சார்ஜ் பண்ணால் 400கிமீ-க்கு நிக்காம ஓடும்! சீன எலக்ட்ரிக் காருக்கு இந்தியாவில் நல்ல எதிர்காலம் இருக்கு!!
பிஒய்டி (BYD), சீன எலக்ட்ரிக் கார் நிறுவனம். சர்வதேச அளவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் பிஒய்டி டெஸ்லாவுக்கு போட்டியாக உள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இத்தகைய நிறுவனம் இந்தியாவில் கடந்த சில வருடங்களாக கார்களை விற்பனை செய்து வருகிறது. 2021ஆம் ஆண்டில் இ6 என்கிற எலக்ட்ரிக் கார் மூலமாக இந்தியாவில் நுழைந்த பிஒய்டி நிறுவனம் இந்த காரை பொது மக்களுக்கு விற்பனை செய்ய 2022இல் துவங்கியது. அதன்பின், அட்டோ 3 மற்றும் சீல் என தொடர்ச்சியாக எலக்ட்ரிக் கார்களை பிஒய்டி அறிமுகம் செய்து வருகிறது.
இந்த வரிசையில் புதியதாக களமிறக்கப்பட்டு இருப்பதே பிஒய்டி இமேக்ஸ் 7 (eMax 7) ஆகும். ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பிஒய்டி இ6 எலக்ட்ரிக் காரின் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் காராக இமேக்ஸ் 7 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2024 பாங்காக் சர்வதேச மோட்டார் கண்காட்சியில் சாங் மேக்ஸ் இவி என்கிற பெயரில் காட்சிக்கு நிறுத்தப்பட்ட இந்த எலக்ட்ரிக் கார் பல விதங்களில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

காருக்கு வெளியே, உள்ளே என அனைத்து பகுதிகளிலும் கார் மேம்படுத்தப்பட்டு உள்ளது. பிஒய்டி இமேக்ஸ் 7 காரில் என்னென்ன அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதை அறிய சென்னையில் இந்த புதிய எலக்ட்ரிக் காரை நாங்கள் ஓட்டிப் பார்த்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை ரிவியூவாக இங்கு வழங்கியுள்ளோம். வாருங்கள் அவற்றை இனி தொடர்ந்து பார்க்கலாம்.
புதிய அப்டேட்கள்: எதிர்பார்த்ததை போன்று, பிஒய்டி இ6 எலக்ட்ரிக் காரில் இருந்து தோற்றத்தில் பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டதாக இமேக்ஸ் 7 உருவாக்கப்பட்டுள்ளது. 'டிராகன்' டிசைனில் முகத்தை கொண்டிருக்கும் இது ஒரு எம்பிவி ரக கார் ஆகும். இதன் முன்பக்கத்தில் எல்இடி டி.ஆர்.எல்-கள் உடன் எல்இடி ஹெட்லைட்களை க்ரோம் பார் ஒன்று இணைக்கிறது. இந்த க்ரோம் பாரில் பிஒய்டி நிறுவனத்தின் பெயர்பலகையை பார்க்க முடிகிறது.

இந்த எலக்ட்ரிக் காரின் முன்பக்கத்தில் மற்ற முக்கியமான அம்சங்கள் என்று பார்த்தால், புதிய டிசைனில் பம்பர் பெரிய அளவில் ஏர் இண்டேக்கிற்கான துளைகளை கொண்டுள்ளது. எந்த அளவிற்கு பெரிய துளைகள் என்றால், இந்த எலக்ட்ரிக் கார் பார்ப்பதற்கு பெட்ரோல்/ டீசல் கார் போன்று காட்சியளிக்கிறது. புதிய இமேக்ஸ் 7 காரில் லெவல்-2 அடாஸ் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக காரின் முன்பக்கத்தில் சில சென்சார் & ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மற்றப்படி, காரின் பக்கவாட்டில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை. இ6 காரில் இருந்ததை போலவே உள்ளது. இமேக்ஸ் 7 காரில் 17 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சக்கரங்களில் 225/55 ஆர்17 என்கிற அளவுள்ள டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்பக்கத்தை போலவே இந்த எம்பிவி காரின் பின்பக்கத்திலும் எல்இடி டெயில்லைட்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே கூறியதுபோல், பிஒய்டி இமேக்ஸ் 7 ஆனது ஓர் எம்பிவி ரக கார் ஆகும். அதாவது, அந்த அளவிற்கு இந்த கார் பெரிய தோற்றத்தை கொண்டதாக உள்ளது. காரின் பின் கதவை திறந்தால் பொருட்களை வைப்பதற்கு 180 லிட்டர்கள் கொள்ளளவில் இடவசதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, 3 வரிசைகளில் இருக்கைகள் இருக்கும்போதிலும் 180 லிட்டர்கள் கொள்ளளவில் பூட் ஸ்பேஸை பிஒய்டி வழங்கியுள்ளது.
3வது இருக்கை வரிசையை மடக்கிக் கொள்வதன் மூலமாக இதனை 400 லிட்டர்களில் இருந்து 580 லிட்டர்கள் வரையில் அதிகரித்துக் கொள்ளலாம். அப்படியே காருக்கு உள்ளே சென்றால், புதிய இமேக்ஸ் 7 எலக்ட்ரிக் காரினுள் என்னென்ன அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதை எளிதாக அடையாளம் காண முடிகிறது. பிஒய்டி இ6 எலக்ட்ரிக் காருக்குள் முற்றிலும் கருப்பு நிறத்தில் கேபின் வழங்கப்பட்டது. ஆனால், இந்த காரினுள் ஃபாக்ஸ் லெதரில் கேபின் அலங்கரிக்கப்பட்டுள்ளதால், காருக்குள் எல்லா இடங்களும் பிரவுன் நிறத்தில் தெரிகின்றன.

டேஸ்போர்டில் பெரிய அளவில் 12.3-இன்ச்சில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்போர்டு சாட்னாவ் மென்பொருள்களை ஏற்கக்கூடியதாக உள்ளது. இ6 எலக்ட்ரிக் காரில் இன்ஃபோடெயின்மெண்ட் திரை வெறும் 10.1-இன்ச்சில் மட்டுமே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதைவிட முக்கியமான அம்சம் என்னவென்றால், இமேக்ஸ் 7 காரில் இன்ஃபோடெயின்மெண்ட் திரையை ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலமாக தேவைக்கேற்ப சுழற்ற முடியும்.
புதிய இமேக்ஸ் 7 எலக்ட்ரிக் காரில் புதிய டிசைனில் ஸ்டேரிங் சக்கரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பின்னால் டிரைவருக்கு பல்வேறு விதமான தகவல்களை வழங்க 5 இன்ச்சில் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. செண்டர் கன்சோல் பகுதியில் புதிய டிசைனில் ஸ்விட்ச் கியர் செட்-அப் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செட்-அப்பில் கியர் லிவர், டிரைவ் மோட் செலக்டர், டிஃபாக்கர்ஸ் மற்றும் வெண்டிலேட்டட் முன் இருக்கைகளுக்கான கண்ட்ரோல்கள் யாவும் புதிய டிசைனில் உள்ளன.

இருக்கைகளை பொறுத்தவரையில், முன் இருக்கைகள் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ் செய்யக்கூடியவைகளாக உள்ளன. டிரைவருக்கான இருக்கையை 6 விதமாகவும், முன் இருக்கை பயணிக்கான இருக்கையை 4 விதமாகவும் அட்ஜெஸ் செய்துக் கொள்ளலாம். முன் இருக்கைகள் நன்கு பெரியதாக வழங்கப்பட்டுள்ளன. இமேக்ஸ் 7 எலக்ட்ரிக் காரை 6 இருக்கைகள் அல்லது 7 இருக்கைகள் உடன் வாங்கலாம்.
6-சீட்டர் வெர்சனில் காருக்குள் 2வது வரிசையில் இரு இருக்கைகள் தனித்தனியாக கேப்டன் இருக்கைகளாக கிடைக்கும். இந்த கேப்டன் இருக்கைகளை முன் மற்றும் பின்பக்கமாக தேவைகேற்ப நகர்த்திக் கொள்ள முடியும். அதேபோல், இவற்றை மடக்கிக் கொள்ளவும் முடியும் என்பதால், தொலைத்தூர பயணங்களுக்கு இவை ஏற்றதாக இருக்கும். அதுவே, 7-சீட்டர் வெர்சனில் ஒரே இருக்கையாக, மேசை இருக்கை கிடைக்கும்.

பிஒய்டி இ6 காருடன் ஒப்பிடுகையில் புதிய இமேக்ஸ் 7 காரில் கொண்டுவரப்பட்டுள்ள முக்கியமான அப்கிரேட் என்னவென்றால், 3வது இருக்கை வரிசையாகும். ஏனெனில், இ6 ஆனது வெறும் 5 இருக்கைகளை கொண்ட காராக விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், இமேக்ஸ் 7 காரில் 3வது இருக்கை வரிசையை வழங்கியது மட்டுமில்லாமல், தேவையில்லை என்றால் அவற்றை நீக்கிக் கொள்ளும் வசதியையும் பிஒய்டி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இந்த காரில் 3வது இருக்கை வரிசை ஆனது உயரம் குறைவானவர்களுக்கு ஏற்றதாக உள்ளது. புதிய இமேக்ஸ் 7 எலக்ட்ரிக் காரின் மற்ற சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், பெரிய அளவில் பனோராமிக் சன்ரூஃப், 2வது மற்றும் 3வது வரிசை இருக்கைகளுக்கு ஏசி சிஸ்டம், 360-டிகிரி கேமரா, மல்டிபிள் யுஎஸ்பி ஏ மற்றும் சி போர்ட்ஸ் மற்றும் ட்யூயல் வயர்லெஸ் போன் சார்ஜர்ஸ் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல், வைகல் டைனாமிக் கண்ட்ரோல், ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, இந்த எலக்ட்ரிக் காரில் லெவல் 2 அடாஸ் (ADAS) கொடுக்கப்பட்டுள்ளது.
அடாஸ் மூலமாக அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங், கொலிஷன் வார்னிங், லேன் கீப்பிங் அசிஸ்ட், லேன் டிப்பார்ச்சர் வார்னிங் மற்றும் ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதிகளை கண்காணிக்கும் வசதி உள்ளிட்டவற்றை பெறலாம். புதிய பிஒய்டி இமேக்ஸ் 7 எலக்ட்ரிக் கார் மொத்தம் 2 விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரீமியம் மற்றும் சுப்பீரியர் என்பன அந்த 2 வேரியண்ட்கள் ஆகும். இதில் சுப்பீரியர் வேரியண்ட்டில் பெரிய அளவிலான பேட்டரி கிடைக்கும். இந்த எலக்ட்ரிக் காரை வீட்டிலேயே 7 கிலோவாட்ஸ் ஏசி சார்ஜரில் சார்ஜ் செய்யலாம்.

ஃபாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரையில், இமேக்ஸ் 7 காரில் பிரீமியம் வேரியண்ட் ஆனது 89 கிலோவாட்ஸ் டிசி சார்ஜர் வரையிலும், சுப்பீரியர் வேரியண்ட் 115 கிலோவாட்ஸ் டிசி சார்ஜர் வரையிலும் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஏற்கக்கூடியதாக உள்ளன. பிஒய்டி இமேக்ஸ் 7 காரின் பிரீமியம் வேரியண்ட்டில் 55.4kWh பேட்டரி பொருத்தப்படுகிறது. இந்த பேட்டரி பொருத்தப்படும் எலக்ட்ரிக் மோட்டாரில் இருந்து அதிகப்பட்சமாக 161 பிஎச்பி மற்றும் 310 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம் என பிஒய்டி தெரிவித்துள்ளது.
இமேக்ஸ் 7 எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச் 420கிமீ ஆகும். அதாவது பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக் கொண்டு அதிகப்பட்சமாக 420கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். இமேக்ஸ் 7 பிரீமியம் வேரியண்ட்டில் 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 10 வினாடிகளில் எட்டிவிட முடியும். இந்த வேரியண்ட்டின் டாப்-ஸ்பீடு 180kmph ஆகும். பிஒய்டி இமேக்ஸ் 7 எலக்ட்ரிக் காரின் சுப்பீரியர் வேரியண்ட்டை பொறுத்தவரையில், இது 71.8kWh திறன் கொண்ட பெரிய பேட்டரியை பெறுகிறது.

இந்த வேரியண்ட்டின் ரேஞ்ச் 530கிமீ ஆகும். இதிலிலும் ஒரேயொரு எலக்ட்ரிக் மோட்டார் தான் பொருத்தப்படுகிறது. ஆனால், இதில் 201 பிஎச்பி வரையிலான குதிரையாற்றலை பெறலாம். இருப்பினும், 310 என்.எம் டார்க் திறனில் மாற்றமில்லை. 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 8.6 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இமேக்ஸ் 7 சுப்பீரியர் வேரியண்ட்டின் டாப்-ஸ்பீடு 180kmph ஆகும்.
டிரைவிங் அனுபவங்கள்: பயணத்தின்போது, புதிய பிஒய்டி இமேக்ஸ் 7 எலக்ட்ரிக் கார் அனைத்து விதமான தகுதிகளையும் பூர்த்தி செய்கிறது. ஏற்கனவே, பிஒய்டி இ6 ஆனது ஜாலியான பயணத்திற்கான காராக விளங்குகிறது. புதிய இமேக்ஸ் 7 காரிலும் இந்த விஷயத்தில் எந்த குறையும் இல்லை. எலக்ட்ரிக் மோட்டாரில் இருந்து பவர் டெலிவிரி மிகவும் சீராக உள்ளது. இது, நகர்புறங்களில் இந்த எலக்ட்ரிக் காரை ஓட்டுவதற்கு ஏற்றதாக மாற்றியுள்ளது.

மேலும், குறைவான வேகத்தில் செல்லும்போது, ஸ்டேரிங் சக்கரம் எடை குறைவானதாக உள்ளது. ஆதலால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும் குறைந்த வேகத்தில் செல்லும்போது எளிதாக ஸ்டேரிங் சக்கரத்தை கண்ட்ரோல் செய்ய முடிகிறது. நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும்போது ஸ்டேரிங் சக்கரத்தின் எடை மிக அருமையாக அதிகரிக்கிறது.
ஈக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் என 3 டிரைவ் மோட்கள் இந்த எலக்ட்ரிக் காரில் கிடைக்கின்றன. த்ரோட்டல் பெடலை உபயோகப்படுத்தும் போது, இந்த டிரைவ் மோட்கள் ஒவ்வொன்றிற்கும் இடையேயான வித்தியாசங்களை உணர முடிகிறது. அதாவது, ஈக்கோ மோடில் பவர் அவுட்புட் மிகவும் மென்மையானதாகவும், நார்மல் மோடில் பிஒய்டி எலக்ட்ரிக் கார்களுக்கே உண்டானது போல் பவர் அவுட்புட் சீரானதாகவும் உள்ளது.

ஸ்போர்ட் மோடில் இந்த எலக்ட்ரிக் காரில் அதிவேகமாக பயணிக்கலாம். அதாவது அதற்கேற்றவாறு இந்த டிரைவ் மோடில் செல்லும்போது அதிகமான டார்க் திறன் உடனடியாக கிடைக்கிறது. சஸ்பென்ஷன் செட்-அப்பை பொறுத்தவரையிலும், இந்த விலையில் இந்த அளவுக்கு சொகுசான பயணத்தை வழங்கக்கூடிய எலக்ட்ரிக் காரில் இதுவரையில் நாங்கள் பயணம் செய்தது கிடையாது.
இமேக்ஸ் 7 ஆனது எடைமிக்க எலக்ட்ரிக் காராக விளங்குகிறது. காரின் எடை அதிகமாக இருக்கும் போதிலும், சஸ்பென்ஷன் செட்-அப் விரைப்பானதாக வழங்கப்படவில்லை. ஆதலால், பள்ளம், மேடுகளில் காரை ஏற்றி இறக்கும்போது காருக்குள் இருக்கும் உங்களால் அந்த குலுக்கல்களை உணர முடியும். அதற்காக, பள்ளம், மேடுகளில் கார் குதித்தப்படி செல்கிறது என நாங்கள் சொல்லவில்லை; சறுக்கியப்படி செல்கிறது.

சஸ்பென்ஷன் செட்-அப் மென்மையானதாக உள்ளதால், குறிப்பாக வளைவுகளில் திரும்பும்போதும், அதிவேக பயணத்தின்போதும் மிதப்பது போன்று உள்ளது. பிரேக் பணிகளுக்கு இந்த எலக்ட்ரிக் காரின் முன்பக்கத்தில் வெண்டிலேட்டட் டிஸ்க்குகளும், பின்பக்கத்தில் வழக்கமான டிஸ்க்குகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த டிஸ்க் பிரேக்குகளை பயணத்தின்போது உபயோகப்படுத்துவது எளியதாக உள்ளது. ஆனால், ஸ்டார்ட்/ ஸ்டாப் செய்யும் சமயங்களில் இழுத்து பிடிப்பது போன்று சற்று அசவுகரியமாக உணர்ந்தோம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஒய்டி இந்தியாவுக்கு வேண்டுமாயின் புதிய நிறுவனமாக இருக்கலாமே தவிர்த்து, உலகளவில் எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் பழம் தின்று கொட்டை போட்ட நிறுவனங்களுள் இதுவும் ஒன்றாகும். ஆதலால், இதனை சமீபத்தில் துவங்கப்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனம் என நினைத்து விட வேண்டாம்.

மிகவும் டீசண்டான மற்றும் அளவில் பெரியதான எலக்ட்ரிக் காரை எதிர்பார்ப்பவர்களுக்கு புதிய பிஒய்டி இமேக்ஸ் 7 ஆனது ஏற்ற கார் ஆகும். இந்த எலக்ட்ரிக் காரின் ரேஞ்சை சோதனை செய்து பார்க்கும் அளவிற்கு இந்த காருடன் அதிக நேரம் கிடைக்கவில்லை. பிஒய்டி இமேக்ஸ் 7 எலக்ட்ரிக் காருக்கு இந்தியாவில் விற்பனையில் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் என்கிற ஹைப்ரீட் கார் மிகுந்த போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









