நடுத்தர வர்க்கத்தின் நண்பனாக வரும் புதிய டட்சன் கோ ப்ளஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்திய மார்க்கெட்டில் அதிகரித்து வரும் சந்தைப் போட்டி காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய கார் ரகம் முளைப்பது வாடிக்கையாகியுள்ளது. காம்பேக்ட் எஸ்யூவி, காம்பேக்ட் எம்பிவி, ஹேட்ச்பேக் கிராஸ்ஓவர் என கடந்த சில ஆண்டுகளாக இந்திய கார் மார்க்கெட் பல புதிய ரகங்களை கண்டு வருகிறது.

அந்த வகையில், தற்போது மினி எம்பிவி என்ற புதிய ரகத்தை இந்திய கார் மார்க்கெட் காண இருக்கிறது. டட்சன் கோ ப்ளஸ் கார் மூலம் அந்த புதிய ரகத்தை நிசான் நிறுவனம் இந்தியாவில் விதைக்க உள்ளது. டட்சன் கோ ஹேட்ச்பேக் காருக்கு இருந்ததைவிட பன்மடங்கு எதிர்பார்ப்பு இந்த புதிய மினி எம்பிவி காருக்கு இருக்கிறது. ஏனெனில், 4 மீட்டருக்குள் அடக்கப்பட்ட முதல் 7 சீட்டர் எம்பிவி என்பதும், ரூ.5 லட்சத்திற்குள் வரும் எம்பிவி என்பதும் இதன் மீதான எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியிருக்கிறது.

ஆனால், அந்த எதிர்பார்ப்புகள் அனைத்தையும் டட்சன் கோ ப்ளஸ் கார் பூர்த்தி செய்யுமா? என்ற கேள்விகளுடன், அந்த காரை சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனிலிருந்து, ரிஷிகேஷ் வரை டெஸ்ட் டிரைவ் செய்தோம். அதில், இந்த காரில் இருக்கும் சாதக மற்றும் பாதக அம்சங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாக வழங்கியுள்ளோம்.


மாடல் விபரம்

மாடல் விபரம்

மாடல்: டட்சன் கோ ப்ளஸ்

வேரியண்ட்: 'T' டாப் வேரியண்ட்

எஞ்சின்: 3 சிலிண்டர், 1.2 லிட்டர் பெட்ரோல்

இடம்: டேராடூனிலிருந்து ரிஷிகேஷ் வரை - உத்தரகாண்ட் மாநிலம்.

தோற்றம்

தோற்றம்

டட்சன் கோ ஹேட்ச்பேக் காரின் அடிப்படையிலான மாடல் என்பதால் ஒட்டுமொத்த தோற்றத்திலும் கோ காரின் பிரதிபலிப்பு தெரிகிறது. ஆனாலும், மாற்றங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளன. அவை எங்கெங்கு நிகழ்ந்துள்ளன என்பதை அடுத்த மூன்று ஸ்லைடுகளில் காணலாம்.

 முகப்பு

முகப்பு

கோ ஹேட்ச்பேக் காருக்கும், கோ ப்ளஸ் காரின் முகப்பும் ஒன்று போலத்தான் உள்ளன. அதே அறுகோண வடிவிலான முகப்பு கிரில், நடுவில் நச்சென்ற டட்சன் பிராண்டு லோகோ, ஹெட்லைட் போன்றவை கோ ஹேட்ச்பேக்தான் என்று சொல்ல வைக்கிறது. டெஸ்ட் டிரைவ் செய்த டாப் என்ட் மாடலில் பனி விளக்குகள் இல்லை. பட்ஜெட் மாடல் என்பதால், இதுபோன்ற பல விஷயங்களை நாம் ஜீரணித்துக் கொள்ள வேண்டியதுதான். ஆனால், பக்கவாட்டிலும், பின்புறத்திலும் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.

பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டில் சி பில்லருக்கு பின்புறம் நீட்டிக்கப்பட்டு, எம்பிவி மாடலாக மாற்றப்பட்டிக்கிறது. ஏனோதானோ என்று மாற்றியது போல் இல்லாமல் மிக நேர்த்தியாக ஓர் சிறப்பான தோற்றம் கொண்ட எம்பிவி காராக 4 மீட்டருக்குள் வைத்து செதுக்கியுள்ளனர். கூரை பின்னோக்கி மெல்ல சரிந்திருக்கிறது. கோ ஹேட்ச்பேக் காரைவிட, இந்த காரின் பாடி லைன்களில் வித்தியாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பில்லர்கள் கருப்பு நிறம் தீட்டப்பட்டிருக்கிறது. கடைசி வரிசைக்கான கண்ணாடி ஜன்னலும் நேர்த்தியாக இருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் ஒரு முழுமையான எம்பிவி காராகவே வெளிப்புறத்தில் காட்டிக் கொள்கிறது.

பின்புறத் தோற்றம்

பின்புறத் தோற்றம்

டட்சன் கோ ஹேட்ச்பேக் காரில் இருக்கும் அதே டெயில் லைட் கிளஸ்ட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அதுதவிர, மற்ற பகுதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கோ ஹேட்ச்பேக் காரிலிருந்து எம்பிவியாக காட்டும் விதத்தில் நம்பர் பிளேட் மேலே கொடுக்கப்பட்டு, புதிய பம்பர் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த தோற்றத்தில் ஓர் சிறப்பான எம்பிவி மாடலாகவே காட்சி தருகிறது. வெளிப்புறத்தில் ஓர் சிக்கனமான மாடலாக கூற முடியவில்லை. ஆனால், சிக்கன கொள்கையின் எதிரொலியை இன்டிரியரில் அதிகம் காண முடிகிறது. அதனை அடுத்த ஸ்லைடுகளிலிருந்து பார்க்கலாம்.

 இன்டிரியர்

இன்டிரியர்

கோ ஹேட்ச்பேக் காரின் அதே டேஷ்போர்டு அமைப்புதான் இந்த காரிலும் இடம்பிடித்துள்ளது. பிளாஸ்டிக் தரம் பரவாயில்லை ரகம். இந்த காரில் 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், சில்வர் வளையம் கொண்ட ஏசி வென்ட்டுகள், சென்டர் கன்சோல், ஸ்மார்ட்போன் டாக்கிங் ஸ்டேஷன், இரட்டை வண்ணத்திலான பினிஷிங்குகள் ஆகியவை மனதிற்கு இதம் தருகின்றன. கியர் லிவர் சென்டர் கன்சோலுக்கு கீழே உள்ளது. அதற்கு அருகில் ஹேண்ட் பிரேக் லிவர் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கியர் லிவர் அமைப்பு

கியர் லிவர் அமைப்பு

சென்டர் கன்சோலுக்கு கீழே கியர் லிவர் அமைப்பு இருப்பதால், வலது புறத்தில் நெருக்கடியாக பார்க்கிங் செய்யும்போது, இடதுபுற கதவு வழியாக எளிதாக வெளியேற உதவிபுரியும். மேலும், ஓட்டுனருக்கும், முன்புற இருக்கையில் அமர்ந்திருப்பவருக்கும் வசதியாக கோ ஹேட்ச்பேக் கார் போன்ற இருக்கை இணைப்பு உள்ளது.

ஹேண்ட் பிரேக் லிவர்

ஹேண்ட் பிரேக் லிவர்

கியர் லிவர் மாறியது போன்ற ஹேண்ட் பிரேக் இடமும் மாறியிருக்கிறது. சென்டர் கன்சோலுக்கு கீழே, கியர் நாப் அமைந்திருப்பதற்கு வலது புறத்தில், ஹேண்ட் பிரேக் லிவர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அடிக்கடி பயன்படுத்தும்போது சிறிது சிரமம் தெரியலாம். ஆனால், பழகிவிட்டால், எளிதாக இருக்கும்.

பவர் விண்டோஸ்

பவர் விண்டோஸ்

முன் வரிசை இருக்கைக்குக்கு மட்டும் பவர் விண்டோஸ் வசதி உள்ளது. பின்புற கதவுகளில் பவர் விண்டோஸ் வசதி இல்லை. மேலும், ஓட்டுனருக்கு அருகிலும், முன் இருக்கை பயணிக்கும் தனித்தனி பவர் விண்டோஸ் சுவிட்சுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

 கிளவ் பாக்ஸ்

கிளவ் பாக்ஸ்

மூடி இல்லாத சிறிய அளவிலான கிளவ் பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில், ஆவணங்களை மட்டும் வைத்துக் கொள்ளலாம்.

டாக்கிங் ஸ்டேஷன்

டாக்கிங் ஸ்டேஷன்

தற்போது கார் வைத்திருப்பவர்களிடம் கண்டிப்பாக ஸ்மார்ட்போன் இருக்கும் என்பதை மனதில்கொண்டு ஸ்மார்ட்போன் டாக்கிங் ஸ்டேஷன் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆக்ஸ்போர்ட் மூலம் ஸ்மார்ட்போனை இணைத்துக் கொண்டு பாடல்களை கேட்கலாம். ஸ்மார்ட்போனுக்கு யுஎஸ்பி கேபிள் மூலம் சார்ஜ் செய்வதற்கான போர்ட் கொடுக்கப்பட்டிருப்பதுடன், வால்யூம் கன்ட்ரோல் வசதியும் உள்ளது.

இன்ஸ்ட்ரூமென்ட் பேனல்

இன்ஸ்ட்ரூமென்ட் பேனல்

கோ காரில் இருக்கும் அதே இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்தான் இடம்பெற்றிருக்கிறது. அனலாக் ஸ்பீடோமீட்டர் பார்ப்பதற்கு தெளிவாக இருந்தாலும், டிஜிட்டல் டிஸ்ப்ளேயில் டாக்கமீட்டர் கொடுக்கப்பட்டிருப்பது, ஆர்பிஎம், பார்ப்பதற்கு சிரமமாக இருப்பதுடன், அது கவனக்குறைவையும் ஏற்படுத்துகிறது.டாக்கோ மீட்டர் தவிர்த்து டிஜிட்டல் டிஸ்ப்ளே மூலம் ட்ரிப் மீட்டர், எலக்ட்ரானிக் எரிபொருள் மானி கொடுக்கப்பட்டிருக்கின்றன. அனலாக் ஸ்பீடோமீட்டரில் ஊடாக, வேகத்துக்கு தகுந்தவாறு எந்த கியரில் செல்ல வேண்டும் என்பதை பரிந்துரைக்கும் கியர் ஷிப்ட் கெய்டு வசதியும் உள்ளது.

இண்டிகேட்டர் ஸ்டால்க்

இண்டிகேட்டர் ஸ்டால்க்

வைப்பர் மற்றும் இன்டிகேட்டர் ஸ்டால்க் தடிமனாக இருப்பது கைகளுக்கு ஏதுவாக இருக்கிறது. சில பட்ஜெட் மாடல்களில் தடிமன் குறைவாக இருந்தால், தேடி பிடிக்க வேண்டியிருக்குமல்லவா?.

பாட்டில் ஹோல்டர்

பாட்டில் ஹோல்டர்

முன்புற கதவுகளில் சிறிய பாட்டில்களை வைத்துக் கொள்ளலாம். பின்புற கதவில் பாட்டில்களை வைத்துக் கொள்வதற்கான இடவசதி இல்லை. இதேபோன்றே, முன்புற கதவுகளில் இரண்டு ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பிராண்டு பேட்ஜ்

பிராண்டு பேட்ஜ்

சின்ன சின்ன விஷயங்கள் சிறப்பு சேர்க்கும். அநத் வகையில், மிதியடிகளில் கோ ப்ளஸ் பேட்ஜ் கொடுக்கப்பட்டிருப்பது சிறப்பானதாக குறிப்பிடலாம்.

ஏசி செயல்பாடு

ஏசி செயல்பாடு

ஏசி வென்ட்டை திருகு முறையில் திசையை மாற்றும் வசதி கொடுக்கப்பட்டிருப்பது, பிடித்தமான விஷயம். மூன்று வரிசை கொண்ட இந்த காரில் டேஷ்போர்டில் இருக்கும் ஏசி வென்ட் மூலமாகவே கார் முழுவதும் குளிர்ச்சியாக வேண்டியிருப்பதால், கேபினில் குளிர் பரவுவதற்கு சிறிது நேரம் பிடிக்கிறது. உடனடியாக முழு குளிர்ச்சியை உணர முடியாது.

2-வது வரிசை இருக்கை

2-வது வரிசை இருக்கை

நெருக்கடியான எம்பிவி என்பதால், இருக்கைகளின் தடிமன் குறைவாக இருக்கிறது. எனவே, அதிக சொகுசாக அமர்ந்து செல்லலாம் என்ற நினைப்பது தவறாக இருக்கும். மேலும், இரண்டாவது வரிசை இருக்கையை முழுதுமாக மடிக்க முடியும். ஆனால், இருபுறத்திலும் லாக்குகளை எடுக்க வேண்டியிருப்பது சிரமம் தரலாம்.

இடவசதி

இடவசதி

கோ காரைவிட நீளம் 210 மிமீ கூடியிருந்தாலும், வீல் பேஸ் அளவு ஒன்றுதான். அதில், மூன்றாவது வரிசை இருக்கை எனும் மாஜிக்கை நிகழ்த்தியுள்ளனர் நிசான் எஞ்சினியர்கள். இரண்டாவது வரிசை இருக்கையின் இடவசதி போதுமானதாக இருக்கிறது. ஆனால், மூன்றாவது வரிசை இருக்கை...

முன் வரிசை இருக்கைகள்

முன் வரிசை இருக்கைகள்

ஓட்டுனர் இருக்கையின் அமரும் அமைப்பு சிறப்பாக இருக்கிறது. சராசரி உயரம் கொண்டவர்களுக்கு கால்களுக்கு போதுமான இடவசதி உள்ளது. இருக்கையுடன் இணைந்த ஹெட்ரெஸ்ட் கொடுத்துள்ளனர். முதுகு வலி ஏற்படாத வகையில் இருக்கையின் அமைப்பு டிசைன் செய்யப்பட்டுள்ளது.

3-வது வரிசை இருக்கை

3-வது வரிசை இருக்கை

எல்லோருடைய, எதிர்பார்ப்பும் மூன்றாவது வரிசை இருக்கை பற்றியதுதான். இந்த காரின் மூன்றாவது வரிசையில், 12 வயது வரையுடைய குழந்தைகளை அமர வைக்கலாம். இன்னோவாவை நினைத்துக் கொண்டு இந்த காருக்கு உள்ள வரக்கூடாது. பெரியவர்கள் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம் என்ற நினைப்புக்கு எள்ளளவும் செல்லக்கூடாது. 4 மீட்டருக்கு அவ்வளவுதான் தர முடியும்.

கடைசி வரிசை ஜன்னல்

கடைசி வரிசை ஜன்னல்

வெளிப்புறத்திலிருந்து அழகாக இருக்கும் மூன்றாவது வரிசை ஜன்னல், உட்புறத்திலிருந்து பார்க்கும்போது போதிய பார்வையை வழங்கவில்லை. மேலும், சிறியவர்கள் அமர்ந்தால் வெளிப்புறத்தை பார்க்க இயலாது.

பூட் ரூம் இடவசதி- 1

பூட் ரூம் இடவசதி- 1

மூன்றாவது வரிசையில் பயணிகள் அமர்ந்திருக்கும்போது, வெறும் 48 லிட்டர் மட்டுமே பூட் ரூம் இடவசதி இருக்கிறது. அதில், சிறிய பைகளை மட்டுமே வைக்க முடிகிறது. ஆனால்...

பூட் ரூம் இடவசதி- 2

பூட் ரூம் இடவசதி- 2

மூன்றாவது இருக்கையை மடக்கினால், பூட்ரூமை 347 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக மாற்றலாம். மேலும், 5 பயணிகள் செல்லும்போது, போதுமான பொருட்களை வைத்துக் கொண்டு செல்வதற்கு ஏதுவான மாடலாக இருக்கும். அதாவது, ஹேட்ச்பேக் கார்களைவிட பெஸ்ட்டான ஆப்ஷனாக இருக்கும்.

பூட் ரூம் இடவசதி- 3

பூட் ரூம் இடவசதி- 3

மூன்றாவது மற்றும் இரண்டாவது வரிசை படத்தில் உள்ளதுபோன்று மடக்கினால், பொருட்களை வைப்பதற்கு அதிக அளவு இடவசதியை பெற முடியும்.

ஏறி, இறங்கும் வசதி

ஏறி, இறங்கும் வசதி

முன்புற கதவுகள் முழுவதுமாக திறப்பதால், ஏறி இறங்குவதற்கு வசதி இருக்கிறது. பின்புற கதவு போதுமான அளவு திறப்பதும் வயதானவர்கள் ஏறுவதற்கு ஏதுவாக இருக்கும். பிற எம்பிவி கார்களில் ஒரு இருக்கையை முன்னோக்கித் தள்ளிவிட்டு, மூன்றாவது இருக்கைக்கு செல்ல வேண்டியிருக்கும். ஆனால், இந்த காரில் இரண்டாவது இருக்கையை முழுவதுமாக மடக்க முடிவதால், எளிதாக பின் இருக்கைக்கு செல்ல முடியும்.

எஞ்சின்

எஞ்சின்

டட்சன் கோ காரில் இருக்கும் அதே 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின்தான் இந்த காரிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 67 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க்கையும் வழங்கும். நகர்ப்புறங்களுக்கு சிறப்பானதாக இருக்கும் என்று கூறலாம். சிறிய நகரங்கள் மற்றும் மலைச்சாலைகளிலேயே அதிகம் ஓட்டியதால், நெடுஞ்சாலைகளில் வைத்து இதன் செயல்திறனை பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை. மேலும், 3 சிலிண்டர் எஞ்சின் என்பதால் அதிர்வுகளும், சப்தமும் மிக அதிகம் இருக்கிறது.

கியர் ஷிப்ட்

கியர் ஷிப்ட்

இந்த காரில் கொடுக்கப்பட்டிருக்கும் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் குறை சொல்ல முடியாத அளவு இல்லாதகியர் ஷிப்ட் செய்யும்போது கடினமானக தெரியவில்லை. இதன் கிளட்ச் இலகுவாக இருக்கிறது. அதேவேளை, லாங் டிராவல் கிளட்ச் என்பதால், கால்களுக்கு கூடுதல் வேலை கொடுக்கிறது.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

இந்த காரின் 67 பிஎச்பி பவரும், 104 என்எம் டார்க்கும் அசரடிக்கிறது. சிறப்பான திறனை வெளிப்படுத்துவது மனதுக்கு உற்சாகத்தை கொடுக்கும் விஷயம். 0 - 100 கிமீ வேகத்தை 14.5 வினாடிகளில் எட்டியது. ஆனால், ஏசி ஆன் செய்துவிட்டு 5 பயணிகள், பூட் ரூம் முழுவதும் பொருட்களை வைத்து ஓட்டும்போது, பவர் வெளிப்பாடு சிறிது குறைபாடு இருப்பதால், கியர்களை அடிக்கடி மாற்ற வேண்டியிருக்கிறது.

ஸ்டீயரிங் ஃபீட் பேக்

ஸ்டீயரிங் ஃபீட் பேக்

டாப் வேரியண்ட்டில் மட்டும் ஸ்பீட் சென்சிட்டிவ் எலக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங் கொடுக்கப்பட்டிருக்கிறது. 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீலில் கவர் இல்லை என்பதால் பிடிமானம் போதுமானதாக இல்லை. குறைந்த வேகத்தில் ஸ்டீயரிங் இலகுவாக தெரியும் அதேநேரத்தில், வேகம் அதிகரிக்கும்போது மிகவும் ஹெவியாக இருக்கிறது.

ஓட்டும்போது அனுபவம்

ஓட்டும்போது அனுபவம்

4 மீட்டருக்குள் வடிவமைக்கப்பட்ட எம்பிவி என்பதால், ஓட்டுவதற்கு சிறப்பாக இருக்கிறது. ஓட்டுனர் இருக்கை, அமர்வதற்கு சிறப்பான உணர்வை தருவதுடன், போதிய பார்வையையும் வழங்குகிறது. வெளிப்புற ரியர் வியூ கண்ணாடிகள் பின்னால் வரும் வாகனங்களை தெளிவாக காட்டுகிறது. அதேவேளை, பின்புற வைன்ட்ஷீல்டு சிறியது என்பதோடு, மூன்றாவது வரிசை இருக்கை உட்புறத்தில் இருக்கும் ரியர் வியூ கண்ணாடி வழியாக பின்னால் வரும் வாகனங்களை தெளிவாக பார்க்க இயலவில்லை. நெருக்கடியான இடங்களில் ரிவர்ஸ் எடுக்கும்போதும் சிரமம் இருக்கிறது. கேபினில் இரைச்சல் சப்தமும் கூடுதலாக இருக்கிறது.

கையாளுமை

கையாளுமை

நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு எளிய கையாளுமை கொண்டதாக இருக்கும். 4.6 மீட்டர் டர்னிங் ரேடியஸ் கொண்டிருப்பதால், திருப்புவதற்கு மிக எளிதாக இருப்பதுடன், ஒரு எம்பிவி மாடலை ஓட்டுவது போன்று இல்லை. வளைவுகளில் திரும்பும்போது பாடி ரோல் அதிகம் தெரிவதால், நெடுஞ்சாலை பயணத்திலும், வளைவுகளிலும் அதிக கவனத்துடன் கையாள வேண்டியிருக்கிறது. மேலும், இதனை குறுகிய இடத்திலும் வெகு எளிதாக திருப்ப முடிகிறது என்பதும் சிறப்பு.

ஓட்டுனர் இருக்கை அமைப்பு

ஓட்டுனர் இருக்கை அமைப்பு

இதன் விண்ட்ஸ்கிரீன் அமைப்பு சிறப்பான பார்வையை சாலையில் பதித்துச் செல்ல உதவுகிறது. முன்புற ஜன்னல்கள் சிறந்த பார்வையை வழங்குவதால், வளைவுகள் மிகுந்த இடங்களில் எளிதாக ஓட்ட உதவின. ஓட்டுனர் இருக்கை அமைப்பும் மிகச்சிறப்பாக இருக்கிறது.

 சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

முன்புறத்தில் டபுள் பைவோட் லோ ஆர்ம் கொண்ட மெக்பர்ஷன் ஸ்டர்ட் சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் லீனியர் டேம்பர் கொண்ட டார்ஷன் பீம் சஸ்பென்ஷனும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. காரின் முக்கிய சிறப்புகளில் சஸ்பென்ஷனும் சிறப்பான உணர்வை தருகின்றன. 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருப்பதும் இந்திய சாலைகளுக்கு ஏற்றதாக இருக்கும். ஆனால், இதன் வீல்கள்தான்...

 வீல்கள்

வீல்கள்

வெளிப்புறத் தோற்றத்தில் சிறப்பானதாக இருந்தாலும், இந்த காரின் இருக்கும் 13 இஞ்ச் வீல்கள் காரின் கம்பீரத்தை குறைக்கும் அம்சமாக இருக்கிறது. தவிர, குண்டு, குழிகளில் ஏறி, இறங்கும்போது கார் அதிகம் குதிப்பதற்கு இந்த வீல்கள் காரணமாக இருக்கின்றன. டாப் வேரியண்ட்டில் கூட அலாய் வீல்கள் இல்லை. ட்யூப்லெஸ் டயர்கள் கொடுக்கப்பட்டிருப்பது ஆறுதலான விஷயம். டெஸ்ட் செய்த மாடலில் ஸ்ட்ராடா டயர்கள் பொருத்தப்பட்டிருந்தன. இவை இந்தோனேஷியாவில் தயாரிக்கப்பட்டவை. அதாவது, கோ ப்ளஸ் கார் அங்குதான் முதலில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவில் விற்பனைக்கு வரும் மாடல்களில் இதே டயர் இருக்குமா அல்லது உள்ளூரிலேயே டயர்கள் சப்ளை பெற முடியுமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

பிரேக் செயல்திறன்

பிரேக் செயல்திறன்

முன்புறத்தில் டிஸ்க் பிரேக்களும், பின்புறத்தில் டிரம் பிரேக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளன. போதுமான செயல்திறனை வெளிகாட்டுகிறது.

மைலேஜ்

மைலேஜ்

இந்த கார் லிட்டருக்கு 20.62 கிமீ மைலேஜ் தரும் என்று டட்சன் நிறுவனம் தெரிவிக்கிறது.

பூட் ரூம் லிவர்

பூட் ரூம் லிவர்

பூட்ரூமை வெளியிலிருந்து திறக்க முடியாது. பூட் லிட் ஓபனிங் லிவர் உள்ளே கொடுக்கப்பட்டிருக்கிறது.

 அப்படீன்னா...

அப்படீன்னா...

இது பட்ஜெட் விலை மாடல் என்பதை மட்டுமே நினைவில் வைத்துக் கொண்டு வாங்க வேண்டியிருக்கும். ஏனெனில், மூன்றாவது இருக்கையில் லேப் சீட் பெல்ட் மாத்திரமே கொடுக்கப்பட்டிருக்கிறது. 3 பாயிண்டர் சீட் பெல்ட் இல்லாததால், குழந்தைகளை அமர வைத்துச் செல்லும்போது கூட பாதுகாப்பு குறைவாக இருக்கும். மேலும், ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் போன்றவை டாப் வேரியண்ட்டில் கூட இல்லை.

டூல்ஸ்

டூல்ஸ்

ஜாக் மற்றும் டூல்ஸ் ஆகியவை ஓட்டுனர் இருக்கைக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இடவசதி இல்லாமல் ஓட்டுனர் இருக்கைக்கு கீழே கொடுக்கப்பட்டிருப்பது, சிலருக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கும் என்பதோடு, எடுத்து, வைப்பதற்கும் சிரமமமாக இருக்கும்.

பெடல்கள்

பெடல்கள்

பெடல்கள் இயக்குவதற்கு லாவகமாக இருக்கிறது. கிளட்ச் பெடல் இலகுவாக இருப்பது ப்ளஸ் ஆக குறிப்பிட்டாலும், லாங் டிராவல் கிளட்ச் ஆக இருப்பது அதிக நேரம் போக்குவரத்து நெரிசலில் ஓட்டும்போது கால் வலியை ஏற்படுத்தும்.

டெயில் கேட்

டெயில் கேட்

டெயில் கேட்டை முழுமையாக மேல்நோக்கி திறக்கிறது. இதில், சிறிய பிரச்னை என்னவென்றால், உயரம் குறைவானவர்கள் டெயில் கேட்டை இழுத்து மூடுவதற்கு பிரச்னை ஏற்படலாம்.

ஃபிட் அண்ட் ஃபினிஷ்

ஃபிட் அண்ட் ஃபினிஷ்

பேனல்களுக்கு இடையில் அதிக இடைவெளி காணப்படுகிறது. பழைய டாடா மாடல்களை நினைவூட்டும் விதத்தில்தான் இதன் ஃபிட் அண்ட் ஃபினிஷ் இருக்கிறது.

ப்ளஸ் என்னென்ன?

ப்ளஸ் என்னென்ன?

  • அடக்கமான எம்பிவி மாடல்.
  • நடைமுறையில் பயன்படுத்துவதற்கும் சிறப்பாக இருக்கும்.
  • ஹேட்ச்பேக் காருக்கு மாற்றான கூடுதல் இடவசதி கொண்ட மாடல்.
  • குறைவான விலை கொண்ட 7 சீட்டர் கார்.
  • மைலேஜ்.
  • மைனஸ் என்னென்ன?

    மைனஸ் என்னென்ன?

    • முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை.
    • தரமற்ற பாகங்கள் அதிகம்.
    • இடநெருக்கடி
    • ஸ்டெப்னி வீல் காருக்கு கீழே உள்ளது.
    •  எதிர்பார்க்கும் விலை

      எதிர்பார்க்கும் விலை

      ரூ.5 லட்சத்தையொட்டிய விலையில் இந்த புதிய கார் விற்பனைக்கு வரும் என்று உறுதியாக நம்பப்படுகிறது.

      வெற்றி பெறுமா?

      வெற்றி பெறுமா?

      மூன்றாவது வரிசையை மடக்கி விட்டு அதிக பொருட்களை வைத்துக் கொண்டு 5 பேர் பயணிப்பதற்கான பெரிய ஹேட்ச்பேக் காராக இதனை குறிப்பிடலாம். இருப்பினும், டாப் வேரியண்ட்டில் கூட போதுமான சிறப்பம்சங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் இல்லை. எனவே, டாப் வேரியண்ட்டிற்கு ரூ.5 லட்சத்திற்கு மேல் கொடுக்க வாடிக்கையாளர்கள் விரும்ப மாட்டார்கள். இதன் விலையை பொறுத்தே வெற்றி அமையும். மேலும், டட்சன் கோ ஹேட்ச்பேக் காரின் கிராஷ் டெஸ்ட் முடிவும் இந்த காரின் வர்த்தகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில் இதனை ஒரு எம்பிவியாக பார்க்காமல், பட்ஜெட் விலையிலான ஒரு பெரிய ஹேட்ச்பேக் காராக கூறினால் மிகையில்லை.

      போட்டி அதிகம்

      போட்டி அதிகம்

      ஒருவேளை டாப் வேரியண்ட் ரூ.5 லட்சத்துக்கு மேல் சென்றால் நிச்சயமாக, இந்த காரை விட சிறப்பம்சங்கள் மற்றும் பிராண்டு மதிப்பு கொண்ட மாடல்கள் அதிகம் இருக்கின்றன. குறிப்பாக, ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கார் 407 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக ரூ.4.7 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இதன் மிட் வேரியண்ட்டுக்கு சென்றால் ஓரளவு சிறப்பான வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை பெறும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெற முடியும். இதனை உணர்ந்து கொண்டு விலை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்தில் நிசான் இருக்கிறது.

      விளக்கம்

      விளக்கம்

      டட்சன் கோ ப்ளஸ் எம்பிவி காரின் டெஸ்ட் டிரைவ் மாடல் தமிழக பதிவெண் கொண்டதாக இருப்பதாகவும், ஆனால், உத்தரகாண்டில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்ததாக செய்தி வெளியிடப்பட்டுள்ளதே என்று தமிழ் என்ற வாசகர் ஒருவர் நேற்று வினவியிருந்தார். அவருக்கும், இதர வாசகர்களுக்குமான விளக்கச் செய்தி இது. பொதுவாக, மீடியா டிரைவிற்காக எந்த மாநிலத்தில் சம்பந்தப்பட்ட கார் நிறுவனத்தின் ஆலை உள்ளதோ, அந்த மாநிலத்தின் தற்காலிக பதிவெண் கொண்ட கார்கள் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். மேலும், மீடியா டிரைவ் நிகழ்ச்சி, நாட்டின் அனைத்து பகுதிகளை சேர்ந்த ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்களுக்கும் பொதுவான ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு நடத்தப்படுவதால், பதிவெண் எந்த மாநிலத்தை சேர்ந்ததாக வேண்டுமானாலும் இருக்கலாம். கோவாவில் டெஸ்ட் டிரைவ் செய்யப்பட்ட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகள் கூட தமிழக பதிவெண் கொண்டவை என்பது நினைவுகூறத்தக்கது.

Most Read Articles
English summary
The team from Drivespark drove the latest MPV from Datsun, the Datsun GO+ in the twisty roads of Utrakand. Here is exclusive road test review Datsun MPV.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X