பிரெஞ்சு நிறுவனத்தின் தயாரிப்பு என்பதை பசால்ட் உறுதி பண்ணிருச்சு.. ஓட்டி பாத்துட்டீங்க வாங்காம விட மாட்டீங்க!
பிரபல பிரெஞ்சு நாட்டு கார் உற்பத்தி நிறுவனமான சிட்ரோன் (Citroen), கடந்த 2019 ஆம் ஆண்டில் அதன் கால் தடத்தை இந்தியாவில் பதித்தது. இதைத்தொடர்ந்து அதன் முதல் தயாரிப்பாக நாட்டில் சி5 ஏர்கிராஸ் (C5 Aircross) எனும் கார் மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஓர் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும். இதனை 2021 ஆம் ஆண்டிலேயே அது விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இப்போது நிறுவனத்தின் கீழ் ஒரு எலெக்ட்ரிக் கார் மாடலுடன் சேர்த்து நான்கு கார் மாடல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
இவற்றின் வரிசையிலேயே ஐந்தாவதாக ஓர் கார் மாடலை சிட்ரோன் சேர்த்திருக்கின்றது. பசால்ட் (Citroen Basalt) எனும் கார் மாடலையே அது இணைத்திருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி கூபே (SUV Coupe) வகை கார் மாடல் ஆகும். இந்த காரையே சமீபத்தில் நாங்கள் கோவா-வில் வைத்து டெஸ்ட் டிரைவ் (Test Drive) செய்து பார்த்தோம்.

இந்த டிரைவ் வாயிலாக பசால்ட் கார் பற்றி அறிந்துக் கொண்ட தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். இந்த காரை ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே ஓட்டி பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அதற்குள்ளாக கார் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல்களை போதுமான அளவில் அறிந்துக் கொண்டோம். இதுபற்றி விரிவாக பார்க்கலாம், வாங்க.
பசால்ட் எஸ்யூவி கூபே காரின் டிசைன் பற்றிய விபரம்: மிகவும் சுவாரஷ்யமான மற்றும் கவர்ச்சியான டிசைனையே பசால்ட் கார் மாடல் கொண்டிருக்கின்றது. அதன் ரூஃப் மிகவும் சாய்வாக உள்ளது. இது டிரங்குடன் நேரடியாக இணைகின்றது. இதுவே பசால்ட் ஓர் எஸ்யூவி கூபே வகை வாகனம் என்பதற்கு சான்றாக இருக்கின்றது.

காரின் முகப்பு பகுதி கவர்ச்சியான எல்இடி டிஆர்எல்-களைப் பெற்றிருக்கின்றது. இத்துடன், எல்இடி வகை லைட்டையே அது ஹெட்லைட்டாகவும் பெற்றிருக்கின்றது. ஆனால், பனி மின் விளக்கைப் பொருத்த வரை அது ஹாலோஜன் லைட்டாக இருக்கின்றது. அவை அனைத்தும் சேர்ந்து காரின் முன் பக்கத்திற்கு வேற லெவல் அழகை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றன.
இந்த அழகிற்கு கூடுதல் வலு சேர்க்கும் விதமாக பியானோ கருப்பு (Piano Black) நிறத்தால் அலங்கரிக்கப்பட்ட கிரில் மற்றும் பம்பர் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, ஆங்காங்கே குரோம் பூச்சுக் கொண்ட அலங்கார அணிகலன்களையும் பசால்டு காரின் முன் பக்கத்தில் காண முடிகின்றது.

முன்பக்கத்தின் அழகிற்காக எந்த அளவு அதிக வேலை பார்க்கப்பட்டு இருக்கின்றதோ, அதேபோல், இந்த காரின் பக்கவாட்டின் பகுதிக்கும் அழகு சேர்க்கும் விதமான வேலைகள் மிகப் பெரிய அளவில் பார்க்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அலாய் வீலை சிட்ரோன் நிறுவனம் தனித்துவமான ஸ்டைலில் வடிவமைத்திருக்கின்றது.
இது 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல் ஆகும். இத்துடன், பாடி கிளாடிங்குகள் காரை சுற்றிலும் வழங்கப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து, இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் பின் பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிக்கு அழகு சேர்க்கும் விதமாக பளபளப்பான கருப்பு நிறம் பூசப்பட்டு இருக்கின்றது.
அப்படியே கொஞ்சம் பின் பக்கம் நோக்கி நகர்ந்தால் காரின் சாய்வான மேற்கூரையை ரசிக்கலாம். தொடர்ந்து, அங்கு 3டி வகை லைட்டுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இது பின்பக்கத்தின் அழகுக்கு கூடுதல் அழகு சேர்க்கும் வகையில் உள்ளது. இதுமட்டுமில்லைங்க, இந்த காரின் பின்பக்கத்திற்கும் அதிகம் அழகு சேர்க்கின்ற வகையிலான வடிவமைப்பையே சிட்ரோன் வழங்கி இருக்கின்றது.
அந்தவகையில், சுறா மீனின் துடுப்பு போன்ற அன்டெனா, பனி போக்கி (de-foggers) ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், பின் பக்கத்தில் வைப்பர்கள் வழங்கப்படவில்லை. இதற்கு அடுத்தபடியாக சிட்ரோன், பசால்ட் மற்றும் ப்யூர் டெக் போன்ற பேட்ஜ்களும் இந்த காரின் பின் பக்கத்தில் இடம் பெற்றிருக்கின்றன. தொடர்ந்து, ரிவர்ஸ் எடுக்கும் போது உதவியாக இருப்பதற்காக ஓர் கேமிராவும் இந்த காரின் பின் பக்கத்தில் வழங்கப்பட்டு உள்ளது.
பசால்ட் எஸ்யூவி கூபே காரின் உட்பக்கம் எப்படி இருக்கு? வெளிப்புறத்தைவிட பலமடங்கு பிரம்மிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இந்த காரின் உட்பக்கம் இருக்கின்றது. ஏனெனில் அந்த அளவிற்கே சிறப்பம்சங்களை இந்த காரில் சிட்ரோன் வாரி வழங்கி இருக்கின்றது. குறிப்பாக, இதன் டேஷ்போர்டை மூன்று விதமான வண்ணங்களால் அலங்கரித்திருக்கும் விதம் முதல் பார்வையிலேயே மனம் கவரக் கூடியதாக உள்ளது.
இதுதவிர, ஏகப்பட்ட நவீன கால கருவிகளையும் இந்த காரில் சிட்ரோன் வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், ஒயர் இணைப்பு தேவைப்படாத ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய வசதிக் கொண்ட 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகக் காட்சியளிக்கின்றது.
இதுதவிர, இந்த காரில் ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் 15 வாட் திறன் கொண்ட ஒயர்லெஸ் சார்ஜர் போன்ற பிரீமியம் அம்சங்களையும் சிட்ரோன் வழங்கி இருக்கின்றது. இதுதவிர, காரின் பல பகுதிகளில் குட்டி குட்டியான ஸ்டோரேஜ் வசதிகளையும் வழங்கி உள்ளது. அந்தவகையில், பின் பக்க இருக்கையில் இருக்கும் ஆரம்-ரெஸ்ட்டில்கூட சிறிய ஸ்டோரேஜ் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது.
தொடர்ந்து, சி3 ஏர்-கிராஸ் காரில் காணப்படக் கூடிய அம்சமான 7அங்குல டிஎஃப்டி (TFT) வகை திரையையும் இந்த காரில் காண முடிகின்றது. இந்த திரை 3 விதமான தீம்-களைக் கொண்டிருக்கும். மேலும், ஓட்டுநர்களால் தங்களின் தேவைக்கு ஏற்ப இதில் மாற்றங்களைச் செய்துக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.
கார் பற்றிய பல்வேறு முக்கிய தகவல்களை வழங்கும் வசதிக் கொண்டதாகவும் இந்த திரை இருக்கின்றது. மேலும், கார் இயக்கத்தை மிகுந்த சுவாரஷ்யமானதாக மாற்றும் பொருட்டு தட்டையான அடிப் பகுதியைக் கொண்ட ஸ்டியரிங் வீல் பசால்ட் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதில் பலதரப்பட்ட கன்ட்ரோல் பொத்தான்களையும் நம்மால் காண முடிகின்றது.
இந்த ஸ்டியரிங் வீலை டில்ட் (Tilt) அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ள முடியும். ஆனால், டெலஸ்கோபிக் (Telescopic) அட்ஜெஸ்ட் செய்யும் வசதி இதில் வழங்கப்படவில்லை. இந்த காரை முழுக்க முழுக்க சொகுசான பயண அனுபவத்தை வழங்கும் பொருட்டே சிட்ரோன் உருவாக்கி இருக்கின்றது. இதற்கு மிக சிறந்த உதாரணமாக அதன் இருக்கைகள் இருக்கின்றன.
முன் மற்றும் பின் பக்க இருக்கை இரண்டும் மிகவும் சௌகரியமான பயண அனுபவத்தை வழங்கும் வகையில் உள்ளன. இதன் பின் இருக்கைகூட அதிக சொகுசானதாகவே உள்ளது. இதை மூன்று லெவல்களில் பின் பக்க பயணியின் தேவைக்கு ஏற்ப நகர்த்தி அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.
எனவே உயரமானவர்களுக்கும் ஏற்ற காராக சிட்ரோன் பசால்ட் காட்சியளிக்கின்றது. இதுதவிர, பின் இருக்கையின் ஹெட்-ரெஸ்டில் தலைகள் அங்கும்-இங்கும் அசையா வண்ணம் இருக்க வேண்டும் என்பதற்காக சிறிய றெக்கை அமைப்பு வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், தொந்தரவில்லா குட்டி தூக்கத்தைக்கூட இந்த காரில் போட முடியும்.
மேலும், பயணத்தை அதிக சொகுசானதாக அனுபவிக்க பின் பக்கத்திற்கு என தனி ஏசி துவாரங்கள் மற்றும் இரண்டு செல்போன் சார்ஜிங் போர்ட்டுகள் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆகையால், மிகுந்த பிரீமியமான மற்றும் சொகுசான பயண அனுபவம் இந்த காரில் உறுதியாக கிடைக்கும். அதேவேளையில், சிட்ரோன் நிறுவனம், இந்த பசால்ட் காரில் வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள் மற்றும் சன்ரூஃப் போன்ற அம்சங்களை வழங்க தவறிவிட்டது.
சிட்ரோன் பசால்ட் எஸ்யூவி கூபே காரின் எஞ்சின் திறன் மற்றும் ஓட்டும் அனுபவம் பற்றிய விபரங்கள்: சிட்ரோன் பசால்ட் காரில் இரண்டு விதமான எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இரண்டுமே பெட்ரோல் மோட்டார்கள் ஆகும். 1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் மோட்டார் ஆப்ஷனும், 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் ஆப்ஷன்தான் அவை ஆகும்.
இதில் முதல் மோட்டார் அதிகபட்சமாக 82 பிஎச்பி மற்றும் 115 என்எம் டார்க்கை வெளியேற்றும். அதேவேளையில், டர்போ பெட்ரோல் மோட்டாரானது சற்று அதிக திறனாக 109 பிஎச்பி மற்றும் 190 என்எம் டார்க்கை வெளியேற்றும். இந்த என்எம் டார்க்கானது மேனுவல் கியர்பாக்ஸைக் கொண்ட தேர்வின் திறன் ஆகும்.
அதேவேளையில், ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் அதிகபட்சமாக 205 என்எம் டார்க் வரை வெளியேற்றும். இதில், நாங்கள் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதிக் கொண்ட 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் தேர்வையே டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தோம். இது மிகவும் சிறப்பான ஆக்சலரேஷன் உணர்வையே நாங்கள் ஓட்டி பார்க்கும்போது வழங்கியது.
ஒரு சில செகண்டுகளிலேயே மூன்று இலக்க வேகத்தைத் தொட வேண்டும் எனில் இந்த தேர்வே உகந்ததாக இருக்கும். இதன் கியர் ஷிஃப்டும் பெரிய அளவில் சுணக்கம் இல்லாமல் நல்ல இயக்கத்தையே வழங்கியது. தொடர்ந்து, இதன் ஸ்டியரிங் வீல் கொஞ்சம் கனமாக இருப்பதை நாங்கள் உணர்ந்தோம். இது நல்லதுதான்.
அதீத வேகத்தில் லேசான உணர்வை வழங்குவதற்கு பதிலாக அது கொஞ்சம் கடினமாக இருந்தது. எனவே, ஸ்டியரிங் வீலின் ரெஸ்பான்ஸானது பசால்ட் காரில் மிகவும் சிறப்பானதாக உள்ளது. சின்ன அசைவே லேன்களை மாற்ற போதுமானதாக உள்ளது. இதுமட்டுமல்லைங்க, இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் சஸ்பென்ஷன் செட்-அப்பும் மிக மிக சிறப்பானதாக உள்ளது.
இது ஓர் கம்பளத்தில் மிதப்பதைப் போன்ற அனுபவத்தை வழங்கியது. அதிர்வுகள், கரடு-முரடான பாதையில் தூக்கி போடும் அனுபவம் என எதையும் இந்த கார் அதன் பயணிகளுக்கு வழங்காது. இதுமட்டுமில்லைங்க, இந்த காரின் என்விஎச் (NVH) லெவல்களும் மிக சிறப்பாகவே உள்ளன. ஆமாங்க, இந்த காருக்குள் இருக்கும்போது வெளிப்புறத்தில் காணப்படும் இரைச்சல்கள் பெரிய அளவில் கேட்காது.
எனவே மிக மிக விலை உயர்ந்த காரில் பயணிக்கும் அமைதியமான அனுபவம் நிச்சயம் இந்த சிட்ரோன் பசால்ட் எஸ்யூவி கூபே காரில் பயணிக்கும் பயணிகளுக்கு கிடைக்கும். இதுதவிர, பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காக ஏகப்பட்ட உயிர் காக்கும் பாதுகாப்பு கருவிகளையும் சிட்ரோன் நிறுவனம் இந்த காரில் வழங்கி இருக்கின்றது.
அந்தவகையில், 6 ஏர் பேக்குகள், ஏபிஎஸ், இபிடி, சிறுவர்களுக்கான ஐசோபிக்ஸ் இருக்கை நங்கூரங்கள் என ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த காரை சிட்ரோன் நிறுவனம் அதிகம் மைலேஜ் தரும் வாகனமாகவும் தயார் செய்திருக்கின்றது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கே 18 கிமீ முதல் 19.5 கிமீ வரையில் இந்த கார் மைலேஜ்தரும் என கூறப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எங்களின் இந்த டெஸ்ட் டிரைவ் வாயிலாக சிட்ரோன் பசால்ட் எஸ்யூவி கூபே கார், அதிகம் மைலேஜ் தரக் கூடிய கார் மற்றும் அதிக பாதுகாப்பு வசதிக் கொண்ட கார் என்பது தெரிய வந்திருக்கின்றது. இதுமட்டுமின்றி, அதிக சொகுசு மற்றும் பிரீமியம் உணர்வை வழங்கக் கூடிய காராகவும் இது இருக்கும் என்பதை நாங்கள் அறிந்துக் கொண்டோம். மேலும், இந்த காரின் வருகையால் டாடாவின் லேட்டஸ்ட் அறிமுகமான கர்வ்-க்கு தலைவலி அதிகரித்துள்ளது. விரைவில் இந்த காரும் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









