புதிய ஃபியட் அவென்ச்சுரா... பார்த்தவுடன் நெஞ்சில் புல்புல்தாரா... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
எஸ்யூவி வாகனங்களைப் போன்றதொரு தோற்றம், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக மாற்றப்பட்ட ஹேட்ச்பேக் க்ராஸ்ஓவர் கார் மாடல்களின் வருகை அதிகரித்து வருகிறது. சாதாரண ஹேட்ச்பேக் கார்களின் அடிப்படையில் உருவாக்கப்படும் இந்த க்ராஸ்ஓவர் மாடல்கள் வாடிக்கையாளர்களிடம் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்திருக்கிறது.
இந்த செக்மென்ட்டில் சமீபத்திய மாடல் ஃபியட் அவென்ச்சுரா. கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய ஃபியட் புன்ட்டோ எவோ காரின் க்ராஸ்ஓவர் மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட அவென்ச்சுராவை சமீபத்தில் டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. பார்த்தவுடன் நெஞ்சில் புல்புல்தாரா வாசிக்கும் இந்த கார், அனைத்து அம்சங்களிலும் ஜெயிக்கிறதா அல்லது ஏமாற்றமளிக்கிறதா என்பது குறித்த தகவல்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

டெஸ்ட் டிரைவ் மாடல்
மாடல்: ஃபியட் அவென்ச்சுரா
வேரியண்ட்: 1.4 லி டைனமிக்
எரிபொருள் வகை: பெட்ரோல்
டெஸ்ட் டிரைவ் இடம்: மும்பை மற்றும் புனே

முன்புற டிசைன்
ஒட்டுமொத்த தோற்றத்தில் புன்ட்டோ எவோ காரிலிருந்து அதிக வேறுபாடுகள் இல்லை. சில கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் சிறிய டிசைன் மாற்றங்கள் மூலம் க்ராஸ்ஓவர் மாடல் தோற்றத்தை கொடுத்திருக்கின்றனர். ஸ்கிட் பிளேட் மட்டும் கூடுதலாக தெரிகிறது.

பக்கவாட்டு தோற்றம்
கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகரிக்கப்பட்டிருப்பதால் காரின் தோற்றம் சற்று கம்பீரமாக தெரிகிறது. ரூஃப் ரெயில்களும், வீல் ஆர்ச்களுக்கு இடையில் கொடுக்கப்பட்டிருக்கும் பாடி கிளாடிங் மிகச்சிறப்பான தோற்றத்தை வழங்குகிறது. தவிர, அலாய் வீல்களின் டிசைன் கவர்கிறது.

பின்புற டிசைன்
பின்புறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ஸ்டெப்னி வீல் மற்றும் அதன் பிளாஸ்டிக் கவர் சிறப்பான தோற்றத்தையும், கம்பீரத்தையும் வழங்குகிறது. பின்புறத்தில் குறிப்பிட்டு கூற வேண்டியது இதுதான். ஆனால், இது தோற்றத்திற்கு கூடுதல் வலு சேர்த்தாலும், இதில் நடைமுறை சிக்கல் இருக்கிறது. அதனை இந்த செய்தியின் வேறொரு ஸ்லைடில் காணலாம். ஒட்டுமொத்த டிசைனில் போட்டியாளர்களைவிட பல விதத்தில் மிகச்சிறப்பான தோற்றத்தை கொண்டிருக்கிறது அவென்ச்சுரா.

எஞ்சின்
இந்த காரில் 89 பிஎச்பி பவரை அளிக்கும் 1.4 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த காரின் குறையாக கூறும் அம்சங்களில் இதன் பெட்ரோல் எஞ்சின் பெர்ஃபார்மென்ஸை ஒன்றாக சேர்த்துக் கொள்ளலாம். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலையே தேர்வு செய்வார்கள் என்ற எண்ணத்தில் இந்த பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனை ஃபியட் வழங்கியிருப்பதாக கருதினாலும், தற்போது பெட்ரோல் கார்களுக்கான மவுசு கூடியிருப்பதால், 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு பதிலாக 112 பிஎச்பி பவரை அளிக்கும் டி-ஜெட் பெட்ரோல் எஞ்சினை ஃபியட் வழங்கியிருந்தால், இந்த 1.2 டன் எடை கொண்ட காருக்கு சிறப்பாக இருந்திருக்கலாம்.

கியர்பாக்ஸ்
இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. புன்ட்டோ எவோ கார் அளவுக்கு இந்த காரில் கியர் மாற்றும்போது சுகமான அனுபவத்தை தரவில்லை.

சஸ்பென்ஷன்
இந்த காரின் சிறந்த சஸ்பென்ஷன் அமைப்பும், 16 இஞ்ச் அலாய் வீல்களும் காருக்கு சிறந்த ஓட்டுதல் தரத்தையும், கையாளுமையையும் வழங்குகிறது. மேலும், அதிர்வுகளை இலகுவாக உள்வாங்கிக் கொண்டு பயண அனுபவத்தை இனிதாக்குகிறது. புன்ட்டோ எவோ ஹேட்ச்பேக்கைவிட கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகமிருப்பதால், நம்பிக்கையாக ஓட்ட முடிகிறது.

இன்டிரியர்
புன்ட்டோ எவோ காருக்கும், இந்த காரின் இன்டிரியருக்கும் சிறிய அளவிலான வித்தியாசங்கள் இருக்கின்றன. டேஷ்போர்டில் இருக்கும் மிருதுவான உணர்வை தரும் கிளாடிங் கண்களுக்கும் ரம்மியத்தை கொடுக்கிறது. மூன்றுவிதமான வண்ணங்கள் கொண்ட இன்டிரியர் மனதுக்கு இதம் தருகிறது. முன் இருக்கைகள் சிறப்பான இடவசதியை கொண்டிருந்தாலும், முன்புறத்தில் ஓட்டுனரின் வலதுபக்க காலுக்கும், சக பயணியின் இடதுபக்க காலுக்கும் போதுமான இடவசதி இல்லாமல் நெருக்கடியான உணர்வை தருகிறது.

பின் இருக்கை இடவசதி
பின் இருக்கை இடவசதி குறையில்லை. ஆனால், 6 அடிக்கு மேல் உயரம் கொண்டவர்களுக்கு நெருக்கடியாக இருக்கும்.

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
பார்ப்பதற்கு வெகு அழகாக இருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இயக்குவதற்கும் மிக எளிதாகவும், மிருதுவான உணர்வையும் வழங்குகிறது. இந்த காரில் இருக்கும் 4 ஸ்பீக்கர்களும் சிறப்பான ஒலி தரத்தை வழங்குகிறது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தின் வலது மேல்புறத்தில் பூட்ரூம் ஓபன் பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது.

அட ராமா...
இந்த காரின் பின்புறத்திற்கு அழகு சேர்க்கும் ஸ்டெப்னி வீலும், அதன் கவரும் நடைமுறைக்கு ஒத்துவராத அம்சமாக இருக்கிறது. ஏனெனில், ஸ்டெப்னி வீலை திறந்த பின்னர்தான் டெயில்கேட்டை திறந்து பூட்ரூமில் பொருட்களை வைத்து எடுக்க முடியும். மேலும், ஸ்டெப்னி வீல் தனியாக இரும்பு பட்டையில் பொருத்தப்பட்டிருப்பதால், நெருக்கமான பார்க்கிங் லாட்டுகளில் அதனை திறக்க இயலாது.

பிடித்த விஷயம் - 1
சென்டர் கன்சோல் மேல்புறத்தில் திசை காட்டும் கருவி, டில்ட் மீட்டர் மற்றும் கார் எவ்வளவு சரிவாக செல்கிறது என்பதை காட்டும் மூன்று டயல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இது மிகச்சிறப்பான வசதியாக இருப்பதோடு, உள்வடிவமைப்பு அழகுக்கு அழகு சேர்க்கிறது.

பிடித்த விஷயம் - 2
பழுப்பு- சாம்பல் நிறம் கலந்த முன்புற ஃபென்டரும், அதன் டிசைனும் காரின் கவர்ச்சிக்கு வலு சேர்க்கின்றன. மேலும், சாதாரண புன்ட்டோ எவோ காரின் டிசைனிலிருந்து வேறுபடுத்தும் அம்சமாகவும் இருக்கிறது.

பிடித்த விஷயம்- 3
காரின் பக்கவாட்டில் பாடியில் பொருத்தப்பட்டிருக்கும் பாடி கிளாடிங்கின் ஃபிட் அண்ட் ஃபினிஷ் மிகச்சிறப்பாக இருக்கிறது. அதில், அவென்ச்சுரா பேட்ஜும் கொடுக்கப்பட்டுள்ளது.

பிடித்த விஷயம் - 4
10 ஸ்போக் அலாய் வீல்கள் காரின் தோற்றத்திற்கு மிகுந்த வலுசேர்ப்பதாக அமைந்திருக்கிறது.

பிடித்த விஷயம் -5
ஏசி கன்ட்ரோல்களை இயக்குவதற்கு எளிதாகவும், மிருதுவாகவும் இருக்கிறது. பெட்ரோல் மாடலின் டாப் வேரியண்ட்டிலும் க்ளைமேட் கன்ட்ரோல் வசதி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

பிடித்த விஷயம் - 6
அவென்ச்சுராவின் மல்டி இன்பர்மேஷன் டிஸ்ப்ளே திரை பல்வேறு தகவல்களை எளிதாக பெறுவதற்கு உறுதுணையாக இருக்கிறது. ட்ரிப் மீட்டர், சராசரி எரிபொருள் செலவு, சராசரி வேகம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெறலாம்.

பிடித்த விஷயம் - 7
இந்த காரின் க்ளவ் பாக்ஸ் அதிக இடவசதியை வழங்குவதுடன், லைட் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குள் ஒரு ரகசிய அறையும் உண்டு.

பிடித்த விஷயம் - 8
புகைப்போக்கி குழாய் முனையில் க்ரோம் கொடுக்கப்பட்டிருப்பது கவர்ச்சியை தருகிறது.

பிடித்த விஷயம் - 9
ஃபியட் பிரியர்கள் மட்டுமின்றி, அனைவரையும் கவரும் விதத்தில் பேனட்டில் வீற்றிருக்கும் ஃபியட் லோகோ.

பிடித்த விஷயம் - 10
ஃபியட் அவென்ச்சுராவின் ஹெட்லைட்டின் ஒளி மிகவும் பிரகாசமாகவும், போதுமான தூரத்திற்கு ஒளியை பாய்ச்சுகிறது. இதனால், இரவில் பாதுகாப்பான பயணத்தை வழங்கும்.

பிடித்த விஷயம் - 11
ஃபியட் அவென்ச்சுராவின் கதவுகளை விசாலமாக திறக்க முடிவதால், ஏறி, இறங்குவது வெகு எளிதாக இருக்கிறது. புன்ட்டோ எவோ காரைவிட சற்று கூடுதல் உயரம் கொண்டதாக இருப்பதும், இருக்கையிலிருந்து அமர்வதற்கும், வெளியேறுவதற்கும் எளிதாக இருக்கிறது.

பிடித்த விஷயம் - 12
இந்த காரில் இருக்கும் 16 இஞ்ச் குட்இயர் ஈகிள் டயர்கள் மிகச்சிறப்பான சாலை பிடிமானத்தை வழங்குகிறது. மேலும், கரடுமுரடான சாலைகளையும் எளிதாக சமாளிக்கிறது.

பிடித்த விஷயம் - 13
இதன் டெயில்லைட் டிசைன் மிகவும் கவரும் விஷயங்களில் ஒன்று. அஸ்தமிக்கும் சூரியனுடன் போட்டியிடும் ஃபியட் அவென்ச்சுரா டெயில் லைட்.

பிடித்த விஷயம் - 13
இதன் மிருதுவான டேஷ்போர்டு மற்றும் வட்ட வடிவ ஏசி வென்ட்டுகள் கவர்ச்சியானதாக கூறலாம்.

பிடித்த விஷயம் -14
இந்த காருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ரூஃப் ரெயில் மிகச்சிறப்பான ஆக்சஸெரீயாகவும், க்ராஸ்ஓவர் தோற்றத்தை உடனே வழங்குவதாகவும் இருக்கிறது.

பிடித்த விஷயம் - 15
புன்ட்டோ எவோ காரின் ஹெட்லைட் அப்படியே இந்த காரில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மாற்றங்கள் இல்லை.

பிடித்த விஷயம்- 16
டிரைவர் இருக்கையின் உயரத்தை கூட்டிக் கொள்வதற்கான வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், உயரம் குறைவானவர்கள் தங்களுக்கு ஏற்றாற்போல் இருக்கையின் உயரத்தை மாற்றிக் கொள்ள முடியும்.

பிடித்த விஷயம் - 17
ஃபியட் அவென்ச்சுரா கார் 205 மிமீ கிரவுண்ட் கிளியரனஸ் கொண்டது. இதனால், வேகத்தடைகள் மற்றும் மேடு பள்ளம் நிறைந்த சாலைகளை கண்டு அச்சம் கொள்ளவோ, பதட்டமடையவோ தேவையில்லை. மேலும், இந்த கார் ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதால், முழுமையான ஆஃப்ரோடு பயணங்கள் மற்றும் விளையாட்டுகளுக்கு பயன்படுத்துவது சிறப்பாக இருக்காது.

பிடித்த விஷயம் - 18
பின்புற இருக்கைகளை வெகு எளிதாக மடக்கி வைக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

பிடித்த விஷயம் - 19
இதன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் டிசைன் மிகச்சிறப்பானதாக கூறலாம். ஆரஞ்ச் வண்ண விளக்கொளி பின்னணி கொண்ட டயல்களில் எண், எழுத்துக்களை பார்ப்பதற்கு எளிதாக இருக்கிறது.

பிடிக்காத விஷயம் - 1
காருக்குள் இருக்கும் ரியர் வியூ கண்ணாடி மூலம் பின்னால் வரும் வாகனங்களை தெளிவாக பார்க்க முடியவில்லை. வீல் கவர், ஹெட்ரெஸ்ட் ஆகியவை பார்வை திறனை மறைக்கின்றன. பார்க்கிங் சென்சார் இருப்பது அவசியமான கார் மாடல்களில் இதுவும் ஒன்று.

பிடிக்காத விஷயம் - 2
தண்ணீர் பாட்டில்களை வைப்பதற்கு போதிய இடவசதி இல்லை. டோர் பாக்கெட்டில் சிறிய 500எம்எல் பாட்டிலை மட்டுமே சொருகி வைத்துக்கொள்ளலாம்.

பிடிக்காத விஷயம் - 3
டெயில்கேட்டை திறந்துவிட்டால் மிகவும் உயரமாக இருப்பதால், உயரம் குறைவானர்கள் மூடுவதற்கு எட்டிப் பிடிக்க வேண்டியிருக்கும்.

பிடிக்காத விஷயம் - 4
லாங் டிராவல் க்ளட்ச் இருப்பதால் நகர்ப்புறங்களில் ஓட்டுவதற்கு சற்று கூடுதல் சிரமத்தை தருகிறது.

பிடிக்காத விஷயம் -5
மல்டி- ஃபங்ஷன் ஸ்டால்க் சிறியதாக இருப்பதுடன், இயக்குவதற்கு எளிதாக இல்லை. மேலும், பிளாஸ்டிக் தரமும் பெருமைபடும் அளவுக்கு இல்லை.

பிடிக்காத விஷயம் - 6
முன்புறத்தில் ஓட்டுனருக்கு அருகில் இருக்கும் ஆரம்ரெஸ்ட் முன்புறம் சரிவாக இருக்கிறது.

பிடிக்காத விஷயம் - 7
நம்பர் பிளேட் மற்றும் ரிவர்ஸ் எடுப்பதற்கான விளக்கு ஆகியவை மிகவும் தாழ்வாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஸ்டீயரிங் வீல்
ஸ்டீயரிங் வீல் பிடிப்பதற்கு சிறப்பாக இருந்தாலும், கைகளுக்கு சரியான பிடிமானத்தை தராமல் வழுக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது. ஸ்டீயரிங் வீல் கன்ட்ரோல் பட்டன்கள், ப்ளூடூத் வசதி கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

கவனிக்க வேண்டியவை
டீசல் மாடல்களுக்கு அளவுக்கு பெட்ரோல் மாடல்கள் மீது ஃபியட் கவனம் செலுத்த வேண்டும். பெட்ரோல் மாடல்களிலும் சிறப்பான வசதிகளையும், எஞ்சின் ஆப்ஷன்களையும் கொடுக்க வேண்டியது அவசியம்.

மதிப்பீடு
இந்த செக்மென்ட் மாடல்களில் சிறப்பான தோற்றம், கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட மாடல் அவென்ச்சுரா. ஆனால், பூட் ரூம் திறப்பதில் இருக்கும் சிரமம், பெர்ஃபார்மென்ஸ் குறைவானதாக உணர வைக்கும் எஞ்சின் இவற்றோடு, ஏபிஎஸ், ஏர்பேக் போன்ற ஆப்ஷனலாக கூட வழங்கப்படவில்லை. க்ளைமேட் கன்ட்ரோல், ஸ்டீயரிங் வீல் கன்ட்ரோல்களும் இல்லை. ரூ.8.23 லட்சம் சென்னை ஆன்ரோடு விலை கொண்ட இந்த மாடலில் இந்த வசதிகள் இல்லாதது பெரும் குறையாகவே தோன்றுகிறது. எனவே, இந்த மாடலைவிட போட்டியாளர்களின் மீது வாடிக்கையாளர்கள் கண்கள் திரும்புவதை தவிர்க்க முடியாது.



Click it and Unblock the Notifications








