21 கிமீ மைலேஜ் கொடுக்கும் ஃபோக்ஸ்வாகன் எஸ்யூவி! ஓட்டிப் பார்க்க எப்படி இருக்கு? முழுமையான ரிவ்யூ

2020ம் ஆண்டு, அப்போது தான் கொரோனா பரவத் தொடங்கியிருந்த நேரம். இந்தியாவில் ஆட்டோ எக்ஸ்போவும் அந்த சமயத்தில் தான் நடைபெற்றது. அப்போது தான் புத்தம் புதிய டைகூன் காம்பேக்ட் எஸ்யூவி மாடலின் மாதிரியை புதிதாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது ஃபோக்ஸ்வாகன் நிறுவனம்.

அப்போது சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்த T-ராக் எஸ்யூவி மாடலை அடிப்படையாகக் கொண்டு டைகூனை வடிவமைத்திருந்தது ஃபோக்ஸ்வாகன். T-ராக் மாடலானது அதன் MQB A0 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டிருந்த நிலையில், அந்த பிளாட்ஃபார்மை இந்தியாவிற்காக மறுவடிவமைப்பு செய்து MQB A0 IN பிளாட்ஃபார்மாக மாற்றி டைகூனுக்குப் பயன்படுத்தியது ஃபோக்ஸ்வாகன்.

Volkswagen Taigun Facelift

அதனைத் தொடர்ந்து கொரோனா கொடூரமாகப் பரவத் தொடங்க, அதன் வீரியம் குறைந்த பின்பு 2021 செப்டம்பரில் இந்தியாவில் வெளியாகிறது ஃபோக்ஸ்வாகனின் புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவியான டைகூன். இந்தியாவைத் தொடர்ந்து மெக்ஸிகோவிற்கும், பின்பு இந்தோனேஷியாவிற்கும் கூட இந்தக் காரை ஏற்றுமதி செய்யத் தொடங்கியது அந்நிறுவனம். மெக்ஸிகோவிற்கு டைகூன் என்ற பெயரிலும், இந்தோனேஷியாவிற்கு T-ராக் என்ற பெயரிலும்.

சரி இப்போது எதற்கு அதனைப் பற்றி எல்லாம் பேசிக் கொண்டு என்று தானே கேட்கிறீர்கள். காரணம் இருக்கிறது, இப்போது தான் அந்த டைகூன் மாடலின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிப்ட் வடிவத்தை இந்தியாவில் வெளியிட்டுள்ளது ஃபோக்ஸ்வாகன். வெறும் டிசைன் மாற்றம் மட்டுமின்றி, பல்வேறு வகைகளிலும் இந்த காம்பேக்ட் எஸ்யூவியை அப்டேட் செய்துள்ளது அந்நிறுவனம்.

Volkswagen Taigun Facelift

இந்த மேம்படுத்தப்பட்ட 2026 ஃபோக்ஸ்வாகன் டைகூன் ஃபேஸ்லிப்ட் மாடலை ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தது. ஜெய்ப்பூர் முதல் சண்டிகர் வரை 400 கிமீ-க்கும் மேல் இந்தக் மேம்படுத்தப்பட்ட டைகூன் ஒரு சின்ன ட்ரிப் அடித்தோம். அதன் அடிப்படையில் புதிய டைகூன் ஃபேஸ்லிப்ட் மாடல் எப்படி இருந்தது என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது. புதிய டைகூன் ஃபேஸ்லிப்டின் ரிவ்யூவை இங்கே நாம் பார்க்கலாம்.

என்னென்ன மாறியிருக்கிறது? என்னென்ன அம்சங்கள் அப்படியே தொடர்ந்திருக்கின்றன?

சமீபத்தில் வெளியான டேரான் R-லைன் எஸ்யூவி மாடலில் கொடுக்கப்பட்டிருக்கும் முகப்புப் பக்கத்தை போலான டிசைனை புதிய டைகூன் ஃபேஸ்லிப்ட் மாடலிலும் நாம் பார்க்க முடிகிறது. முகப்பு பக்கத்தில் ஒளிரும் வகையிலான ஃபோக்ஸ்வாகன் லோகோவுடன் வந்திருக்கிறது புதிய டைகூன். இந்த லோகோ காரின் அகலத்திற்க நீளும் லைட் பாரின் நடுவில் இடம்பெற்றிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. லைட் பாரின் இரண்டு பக்க முடிவிலும் புதிய வடிவில் LED முகப்பு விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

Volkswagen Taigun Facelift

மிகவும் ஸ்லிம்மான கிரில் கொடுக்கப்பட்டிருப்பதுடன், ஹரிசான்டல் ஸ்டால்களுடன் பம்பர் மறுவடிவமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. இது காரின் அகலம் சற்று கூடியிருப்பதைப் போலக் காட்டுகிறது. GT வேரியன்ட்களில், கருப்பு நிறத்தில் கிரில் அக்சென்ட்கள் கொடுக்கப்பட்டிருப்பதுடன், கருப்பு நிற அலாய் வீல்களும், ஆங்காங்கே GT பேட்ஜ்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

பக்கவாட்டில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. முந்தைய டைகூன் மாடலில் இருந்தது போலவே தான் புதிய டைகூன் மாடலிலும் இருக்கிறது. ஒரேயொரு மாற்றம் என்றால் அது புதிய வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் 17 இன்ச் அலாய் வீல்கள் மட்டுமே. காரின் பின்பக்கம் LED விளக்குகள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. பின்பக்கமும் லைட் பாரின் நடுவில் ஒளிரும் வகையிலான ஃபோகஸ்வாகன் லோகோ கொடுக்கப்பட்டிருப்பதுடன், சீக்வென்ஷியல் இன்டிகேட்டர்களையும் புதிய காரில் கொடுத்து அப்டேட் செய்துள்ளது அந்நிறுவனம்.

Volkswagen Taigun Facelift Backside

காரின் உள்ளே நுழைந்ததும் முதலில் நாம் பார்ப்பது டேஷ்போர்டைத் தான். அதன் வடிவமைப்பில் ஃபோக்ஸ்வாகன் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. மாறாக டூயல் டோன் ஃபினிஷ் கொடுக்கப்பட்டிருக்கிறது. இத்துடன் டைகூன் லைன்-அப் முழுவதிலும் சேர்த்து ஆறு வகையான அப்ஹோல்ஸ்ட்ரி தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. டேஷ்போர்டில் மேம்படுத்தப்பட்ட 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்பிளே மற்றும் 10.1 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருப்பதையும் நாம் பார்க்க முடிகிறது.

இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமானது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, AI அடிப்படையிலான இன்டகிரேஷன், தகவல்களை நிகழ் நேரத்தில் பெறும் வசதி, மேம்பட்ட வாய்ஸ் கண்ட்ரோல் வசதி ஆகிய அம்சங்களைக் கொண்டிருக்கிறது. இவற்றுடன் பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட் செய்யப்பட்ட பவர்டு முன்பக்க சீட்கள், ஆம்பியன்ட் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் கேபின் வேகமாகக் கூலாவதற்காக மேம்படுத்தப்பட்ட ஏசி கம்ப்ரஸர் ஆகிய வசதிகளையும் புதிய கார் கொண்டுள்ளது.

Volkswagen Taigun Facelift Inside

மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் பெரிதாக இல்லை, ஒரேயொரு முக்கியமான மேம்பாட்டைத் தவிர. முந்தைய மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருந்தது. புதிய மாடலில் அதற்குப் பதிலாக மேம்பட்ட 8 ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வைக் கொடுத்துள்ளது ஃபோக்ஸ்வாகன். 1.0 லிட்டர் டர்போ பெட்ரோலின் மேனுவல் கியர்பாக்ஸில் எந்த மாற்றமும் இல்லை, அதே 6 ஸ்பீடு தான்.

ஆனால் டைகூனின் பவர்ஃபுல் இன்ஜின் என்றால் அது 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் தான். 150 hp பவரை உற்பத்தி செய்யும் இந்த இன்ஜினுடன் 7 ஸ்பீடு DSG டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வை மட்டுமே கொடுத்துள்ளது ஃபோக்ஸ்வாகன். 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினானது 115 hp பவரை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

Volkswagen Taigun Facelift Front Seats

முந்தைய டைகூன் மாடலே 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றிருந்ததனால், அதில் கொடுக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அம்சங்களை அப்படியே புதிய டைகூன் மாடலுக்கும் கடத்தியிருக்கிறது ஃபோக்ஸ்வாகன். 6 ஏர்பேக்குகள், EBD-யுடன் கூடிய ABS, எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ட்ராக்ஷன் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் டிஃபரன்ஷியல் லாக், ஹில்-ஹோல்டு அசிஸ்ட், ISOFIX மவுண்டுகள், முன்பக்க மற்றும் பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஆட்டோ டிம்மிங் IRVM ஆகிய பாதுகாப்பு வசதிகள் புதிய மாடலிலும் கொடுக்கப்பட்டுள்ளன.

பயன்படுத்துவதற்கு எப்படி இருக்கிறது?

1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டிருந்தாலும் அது டாப் எண்டில் சில வேரியன்ட்களில் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. 1.0 லிட்டர் இன்ஜின் தான் அடிப்படை வேரியன்டில் இருந்து பிரதானமாக நிறைய வேரியன்ட்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நமக்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் புதிதாக மேம்படுத்தப்பட்ட 8 ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலே பயன்படுத்திப் பார்ப்பதற்குக் கிடைத்தது.

Volkswagen Taigun Facelift Red

டைகூனின் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினானது 115 hp பவர் மற்றும் 178 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது. நெரிசல் மிகுந்த நகரச்சாலைகளில் பயணிக்கும் போது போதுமான வேகத்தை இந்த டர்போ பெட்ரோல் இன்ஜின் கொடுப்பதுடன், க்விக்காகவும் இருக்கிறது கார். பவர் போதவில்லையோ என்ற எண்ணம் எழவில்லை. புதிய 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் மணிக்கு 0-100 கிமீ வேகத்தை 10.20 நொடிகளில் எட்ட முடிகிறது.

நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் போது நீண்ட நேரத்திற்கு 100 கிமீ-க்கும் மேலான வேகத்தில் தொடர்ந்து பயணம் செய்ய முடிகிறது. எங்கேயும் தொய்வில்லை, மேலும் இன்ஜினை அதிகம் ஸ்ட்ரெஸ் செய்கிறோமோ என்றும் தோன்றாமல் இருக்கும் வகையில் புதிய டைகூன் எஸ்யூவியில் க்ரூஸ் செய்ய முடிகிறது.

Volkswagen Taigun Facelift

புதிய டைகூனில் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். மணிக்கு 100 கிமீ வேகத்தைத் தொடும் போதே நாம் 8வது கியரில் இருப்போம். ஆனால் rpm 2,000-த்தைக் கூடத் தாண்டியிருக்காது. இந்த இடத்தில் தான் மைலேஜ் நமக்குக் கொஞ்சம் கூடுதலாகக் கிடைக்கிறது. நகரங்களில் 60 முதல் 70 கிமீ வரையிலான வேகத்தில் செல்லும் போது இந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் லிட்டருக்க 21 கிமீ வரையிலான மைலேஜை பெற முடிகிறது.

அதேபோல், நெடுஞ்சாலைகளில் மணிக்கு 100 கிமீ வேகத்தில் க்ரூஸ் செய்தாலும் கூட லிட்டருக்கு 19 கிமீ வரையிலான மைலேஜை இந்த 8 ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் நாம் பெற முடிகிறது. D மோடில், 1,700 முதல் 2,000-த்திற்குள்ளான rpm-லேயே 8வது கியருக்கு ஷிப்ட் ஆகிவிடுகிறது. S மோடில் இது 3,000 rpm ஆக இருக்கிறது. மேனுவலாக கியரைக் கட்டுப்படுத்த பேடில் ஷிப்டர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Volkswagen Taigun Facelift

அப்டேட்டிற்கு முந்தைய டைகூன் எஸ்யூவி மாடலுடன் ஒப்பிடும் போது சஸ்பென்ஷனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், அதில் குறை சொல்வதற்கும் ஏதுமில்லை. குண்டும் குழியுமான நகரச் சாலைகளோ அல்லது ஆங்காங்கே திட்டுகளைக் கொண்ட நெடுஞ்சாலைகளோ அனைத்தையும் புகார் சொல்ல முடியாத அளவிற்கு ஸ்மூத்தாகவே கடக்க வைக்கிறது சஸ்பென்ஷன் செட்டப்.

இந்த எஸ்யூவியின் ஸ்டீயரிங் க்விக்காகவும், லைட்டாகவும் இருக்கிறது. சட்டென திருப்பினாலும், அதே வேகத்திற்கு ஈடுகொடுத்து காரும் மறுமொழியளிக்கிறது. இதனால் நெடுஞ்சாலைகளில் லேன் மாறும் போது இலகுவாகவே இருக்கிறது. 1.5 லிட்டர் இன்ஜின் கொண்ட வேரியன்ட்களில் நான்கு வீல்களிலும் டிஸ்க் பிரேக் செட்டப்பையே ஃபோக்ஸ்வாகன் கொடுத்துள்ளது. ஆனால் 1.0 லிட்டர் இன்ஜினுடன் டிஸ்க் மற்றும் டிரம் பிரேக்குகள் இணைந்த செட்டப்பே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரச்சினையில்லை, போதுமான பிரேக்கிங் பவரைக் கொண்டுள்ளது.

Volkswagen Taigun Facelift

டிரைவ்ஸ்பார்க் கருத்து:

அடிப்படையில் இருந்து புத்தம் புதிய காராக இந்த டைகூன் இருக்கிறதா என்று கேட்டால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அப்படி சொல்ல வேண்டும் என்பதற்காக இந்த அப்டேட்டை ஃபோக்ஸ்வாகன் செய்யவும் இல்லை. டைகூன் எஸ்யூவி அடிப்படையிலேயே சிறப்பான ஒரு கார் தான். அதனை புதிய அப்டேட் மூலம் மேலும் மெருகேற்றியிருக்கிறது ஃபோக்ஸ்வாகன்.

புத்துணர்வு அளிக்கும் வகையிலான டிசைன் மாற்றங்கள் மற்றும் ப்ரீமியமான ஃபீலைக் கொடுக்கும் வகையில் கேபின் மாற்றங்களைக் கொண்டுள்ளது புதிய டைகூன் எஸ்யூவி. குறிப்பாக பனோரமிக் சன்ரூஃப் வசதி, நீண்டகாலமாக ஏன் இல்லை என்ற கேள்வியை நிறுத்தியிருக்கிறது. ப்ரீமியம் எஸ்யூவி என்று சொல்லிவிட்டு இந்த வசதி இல்லையென்றால் எப்படி.

Volkswagen Taigun Facelift

இந்த அப்டேட்டின் முக்கியமான அம்சமே அதன் 8 ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தான். 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை அனைத்து சூழல்களுக்கும் ஏற்ற வகையிலான ஒன்றாக இந்த 8 ஸ்பீடு கியர்பாக்ஸே மாற்றியிருக்கிறது. இந்தப் புதிய கியர்பாக்ஸ் மூலம், பெர்ஃபாமன்ஸ் மற்றும் மைலேஜ் இரண்டையும் ஒருசேரக் கொடுக்கும் காராக மாறியிருக்கிறது புதிய டைகூன்.

இந்த டைகூன் எஸ்யூவியை வாங்குகிறீர்கள் என்றால், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸூடன் 1.0 லிட்டர் டர்போ இன்ஜின் கொண்ட வெர்ஷனை வாங்குவதையே நாங்கள் பரிந்துரைக்கிறோம். தினசரிப் பயன்பாட்டில் எந்த வகையான சவாலையும் ஸ்மூத்தாக எதிர்கொள்ளும் திறனை இந்த பவர்ட்ரெயின் காம்போ பெற்றிருக்கிறது. கூடுதல் பவர் வேண்டும் என்பவர்களுக்கு 1.5 லிட்டர் டர்போ இன்ஜின் மற்றும் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பவர்ட்ரெயின் காம்போவும் இருக்கிறது.

Volkswagen Taigun Facelift

எனினும், அனைத்து வகையிலும் ஒரு ஆல்-ரவுண்டரான எஸ்யூவி வேண்டும் என்றால் 1.0 லிட்டர் ஆட்டோமேட்டிக் வெர்ஷனை கண்டிப்பாக வாங்கலாம். கொடுக்கும் பணத்திற்கு சிறப்பான வேல்யூ மாடலாக இந்த பவர்ட்ரெயின் காம்போவுடன் கூடிய டைகூன் எஸ்யூவி இருக்கும். ஏன் இது சிறப்பான காம்போ என்பதை பயன்படுத்திப் பார்த்து நீங்கள் எங்களிடம் கேட்க வேண்டாம், காரே அதற்கான பதிலைச் சொல்லும்.

Article Published On: Saturday, May 2, 2026, 11:02 [IST]
English summary
2026 volkswagen taigun facelift updated model full review
மேலும்... #volkswagen #car review #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X