800கிமீ போகும்! ஃபேமிலியவே கூட்டி போகலாம்! குழந்தைகள பின்னால விட்டுட்டா ஜாலியா வருவாங்க! இக்யூஎஸ் ரைடு ரிவியூ
இந்தியாவில் மின்சார வாகனம் (EV)-களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, சொகுசு மின்சார கார்களுக்கும் நாட்டில் நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவின் இந்த தாகத்தை தீர்ப்பதில் ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் முக்கிய பங்கினை வகிக்கின்றது. அது சொகுசு அம்சங்கள் நிறைந்த எலெக்ட்ரிக் கார் மாடல்களை தொடர்ச்சியாக நாட்டில் அறிமுகப்படுத்தி வருகின்றது. அந்தவகையில், சமீபத்தில் ஓர் முழு சார்ஜில் 560 கிமீ ரேஞ்ச் தரும் இக்யூஏ (EQA) எலெக்ட்ரிக் கார் மாடலை அது விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.
இது அறிமுகம் செய்யப்பட்டு இரண்டுக்கும் குறைவான மாதங்களே ஆகிய நிலையில் மற்றுமொரு தயாரிப்பாக இக்யூஎஸ் (EQS) எனும் எலெக்ட்ரிக் கார் மாடலையும் அது விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஓர் எஸ்யூவி (SUV) ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். மேலும், மிக அதிக ஆடம்பர அம்சங்களைத் தாங்கிய சொகுசு வாகனமான மெர்சிடிஸ் மேபேக்-கின் வழக்கமான வெர்ஷனாகவும் இது அறியப்படுகின்றது.

அதேவேளையில், இந்த கார் மாடலில் ஆடம்பர அம்சங்களுக்கு சற்றும் குறைச்சல் இருக்காது என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய கார் மாடலையே அண்மையில் ரைடு ரிவியூ செய்து பார்க்கும் வாய்ப்பு நமது டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு கிடைத்தது. இதன் வாயிலாக கார்குறித்து கிடைத்த அனுபவங்களையே இந்த பதிவில் பகிர்ந்துள்ளோம். வாருங்கள் முழுமையான ரைடு ரிவியூ விபரங்களைக் காணலாம்.
மெர்சிடிஸ் மேபேக் இக்யூஎஸ் எஸ்யூவி எலெக்ட்ரிக் காரின் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய விபரம்: அனைத்திலும் இந்த கார் மாடல் மிக சிறந்ததாகக் காட்சியளிக்கின்றது. குறிப்பாக, அழகில் இந்த கார் கண்களைக் கவரக் கூடியதாக உள்ளது. இதன் முகப்பு பக்கம், பக்கவாட்டு பகுதி மற்றும் பின் பக்கம் என அனைத்தும் மிக சிறந்த அழகியலைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது.

குறிப்பாக, இந்த காரின் முன் பக்க கிரில் தனித்துவமான அழகைக் கொண்டிருக்கின்றது. இது ஓர் போலியான கிரில் ஆகும். அது மெர்சிடிஸ் பென்ஸ்-இன் சின்னமான முக்கொம்பு ஸ்டார்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். இதுதவிர, அதன் நடுப்பகுதியில் மிக பெரிய அளவில் ஓர் பென்ஸ் லோகோவும் இடம் பெற்றிருக்கின்றது.
இவையே அந்த காரின் முன் பக்கத்திற்கு அதிக அழகைச் சேர்க்கக் கூடியதாக இருக்கின்றன. இத்துடன், முகப்பு பகுதிக்கு கூடுதல் அழகை சேர்க்கும் விதமாக இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் மேட்ரிக்ஸ் வகை எல்இடி லைட்டுகள் உள்ளன. இரண்டு ஹெட்லைட்டுகளை இணைக்கும் விதமாக எல்இடி லைட் பார் ஒன்று இரண்டுக்கும் இடையில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றது.

இது பான்னெட்டுக்கும் கிரில்லுக்கும் இடையில் இருக்கும். இதேபோல், இந்த காரின் பக்கவாட்டு பகுதியையும் மிகுந்த அழகானதாகவே பென்ஸ் தயார் செய்திருக்கின்றது. அந்தவகையில், ஜன்னலின் சுற்றுப்புறங்களை அலுமினிய அணிகலன்களால் அலங்கரித்திருக்கின்றது. இது பென்ஸ் இக்யூஎஸ் எஸ்யூவிக்கு வேற லெவல் அழகான தோற்றத்தை வழங்கும் வகையில் உள்ளது.
இதுதவிர ஸ்போக்குகள் கொண்ட இலகு ரக ஏஎம்ஜி வகை 21 அங்குல அலாய் வீலும் இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, டோருடன் டோராகக் காட்சியளிக்கக் கூடிய ஃப்ளஷ் வகை கதவு கை பிடிகள் மற்றும் ஒளிரக் கூடிய ரன்னிங் போர்டு ஆகியவையும் இந்த காரின் பக்கவாட்டு பகுதிக்கு கவர்ச்சி சேர்க்கும் விதமாக வழங்கப்பட்டு உள்ளன.
முன் பக்கம் மற்றும் பக்கவாட்டு பகுதி மட்டுமில்லைங்க இந்த காரின் பின் பக்கமும் அதிக அழகானதாகவே தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில், இக்யூஎஸ் எஸ்யூவி-யின் பின் பக்கத்தில் கன்னெக்கடட் வகை எல்இடி டெயில் லைட், சிறிய ஸ்பாய்ளர், இக்யூஎஸ் 580 மற்றும் 4 மேட்டிக் எனும் பேட்ஜ்கள் ஆகியவற்றைக் காண முடிகின்றது.
குறிப்பாக, இதன் பின் பக்க பம்பர் க்ளாஸ் பிளாக் மற்றும் குரோம் இன்செர்ட்டால் அலங்கரிக்கப்பட்டு இருப்பது ஒட்டுமொத்த பின் பக்கத்திற்கும் மிகுந்த அழகை சேர்க்கும் வகையில் உள்ளது. பென்ஸ் நிறுவனம் இந்த காரின் வெளிப்பக்கத்திற்கு வழங்கியதைவிட மிகப் பெரிய முக்கியத்துவத்தை அதன் உட்பக்கத்திற்கு வழங்கி இருக்கின்றது என்றே கூறலாம்.
அந்த அளவிற்கு சொகுசு மற்றும் பிரீமியம் அம்சங்களை இக்யூஎஸ் எஸ்யூவி-யில் அது வாரி வழங்கி இருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் பணக்காரக் குடும்பங்களின் தேவையை முழுமையாக அறிந்து இதன் உட்பக்கத்தை பென்ஸ் தயார் செய்திருக்கின்றது. அந்தவகையில், ஓர் நீளமான ஹைப்பர் திரை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இது டேஷ்போர்டின் ஒரு முனை தொடங்கி மற்றொரு முனை வரை நீண்டிருக்கும் வகையில் உள்ளது. இதன் இருமுனைகளில் அரிய வகை பூ ஒன்று பூத்திருப்பதைப் போல ஏசி வெண்டுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 56 அங்குலம் கொண்டதே இந்த ஹைப்பர் திரை ஆகும்.
மூன்று பகுதிகளாக இது பிரிக்கப்பட்டு இருக்கும். அதில் 12.3 அங்குலம் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டராகவும், 17.7 அங்குலம் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும் செயல்படும். தொடர்ந்து, 12.3 அங்குல அளவில் முன் பக்க பயணிக்கான திரை ஒன்றும் அதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இவை அனைத்தும் ஒரே ஹைப்பர்ஸ்கிரீனில் வழங்கப்பட்டு இருப்பது தொழில்நுட்பத்தின் அடுத்தக்கட்டம் ஆகும்.
இதுதவிர, 15 ஸ்பீக்கர்கள் கொண்ட பர்மெஸ்டர் சவுண்டு சிஸ்டம், சூடாகும் மற்றும் எலெக்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ளும் வசதிக் கொண்ட முன் பக்க இருக்கை ஆகியவையும் இக்யூஎஸ் எஸ்யூவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கைகளில் இன்னும் சில தனித்துவமான வசதிகளையும் பார்க்க முடிகின்றது.
அந்தவகையில், ஹாட்-ஸ்டோன் மசாஜ்-ஜையும் இந்த காரில் பென்ஸ் வழங்கி இருக்கின்றது. இதுதவிர, இந்த இருக்கை இடுப்பு பகுதிக்கு அதிகம் சப்போர்ட்டை வழங்கக் கூடியதாக தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. எனவே சௌகரியமான ரைடு அனுபவம் என்பது மிகவும் தாராளமாக இந்த காரில் கிடைக்கும்.
தொடர்ந்து, பின் பக்க இருக்கையாளர்களுக்கு சில பிரத்யேக வசதிகளை இந்த காரில் பென்ஸ் நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. அந்தவகையில், பின்னிருக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் 11.6 அங்குல திரை பொழுதுபோக்கிற்காக வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன், அதிக லெக்ரூம் வசதி மற்றும் ஹீட்டட் வசதியும் பின்னிருக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதுமட்டுமில்லைங்க, காருக்குள் பயணிக்கும்போது மிகுந்த அமைதியான ரைடு அனுபவத்தை பெறுவதற்காக டபுள் கிளாஸ் விண்டோவையே பென்ஸ் இந்த காரில் வழங்கி இருக்கின்றது. இது வெளிப்புற சத்தத்தை துளியளவும் காருக்குள் நுழைய விடாது. இதேபோல், இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் மூன்றாவது வரிசை இருக்கையும் சிறப்பான ரைடு அனுபவத்தை பெற்றுக் கொள்ளும் வகையிலேயே தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.
குறிப்பாக, சிறுவர்கள் பயணிக்க ஏதுவாகன மூன்றாவது வரிசை இருக்கை உள்ளது. தொடர்ந்து, இந்த இருக்கையை மடித்துக் கொள்ளும் வசதியையும் பென்ஸ் வழங்கி இருக்கின்றது. இதன் வாயிலாக 195 லிட்டராக இருக்கும் ஸ்டோரேஜை 645 லிட்டராக அதிகரித்துக் கொள்ள முடியும். இந்த இருக்கைகள் அனைத்தையும் நெப்பா லெதரைக் கொண்டே பென்ஸ் நிறுவனம் அலங்கரித்திருக்கின்றது.
இதன் ஸ்டியரிங் வீலும் இதே லெதராலேயே அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இவற்றுடன், இரண்டு வயர்லெஸ் சார்ஜர் பேட், 7 அங்குல டேப்ளட் (காரின் முக்கிய அம்சங்களைக் கன்ட்ரோல் செய்ய உதவும்), ஹெட்ஸ் அப் திரை, கண்ணாடி ரூஃப், ஆம்பியன்ட் லைட், காற்றை சுத்திகரிக்கும் கருவி மற்றும் ஐயோனைசேஷன் சிஸ்டம் உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதேபோல், பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் மிக மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், 9ஏர் பேக்குகள், மெர்சிடிஸ் ப்ரீ-சேஃப் சேஃப்டி செட்-அப் உள்ளிட்டவை இக்யூஎஸ் எஸ்யூவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு உள்ளன. இதுமட்டுமின்றி, லெவல் 2வகை அடாஸ் அம்சமும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக ஆக்டீவ் டிஸ்டன்ஸ் அசிஸ்ட் மற்றும் ஆக்டீவ் பிளைன் ஸ்பாட் அசிஸ்ட் போன்ற வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
மெர்சிடிஸ் மேபேக் இக்யூஎஸ் எஸ்யூவி எலெக்ட்ரிக் காரின் அளவு, மின்சார மோட்டாரின் திறன் மற்றும் பேட்டரி பேக் விபரம்: இது ஓர் மூன்று வரிசை இருக்கை அமைப்பைக் கொண்ட எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இதற்கேற்பவே இதன் அளவுகளும் உள்ளன.
5,125 மிமீ நீளம், 1,959 மிமீ அகலம் மற்றும் 1,718 மிமீ உயரம் மற்றும் 3,210 மிமீ நீளமான வீல்பேஸ் ஆகியவற்றையே இந்த கார் கொண்டிருக்கின்றது. மேலும், இந்த காரின் எடை 2,845 கிலோவாக உள்ளது. இவ்வளவு அதிக எடைக்கு அதன் மிகப் பெரிய பேட்டரி பேக்கே முக்கிய காரணமாக உள்ளது.
122 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கையே இந்த காரில் பென்ஸ் வழங்கி இருக்கின்றது. இது ஓர் முழு சார்ஜில் 809 கிமீ ரேஞ்சை வழங்கும் என அராய் சான்றளித்திருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை 200kW திறன் கொண்ட டிசி ஃபாஸ்ட் சார்ஜர் வாயிலாகவும் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதன் வாயிலாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீத சார்ஜை வெறும் 31 நிமிடங்களில் ஏற்றிவிட முடியும். அதேவேளையில், 22kW ஏசி சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்தால் இதை முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணி நேரம் 25 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்.
இந்த காரின் இயக்கத்திற்காக இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார் செட்-அப்பே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுவே அனைத்து வீல்களுக்கும் இயக்க திறனை வழங்குகின்றது. 536 பிஎச்பி மற்றும் 858 என்எம் டார்க்கை வழங்கும் திறன் கொண்டதே இந்த எலெக்ட்ரிக் மோட்டார் ஆகும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 210 கிமீ ஆகும்.
அதேவேளையில், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை வெறும் 4.7 செகண்டுகளிலேயே இது எட்டிவிடும். தொடர்ந்து, வசதியான ரைடு அனுபவத்தை வழங்கும் பொருட்டு இந்த காரில் ஏர்மேட்டிக் ஏர் சஸ்பென்ஷன் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது பள்ளம்-மேடுகளைகூட அசால்டாக கடந்துச் செல்லும்.
மெர்சிடிஸ் மேபேக் இக்யூஎஸ் எஸ்யூவி எலெக்ட்ரிக் காரை ஓட்டி பார்க்க எப்படி இருந்தது? இந்த எலெக்ட்ரிக் கார் அதிக செயல்திறனை விரும்புவோருக்கு மிக சிறந்த தேர்வாகக் காட்சியளிக்கின்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் மணிக்கு நூறு கிமீ வேகத்தை எட்டக் கூடியதாகவே இது இருக்கின்றது.
4.7 செகண்டுகளிலேயே அது 0-100 கிமீ வேகத்தை எட்டிவிடும். ஸ்போர்ட் மோடு வாயிலாகவே இந்த காரின் அதீத திறனை பெற்றுக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதேபோல், மிகுந்த சொகுசான ரைடு அனுபவத்தை பெறும் வகையிலும் இந்த காரை பென்ஸ் நிறுவனம் தயார் செய்திருக்கின்றது.
இக்யூஎஸ் எஸ்யூவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு இருக்கும் சிறந்த சஸ்பென்ஷன் செட்-அப் பெரிய பள்ளங்கள் மற்றும் மேடுகள் சாலையில் இருப்பதே தெரியாமல் பயணிக்க உதவக் கூடியதாக இருக்கின்றன. ஆனால், அனைத்து நேரங்களிலும் சௌகரியமான அனுபவத்தை வழங்கக் கூடியதாக சஸ்பென்ஷன் செட்-அப் இல்லை என்பதையும் இங்கே நாம் கவனிக்க வேண்டும்.
ஷார்ப்பான வளைவுகளில் பயணிகளை உருள செய்யும் வகையில் உள்ளது. இது பயணிகளுக்கு கொஞ்சம் தொந்தரவாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பென்ஸ் நிறுவனம் இக்யூஎஸ் எஸ்யூவி எலெக்ட்ரிக் காரை சற்றே ஆஃப்-ரோடுகளைச் சமாளிக்கும் விதமாகவும் தயார் செய்து இருக்கின்றது என்பதை நாம் இங்கே அறிந்துக் கொள்வது அவசியம் ஆகும்.
எனவே இதற்கான பயன்முறையையும் நம்மால் இந்த காரில் காண முடிகின்றது. இந்த ஆஃப்-ரோடு மோடில் பயணிக்கும்போது இக்யூஎஸ் எஸ்யூவி சற்றே உயரமான நிலையில் சவாரி செய்யும் அனுபவத்தை வழங்கும். எனவே பள்ளம், மேடு மற்றும் கரடு-முரடான பாதைகளை அசால்டாக இந்த கார் கடந்துவிடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் எஸ்யூவி எலெக்ட்ரிக் காரில் வழங்கி இருக்கும் அம்சங்களை வைத்து பார்க்கையில் இந்தியாவின் அனைத்து விதமான சாலைகளுக்கும் ஏற்றதாக இருக்கும் என தெரிகின்றது. எங்களின் ரைடு ரிவியூ-விலும் இதையே நாங்கள் உணர்ந்துள்ளோம். குறிப்பாக, பணக்கார குடும்பங்கள் விரும்பும் வசதிகள் பல இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. சொகுசான மற்றும் அசதியற்ற பயணங்களுக்கு இந்த கார் வழிவகுக்கும். இந்த கார் இந்தியாவில் ரூ. 1.41 கோடி எனும் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









