கம்மி விலைக்கு வந்தா சக்கை போடு போடும்!சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் ரிவியூ!
இந்தியாவில் மிட்-சைஸ் எஸ்யூவிகளுக்கு தான் மவுசு அதிகமாக இருக்கிறது. தற்போது ஹூண்டாய் கிரெட்டா மற்றும் மஹிந்திராவின் எஸ்யூவி கார்களை தான் இந்திய வாடிக்கையாளர்கள் அதிகமாக விரும்பி வருகின்றனர். இந்த செக்மெண்டில் போட்டி கடுமையாக இருக்கிறது.ஏகப்பட்ட கார்கள் இந்த செக்மெண்டில் விற்பனையாகி வருகிறது.
போட்டி என்றால் இந்த செக்மெண்டில் ஒரு போரே நடக்கிறது என சொல்லலாம். இந்தியாவில் கார் விற்பனை செய்யும் ஒவ்வொரு கார் தயாரிப்பு நிறுவனமும் ஏதாவது ஒரு காரை இந்த செக்மெண்டில் அறிமுகப்படுத்தி தனக்கென ஒரு பங்கு விற்பனையை பெற்று வருகிறது. எல்லா கார்களும் கணிசமான விற்பனையை பெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் சமீபத்தில் ஹோண்டா நிறுவனமும் இணைந்துள்ளது. தனது பாக்ஸி எஸ்யூவி இந்த செக்மெண்டில் தான் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவில் கால் தடம் பதித்த சிட்ரோன் நிறுவனமும் இந்த போட்டியில் களமிறங்க முடிவு செய்து விட்டது. அதற்கான காரையும் தயார் செய்துவிட்டது.
சிட்ரோன் நிறுவனம் தனது சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் என்ற காரை இந்த மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்டில் களம் இறக்கி உள்ளது. இந்த காரை ஓட்டி பார்க்க டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு அழைப்பு வந்தது. அதன்படி எங்கள் குழு சென்னை ஈசிஆரில் இந்த காரை ஓட்டிப் பார்த்தது. இந்த கார் எப்படி இருக்கிறது என்று தொடர்ந்து விரிவாக காண்போம்.

டிசைன், இன்டீரியர், டெக்னாலஜி மற்றும் பிராக்டிகாலிட்டி: இந்த சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் காரை பொருத்தவரை இது சி3 ஹேட்ச்பேக் காரின் ஒரு நீட்டிக்கப்பட்ட வெர்ஷனா ஆக இருக்கிறது. இருந்தாலும் அதிலிருந்து சில மாறுதல்கள் இதில் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு காருக்கும் வித்தியாசம் தெரியும்படியான மாற்றங்கள்.
இந்தக் காரில் சி3 ஹேட்ச்பேக்கில் உள்ள அதே ஹெட் லைட்கள், ஒய் வடிவ டிசைன் கொண்ட டிஆர்எல் மேலும் கிரில்லில் உள்ள மேல்பகுதி எல்லாம் ஹேட்ச்பேக் காரில் உள்ளது போலவே இருக்கிறது. மற்றபடி ஒட்டுமொத்த முன் பக்கம் டிசைன் சி3 காரை விட சி3 ஏர் கிராஸ் காரில் வித்தியாசமாக இருக்கிறது.

சி3 ஏர் கிராஸ் காரில் சி3 காரை விட கிரில் பகுதி கீழாக இருக்கிறது. பெரிய கிரில் பகுதியில் பம்பர் மற்றும் ரிஜிஸ்ட்ரேஷன் பிளேடுக்கான இடம் இருக்கிறது. அடிப்பகுதியில் சில்வர் பாக்ஸ் பிளேட் மற்றும் வட்ட வடிவிலான ஃபாக் லேம்ப் பொருத்தப்பட்டுள்ளது.
பக்கவாட்டை பொருத்தவரை ஒரு எஸ்யூவி கார் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 200மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருக்கிறது. இதில் வீல் ஆர்ச்சுகள் மற்றும் குவாட்ராட்டிக் டைமண்ட் கட் 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இது பார்க்க கண்ணை கவரும் வகையில் இருக்கிறது.

இந்தக் காரின் பின்பக்கத்தை பொறுத்தவரை 3டி c வடிவ டெயில் லைட் வழங்கப்பட்டுள்ளது. இது சிட்ரோனின் கருப்பு நிற பிளாஸ்டிக் ஸ்டிரிப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. பின்பக்க பம்பருக்கு அடியிலும் ஃபாக்ஸ் டேஷ் பிளேட் வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் வெளிப்புறத்தில் சிறப்பான வடிவமைப்பை இந்த கார் பெற்றுள்ளது.
இந்தக் காரின் உட்புறத்தை பொருத்தவரை டேஷ் போர்டு இரண்டு கலர்களில் வழங்கப்பட்டுள்ளது. இது சி3 ஹேட்ச்பேக் காரை போலவே அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் காரில் 10.2 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் பொருத்தப்பட்டுள்ளது. இதே ஸ்க்ரீன் தான் ஹேட்ச்பேக் காரிலும் இருக்கிறது. டிரைவர் டிஸ்ப்ளே ஆக 7 இன்ச் ஸ்கிரீன் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த காரில் உள்ள டச் ஸ்கிரீன் இந்த செக்மெண்டில் சிறந்த டச் ஸ்கிரீனாக இல்லை. ஆனால் இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே கனெக்டிவிட்டி இருக்கிறது. இதனால் நீண்ட தூரம் பயணம் செய்யும்போது உங்களுக்கு ஏற்ற பல வசதிகளை இதில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
முன்பக்க சீட்டில் டிரைவரின் தலைக்கு மேலே பின்பக்கம் ஏசி புளோயர்கள் வழங்கப்பட்டுள்ளன. இது டொயோட்டா குவாலிஸ் காரில் இருப்பதைப் போலவே வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் அந்த இடத்தில் சன்ரூஃப் இல்லை என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த வசதியை வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்ப்பார்கள்.

முன்பக்கம் உள்ள சீட்டுகள் முதுகுப் பகுதிக்கும் தொடை பகுதிக்கும் நல்ல சப்போர்ட் வழங்குகிறது. ஆனால் நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ற சீட்டுகள் இல்லை. இதே கதை தான் பின்பக்கம் உள்ள சீட்டிற்கும். பின்பக்கம் நடு வரிசை, பின் வரிசை என இரண்டு விதமாக இருக்கிறது இரண்டு வரிசையிலும் குஷன் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை.
பின் வரிசை சீட்டுகள் குழந்தைகளுக்கான சீட்டுகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கு பெரியவர்கள் அமர்ந்தால் அவர்கள் முட்டியும் இடிக்கும் தலையும் இடிக்கும் வகையில் தான் இருக்கிறது. நடு வரிசையில் ஆம் ரெஸ்ட்டுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது பின் சீட்டில் இருப்பவர்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும்.

இந்தக் காரின் பூட் பகுதி 511 லிட்டர் வசதி கொண்ட பூட்டாக வழங்கப்பட்டுள்ளது. இது வார இறுதியில் குடும்பத்துடன் வெளியூர் செல்ல ஏற்ற பொருட்களை தாங்கும் அளவிற்கு இட வசதி கொண்டதாக இருக்கிறது. அதேநேரம் பின்வரிசை சீட்டை மடக்கி விட்டால் தாராளமான இடவசதி கிடைக்கிறது. ஐந்து பேர் மட்டும் இந்த காரில் பயணம் செய்தால் அதிகமான பொருட்களை கொண்டு செல்ல முடியும்.
இந்த சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் காரில் மை சிட்ரோன் கனெக்டெட் சூட் என்ற கனெக்டெட் அம்சம் இருக்கிறது. இதில் ஜியோ ஃபென்சிங், ஃப்யூயல் ஸ்டேட்டஸ் செக், ஒன் கிளிக், எஸ் ஓ எஸ் அலர்ட் உள்ளிட்ட 35 கனெக்டெட் கார் தொழில்நுட்பங்கள் இதில் இருக்கிறது.
இந்த சிட்ரோன் சி3 ஏர் கிராஸ் காரின் பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை இதில் ஒரே ஒரு வேரியன்ட் தான் வருகிறது. அந்த காரில் 6 ஏர் பேக்குகள் இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், டிபிஎம்எஸ், ஐஎஸ்ஓ பிக்ஸ் குழந்தைகளுக்கான சீட்டு அங்கர்கள், ரியர் வியூ கேமரா, ரியர் பார்க்கிங் சென்சார் ஆகிய அம்சங்கள் உள்ளது.
இன்ஜின் மற்றும் ஸ்பெக்ஸ்: இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 4300 மிமீ நீளமும் 1796 மிமீ அகலமும் 1654 மிமீ உயரமும் அதே நேரம் 2006 மிமீ நீளமான வீல் பேஸூம் உள்ளது. இதன் பூட் வசதி 444 முதல் 511 லிட்டர் வரை ஆன இட வசதி கொண்டதாக இருக்கிறது. இது சீட்டிங் கான்ஃபிகரேஷனை பொருத்து மாறுபடும்.
சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் காரை பொறுத்தவரை 1.2 லிட்டர் டர்போ சார்ஜர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது இது 108.4 பிஎச்பி பவரை 5500 ஆர்பிஎம்மிலும் 190 என்எம் டார்க் திறனை 1750 ஆர்பிஎம்மில் வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த கார் அதிகபட்சமாக 18.5 கி.மீ மைலேஜ் வழங்கும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் செயல்படும்போது 2000 ஆர்பிம் முதல் சிறப்பான பவர் கிடைக்கிறது. 5500 ஆர்பிஎம் வரை நல்ல பவர் கிடைக்கிறது. அதன் பின்பு பவர் குறைகிறது. இதனால் இந்த காரில் அதிகமான வேகத்தில் செல்ல முடியாது.
இதனால் மூன்றாவது கியரில் நீங்கள் 20 கிலோ மீட்டர் வேகத்தில் இருந்து 100 கிலோமீட்டர் வேகம் வரையில் செல்ல முடியும். இதன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் ஸ்மூத்தாக இருக்கிறது. கீயரை டவுன் செய்வதும் அப் செய்வதும் பெரிய சிரமமாக இல்லை. இந்த கியர் பாக்ஸ் லைட் வெயிட் கிளட்ச் பெடல் மற்றும் சீலிங் உடன் இணைக்கப்பட்டுள்ளதால் சிட்டி டிராபிக்கில் ஓட்ட சிறப்பாக இருக்கும்.
இந்த சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் காரில் சாஃப்ட் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இது கரடு முரடான சாலைகளுக்கு ஏற்றவாறு இல்லை. இருந்தாலும் திருப்பங்களில் இதன் விலையில் உள்ள போட்டிக்கார்களை பார்க்கும்போது இது சிறப்பாக தான் இருக்கிறது. இந்த சிட்ரோன் சி3 ஏர் கிராஸ் காரின் பிரேக்குகளை பொருத்தவரை சிறப்பாக இருக்கிறது. விரைவாக செயல்பட்டு கார் நிற்கிறது இதனால் தைரியமாக வேகமாக செல்ல முடியும்.
இந்த கார் ஒரே ஒரு வேரியண்டில் மட்டும்தான் தற்போது வெளியாகியுள்ளதால் இதன் விற்பனை பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. சில வாடிக்கையாளர்களுக்கு இதில் சில ஆப்ஷன்கள் தேவைப்படலாம். சிட்ரோன் நிறுவனம் இதன் விலையை அறிவித்த பின்பு தான் இது குறித்த விற்பனை எப்படி இருக்கும் என நம்மால் கணிக்க முடியும்.


Click it and Unblock the Notifications









