மிரட்டலாக கம்பேக் கொடுக்கும் ஹோண்டா சிட்டி! நெரிசலான சாலைகளில் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு?
ஹோண்டா நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மிட்-சைஸ் செடான் காரான ஹோண்டா சிட்டி, 2026ஆம் ஆண்டிற்கான புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டைப் பெற்றுள்ளது. இந்தியாவில் 1998ஆம் ஆண்டு முதல் விற்பனையில் இருந்து வரும் சிட்டி, தற்சமயம் ஐந்தாம் தலைமுறை மாடலில் விற்பனை செய்யப்படுகிறது. இடவசதி, சொகுசு மற்றும் நம்பகத்தன்மைக்காக வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹோண்டா சிட்டி தொடர்ந்து நற்பெயரைப் பெற்று வருகிறது.
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஃபேஸ்லிஃப்ட் பதிப்பில், மெக்கானிக்கல் அம்சங்களில் மாற்றம் செய்யாமல், வெளிப்புறத் தோற்றம் மற்றும் கூடுதல் வசதிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முன்பை விட ஸ்போர்ட்டியான மற்றும் ஆக்ரோஷமான வடிவமைப்பைக் கொண்டுள்ள இந்த காரின் உட்புறத்தில் பெரிய தொடுதிரை, வென்டிலேட்டட் இருக்கைகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

2026 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் கார் சாலையில் எவ்வாறு இயங்குகிறது மற்றும் அதன் சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்த விரிவான விபரங்களை அறியும் முயற்சியாக இந்த காரை நாங்கள் ஓட்டிப் பார்த்தோம். நவீன வசதிகளுடன் சிட்டியின் பாரம்பரிய பலத்தை இணைக்க ஹோண்டா முயற்சி செய்துள்ளது. காரின் உட்புறத்தில் வசதி மற்றும் பயன்பாட்டை மேம்படுத்த சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
எரிபொருள் சிக்கனம் மற்றும் மென்மையான செயல்பாட்டை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இதன் ஹைப்ரிட் வெர்சன் ஒரு சிறந்த தேர்வாகத் தொடர்கிறது. இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்திற்கு இந்த செடான் கார் இன்றும் மிக முக்கியமான கார்களுள் ஒன்றாக திகழ்கிறது. புதிய போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடில் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.11.99 லட்சத்தில் தொடங்கி, டாப்-எண்ட் ஹைப்ரிட் மாடலின் விலை ரூ.20.99 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
2026 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் - வெளிப்புற சிறப்பம்சங்கள்
2026 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் முன்பை விட அதிக ஸ்போர்ட்டியான முன்பகுதியைப் பெற்றுள்ளது. புதிய பம்பர், பக்கவாட்டு துவாரங்கள் மற்றும் ஸ்கிட் பிளேட் போன்ற அம்சங்களுடன் மஸ்குலரான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த மாற்றங்கள் காருக்கு சாலையில் ஒரு கம்பீரமான தோற்றத்தைத் தருகின்றன. முன்பக்க கிரில்லில் கருப்பு மற்றும் குரோம் பேக்-அரவுண்டில் புதிய ஹோண்டா லோகோ பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய பதிப்புகளைப் போல் அல்லாமல், கிரில்லின் பக்கவாட்டில் குரோம்கள் இல்லை.
நேர்த்தியான ஹெட்லேம்ப்கள் மற்றும் அவற்றை இணைக்கும் டிஆர்எல் (DRL) பட்டைகள் இதில் உள்ளன. இந்த அப்டேட்டில் தனியாக ஃபாக் விளக்குகள் வழங்கப்படவில்லை. பக்கவாட்டில் காரின் அடிப்படை வடிவம் மாறவில்லை என்றாலும், 16-இன்ச் அலாய் சக்கரங்கள் புதிய பேர்ல் பிளாக் மற்றும் பிரஷ்டு குரோம் வடிவமைப்பைப் பெற்றுள்ளன. காரின் உடல் நிறத்தில் இருக்கும் ஓ.ஆர்.வி.எம் (ORVM)-களில் 360 டிகிரி கேமரா மற்றும் பிளைண்ட்-ஸ்பாட் மானிட்டரிங் கேமராக்கள் உள்ளன.

சன்ரூஃப் மற்றும் சுறா துடுப்பு வடிவிலான ஆண்டெனா மாற்றமின்றி தொடர்கின்றன. இதேபோல், காரின் பின்பக்கத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டெயில் லேம்ப்களின் வடிவம் மாறவில்லை என்றாலும், அவை இப்போது டார்க் எஃபெக்ட் கொண்ட கிளியர் லென்ஸ் குழிகளைப் பெற்றுள்ளன. மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர் மற்றும் டிஃப்யூசர் போன்றவை காருக்கு ஆக்ரோஷமான தோற்றத்தை அளிக்கின்றன. பூட் லிட்டில் உள்ள டக்-டெய்ல் ஸ்பாய்லர் காரின் ஸ்போர்ட்டியான தோற்றத்தை மேலும் கூட்டுகிறது.
2026 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் - உட்புற சிறப்பம்சங்கள்
இந்த காரின் உட்புறம் ஆனது தொழிற்நுட்ப வசதிகள் மற்றும் நடைமுறை பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இருக்கைகள் நல்ல குஷனிங் மற்றும் சப்போர்ட் வழங்குகின்றன. பின் இருக்கையில் அமருபவர்களுக்கு தாராளமான முழங்கால் மற்றும் கால் இடவசதி கிடைக்கிறது, இது நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றதாக அமைகிறது. பின் இருக்கை பயணிகளுக்கு ஆர்ம்ரெஸ்ட் வழங்கப்பட்டிருந்தாலும், அதன் உயரம் சிலருக்கு அசௌகரியமாக இருக்கலாம்.

பின் இருக்கை வரிசையில் தனித்தனியாக மூன்று ஹெட்ரெஸ்ட்கள் இருந்தாலும், அவற்றை அட்ஜஸ் செய்ய முடியவில்லை. கூடுதல் வசதியாக ஏசி வென்ட்கள், இரண்டு டைப்-சி சார்ஜிங் போர்ட்கள் மற்றும் கப் ஹோல்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. உட்புறத்தில் உள்ள முக்கிய மாற்றங்களில் ஒன்று 9-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகும்.
இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதியைக் கொண்டுள்ளது. இதில் உள்ள சைகை கண்ட்ரோல் (Gesture control) அம்சம் மூலம், விரல்களை அசைத்தே ஒலியளவை மாற்றவோ அல்லது மியூட் செய்யவோ முடியும். இருப்பினும், திரையின் சாய்வான அமைப்பு காரணமாக வெயில் நேரங்களில் சன்ரூஃப் வழியாக வரும் வெளிச்சம் திரையில் பிரதிபலிப்பது ஒரு சிறிய குறையாக உள்ளது.

காரில் உள்ள சிங்கிள்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் பயன்படுத்த எளிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. இந்திய கோடை காலத்திற்கு ஏற்றவாறு முன் இருக்கைகளில் வென்டிலேஷன் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் அனலாக் ஸ்பீடோமீட்டர் உடன் 7-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே உள்ளது. ஸ்டீயரிங் சக்கரம் பிடிப்பதற்கு வசதியாகவும், டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் அட்ஜஸ்ட்மென்ட் வசதியுடனும் உள்ளது.
இதில் ஹோண்டா சென்சிங் (ADAS) தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்தும் பட்டன்களும் உள்ளன. 360 டிகிரி கேமரா மற்றும் ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதிகளை கண்காணிக்கும் கேமராக்கள் குறுகிய இடங்களில் காரை நிறுத்தவும், சாலையில் பாதுகாப்பாக பாதைகளை மாற்றவும் உதவுகின்றன. புதிய சிட்டி காரின் ஹைப்ரிட் பதிப்பின் சென்டர் கன்சோலில் e:CVT கியர் செலக்டர் உள்ளது.

ஏசி மற்றும் பிற முக்கிய செயல்பாடுகளுக்கு ஹோண்டா இப்போதும் அழுத்தக்கூடிய பட்டன்களையே வழங்கியுள்ளது, இது ஓட்டும்போது பயன்படுத்த எளிதாக உள்ளது. வயர்லெஸ் சார்ஜர், டைப்-ஏ மற்றும் டைப்-சி போர்ட்கள் மற்றும் ஆட்டோ-ஹோல்டு வசதியுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் போன்ற நவீன வசதிகள் இந்த காரில் நிறைந்துள்ளன.
நடைமுறை அம்சங்கள்
புதிய 2026 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரில் தேர்வு செய்யும் என்ஜின் ஆப்ஷனைப் பொறுத்து பூட் ஸ்பேஸ் அளவு மாறுபடுகிறது. ஸ்ட்ராங் ஹைப்ரிட் (e:HEV) வெர்சனில் பேட்டரி பேக் வழங்கப்படுவதால், அதன் பூட் கொள்ளளவு சுமார் 310 லிட்டராகக் குறைந்துள்ளது. அதுவே, சாதாரண பெட்ரோல் வேரியண்ட்களில் அதிக லக்கேஜ் இடவசதி கிடைக்கிறது. காரின் பூட் லிட் கதவின் எடை குறைவாக இருப்பதால், முதியவர்கள் கூட எளிதாகக் கையாள முடியும்.

டிரைவிங் அனுபவம் மற்றும் சாலையில் செயல்படும் விதம்
மெக்கானிக்கல் ரீதியாக இந்த கார் முந்தைய சிட்டி மாடலைப் போலவே உள்ளது. நாங்கள் ஓட்டிப் பார்த்த ஸ்ட்ராங் ஹைப்ரிட் e:HEV வேரியண்ட் அதிகப்பட்சமாக 125 bhp ஆற்றலையும் 253 Nm டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்துகிறது.
இதன் சஸ்பென்ஷன் கரடுமுரடான சாலைகளிலும் மென்மையான பயணத்தை உறுதி செய்கிறது. ஸ்டீயரிங் சக்கரத்தின் துல்லியம் மற்றும் ஹேண்ட்லிங் சிறப்பாக உள்ளது. ஹைப்ரிட் வேரியண்ட்டில் e:CVT கியர்பாக்ஸ் மென்மையான ஆற்றலை வழங்குகிறது. அதேசமயம் சாதாரண பெட்ரோல் வேரியண்ட்களில் சிவிடி அல்லது மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன.

முடிவுரை
2026 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் கார், முந்தைய மாடலின் பலங்களை அப்படியே தக்கவைத்துக்கொண்டு, கூடுதல் பொலிவு மற்றும் வசதிகளுடன் வந்துள்ளது. இதன் ஹைப்ரிட் தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மிட்-சைஸ் செடான் கார்கள் பிரிவில் இதனை ஒரு வலுவான போட்டியாளராக மாற்றுகின்றன. நெடுஞ்சாலைப் பயணங்களுக்கும் நகரப் பயன்பாட்டிற்கும் ஏற்ற ஒரு சுத்திகரிக்கப்பட்ட மற்றும் வசதியான தாழ்வான செடான் காரைத் தேடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.


Click it and Unblock the Notifications
