குறைவான விலையில் வரும் ஆடி ஏ3 செடான் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்
அந்தஸ்தின் அடையாளங்களாக உணரப்பட்டு வந்த பென்ஸ், பிஎம்டபிள்யூ பிராண்டு பெயர்களை மிக குறுகிய காலத்தில் பின்னுக்குத் தள்ளிவிட்டது ஆடி. இப்போது அந்தஸ்தின் அடையாளம் எது என்று கேட்டால் "ஆடி" என்று கூறும் அளவுக்கு நிலைமை மாற்றிவிட்டது. கார் பிரியர்களின் கனவு பிராண்டாக மாறியிருக்கும் ஆடி, அடுத்த கட்ட வாடிக்கையாளர்களையும் தனது வட்டத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்று முடிவுக்கு வந்துவிட்டது.
அதற்கு ஏற்ப குறைவான விலையில் மிகச்சிறந்த புதிய கார் மாடலை இந்திய மார்க்கெட்டில் விரைவில் களமிறக்க உள்ளது ஆடி. ஆம், 2014 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த கார் என்ற விருதை பெற்ற ஏ3 என்ற புதிய செடான் காரை விரைவில் இந்திய மார்க்கெட்டில் களமிறக்குகிறது.
1567ம் ஆண்டில் ஸ்தாபிதம் செய்யப்பட்டு இன்றும் நீட்டித்து நிற்கும் மிகபழமையான ராஜ வம்சங்களில் ஒன்றான மேவர் மஹாராஜா வம்சத்தினர் வாழும் உதய்ப்பூரில் இந்த புதிய ஆடி ஏ3 செடான் காரின் அறிமுக நிகழ்ச்சி சில வாரங்களுக்கு முன் நடந்தது. கார் அறிமுக நிகழ்ச்சியின்போதே குழுமயிருந்த கார்ப்பரேட் வாசிகள் காரை சூழ்ந்து கொண்டு, இதன் சிறப்பம்சங்களை ஆவலுடன் கேட்டு தெரிந்து கொண்டனர். அப்போதே பல பேர் தங்களது புதிய கார் திட்டத்தை மறுபரிசீலனை செய்வர் என்பது எமக்கு புலப்பட்டது.
மேலும், இந்த புதிய கார் பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற ஆடியின் நேரடி போட்டியாளர்களுக்கு தூக்கமில்லா இரவை கொடுத்திருக்கும் என்று கூறலாம். ஆடி ஏ3 செடான் காரின் அறிமுக நிகழ்ச்சி முடிந்த கையுடன், இந்தியாவின் வெனிஸ் நகரம் என்று செல்லமாக அழைக்கப்படும் உதய்ப்பூரின் அழகிய சுற்றுச்சூழலில் இந்த புதிய ஆடி ஏ3 செடான் காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் கிடைத்த காரின் சாதக, பாதகங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

கூடுதல் தகவல்கள்
டெஸ்ட் டிரைவ்: ஜோபோ குருவில்லா
தமிழாக்கம்: சரவணராஜன்
சுமார் 200 கிமீ தூரம் டெஸ்ட் டிரைவ் செய்தபோது கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் காரின் சாதக, பாதகங்ள் குறித்த தகவல்கலை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

டெஸ்ட் டிரைவ் மாடல் விபரம்
மாடல்: ஆடி ஏ3 35டிடிஐ எஸ் ட்ரோனிக்
பாடி ஸ்டைல்: செடான்
இருக்கை வசதி: 5
எஞ்சின்: 4 சிலிண்டர் டர்போசார்ஜ்டு 2.0 லிட்டர் டீசல் எஞ்சின்
மைலேஜ்: 20 கிமீ/லி(ARAI)
டிரான்ஸ்மிஷன்: 6 ஸ்பீடு எஸ் ட்ரோனிக் ட்யூவல் கிளட்ச்
டிரைவ் டைப்: ஃப்ரண்ட் வீல் டிரைவ்
அறிமுக தேதி: ஆகஸ்ட் 7, 2014
எதிர்பார்க்கும் விலை: ரூ.30 லட்சம் ஆன்ரோடு

முகப்பு
இந்த அட்டகாசமான காரை டேணி கரண்த் தலைமையிலான குழுவினர் டிசைன் செய்துள்ளனர். எக்காலத்திற்கும் ஏற்ப, முக்காலத்தையும் உணர்ந்து இந்த காரை டிசைன் செய்துள்ளனர். எனவே, அடுத்து வரும் பல ஆண்டுகளுக்கு இந்த காரின் டிசைன் வாடிக்கையாளர்களுக்கு சலிப்பு தட்டாது. அறுகோண வடிவ முகப்பு கிரில், மிக கச்சிதமான ஹெட்லைட், பெரிய ஏர் இன்டேக் ஆகியவை காரின் முகப்பை அலங்கரிக்கின்றன.

பக்கவாட்டு டிசைன்
பக்கவாட்டு டிசைன் பக்காவாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. டெயில் லைட் கிளஸ்ட்டரின் மேலிருந்து புறப்படும் கோடு ஹெட்லைட்டை இணைத்து முடிகிறது. மேலும், கூரை டிசைன் சி பில்லரிலிருந்து சரிவாக மடிந்து சிறிது கூபே டிசைன் போன்று காட்சி தருகிறது. இதேபோன்று, இரண்டு வீல் ஆர்ச்சுகளுக்கும் இடையிலான பாடி லைன்கள் காரின் பக்கவாட்டை கம்பீரமாக எடுத்துக் காட்டுகிறது. பானட், கேபின், பூட் ரூம் ஆகிய பகுதிகள் மிகக் கச்சிதமாக டிசைன் செய்யப்பட்டு ஓர் முழுமையான 3 பாக்ஸ் டிசைன் காராக கூற வைக்கிறது.

பின்புற டிசைன்
முன்புறத்திலும், பக்கவாட்டிலும் கண்ட அதே கவர்ச்சியை பின்புறத்திலும் காண முடிகிறது. ஸ்பாய்லருடன் டிசைன் செய்யப்பட்ட பூட் லிட், அதன் மீதான ஆடியின் 4 வளைய சின்னம் ஆகியவை அசத்துகின்றன. இதன் கூர்மையான எல்இடி டெயில் லைட்டுகள் தூரத்திலிருந்து பார்த்தால் கூட இது சாட்சாத் ஆடிதான் என்று கூறிவிட முடிகிறது. ஆனால், இந்த காரை சாதாரணமாக பார்ப்பவர்கள் ஆடி ஏ4 என்று நினைக்கவும் சாத்தியமிருக்கிறது.

இன்டிரியர்
பீயேஜ், கருப்பு வண்ணக் கலவையிலான இன்டிரியர் கவர்ச்சியாக இருக்கிறது. வட்ட வடிவிலான ஏசி வென்ட்டுகள், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் டிசைன் மிக எளிமையாகவும், அதேவேளை அதிக கவர்ச்சியாகவும் இருக்கின்றன. டிரைவர் இருக்கையில் அமர்ந்தவுடன் சற்று நெருக்கடியாக உணர்ந்தாலும், சொகுசான உணர்வை தந்தது. கால்களுக்கு நல்ல சப்போர்ட்டை தருவதோடு, அட்ஜெஸ்ட் செய்யும் வசதியும் உள்ளதால் பிரச்னை இல்லை. டேஷ்போர்டில் மல்டிமீடியா இன்டர்பேஸ் நுட்பம் மிக முக்கியமானதாக குறிப்பிடலாம். இயக்குவதற்கும் எளிதாக இருக்கிறது. கப் ஹோல்டர்கள், பாட்டில் ஹோல்டர்கள், பர்ஸ் வைப்பதற்கான வசதிகளுக்கு குறைவில்லை. கேபின் தாராளமான இடவசதியுடன் இனிமையான பயணங்களுக்கு உத்தரவாதம் தரும்.

பின் இருக்கை
குடும்பத்தினர் செல்வதற்கு ஏற்ற அம்சங்கள் கொண்ட இந்த புதிய கார் மாடலில் பின்புற இருக்கையில் 3 பேர் அமர்ந்தால் சிறிது நெருக்கடி இருக்கலாம். மேலும், இதன் கூபே டிசைனிலான கூரை வளத்தியான பயணிகளுக்கு போதுமான ஹெட்ரூமை அளிக்காது.

பூட் ரூம்
இந்த காரில் 425 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பின்புற இருக்கையை மடக்கினால் 880 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக மாற்ற முடியும். மேலும், பொருட்களை எளிதாக வைத்து எடுக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டிருப்பது முக்கிய அம்சம்.

எஞ்சின்
மீடியா டிரைவிற்கு வழங்கப்பட்ட அனைத்து கார்களும் டீசல் மாடல்கள்தான். இந்த காரில் 1,968சிசி டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 3500 - 4000 ஆர்பிஎம்.,மில் அதிகபட்சமாக 143 எச்பி பவரையும் 1,750- 3,000ஆர்பிஎம்.,மில் 320 என்எம் டார்க்கையும் அளிக்கும். இதைவிட அதிக பவர் கொண்ட பெட்ரோல் மாடலை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு கிட்டவில்லை. பெட்ரோல் மாடலில் 1,798 சிசி பொருத்தப்பட்டிருக்கும் எஞ்சின் 5100 - 6200 ஆர்பிஎம்,மில் அதிகபட்சமாக 180 எச்பி பவரையும், 1,250- 5,000ஆர்பிஎம்.,மில் 250 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

டிரான்ஸ்மிஷன்
இந்த காரில் டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது. நெடுஞ்சாலையாகட்டும், நகர்ப்புறமாகட்டும் இந்த கியர் பாக்ஸ் மிக மென்மையான ஓட்டுதல் சுகத்தை வழங்குகிறது. மேலும், இதனை ஆட்டோமேட்டட் மேனுவல் கியர் பாக்ஸ் போன்றும் முழுமையான ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் போன்றும் பயன்படுத்த முடியும்.

பெர்ஃபார்மென்ஸ்
இந்த கார் மிகச்சிறந்த சாலை பிடிமானத்தையும், பிரேக்கிங் செயல்திறனையும் அளிக்கிறது. 0- 100 கிமீ வேகத்தை 8.6 வினாடிகளில் கடந்துவிடும் என்று ஆடி தெரிவித்த நிலையில், எங்களது டெஸ்ட் டிரைவில் 0- 100 கிமீ வேகத்தை 9 வினாடிகளில் எட்டியது. மேலும், டெஸ்ட் டிரைவில் அதிகபட்சமாக மணிக்கு 180 கிமீ வேகம் வரை தொட்டு பார்க்க முடிந்தது. இந்த கார் மணிக்கு 224 கிமீ வேகம் டாப் ஸ்பீடு கொண்டதாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், வளைவுகளில் திரும்பும்போது இதன் பவர் ஸ்டீயரிங் செயல்பாடு எதிர்பார்த்த அளவு ஷார்ப்பாக இல்லை.

மைலேஜ்
இந்த புதிய ஆடி ஏ3 செடான் கார் லிட்டருக்கு 20 கிமீ செல்லும் என்று அராய் சான்றளித்துள்ள நிலையில், எங்களது டெஸ்ட் டிரைவல் நெடுஞ்சாலை, நகர்ப்புறம் இரண்டும் சேர்த்து சராசரியாக 16 கிமீ வரை மைலேஜ் கொடுத்தது. இந்த காரில் 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. அடுத்தடுத்த ஸ்லைடுகளில் இந்த காரின் 5 முக்கிய அம்சங்களை பற்றி பார்க்கலாம்.

மல்டிமீடியா இன்டர்பேஸ்
வாய்ஸ் கன்ட்ரோல், நேவிகேஷன், பொழுதுபோக்கு மற்றும் மொபைல்போன் போன்றவற்றை எளிதாக கட்டுப்படுத்தவும், எளிமையாக இயக்கும் வகையில் இருக்கிறது பல்வேறு வசதிகளை ஒருங்கே வழங்கும் 7 இஞ்ச் திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ, பென்ஸ் கார்களில் இருப்பது போன்றே, கியர் நாப் இருக்கும் இடத்திற்கு பின்னால் இதற்கான கட்டுப்படுத்தும் திருகு கொடுக்கப்பட்டுள்ளது. இயக்குவது எளிது என்பதால் டச்ஸ்கிரீன் மூலம் இயக்குவதை விட இது கவனச் சிதறலை குறைக்கும். ஆடி ஏ3 செடான் காரில் என்விடியாவின் டெக்ரா 2 பிராசசர் கொண்ட எம்எம்ஐ சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்
டேஷ்போர்டை போன்று மிக எளிமையாகவே காட்சி தருகிறது இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர். ஆனால், பிரிமியம் ஃபீலை தருவதோடு, எழுத்துக்களும், எண்களும் மிக தெளிவாக தெரிகிறது. அனலாக் ஆர்பிஎம் மற்றும் ஸ்பீடோமீட்டருக்கு இடையில் டிஜிட்டல் மீட்டர் கொடுத்துள்ளனர். அதிலும், காரின் வேகத்தை தெரிவிக்கும் ஸ்பீடோமீட்டர், ட்ரிப் கம்ப்யூட்டடர் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளன.

ஏசி வென்ட்டுகள்
விமானத்தின் விசையாழிகள் போன்ற வடிவமைப்பிலான ஏசி வென்ட்டுகள் இன்டிரியரில் கவரும் அம்சங்களில் முக்கியமானதாக குறிப்பிடலாம். வெப்பம், காற்றோட்டம், குளிர்சாதன வசதிகளை தரும் இந்த ஏசி வென்ட்டுகளை சுற்றிலும் சில்வர் வளையம் கொடுத்து அழகூட்டியுள்ளனர். மேலும், அந்த வளையத்தை திருகி ஏசி வென்ட்டை மூடவும், திறக்கவும் செய்யலாம்.

அலாய் வீல்கள்
காரின் வெளிப்புறத் தோற்றத்தை மிக கவர்ச்சியாக காட்டுவதில் அலாய் வீல்களுக்கு முக்கிய பங்குண்டு. இந்த காரில் 16 இஞ்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர, கூடுதல் டிசைன் கொண்ட அலாய் வீல்களும் ஆப்ஷனலாக தேர்வு செய்யும் வசதியும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால், உறுதியான தகவல் இல்லை.

கண்ணாடி கூரை
குறைந்த விலை கொண்ட சொகுசு செடான் காராக வரும் இந்த புதிய ஆடி காரின் டாப் வேரியண்ட் பனரோமிக் சன்ரூஃப் கொடுக்கப்பட்டுள்ளது. இது பயணங்களின்போது மிக மகிழ்ச்சியான அனுபவத்தை கொடுக்கும். ஆனால், டீசல் மாடலில் எத்துனை வேரியண்ட்டுகள் வரும் என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை.

சாதக, பாதகங்கள்
சாதகங்கள்
கவர்ச்சியான டிசைன்
சிறந்த எஞ்சின்
தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற மாடல்
பாதகங்கள்
மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல் இல்லை
போதிய ஹெட்ரூம் மற்றும் இடவசதி குறைவான பின் இருக்கை
செயல்திறன் குறைவாக உணர வைக்கும் ஸ்டீயரிங் வீல்

தெரிந்துகொள்வோம்
1909ம் ஆண்டு ஜூலை 16ந் தேதி ஆடி கார் நிறுவனத்தை ஆகஸ்ட் ஹார்ச் என்பவர் ஸ்தாபிதம் செய்தார். அவரது பெயரில் உள்ள ஹார்ச் என்ற சொல்லுக்கு ஜெர்மானிய மொழியில் கவனிக்க என்று பொருள்படுகிறது. மேலும், ஹார்ச் என்பதை லத்தீன் மொழியில் ஆடி என்று மாற்றி தற்போது அந்த பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

வாசகர் கருத்து
வாசகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








