5 லட்ச ரூபாய்க்குள் கொண்டுவரப்பட்டுள்ள புதிய டாடா கார் எப்படி இருக்கு? காரை விட்டு இறங்க மனசே வரல!
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து புதியதாக டியாகோ ஃபேஸ்லிஃப்ட் கார் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்திலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் டியாகோ காரின் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் வெர்சன் ஆனது நாம் எதிர்பார்ப்பதை காட்டிலும் பல அசத்தலான அம்சங்களை பெற்று வந்துள்ளது. டியாகோவின் வெளிப்புறம் முன்பை விட கூர்மையான தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல், காருக்குள் கேபினும் ரீடிசைன் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக தொழிற்நுட்ப வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், டியாகோவின் வழக்கமான 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் CNG ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இல்லை. புதிய அப்கிரேட்கள் மூலமாக டாடா டியாகோ எந்த அளவிற்கு மேம்பட்டுள்ளது என்பதை அறிவதற்காக இந்த காரை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தோம். அதன் மூலம் எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை இங்கே விரிவான ரிவியூவாக வழங்கியுள்ளோம்.

புதுசா என்னென்ன மாற்றங்கள்...?
ஏற்கனவே கூறியதுபோல், டியாகோவின் வெளிப்புறம் கூர்மையான தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, காரின் முன்பகுதி ஷார்ப்பானதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஹெட்லைட்களின் டிசைன் மாற்றப்பட்டுள்ளது. முன்பக்க க்ரில் முன்பை விட மெல்லியதான வடிவத்தில் சற்று மேல்நோக்கி பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல், முன்பக்க பம்பரின் வடிவத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முன் பம்பரில் முன்பை விட பெரியதான ஏர் டேம் வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரின் முன்பகுதி ஆனது முன்பை விட மென்மையான தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தரையில் இருந்து காரின் அடிப்பகுதியின் உயரம் 170மிமீ ஆக உள்ளது. காரின் பக்கவாட்டில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை என்றாலும், முக்கியமான மாற்றமாக புதிய டிசைனில் 15-இன்ச் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன், டியாகோவின் பக்கவாட்டில் வழங்கப்படும் கருப்பு நிற வீல் ஆர்ச் கிளாடிங் ஆனது புத்துணர்ச்சியான தோற்றத்தில் வழங்கப்பட்டுள்ளது. காரின் பின்பக்கத்தில் டெயில்லைட்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. மேற்கூரையின் பின்பக்கத்தில் ஸ்பாய்லர் மற்றும் தெளிவான பம்பர் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. டேடோனா கிரே, பாங்காங் பல்ஸ் மற்றும் வாரணாசி வைப்ரன்ஸ் உள்பட 6 புதிய கலர் ஆப்ஷன்கள் டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காருக்கு வழங்கப்பட்டுள்ளன.
காருக்குள் முன்பை விட தட்டையான டாஷ்போர்டு மற்றும் மெல்லியதான லே-அவுட் வழங்கப்பட்டுள்ளது. சாதாரணமான இன்ஸ்ட்ரூமெண்ட் பைனகிள் மாற்றப்பட்டு, டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரின் ஏஎம்டி வேரியண்ட்களில் வழக்கமான லிவருக்கு பதிலாக புதிய சுழற்றக்கூடிய கியர் செலெக்டர் கிடைக்கும்.

அப்டேட்டான டாஷ்போர்டில் 10.25-இன்ச்சில் இன்ஃபோடெயின்மெண்ட் தொடுத்திரை, வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி, வயர்லெஸ் மொபைல் சார்ஜிங், பின் இருக்கை பயணிகளுக்கும் ஏசி வெண்ட்ஸ், கூல்டு க்ளோவ்பாக்ஸ் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவையும் புதிய டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரில் இடம்பெற்றுள்ளன. மேலும், 4-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் மற்றும் கனெக்டட் கார் தொழிற்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
பயணிகளின் பாதுகாப்பிற்கு 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல்,, இபிடி உடன் ஏபிஎஸ், 360-டிகிரி கேமரா, பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ISOFIX குழந்தை இருக்கைக்கான ஹேங்கர்கள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன், டியாகோ காரின் உடலமைப்பையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மேம்படுத்தி உள்ளது. முன் இருக்கை பயணிகளுக்கு கால் தொடைக்கான கூடுதல் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

என்னென்ன மாற்றமில்லை...
2026 டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரில் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 86 எச்பி மற்றும் 113 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. அதுவே, சிஎன்ஜி வெர்சனில் அதிகப்பட்சமாக 75.5 எச்பி மற்றும் 96 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம்.
இந்த பெட்ரோல் என்ஜினை 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் உடன் பெறலாம். 2026 டியாகோ ஃபேஸ்லிஃப்ட் CNG AMT காரில் பெடில் ஷிஃப்டர்கள் கிடைக்கும். இந்தியாவில் CNG AMT கார் ஒன்றில் பெடில் ஷிஃப்டர்கள் வழங்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை ஆகும். இதன் மூலமாக, கியர்களை டிரைவர் மேனுவலாக கண்ட்ரோல் செய்ய முடியும்.

ஓட்டுவதற்கு எப்படி?
2026 டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரின் CNG பவர்டிரெயின் ஆனது நேர்த்தியாகவும், எந்தவொரு அவசரமில்லாமலும் இயங்குகிறது. ஆற்றல் விநியோகம் ஆனது எந்தவொரு இடையூறுகளும் இல்லாமல் சீராக கிடைக்கிறது. இருப்பினும், மிட்-ரேஞ்சில் இயங்கும்போது ஆற்றல் கிடைப்பதில் சிறிய சரிவு ஏற்படுவதை உணர முடிந்தது. போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலைகளில் கார் சிறப்பாக இயங்குகிறது என்றாலும், திடீரென அதிக இயக்க ஆற்றல் தேவைப்படும் போது சிறிய தடுமாற்றம் ஏற்படுகிறது.
2026 டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரின் AMT கியர்பாக்ஸ் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறப்பாக இல்லை. கியர்களை மாற்றுவது மிகவும் மெதுவாக உள்ளது. இருப்பினும், கியர்களை குறைப்பதை இந்த காரின் AMT கியர்பாக்ஸ் விரைவாக மேற்கொள்கிறது. அதேபோல், தேவைப்படும் நேரத்தில் கியர்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. அதாவது, அதே கியரில் கார் தொடர்கிறது.

AMT கியர்பாக்ஸ் உடன் இந்த காரை பயன்படுத்தும்போது, புதிய பெடில் ஷிஃப்டர்கள் மேனுவலாக கியர்களை மாற்ற மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. இருப்பினும், அப்போதும் கியர்பாக்ஸின் ஒட்டுமொத்த ரெஸ்பான்ஸ் ஆனது மெதுவாகவே உள்ளது. மற்றப்படி, டியாகோ காரின் சஸ்பென்ஷன் செட்-அப்பில் பெரியதாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சவுகரியமான பயணத்தை வழங்கும் விதத்தில் சிறிது ட்யூன் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இவ்வாறு சஸ்பென்ஷன் மென்மையாக மாற்றப்பட்டதன் காரணமாகவே வளைவுகளில் திரும்பும்போது பயணிகளுக்கு குலுக்கல்கள் ஏற்படுகின்றன. ஸ்டீயரிங் சக்கரத்தின் ரெஸ்பான்ஸ் சீராக உள்ளது; மேலும் ஸ்டீயரிங்கை கண்ட்ரோல் செய்வதும் இலகுவானதாக உள்ளது. இந்த காரின் முன்பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் பின்பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கும் டிரம் பிரேக்குகள் போதுமான பிரேக்கை வழங்குகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து...
2026 டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் புதிய மேம்பாடுகளுடன் வந்துள்ளது. இதன் வடிவமைப்பு மிகவும் கூர்மையாகவும் நவீனமாகவும் உள்ளது. உட்புறம் மிகவும் தரமாக மாற்றப்பட்டுள்ளது. முதல் கார் வாங்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். இந்த காரின் AMT கியர்பாக்ஸில் சில குறைபாடுகள் உள்ளன.
இருப்பினும், குறைந்த எரிபொருள் செலவில் காரை பயன்படுத்த விரும்புபவர்களுக்கு புதிய டியாகோ CNG AMT மாடல் ஒரு புத்திசாலித்தனமான தேர்வாகும். இந்த என்ஜின் மூலம் எரிபொருள் சிக்கனம் நிச்சயம் கிடைக்கும். இதில் உள்ள பேடில் ஷிஃப்டர்கள் கார் டிரைவிங்கில் உற்சாகத்தை சேர்க்கின்றன. இந்த விலையில் இத்தகைய அம்சம் கிடைப்பது அரிதான ஒன்றாகும்.


Click it and Unblock the Notifications
