்பென்ஷன் செட்-அப் முன்பை விட மென்மையானதாக மாற்றப்பட்டுள்ளதை டிரைவிங்கின்போது நன்றாகவே உணர முடிந்தது. பள்ளம், மேடுகளை 2024 சொனெட் சிறப்பாகவே கையாளுகிறது. அதேபோன்று, வளைவுகளில் திரும்பும் போதும் எந்த பிரச்சனையும் இல்லை. அதற்காக, ட்ரிஃப்ட் செய்யும் அளவிற்கு எல்லாம் இந்த புதிய கியா கார் ஏற்றது இல்லை. காரின் டிஸ்க் பிரேக்குகள் சிறப்பாக செயல்படுவதை இங்கே பதிவு செய்தே ஆக வேண்டும்.

2024 kia sonet facelift review

இருப்பினும், நாங்கள் காரை ஸ்டார்ட் செய்தபோது ஆரம்பத்தில் பிரேக்குகள் சற்று கூடுதல் சென்ஸிடீவ் ஆக இருந்தன. ஆனால், பழகிக் கொண்டால் காரின் டிஸ்க் பிரேக்குகளை உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட முடியும். அடாஸ் வசதிகள் இந்த காரில் உள்ளது என வெளியில் பெருமையாக சொல்லிக் கொள்ளலாம். ஆனால் உண்மையில், அடாஸின் சில அம்சங்கள் டிரைவிங்கின் போது சிறு, சிறு இடையூறுகள் செய்வதை எங்களால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: நிறைய நிறைகள் மற்றும் சில குறைகள் இருந்தாலும், 2024 கியா சொனெட் வழக்கமான ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டை காட்டிலும் பெரிய மற்றும் முக்கியமான அப்டேட்களை பெற்றுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். காரின் என்ஜினில் மாற்றமில்லை என்றாலும், சொனெட்டின் தோற்றத்திலும், தொழிற்நுட்ப அம்சங்களிலும் முக்கியமான மாற்றங்களை கியா கொண்டுவந்துள்ளது.

2024 kia sonet facelift review

இதன் மூலமாக, மேலும் பாதுகாப்பான காராக மாறியிருப்பது மட்டுமின்றி, இன்றைய கால மாடர்ன் கார் என்று கியா சொனெட்டை தாராளமாக சொல்லலாம். இரு டர்போ என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுவதால், ஆற்றல் விஷயத்திலும் 2024 சொனெட் கார் எந்த விதத்திலும் சளைத்தது கிடையாது. ஆதலால், இந்த புதிய 2024ஆம் ஆண்டில் 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளத்தில் எஸ்யூவி காரை வாங்க விரும்புவோர் தாராளமாக 2024 சொனெட்டை தேர்வு செய்யலாம் என்பது எங்களது பரிந்துரை.

More from DriveSpark

Article Published On: Thursday, January 11, 2024, 10:05 [IST]
English summary
2024 kia sonet facelift review updates engine features all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X