ஒவ்வொரு செக்மென்ட்டிலும் சிறந்த 2 கார்கள்: உங்கள் தேர்வை எளிதாக்கும் தொகுப்பு!
கார் மார்க்கெட்டில் நிலவும் கடும் சந்தைப் போட்டியும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்கும் தொடர்ந்து புதிய மாடல்கள் களமிறக்கப்பட்டு வருகின்றன. அதில், சிறந்த மாடலை தேர்வு செய்து வாங்குவதில் பல குழப்பங்கள் குளறுபடிகள் ஏற்படுகின்றன.
இந்த சூழலில், தற்போது கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு வசதியாக, சொகுசு கார் ரகத்தை தவிர்த்து, ஒவ்வொரு செக்மென்ட்டிலும் சிறந்த 2 கார் மாடல்களை தேர்வு செய்து இங்கே வழங்கியிருக்கிறோம். இது கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறோம்.

01. மாருதி ஆல்ட்டோ 800
குறைவான பட்ஜெட்டில் கார் வாங்குவோரின் முதல் சாய்ஸ் ஆல்ட்டோ 800 கார்தான். A என்று குறிப்பிடப்படும் ஆரம்ப ரக கார் மார்க்கெட்டில் பட்ஜெட்டை கருதியே பலர் கார்களை தேர்வு செய்கின்றனர். அவர்களுக்கு மாருதி ஆல்ட்டோ 800 கார் சிறந்த தேர்வாக அமையும். நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சர்வீஸ் மையங்களை வைத்திருப்பதோடு, குறைந்த பராமரிப்பு செலவீனம் கொண்ட கார். இந்த காரில் இருக்கும் 796சிசி பெட்ரோல் எஞ்சின் 47 பிஎச்பி பவரையும், 69 என்எம் டார்க்கையும் வழங்கும் லிட்டருக்கு 22.74 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. ரூ.2.86 லட்சம் ஆன்ரோடு விலையிலிருந்து கிடைக்கிறது.

02. ரெனோ க்விட்
மாருதி ஆல்ட்டோ 800 காருக்கு கடும் நெருக்கடியை தந்து கொண்டிருக்கும் மாடல். அசத்தலான க்ராஸ்ஓவர் ரக டிசைன், இடவசதி, நவீன வசதிகள், குறைவான விலை என்று வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருக்கிறது. இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகளை பெற்றிருக்கிறது. இந்த காரில் இருக்கும் 799சிசி எஞ்சின் 53 பிஎச்பி பவரையும், 72 என்எம் டார்க்கையும் வழங்கும். லிட்டருக்கு 25.17 கிமீ மைலேஜ் தரும் என்பதும் கவனிக்கத்தக்கது. ரூ.2.88 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

03. மாருதி செலிரியோ
A+ என்ற ஆரம்ப ரக கார் மார்க்கெட்டைவிட்டு சற்றே விலை அதிகம் கொண்ட செக்மென்ட்டில் மாருதி செலிரியோ மிக சிறப்பான சாய்ஸ். ஆட்டோமேட்டிக் காரை போன்ற சுகத்தை தரும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல், அதிக மைலேஜ் தரும் குறைவான விலை டீசல் மாடல் என்று வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறது. இந்த காரின் பெட்ரோல் மாடலில் இருக்கும் 998சிசி எஞ்சின் 67 பிஎச்பி பவரையும் 90 என்எம் டார்க்கையும், டீசல் மாடலில் இருக்கும் 793சிசி எஞ்சின் 46 பிஎச்பி பவரையும், 125 என்எம் டாரக்கையும் வழங்கும். பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 23.1 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 27.62 கிமீ மைலேஜையும் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரூ.4.29 லட்சம் ஆன்ரோடு விலையிலிருந்து கிடைக்கிறது. குறைவான பராமரிப்பும், மாருதியின் சர்வீஸ் கட்டமைப்பு வசதியும் இதன் ப்ளஸ் பாயிண்ட்டுகளாக இருக்கின்றன.

04. ஹூண்டாய் கிராண்ட் ஐ10
ரூ.5 லட்ச ரூபாய் பட்ஜெட் மார்க்கெட்டில் அனைவருக்கு சிறந்த மாடலாக கருதுவது ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்தான். அழகான டிசைன், அதிகப்படியான வசதிகள், மறு விற்பனை மதிப்பு என வாடிக்கையாளர்களின் மனதை நிறைவு செய்கிறது. பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் வகைகளில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 1197சிசி எஞ்சின் அதிகபட்சமாக 81 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். டீசல் மாடலில் இருக்கும் 1120சிசி எஞ்சின் அதிகபட்சமாக 70 பிஎச்பி பவரையும் 160 என்எம் டார்க்கையும் வழங்கும். பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 18.9 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 24 கிமீ மைலேஜையும் தருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ரூ.5.32 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

05. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
பி செக்மென்ட்டில் முதல் இடத்தை பெறுவது மாருதி ஸ்விஃப்ட். இந்தியாவின் அதிகம் விரும்பப்படும் மாடலாக வலம் வருகிறது. வசீகரிக்கும் தோற்றம், அதிக மைலேஜ், செயல்திறன் மிக்க எஞ்சின், சரியான விலை என்று வாடிக்கையாளர்களின் தேர்வில் முதலிடம் வகிக்கிறது. இந்த காரில் இருக்கும் 1197சிசி பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க்கையும் வழங்கும். டீசல் மாடலில் இருக்கும் 1,248சிசி எஞ்சின் அதிகபட்சமாக 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க்கையும் வழங்கும். பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 18.9 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 24 கிமீ மைலேஜையும் வழங்கும். ரூ.5.53 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

06. ஃபோர்டு ஃபிகோ
மாருதி ஸ்விஃப்ட்டிற்கு அடுத்து பி செக்மென்ட்டில் சிறந்த சாய்ஸ் ஃபோர்டு ஃபிகோ கார். டிசைன், இடவசதி, வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள், விலை என அனைத்திலும் நிறைவான கார். இந்த காரில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 87 பிஎச்பி பவரையும், 112 என்எம் டார்க்கையும் வழங்கும். மற்றொரு 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும், 136 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த மாடலில் ட்யூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டீசல் மாடலில் புதிய 1.5 லிட்டர் எஞ்சின் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 215 என்எம் டார்க்கையும் வழங்கும். 1.2 லிட்டர் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 18.16 கிமீ மைலேஜையும், 1.5 லிட்டர் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 17.0 கிமீ மைலேஜையும், 1.5 லிட்டர் டீசல் மாடல் லிட்டருக்கு 25.83 கிமீ மைலேஜையும் வழங்கும். ரூ.5.38 லட்சம் ஆன்ரோடு விலையிலிருந்து கிடைக்கிறது.

07. ஹூண்டாய் எலைட் ஐ20
B+ செக்மென்ட் என்று குறிப்பிடப்படும் பிரிமியம் ஹேட்ச்பேக் மார்க்கெட்டில் ஹூண்டாய் எலைட் ஐ20 கார் சிறந்த தேர்வாக இருக்கிறது. அட்டகாசமான டிசைன், வசதிகள் இந்த காரை முன்னிறுத்தும் அம்சங்கள். பெட்ரோல் மாடலில் இருக்கும் 1197சிசி எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க்கையும் வழங்கும். டீசல் மாடலில் இருக்கும் 1396சிசி எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 220 என்எம் டார்க்கையும் வழங்கும். பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 18.6 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 22.54 கிமீ மைலேஜையும் வழங்கும். ரூ.6 லட்சம் டெல்லி ஆன்ரோடு விலையிலிருந்து கிடைக்கிறது.

08. மாருதி பலேனோ
பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மாருதி பலேனோ காரும் சிறந்த தேர்வாக அமைந்துள்ளது. தோற்றம், இடவசதி, வசதிகள் என்று வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. ஸ்விஃப்ட் காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 83 பிஎச்பி பவரை அளிக்க வல்ல பெட்ரோல் மற்றும் 74 பிஎச்பி பவரை வழங்க வல்ல டீசல் எஞ்சின்கள்தான் இந்த காரிலும் இடம்பெற்று இருக்கிறது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 21.4 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 27.3 கிமீ மைலேஜையும் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.5.66 லட்சம் டெல்லி ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

09. மாருதி டிசையர்
காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் சிறப்பான சாய்ஸ் மாருதி டிசையர். இதற்கு முக்கிய காரணம், குறைவான பராமரிப்பும், நிறைவா வாடிக்கையாளர் சேவையும் முக்கியம். கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புதிய டிசையர் காரில் புஷ் பட்டன் ஸ்டார்ட் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகள் சேர்க்கப்பட்டன. அத்துடன், ஏஎம்டி என்ற ஆட்டோ கியர் ஷிஃப்ட் வசதியும் இந்த காரை முன்னிலைப்படுத்துகிறது. இந்த காரில் இருக்கும் 1197சிசி பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரையும், டீசல் மாடலில் இருக்கும் 1248சிசி எஞ்சின் 74 பிஎச்பி பவரையும் வழங்கும். பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.87 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 26.59 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. ரூ.5.72 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

10. ஹோண்டா அமேஸ்
சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஹோண்டா அமேஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. உட்புறத்தில் சிறப்பான இடவசதி, கவர்ச்சியான டிசைன், அதிக மைலேஜ் தரும் சிறந்த எஞ்சின்கள் இந்த காரை முன்னிலைப்படுத்தும் விஷயங்கள். பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 86 பிஎச்பி பவரையும், டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 98 பிஎச்பி பவரையும் அளிக்கும். பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 17.8 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 18.1 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 25.8 கிமீ மைலேஜையும் வழங்கும். ரூ.5.81 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

11. ஹோண்டா சிட்டி
C செக்மென்ட் எனப்படும் நடுத்தர வகை கார் மார்க்கெட்டில் நம்பர்-1 மாடலாக வலம் வருகிறது புதிய ஹோண்டா சிட்டி. அழகான டிசைன், தரமான பாகங்கள், இடவசதி, சிறந்த எஞ்சின்கள் இதனை முன்னிறுத்தும் அம்சங்கள். இந்த காரின் பெட்ரோல் மாடலில் இருக்கும் 1497சிசி எஞ்சின் அதிகபட்சமாக 117 பிஎச்பி பவரையும், 145 என்எம் டார்க்கையும் வழங்கும். டீசல் மாடலில் இருக்கும் 1,498சிசி எஞ்சின் 99 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் வழங்கும். பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 17.8 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 26 கிமீ மைலேஜையும் வழங்கும். ரூ.8.76 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

12. மாருதி சியாஸ்
மிட்சைஸ் மார்க்கெட்டில் மற்றொரு சிறந்த மாடலாக மாருதி சியாஸ் வலம் வருகிறது. இந்த காரில் இருக்கும் 1373சிசி பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 91 பிஎச்பி பவரையும், 130 என்எம் டார்க்கையும் வழங்கும். டீசல் மாடலில் இருக்கும் 1248சிசி எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் வழங்கும். பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.73 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 28.09 கிமீ மைலேஜையும் வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. ரூ.8.55 லட்சம் ஆன்ரோடு விலையிலிருந்து கிடைக்கிறது.

13. மாருதி எர்டிகா
காம்பேக்ட் எம்பிவி கார் செக்மென்ட்டில் மாருதி எர்டிகா மிகச்சிறந்த சாய்ஸ். டிசைன், இடவசதி, விலை என்று அனைத்திலும் சிறப்பாக இருக்கிறது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 1,373சிசி எஞ்சின் அதிகபட்சமாக 94 பிஎச்பி பவரையும், டீசல் மாடலில் இருக்கும் 1248சிசி எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும் வழங்கும். பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 17.5 கிமீ மைலேஜையும், 24.52 கிமீ மைலேஜையும் வழங்கும். ரூ.6.43 லட்சம் டெல்லி ஆன்ரோடு விலையிலிருந்து கிடைக்கிறது.

14. ரெனோ லாட்ஜி
எர்டிகாவுக்கு இணையான விலையில் இன்னோவாவை சற்றே நெருங்கும் இடவசதி கொண்ட எம்பிவி கார் மாடல். சிறந்த ஹெட்ரூம் வசதியும் உள்ளது. இந்த கார் இருவிதமான டீசல் மாடல்களில் கிடைக்கிறது. இந்த காரில் இருக்கும் 1462சிசி டீசல் எஞ்சின் 84 பிஎச்பி மற்றும் 108 பிஎச்பி பவரை அளிக்கும் இரு மாடல்களில் கிடைக்கிறது. 84 பிஎச்பி மாடல் லிட்டருக்கு 21.04 கிமீ மைலேஜையும், 108 பிஎச்பி மாடல் லிட்டருக்கு 19.98 கிமீ மைலேஜையும் தருகிறது. ரூ.9.83 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

15. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்
மினி எஸ்யூவி மார்க்கெட்டில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் முதல் சாய்ஸ். அருமையான டிசைன், சிறந்த எஞ்சின் ஆப்ஷன்கள், வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார். இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் மாடலில் கிடைக்கிறது. முதல் பெட்ரோல் மாடல் 110 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1499சிசி எஞ்சினுடன் மற்றொரு பெட்ரோல் மாடல் 124 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 999சிசி ஈக்கோபூஸ்ட் எஞ்சின் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது. டீசல் மாடலில் இருக்கும் 1498சிசி எஞ்சின் 99 பிஎச்பி பவரை அளிக்கும். 1.5 லிட்டர் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 15.8 கிமீ மைலேஜையும், 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 18.9 கிமீ மைலேஜையும் தரும். டீசல் மாடல் 22.7 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. ரூ.7.38 லட்சம் ஆன்ரோடு விலையிலிருந்து கிடைக்கிறது.

16. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா
4 மீட்டருக்கும் குறைவான மினி எஸ்யூவி மார்க்கெட்டில் மாருதி விட்டார பிரெஸ்ஸாவும் சிறந்த சாய்ஸ். டீசல் மாடலில் மட்டுமே கிடைக்கிறது. இந்த காரில் இருக்கும் 1248சிசி டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் வழங்கும். லிட்டருக்கு 24.3 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. ரூ.7.95 லட்சம் ஆன்ரோடு விலையிலிருந்து கிடைக்கிறது. மாருதியின் சிறப்பான சர்வீஸ் நெட்வொர்க்கும், விற்பனைக்கு பிந்தைய வாடிக்கையாளர் சேவையும் இந்த காருக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

17. ஹூண்டாய் க்ரெட்டா
அட்டகாசமான ஸ்டைலில் கிடைக்கும் காம்பேக்ட் எஸ்யூவி. இரண்டு டீசல் எஞ்சின் மற்றும் ஒரு பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனில் கிடைக்கிறது. 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 122 பிஎச்பி பவரையும், 154 என்எம் டார்க்கையும் வழங்கும். 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 126 பிஎச்பி பவரையும் அளிக்கும். பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 15.29 கிமீ மைலேஜையும், 1.4 லிட்டர் டீசல் மாடல் லிட்டருக்கு 21.3 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 19.6 கிமீ மைலேஜையும் தருகிறது. ரூ.10.24 லட்சம் ஆன்ரோடு விலையிலிருந்து கிடைக்கிறது.

18. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ
ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு அடுத்து, சிறந்த எஸ்யூவி மாடலாக மஹிந்திரா ஸ்கார்ப்பியோவை எடுத்துக் கொள்ளலாம். மார்க்கெட்டில் மிகவும் வெற்றிகரமான மாடல். மிரட்டலான தோற்றம், இடவசதி, வசதிகள், சரியான விலை போன்றவை இந்த காரை முன்னிறுத்தும் அம்சங்கள். இந்த எஸ்யூவியில் 120 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க்கையும் வழங்கும் 2,179சிசி டீசல் எஞ்சின் உள்ளது. ரூ.10.78 லட்சம் ஆன்ரோடு விலையிலிருந்து கிடைக்கிறது.

19. டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ்
D செக்மென்ட் மார்க்கெட்டில் டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் சிறந்த மாடல். உலகின் மிக அதிகம் விற்பனையாகும் செடான் கார் மாடல்களில் ஒன்று. நம்பகத்தன்மையில் சிறந்த மாடலாக இருக்கிறது. இந்த காரில் இருக்கும் 1798சிசி பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 138 பிஎச்பி பவரையும், 1,364சிசி எஞ்சின் அதிகபட்சமாக 87 பிஎச்பி பவரையும் வழங்கும். பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 16.7 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 21.3 கிமீ மைலேஜையும் வழங்கும். ரூ.15.8 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

20. செவர்லே க்ரூஸ்
ஸ்டைல், செயல்திறன் மிக்க எஞ்சின் ஆகியவை இந்த காரை முன்னிறுத்தும் அம்சங்கள். பீரங்கி போன்ற கட்டமைப்பு கொண்ட காராக இதன் உரிமையாளர்கள் சிலாகித்து கூறுவதுண்டு. இந்த காரில் இருக்கும் 1998சிசி டீசல் எஞ்சின் 164 பிஎச்பி பவரையும், 380 என்எம் டார்க்கையும் வழங்கும். லிட்டருக்கு 17.3 கிமீ மைலேஜ் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ரூ.16.5 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

21. ஃபோர்டு எண்டெவர்
அட்டைப்பெட்டி போன்று இருந்த பழைய ஃபோர்டு எண்டெவருக்கு மாற்றாக, சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஃபோர்டு எண்டெவர் சிறப்பான டிசைன், வசதிகள் கொண்ட காராக மாறியிருக்கிறது. தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் புதிய 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 158 பிஎச்பி பவரையும், 3.2 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 197 பிஎச்பி பவரையும் அளிக்க வல்லது. 2.2 லிட்டர் டீசல் மாடல் லிட்டருக்கு 14.2 கிமீ மைலேஜேயைும், 3.2 லிட்டர் டீசல் மாடல் லிட்டருக்கு 10.9 கிமீ மைலேஜையும் வழங்குகிறது. ரூ.29 லட்சம் ஆன்ரோடு விலையிலிருந்து கிடைக்கிறது.

22. டொயோட்டா ஃபார்ச்சூனர்
இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் பிரிமியம் எஸ்யூவி மாடல். இதனை இரண்டாவது இடத்தில் கொடுத்திருப்பதற்கு காரணம், அடுத்த சில மாதங்களில் இதன் புதிய தலைமுறை மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது, தீபாவளியையொட்டி எதிர்பார்க்கலாம். கம்பீரமான டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின் இதன் சிறப்பம்சங்களாக இருக்கின்றன.

அதிக மைலேஜ் தரும் இந்தியாவின் டாப் - 8 டீசல் கார்கள்!


Click it and Unblock the Notifications








