இந்தியாவிலேயே விலை குறைவான எலெக்ட்ரிக் கார்.. டியாகோ EV பயன்படுத்துவதற்கு எப்படி இருக்கிறது? முழுமையான ரிவ்யூ!
சில வாரங்களுக்கு முன்பு தான் 2026ம் ஆண்டிற்கான மேம்படுத்தப்பட்ட டியாகோ EV-யை வெளியிட்டது டாடா மோட்டார்ஸ். நிறைய வகைகளில் இந்தப் புதிய காரை அப்டேட் செய்திருந்தது டாடா. புதிய டிசைன், அப்கிரேடு செய்யப்பட்ட கேபின், கூடுதலான பாதுகாப்பு அம்சங்கள், முன்பை விட வேகமான சார்ஜிங் ஆகிய அப்டேட்களைக் கொடுத்ததோடு, முன்பை விட 1 லட்சம் வரை குறைவாக 6.99 லட்சம் ரூபாய் என்ற அளவில் விலையையும் குறைத்து வெளியிட்டுள்ளது.
பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளிட்ட பவர்ட்ரெயின் அம்சங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இவற்றுக்கு எல்லாம் மேலாக புதிய டியாகோ EV-க்கு BaaS (Battery as a Service) திட்டத்தையும் வழங்கியிருக்கிறது டாடா மோட்டார்ஸ். இந்தத் திட்டத்தின் கீழ் புதிய காரை 4.69 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலைக்கே நாம் வாங்க முடியும். ஆனால் அத்துடன் பேட்டரியைப் பயன்படுத்துவதற்காக கிமீ-க்கு 2.6 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.

இந்த மாற்றங்களுடனும், மேம்பாடுகளுடனும், குறிப்பாக விலைக்குறைப்புடன் முன்பை விட விலைக்கேற்ற எலெக்ட்ரிக் காராக மாறியிருக்கிறது டாடா டியாகோ EV. இந்தப் புதிய மேம்படுத்தப்பட்ட எலெக்ட்ரிக் காரை எங்களுக்கு ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த டியாகோ EV ஹேட்ச்பேக்கின் லாங் ரேஞ்சு வெர்ஷனை பெங்களூரு ரோடுகளில் ஓட்டிப் பார்த்த போது, நாங்கள் உணர்ந்ததை கீழ் ரிவ்யூவாகப் பகிர்ந்து கொண்டுள்ளோம்.
புதிதாக என்ன மாறியிருக்கிறது?
புதிய டியாகோ EV-யின் பெரும்பான்மை மாற்றம் அதன் முகப்புப் பக்கத்தில் தான். முகப்புப் பக்கத்தில் நிறையவே மாற்றியமைத்திருக்கிறது டாடா மோட்டார்ஸ். ஸ்லீக்கான LED முகப்பு விளக்குகள், அதற்கு மேலாக கண்களின் புருவம் போல LED DRL-கள், பாடியின் நிறத்திலேயே குளோஸ்டு ஆஃப் கிரில் ஆகிய மாற்றங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். இந்த குளோஸ்டு ஆஃப் கிரில், டியாகோ EV-க்கு எலெக்ட்ரிக் காருக்கே உரிய தோற்றத்தைக் கொடுக்கிறது.

பம்பரும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டிருப்பதோடு, அதன் இரண்டு விளிம்புகளிலும் ஃபாக்ஸ் ஏர் வென்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 14 இன்ச் அலாய் வீல்கள் புதிய வடிவில் கொடுக்கப்பட்டிருப்பதோடு, பாடியின் நிறத்துக்கு காண்ட்ராஸ்டிங்கான நிறத்தில் வீல் ஆர்ச் கிளாடிங் கொடுக்கப்பட்டிருப்பது புதுமையாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாக டியாகோவின் வழக்கமான டிசைனில் கைவைக்காமல், இப்போதைய காலத்திற்கு ஏற்ற வகையில் மாற்றிமைக்கப்பட்டிருக்கிறது.
டியாகோ EV-யின் பின்பக்கம் கனெக்டட் LED விளக்குகளை புதிதாகக் கொடுத்திருக்கிறது டாடா மோட்டார்ஸ். பின்பக்க பம்பரும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டிருப்பதோடு, டூயல் டோன் பிளாக் ரூஃப், ஷார்க் ஃபின் ஆண்டனா மற்றும் குரோம் ஃபினிஷ் கொண்ட டோர் ஹேண்டில்கள் ஆகிய அம்சங்கள் டியாகோ EV-க்கு கூடுதலாக அழகு சேர்க்கின்றன.

ரேடாடூன் டியூ, சோபோ சர்ஜ், பேங்காங் பல்ஸ், மதீரன் மான்ஸூன், பியூர் கிரே மற்றும் பிரிஸ்டீன் ஒயிட் என ஆறு தனித்துவமான நிறங்களில் புதிய டியாகோ EV ஃபேஸ்லிப்ட் மாடலை வெளியிட்டுள்ளது டாடா மோட்டார்ஸ்.
புதிய காரின் உட்புறமே நிறைய மாற்றங்களை நாம் பார்க்க முடிகிறது. டேஷ்போர்டு முழுவதுமாக புதிதாக மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. டூயல் டோன் நிறத்தில் டேஷ்போர்டைக் கொடுத்திருப்பதோடு, அதில் புதிதாக 10.25 இன்ச் ஃப்ரீ ஸ்டாண்டிங் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தையும் கொடுத்துள்ளது டாடா மோட்டார்ஸ். பகுதி டிஜிட்டலான இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் முந்தைய காரில் இருந்ததைப் போலவே அப்படியே தொடர்ந்திருக்கிறது, ஆனால் இப்போது ப்ளூடூத் கனெக்டிவிட்டி வசதியையும் கொண்டுள்ளது.

தொழில்நுட்ப வசதிகள் அதிகமாகியிருக்கும் நிலையில், அதன் செயல்பாடுகளுக்கு சப்போர்ட் செய்யும் விதமாக காரின் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக் கட்டமைப்பும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. புதிய காரில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகிய வசதிகளுடன், 40 வகையான கனெக்டட் கார் தொழில்நுட்ப அம்சங்களையும் டாடா கொடுத்திருக்கிறது. இத்துடன் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், பின்பக்க AC வென்ட்கள், கூல்டு கிளவ் பாக்ஸ், ஆட்டோ ஃபோல்டிங் ORVM ஆகிய அம்சங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இத்துடன் முன்பக்க செண்டர் ஆர்ம்ரெஸ்ட், மறுவடிவமைக்கப்பட்ட டோர் பேடுகள், கிரே நிற அப்ஹோல்ஸ்ட்ரி, கிளாஸ் பிளாக் செண்டர் கண்சோல் ஆகிய அம்சங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு ஸ்போக்குகள் கொண்ட ஸ்டீயரிங் வீல் முன்பைப் போலவே இருக்கிறது, ஆனால் அதில புதிய டாடா EV லோகோ மாறியிருக்கிறது. முன்பக்க சீட்கள் அண்டர் தை சப்போர்ட்டை மேம்படுத்தியிருக்கிறது டாடா மோட்டார்ஸ். நீண்ட தூரப் பயணங்களை இது கொஞ்சம் இலகுவாக்கும்.

பாதுகாப்பில் எப்போதும் டாடா முன்னோடி தான். அதனை புதிய டியாகோ EV-யின் அப்கிரேடிலும் நிரூபித்திருக்கிறது. கூடுதான பாதுகாப்பு அம்சங்களை இந்த தொடக்கநிலை எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரில் கொடுத்துள்ளது டாடா மோட்டார்ஸ். இரண்டு ஏர்பேக்குகளுக்குப் பதிலாக இப்போது ஆறு ஏர்பேக்குகளை டியாகோ EV-யின் அனைத்து வேரியன்ட்களிலும் ஸ்டாண்டர்டாகக் கொடுக்கத் தொடங்கியிருக்கிறது அந்நிறுவனம்.
இதுதவிர, பல்வேறு வியூவிங் மோடுகளுடன் கூடிய 360 டிகிரி கேமரா, பிளைண்டு வியூ மானிட்டரிங் ஆகிய வசதிகள் புதிதாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், ESP-யுடன் கூடிய ட்ராக்ஷன் கண்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், பிரேக்கிங் மூலம் டார்க் வெக்டாரிங் மற்றும் EBD-யுடன் கூடிய ABS ஆகிய பாதுகாப்பு வசதிகளும் உள்ளன.

ஆட்டோமேட்டிக் முகப்பு விளக்குகள், ரெயின் சென்ஸிங் வைப்பர்கள் மற்றும் ஃபாலோ மீ முகப்பு விளக்குகள் ஆகிய வசதிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மோதலின் போது பயணிகள் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் வாகனக் கட்டமைப்பின் உறுதியையும் மேம்படுத்தியிருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. முன்பை விட பாதுகாப்பான காராக மாறியிருக்கிறது புதிய டியாகோ EV.
முன்பை விட புதிய டியாகோ EV வேகமாக சார்ஜ் ஆகிறது. 100 கிமீ பயணம் செய்யத் தேவையான சார்ஜை வெறும் 18 நிமிடங்களில் புதிய டியாகோ EV-யின் பேட்டரியில் நிரப்பி விட முடியும். இது முந்தைய காரின் அளவை விட 40 சதவீதம் வேகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

டியாகோ EV-யின் இருக்கும் இரண்டு பேட்டரி வேரியன்ட்களையும் DC ஃபாஸ்ச் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்ய முடியும். இந்த பேட்டரிக்களை 10-80 சதவீதம் வரை 35 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும் எனக் குறிப்பிட்டுள்ளது டாடா மோட்டார்ஸ். வீட்டிலேயே சார்ஜ் செய்ய வழக்கம் போல 3.3 kW மற்றும் 7.2 kW AC சார்ஜிங் ஆப்ஷன்களைக் கொடுக்கிறது டாடா மோட்டார்ஸ்.
அனைத்தும் இருந்தாலும், சில வசதிகள் மிஸ்ஸாவதையும் நாம் பார்க்க முடிகிறது. குறிப்பாக 2026 டியாகோ EV-யிலும் டோர் லாக் மற்றும் அன்லாக்குக்கான தனி பட்டன் இல்லை. பின்பக்க பயணிகளுக்கு டைப்-C சார்ஜிங் போர்ட்கள் இல்லாததோடு, பின்பக்க பயணிகளுக்கான ஹெட்ரெஸ்ட்டும் இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

என்னென்ன மாறாமல் அப்படி இருக்கிறது?
பேட்டரி பேக்குகளில் மாற்றம் இல்லை. முந்தைய காரில் கொடுக்கப்பட்டு வந்த அதே 19.2 kWh மற்றும் 24 kWh பேட்டரி பேக் தேர்வுகளே புதிய காரிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. சிறிய பேட்டரி பேக்குடன் 61 hp பவர் மற்றும் 110 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது. பெரிய பேட்டரி பேக்குடன் 75 hp பவர் மற்றும் 114 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது.
சிறிய பேட்டரி பேக்கானது 226 கிமீ வரையிலான MIDC சான்றளிக்கப்பட்ட ரேஞ்சையும், பெரிய பேட்டரி பேக்கானது 285 ரிமீ வரையிலான MIDC சான்றளிக்கப்பட்ட ரேஞ்சையும் கொண்டுள்ளன. ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. நான்கு லெவல்களுடன் அப்படியே தொடர்ந்திருக்கிறது. சிட்டி மற்றும் ஸ்போர்ட் டிரைவ் மோடுகளிலும் எந்த மாற்றமும் இல்லை.

பெரிய பேட்டரி பேக் டியாகோ EV-யானது 0-60 கிமீ வேகத்தை 5.7 நொடிகளில் கடக்கும் எனத் தெரிவித்துள்ளது டாடா மோட்டார்ஸ். 24 kWh பேட்டரி பேக்கிற்கு, வாழ்நாள் வாரண்டியைக் கொடுக்கிறது டாடா நிறுவனம். ஆனால் இது முதல் உரிமையாளருக்கு மட்டுமே. முதல் உரிமையாளரிடம் இருந்து வேறு ஒருவர் வாங்கும் போது வாழ்நாள் வாரண்டி சலுகைைப் பயன்படுத்த முடியாது. சிறிய பேட்டரி பேக்கிற்கு எட்டு ஆண்டுகள் அல்லது 1.6 லட்சம் கிமீ வரையிலான வாரண்டி அப்படியே தொடர்கிறது.
புதிய கார் ஓட்டுவதற்கு எப்படி இருக்கிறது?
மேலே கூறியது போல டியாகோ EV-யின் லாங் ரேஞ்சு வெர்ஷனை, அதாவது பெரிய பேட்டரி பேக் கொண்ட வெர்ஷனை எப்படி இருக்கிறது எனத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் பெங்களூரு சாலைகளில் ஓட்டிப் பார்த்தோம். 75 hp பவர் மற்றும் 114 Nm டார்க்கை உற்பத்தி செய்யும், சிங்கிள் ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் நாங்கள் ஓட்டிய காரில் இருந்தது. சிட்டி மற்றும் ஸ்போர்ட் டிரைவ் மோடுகளும் இருந்தன.

சிட்டி மோடு தான் முதன்மையான டிரைவிங் மோடாக டியாகோ EV-யில் இருக்கிறது. இந்த மோடில் டார்க் டெலிவரி கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் இந்த டிரைவிங் மோடில் போதுமான பெர்ஃபாமன்ஸை வெளிப்படுத்துகிறது புதிய டியாகோ EV. திராட்டில் ரெஸ்பான்ஸ் ஸ்மூத்தாகவும், நகரச் சாலைகளில் பயன்படுத்துவதற்கு மிகவும் இலகுவாகவும் இருக்கிறது. பவர் டெலிவரி மிகவும் சீராகவும், நாம் கணிக்கக்கூடிய அளவிலும் இருக்கிறது. இது நெரிசல் மிகுந்த நகரச் சாலைகளில் காரை ஓட்டுவதை இலகுவாக்குகிறது.
ஸ்போர்ட் மோடிலேயே முழுமையான பெர்ஃபாமன்ஸ் கிடைக்கிறது. ஸ்போர்ட் மோடுக்கு மாறிய உடனேயே கார் வேகமாக செல்லத் துடிப்பதை நம்மால் உணர முடியும். குறிப்பாக ஓவர்டேக்குகளின் போது இதனை இன்னும் நன்றாக உணரலாம். இந்த ஸ்போர்ட் மோடிலும் பவர் டெலிவரி ஸ்மூத்தாகவும், சீராகவுமே இருந்தது.

நிஜ உலகப் பயன்பாட்டில் முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட்டிருக்கும் போது 200 கிமீ வரையிலான ரேஞ்சை இந்த டியாகோ EV லாங் ரேஞ்சு வெர்ஷன் கொடுக்கிறது. இது டாடா தெரிவித்த C75 ரேஞ்சுக்கு அருகிலும் இருக்கிறது. நிஜ உலகப் பயன்பாட்டில் ஒரு எலெக்ட்ரிக் காரின் ரேஞ்சு எவ்வளவு இருக்கும் என்பதைக் கணித்து அதனை C75 ரேஞ்சாக டாடா வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு லெவல்களைக் கொண்ட ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், டிரைவருக்கு ஏற்ற அட்ஜஸ்ட்மென்ட்களை வழங்குகிறது. டாப் ரீஜெனரேட்டிவ் லெவலில், ஆக்சிலரேட்டரில் இருந்து காலை எடுத்தவுடனேயே கார் நன்றாக வேகம் குறைவதை நாம் உணர முடியும். ஆனால் எந்த இடத்திலும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் காரணமாக கார் முழுவதுமாக நிற்கவில்லை.

டியாகோ EV-யில் ஒரு இடம் மிகச்சிறப்பாக இருக்கிறது என்று கூறினால், அது சஸ்பென்ஷன் செட்டப் தான். புதிய டியாகோ EV-யின் சஸ்பென்ஷனில் டாடா எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. முந்தைய சஸ்பென்ஷன் செட்டப்பே புதிய காரிலும் உள்ளது. ஆனால் முந்தைய சஸ்பென்ஷன் செட்டப்பே சிறப்பாகவும் இருந்ததால், அதில் எந்த மாற்றத்தையும் செய்யாதது பெரிய பிரச்சினை இல்லை. மேடு பள்ளங்களில் சிறப்பாக செயல்பட்டு, எந்த அதிர்வும் பயணிக்களை பாதிக்காதபடி இந்த சஸ்பென்ஷன் செட்டப் பார்த்துக் கொள்கிறது.
ஹேண்டிலிங் சிறப்பாகவே இருக்கிறது. கணிக்கக்கூடிய வகையிலா பெர்ஃபாமன்ஸ் மற்றும் ஹேண்டிலிங்கையே வழங்குகிறது. இதனை ஸ்போர்ட்டியான காராக டாடா வடிவமைக்கவில்லை, அந்த வகையில் எதற்கு வடிவமைக்கப்பட்டதோ அந்த அமைதியான பெர்ஃபாமன்ஸ் மற்றும் ஹேண்டிலிங்கை இந்த டியாகோ EV வழங்குகிறது. தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற காராவே இந்த தொடக்கநிலை ஹேட்ச்பேக் இருக்கும்.

நகரப் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இலகுவான மற்றும் எளிதான ஸ்டீயரிங்கையே டியாகோ EV கொண்டுள்ளது. இதனை காரின் சிறிய அளவு மற்றும் நெருக்கமான டர்னிங் ரேடியஸுடன் சேர்க்கும் போது , பிரச்சினையில்லாத நகர்புற டிரைவிங் கொண்ட எலெக்ட்ரிக் கார் நமக்குக் கிடைக்கிறது. நெருக்கமான இடைவெளியில் ஓட்டுவது, பார்க்கிங் என அனைத்தையும் ஸ்டீயரிங்கும், சிறிய அளவும் எளிதாக்குகின்றன.
பிரேக்கிங்கிற்காக முன்பக்கம் டிஸ்க்குகளும், பின்பக்கம் டிரம்மும் கொடுக்கப்பட்டுள்ளது. ஷார்ப்பான பிரேக்கிங் பெர்ஃபாமன்ஸை இவை வழங்குகின்றன என்று சொல்ல முடியாது. ஆனால் போதுமான பிரேக்கிங் பெர்ஃபாமன்ஸை கண்டிப்பாகக் கொடுக்கின்றன. குறிப்பாக தினசரிப் பயன்பாட்டிற்கு தேவைக்கும் மேலே டியாகோ EV-யின் பிரேக்கிங் பெர்ஃபாமன்ஸ் இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக முடிவு என்ன? இந்தக் காரை வாங்கலாமா வேண்டாமா?
டியாகோ EV-யில் வாடிக்கையாளர்கள் எந்தெந்த இடங்களில் எல்லாம் வசதிகள் மற்றும் மேம்பாடுகளை எதிர்பார்த்தார்களோ, அந்தந்த இடங்களில் எல்லாம் சரியான மேம்படுத்தியிருக்கிறது டாடா மோட்டார்ஸ். புதிய வெளிப்புற வடிவமைப்பு, இந்த எலெக்ட்ரிக் காரை இன்னும் கொஞ்சம் மாடர்னாகக் காட்டுகிறது. புதிய கேபின் மாற்றங்கள், டியாகோ EV-யை இன்னும் கொஞ்சம் ப்ரீமியமான ஒன்றாகவும், வசதிகள் நிறைந்ததாகவும் காட்டுகின்றன.
ஆனால் இந்த மேம்பாடுகள், கூடுதல் வசதிகள் எல்லாம் குறைக்கப்பட்ட விலையில் என்பது தான் இங்கே பேசுபொருள். முதல் முறை கார் வாடிக்கையாளர்களுக்கு எலெக்ட்ரிக் காரை வாங்குவதை இந்த விலைக்குறைப்பு மூலம் இன்னும் கொஞ்சம் எளிதாக்கியிருக்கிறது டாடா மோட்டார்ஸ். எம்ஜி மோட்டாரைத் தவிர்த்து வேறு எந்த நிறுவனமும் இதனை இங்கே செய்யவில்லை.

எவ்வளவுக்கு எவ்வளவு புதிய அம்சங்களுடன் டியாகோ EV-யை டாடா மேம்படுத்தியிருப்பதைப் பாராட்ட வேண்டுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு இந்தக் காரில் டாடா மாற்றாமல் விட்ட விஷயங்களையும் நாம் பாராட்டியாக வேண்டும். முந்தைய காரில் எந்தெந்த அம்சங்கள் எல்லாம் சிறப்பாக இருந்ததோ அதையெல்லாம் மாற்றாமல் அப்படியே கொண்டு செலுத்தியிருக்கிறது டாடா. இதுவும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் தான்.
எரிபொருளில் இருந்து முதல் முறையாக எலெக்ட்ரிக் கார்களுக்கு மாறுகிறவர்களு டியாகோ EV ஒரு சிறப்பான தேர்வை எனக் கண்டிப்பாக நம்மால் சொல்ல முடியும். புதிய டிசைன், கூடிய அம்சங்கள், மேம்பட்ட கேபின், கூடுதலான பாதுகாப்பு வசதிகள் மற்றும் குறைவான விலை என அனைத்து வகைகளிலும் இந்தக் கார் பரிந்துரைக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறியிருக்கிறது. எலெக்ட்ரிக் கார் பாதையில் பயணிக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான முதல் எலெக்ட்ரிக் காராக இந்த டாடா டியாகோ EV இருக்கும்.


Click it and Unblock the Notifications
