டொயோட்டா கார்களில் இது வேற ரகமா இருக்கு! ஹைப்ரீட் கார்கள் ஓட்டுவதற்கு சுமார்னு யாருங்க சொன்னா?
டொயோட்டா காம்ரி (Toyota Camry), ஜப்பானிய கார் நிறுவனமான டொயோட்டாவின் புதிய சி-பிரிவு செடான் (Sedan) கார். டொயோட்டாவில் இருந்து நீண்ட வருடங்களாக விற்பனையில் இருக்கும் கார்களுள் ஒன்று. 22 வருடங்களாக டொயோட்டாவின் நம்பிக்கைக்குரிய காராக காம்ரி விளங்குகிறது. டொயோட்டாவின் ஹைப்ரீட் காரான காம்ரி கடந்த 2013இல் இருந்து இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய துவங்கப்பட்டது. அந்த சமயத்தில் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்ட முதல் ஹைப்ரீட் காராக காம்ரி விளங்கியது. ஆனால், கடந்த சில வருடங்களாக இந்த காரின் விற்பனை இந்தியாவில் பெரிய அளவிற்கு இல்லை என்பது என்னவோ உண்மைதான்.
இதன் காரணமாகவே, டொயோட்டா நிறுவனம் காம்ரி காரை அப்டேட் செய்து மேம்படுத்தி மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது டொயோட்டா காம்ரி காரின் 9வது ஜென்ரேஷன் (Generation) மாடல் ஆகும். புதிய 2025 டொயோட்டா காம்ரி காரை பெங்களூர் (Bengaluru)-இல் ஓட்டி பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அதன்மூலம் நாங்கள் பெற்ற அனுபவங்களை ரிவியூவாக இங்கே வழங்கியுள்ளோம்.

வெளிப்புற தோற்றம் & வசதிகள்: 2025 காம்ரி காரின் வெளிப்பக்க தோற்றத்தை டொயோட்டா முழுவதுமாக மாற்றியுள்ளது. இதற்குமுன் எப்போதும் இல்லாத வகையில் காம்ரி கார் மாற்றப்பட்டுள்ளது. வெளிநாட்டில் விற்பனையில் உள்ள லெக்ஸஸ் கார்களில் இருந்து சில டிசைன்கள் பெறப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதால், 2025 காம்ரி புத்துணர்ச்சியான தோற்றத்தில் காட்சியளிக்கிறது.
காருக்கு முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள C-வடிவிலான எல்இடி டிஆர்எல்-கள் டொயோட்டா பிரியஸ் காரில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. அதேபோல், முன் பம்பர் ஆனது லெக்ஸஸ் ஸ்பிண்டிள் காரில் இருந்து பெறப்பட்டுள்ளது. ட்யூயல் புரோஜாக்டர் எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் பொனெட் உள்ளிட்டவை காரின் முன்பக்கத்தில் டொயோட்டாவின் லோகோவை சற்று மேலேற்றி உள்ளன.

காரின் பக்கவாட்டில், ஒரு கூர்மையான லைன் கதவு கைப்பிடிகள் வழியே செல்கிறது. இந்த காரில் 18-இன்ச்சில் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. காருக்கு பின்பக்கத்திலும் C-வடிவில் டெயில்லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்பு இருந்த காம்ரி உடன் ஒப்பிடுகையில், பின்பக்க பூட் ஸ்பாய்லர் சிறியதாக்கப்பட்டுள்ளது. பம்பரின் டிசைன் மாற்றப்பட்டுள்ளது.
காருக்குள் இன்னும் அதிகமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மல்டி-லேயர்களாக டிசைன் செய்யப்பட்ட டேஸ்போர்டில் மிகவும் மென்மையான மெட்ரீயல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்க மற்றும் பொழுதுப்போக்கிற்கு என 12.3 இன்ச்சில் இரு திரைகள் வழங்கப்பட்டுள்ளன. வயர்-இல்லா ஆப்பிள் கார்ப்ளேவை ஏற்கக்கூடிய இன்ஃபோடெயின்மெண்ட் திரை பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக உள்ளது.

ஆனால், ஆண்ட்ராய்டு ஆட்டோ வயர் மூலமாக மட்டுமே சப்போர்ட் செய்யக்கூடியதாக உள்ளது. இன்ஃபோடெயின்மெண்ட் திரை உடன் 9-ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. 2025 காம்ரி காரில் இருக்கக்கூடிய மற்ற அம்சங்கள் என்று பார்த்தால், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், 10-இன்ச் ஹெட்-அப் டிஸ்பிளே, மடக்கக்கூடிய சன்ஷேட் உடன் சன்ரூஃப் உள்ளிட்டவற்றை சொல்லலாம்.
முன் இருக்கைகள் வெண்டிலேஷன் வசதி உடன் உள்ளன. மேலும், முன் இருக்கைகளை எலக்ட்ரிக் மூலமாக எளிதாக அட்ஜெஸ்ட் செய்ய முடிகிறது. பின் இருக்கைகளும் மடக்கக்கூடிய வகையில் உள்ளன. ஓட்டுனருக்கான இருக்கையை 10 விதமாக அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ளலாம். அத்துடன், ஸ்டேரிங் சக்கரத்தையும் அட்ஜெஸ்ட் செய்ய முடிவதால், காருக்குள் ஏறுவதும், இறங்குவதும் எளியதாக உள்ளது.

அதேபோல், பின் இருக்கைகளும் போதுமான லெக்ரூம், ஹெட்ரூம் இடவசதிகள் உடன் உள்ளன. மேலும், பின் இருக்கை பயணிகளுக்கென தனியாக ஏசி கண்ட்ரோல் உள்ளதாலும், சன்ரூஃப் உள்ளதாலும் பின் இருக்கையில் பயணம் மிகவும் சவுகரியமாக இருக்கிறது. பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரையில், டொயோட்டாவின் பாதுகாப்பு உணர்வு 3.0 ADAS தொகுப்பை புதிய காம்ரி கார் பெற்றுள்ளது.
இதன் உதவியுடன், மோதலை முன்பே அறிந்து செயல்பட உதவி, சாலையில் நடந்து செல்வோரையும் அடையாளம் காணும் வசதி, ரேடார் மூலம் செயல்படும் க்ரூஸ் கண்ட்ரோல், சாலையில் விலகாமல் ஒரே பாதையில் செல்ல உதவி போன்ற அட்வான்ஸ்டு உதவிகளை பெறலாம். இவற்றுடன், வழக்கமான 9 ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா, பார்க்கிங் சென்சார்கள் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றையும் 2025 காம்ரி பெற்றுள்ளது.

பரிமாண அளவுகள் & பவர்டிரெயின்: 2025 காம்ரி கார் டொயோட்டாவின் TNGA-K பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செடான் காரின் நீளம் 4,920மிமீ, அகலம் 1,840மிமீ மற்றும் உயரம் 1,455மிமீ ஆகும். முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையே 2,825மிமீ நீளத்தில் இடைவெளி உள்ளது. தரைக்கும் காரின் அடிப்பகுதிக்கும் இடையே 165மிமீ உயரம் உள்ளது. காரின் மொத்த எடை 1,645 கிலோ ஆகும்.
2025 காம்ரி காரில் பொருத்தப்பட்டு இருப்பது 5ஆம் தலைமுறை ஹைப்ரீட் சிஸ்டம் (Hybrid System) ஆகும். இதில், 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் சிங்கிள் எலக்ட்ரிக் மோட்டார் (Electric Motor) பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டாருக்கு இயக்க ஆற்றலை வழங்க நிக்கல்-மெட்டல் ஹைட்ரைட் (Ni-MH) பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

ஹைப்ரீட் சிஸ்டம் மேம்படுத்தப்பட்டுள்ளதால், அதில் இருந்து கிடைக்கும் இயக்க ஆற்றலும் அதிகரித்துள்ளது. காம்ரி காரில் முன்பு 215 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றல் கிடைத்தது. ஆனால், புதிய 2025 காம்ரியில் 12 பிஎச்பி அதிகமாக 227 பிஎச்பி வரையில் கிடைக்கும். என்ஜின் உடன் இ-சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
பயண அனுபவம்: எதிபார்த்ததை போல், பழைய காம்ரியை காட்டிலும் புதிய காம்ரியில் சுறுசுறுப்பான பயணம் அனுபவம் கிடைத்தது. ஆனால், உள்ளே அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு முற்றிலுமாக அமைதிதான். ஒரு குண்டூசி போட்டால் சத்தம் கேட்கும். அந்த அளவிற்கு மென்மையாக இயங்கக்கூடியதாக உள்ள 2025 காம்ரி காரில் ஈக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் என 3 டிரைவிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

நகர்புறத்தில் மெதுவாக இயங்கும் நேரங்களில் எலக்ட்ரிக் மோட்டார் மட்டுமே இயங்குகிறது. இதற்காக, எலக்ட்ரிக் மோட்டாரில் பொருத்தப்படும் பேட்டரியை சார்ஜ் செய்வதற்காக மட்டும் மிதமான வேகத்தில் பெட்ரோல் என்ஜின் ஓடுகிறது. இதனால், ஈக்கோ டிரைவ் மோடில் இவ்வாறான எலக்ட்ரிக் பவரில் சென்றால், எரிபொருள் செலவு மிகவும் குறைவாக இருக்கும். ஆதலால், தினசரி அலுவல பயன்பாட்டிற்கு பயன்படுவதற்கு ஈக்கோ மோட் ஏற்றதாக இருக்கும்.
அதேநேரம், அதிவேகமாக செல்ல வேண்டுமென்றால், காரை ஸ்போர்ட் மோடுக்கு மாற்றிவிடுங்கள். 3 இலக்கத்தில் வேகத்தை மிக விரைவாக கார் எட்டிவிடுகிறது. காரின் இ-சிவிடி கியர்பாக்ஸை பற்றியும் சொல்லியே ஆக வேண்டும். கியரை அதிகரிக்கும்போதும் சரி, குறைக்கும்போதும் சரி மிகவும் மென்மையாக இயங்குகிறது. அதேபோல், சஸ்பென்ஷன் செட்-அப்பும் பெரும்பாலான பள்ளம், மேடுகளை எளிதாக கையாள்கிறது.

ஆனால், அதிவேகத்தில் செல்லும்போது மட்டும் சில பள்ளம், மேடுகளில் குலுக்கல்களை உருவாக்குவதையும் சொல்லியே ஆக வேண்டும். ஸ்டேரிங் சக்கரம் கொஞ்சம் எடைமிக்கதாக உள்ளதால், ஓட்டும்போது ஒருவித தைரியம் கிடைக்கிறது. நெரிசலான நகர்புற சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் என இரண்டிற்கும் ஏற்றதாக 2025 டொயோட்டா காம்ரி உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா நிறுவனம் காம்ரி கார் மீது எப்போதுமே ஒரு பெரிய நம்பிக்கை வைத்துள்ளது. ஆனால், இந்தியாவில்தான் டொயோட்டா வெல்ஃபையர் எம்பிவி (Vellfire MPV) காருக்கு பிறகு காம்ரி காணாமல் போய்விட்டது. வெல்ஃபையரும் விற்பனை ஆக வேண்டும், அதேநேரம் காம்ரி கார்களும் நன்றாக விற்பனையாக வேண்டும் என்கிற முயற்சியில் புதிய மேம்படுத்தப்பட்ட காம்ரி காரை டொயோட்டா அறிமுகம் செய்துள்ளது. இந்த முறை இந்திய மக்களை கவருமா என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









