ஹோண்டா எலவேட் எஸ்யூவி-யை ஓட்டி பார்த்திட்டோம்! "காருல போன ஃபீலே இல்ல, மிதந்த ஃபீல்தான் இருக்கு" ரிவியூ தகவல்!

ஹோண்டா நிறுவனம் இந்தியாவின் எஸ்யூவி கார் பிரிவை விட்டு வெளியேறி பல காலமாகின்றன என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிறுவனம் இந்தியாவின் எஸ்யூவி கார் தாகத்தை தீர்க்கும் விதமாக சிஆர்-வி எனும் மாடலை விற்பனைக்குக் வழங்கிக் கொண்டிருந்தது. ஆனால், அதிக விலை காரணமாக அதனால் பெரிய அளவில் வாடிக்கையாளர்களைக் கவர முடியவில்லை.

சந்தை கிடைக்காமல் போனதன் காரணத்தினால் அக்காரை நாட்டை விட்டே ஹோண்டா வெளியேற்றியது. தற்போது இந்த ஜப்பானிய கார் உற்பத்தி நிறுவனம் இந்தியாவின் செடான் கார் பிரிவை மட்டுமே அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி சிட்டி மற்றும் அமேஸ் ஆகிய இரு கார் மாடல்களை மட்டுமே அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

Honda elevate

ஆனால், இந்த நிலை ரொம்ப நாளைக்கு நீடிக்கப் போவதில்லை. ஆமாங்க, இந்தியாவின் மிகப் பெரிய தேவையாக மாறி இருக்கும் எஸ்யூவி கார் பிரிவை முழுமையாக கை விட ஹோண்டாவிற்கு மனம் இல்லை. அந்நிறுவனம் வெகு விரைவில் எலவேட் (Honda Elevate) எனும் புதிய கார் மாடலை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.

இது ஓர் காம்பேக்ட் எஸ்யூவி ரக காராகும். இந்த வாகனத்தின் உற்பத்தி பணிகள் ஏற்கனவே இந்தியாவில் தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமில்லைங்க, புக்கிங் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. இந்த நிலையிலேயே ஹோண்டா எலவேட் காரை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு அண்மையில் எங்களுக்கு கிடைத்தது.

Honda elevate front grille

அதாவது, ரைடு ரிவியூ செய்து பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. உதய்பூரில் உள்ள முக்கிய சாலைகளில் வைத்தே இந்த காரை (ஹோண்டா எலவேட் எஸ்யூவியை) ஓட்டி பார்த்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவத்தையே உங்களுடன் இந்த பதிவின் வாயிலாக பகிர்ந்துக் கொள்ள உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஹோண்டா எலவேட் டிசைன் மற்றும் சிறப்பம்சங்களின் விபரம்: பெட்டி போன்ற அமைப்பிலேயே ஹோண்டா இந்த காரை வடிவமைத்து இருக்கின்றது. அதிக இட வசதிக்காகவும், தனித்துவமான தோற்றத்திற்காகவும் இந்த வடிவமைப்பை அக்காருக்கு ஹோண்டா வழங்கி உள்ளது. அதேநேரத்தில், அதிக கட்டுமஸ்தான தோற்றமும் அதற்கு கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

Honda elevate headlamp

காரின் பான்னெட்டை பார்த்தாலே அது உங்களுக்கு புரியும். அதிக கட்டுமஸ்தான தோற்றத்தில் அது இருக்கின்றது. வலது மற்றும் இடதில் மேடாகவும், நடுவில் பள்ளமாகவும் பான்னெட் இருக்கின்றது. இதுவே அதிக கட்டுமஸ்தான தோற்றத்தை பான்னெட்டிற்கு வழங்குகின்றது. இதுதவிர கண்ணைக் கவரும் வகையில் பெரிய கிரில் காரின் முகப்பு பகுதியில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

மிகவும் சிம்பிளாக அது இருந்தாலும், ஈர்க்கக் கூடிய ஓர் அணிகலனாக இருக்கின்றது. அதன் மையப் பகுதியிலேயே ஹோண்டாவின் பேட்ஜ் குரோம் பூச்சுடன் நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றது. மேலும், காரின் முன் பக்கத்தையே முழுமையாக ஆளுகை வகையில் அந்த கிரில் இடம் பெற்றிருக்கின்றது.

Honda elevate tail lamp

கிரில் மற்றும் பான்னெட் இது இரண்டும் சந்திக்கும் இடத்தில் ஓர் பெரிய குரோம் துண்டு பொருத்தப்பட்டு இருக்கின்றது. இதன் இரு முனைகளுக்கு அருகிலேயே மெல்லிய எல்இடி ஹெட்லேம்பும், பகல் நேரத்தில் ஒளிரும் எல்இடி மின் விளக்குகளும் நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த அனைத்து அம்சங்களும்தான் எலவேட்டின் முகப்பு பகுதிக்கு மிகவும் அட்டகாசமான தோற்றத்தை வழங்குகின்றன.

ஹோண்டா சிட்டி செடான் மற்றும் அமேஸ் போன்ற கார்களிலும் இதுமாதிரியான யுக்தியே முகப்பு பகுதியில் கையாளப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. தொடர்ந்து, இந்த காரில் பனி மின் விளக்குகளும் மிகவும் கவர்ச்சியான இடத்திலேயே நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றன. அவை முன் பக்க பம்பரின் மேற்பகுதியில் உள்ளன.

Honda elevate review display

இதுதவிர, அழகான வடிவமைப்பில் ஏர் டேம்களும் அந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், எளிதில் கண்களில் படும் வகையில் இல்லை. மிகவும் தாழ்வான பகுதியிலேயே அது இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இந்த அடிப்பகுதியை கூடுதல் அழகாக்கும் விதமாக கருப்பு மற்றும் சில்வர் நிற பூச்சுகள் கொண்ட அணிகலன்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

முன் பக்கத்தை போலவே பின் பக்கமும் அதிக அழகானதாகக் காட்சியளிக்கின்றது. காரின் ரூஃபில் ஓர் ஸ்பாய்ளர் பொருத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன், ரேக் செய்யப்பட்ட விண்ட்ஸ்கிரீன், ஹோண்டா பேட்ஜின் இரு பக்கமும் ஒளிரும் வகையில் எல்இடி டெயில் லைட்டுகள் மற்றும் ஸ்போர்ட்ஸ் வகை பிளாஸ்டிக் கிளாடிங்குகள் ஆகியவையும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

Honda elevate centre console cup holder

இவை எலவேட்டின் பின் பக்கத்திற்கு வேற லெவல் அழகை சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றன. இந்த காரின் பின் மற்றும் முன் பக்கத்தை போலவே பக்கவாட்டு பகுதிகளும் மிக அழகியதாகவே தென்படுகின்றன. உதாரணமாக இதன் பக்கவாட்டு பகுதிக்கு அதிக கவர்ச்சியை சேர்க்கும் விதமாக அந்த காரில் பொருத்தப்பட்டு இருக்கும் 17 அங்குல டூயல் டோன் டைமண்ட் கட் அலாய் வீல்கள் இருக்கின்றன.

இதுதவிர, கார் கதவின் கைப் பிடிகள் மற்றும் ஜன்னல்களின் கீழ் பகுதிகளில் குரோம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கின்றது. இத்துடன், சில்வர் நிற ரூஃப் ரெயிலும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இவ்வாறு பலதரப்பட்ட வேலைகளை எலவேட்டை அதிக கவர்ச்சியானதாக காட்ட வேண்டும் என்பதற்காக ஹோண்டா செய்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Honda elevate front seat

"எலவேட்டோட வெளிப்பக்கத்திற்கே இவ்ளோ முக்கியத்துவம் கொடுத்திருக்காங்களே உட்பக்கம் எப்படி இருக்கப்போகுதோ என நினைக்கிறீங்களா" இதே ஆச்சரியத்துடன்தான் நாங்களும் எலவேட்டின் உட்பக்கத்திற்குள் நுழைந்தோம். உள்ளே நுழைந்த உடன் பெரிய குழப்பமே ஏற்பட தொடங்கிவிட்டது. எதை முதலில் பார்ப்பது என்கிற குழப்பம்தான். உட்பக்கத்தில் வழங்கப்பட்டு இருந்த அனைத்து அம்சங்களும் கண்களையும், மனதையும் கவரக் கூடியதாகவே இருந்தன.

குறிப்பாக, 10.25 அங்குல சைஸில் வழங்கப்பட்டு இருக்கும் திரை வச்ச கண் வாங்காமல் பார்க்க வைக்கும் வகையில் இருந்தது. டிரைவர் மற்றும் முன் பக்க பயணி எளிதில் பயன்படுத்தும் விதமாக நடு பகுதியில் அது நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த இன்ஃபோடெயின்மென்ட் திரை ஒயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிக் கொண்டவை.

Honda elevate interior design

இதுதவிர, 8 ஸ்பீக்கர்களும் இந்த திரையிலேயே இணைக்கப்பட்டு இருக்கின்றன. சரவுண்ட் சிஸ்டத்தை எளிதில் கன்ட்ரோல் செய்ய இது உதவியாக இருக்கும். இதுதவிர இன்ஸ்ட்ரூமென்ட் செட்-அப்பிற்காக ஸ்டியரிங் வீலின் பின் பக்கத்தில் ஓர் அனலாக் ஸ்பீடோ மீட்டர் 7 அங்குலத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

அத்துடன், ப்ளஷ் இருக்கைகள், ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர், சன்ரூஃப் மற்றும் ஹோண்டா கன்னெக்ட் ஆகிய அம்சங்களும் இந்த எலவேட் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் வாயிலாக நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் வாட்சுகளைக் கூட காருடன் இணைத்துக் கொள்ள முடியும். மேலும், ஒவ்வொரு புதிய எலவேட் காருக்கும் ஐந்தாண்டுகள் ஹோண்டா இணைப்பு சந்தா வழங்கப்பட இருப்பதாக நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Honda elevate rear seat

மேலே பார்த்த அம்சங்களுடன் இன்னும் பல நவீன கால தொழில்நுட்ப வசதிகள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, பாதுகாப்பு அம்சங்கள் எக்கசக்கமாக கொடுக்கப்பட்டு உள்ளன. 6 ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், வெயிக்கிள் ஸ்டெபிளிட்டி அசிஸ்ட், ஹேண்ட்லிங் அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் கேமிரா (பார்க் செய்ய உதவியாக இருக்கும்) மற்றும் அடாஸ் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இந்த அடாஸ் எனும் ஒற்றை தொழில்நுட்பத்தின் வாயிலாக மட்டும், அவசர கால பிரேக்கிங், ரோடு டிபார்ச்சர் மிடிகேஷன் சிஸ்டம், லேன் கீப்பிங் அசிஸ்ட் சிஸ்டம், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோ ஹை-பீம் மற்றும் லீட் கார் டிபார்ச்சர் நோடிஃபிகேஷன் சிஸ்டம் மற்றும் விபத்தை தவிர்த்தல் என ஏகப்பட்ட வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

Honda elevate sunroof

ஹோண்டா எலவேட்டின் சுய விவரக் குறிப்புகள் மற்றும் பரிமாணங்களின் விபரம்: ஹோண்டா எலவேட், எஞ்ஜின் போன்ற ஒரு சில விஷயங்களை சிட்டி காரிடம் இருந்தே பெற்றிருக்கின்றது. நேச்சுரல்லி அஸ்பைரேட்டட், டிஓஎச்சி, 1.5 லிட்டர், 4 சிலிண்டர், ஐ-விடெக் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இதே மோட்டாரே ஹோண்டா சிட்டி செடான் காரிலும் ஹோண்டா பயன்படுத்துகின்றது. இந்த மோட்டார் 119.35 பிஎச்பி பவரை 6,000 ஆர்பிஎம்மிலும், 145 என்எம் டார்க்கை 4,300 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 15.31 கிமீ மைலேஜையும், சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு 16.92 கிமீ மைலேஜையும் வழங்கும் திறன் கொண்டது.

Honda elevate rear ac vent

இந்த இரு கியர்பாக்ஸ் தேர்வுகள் மட்டுமே எலவேட்டில் வழங்கப்பட இருக்கின்றது. இந்த காரின் நீளம் 4,392 மிமீட்டராகவும், அகலம் 1,790 மிமீட்டராகவும் மற்றும் உயரம் 1,650 மிமீட்டராகவும் இருக்கின்றது. இந்த அளவுகோளே எலவேட்டின் அதிக இட வசதிக்கான காரணமாக அமைந்திருக்கின்றது. இதன் வீல் பேஸ் 2,650 மிமீ ஆகும்.

மேலும், 220 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸையும் இந்த கார் கொண்டிருக்கின்றது. பெட்ரோலை பொருத்தவரை 40 லிட்டர் வரை ஒரே நேரத்தில் சேமித்து வைத்துக் கொள்ள முடியும். மேலும், 458 லிட்டர் வரையிலான பொருட்களை காரின் பின் பகுதியில் வைத்துக் கொள்ள முடியும். இந்த அளவு மிக பெரிய பூட் ஸ்பேஸையே எலவேட் கொண்டிருக்கின்றது.

Honda elevate light stalk

எலவேட்டின் ஒட்டுமொத்த 1,206கிலோ முதல் 1,258கிலோ வரையில் இருக்கின்றது. முதல் ஒன்று மேனுவல் தேர்வின் எடை ஆகும். இரண்டாவது ஒன்று சிவிடி தேர்வுடையதாகும். 16 அங்குலம் அல்லது 17 அங்குலம் என இரு விதமான அலாய் வீல் தேர்வுகளை எலவேட்டைப் பெற்றுக் கொள்ள முடியும். முதல் ஒன்றில் 215/60 அளவுள்ள டயரும், இரண்டாவது ஒன்றில் 215/55 அளவுள்ள டயரும் பயன்படுத்தப்படும். இத்துடன், ஓர் ஸ்டீலிலான ஸ்பேர் வீலும் எலவேட்டிற்கு வழங்கப்படுகின்றது.

ஹோண்டா எலவேட் காரின் டிரைவிங் அனுபவம் எப்படி இருந்துச்சு? இப்போதான் முக்கியமான இடத்திற்கு வந்திருக்கும். நாங்கள் இதுவரை பல ஹோண்டா கார்களை ரிவியூ செய்வதற்காக ஓட்டி பார்த்திருக்கின்றோம். ஆனால், இந்த கார் எங்களுக்கு சற்று வித்தியாசமான ரைடிங் அனுபவத்தை வழங்கியது. இதன் ரெவ் மேலும் அதிகரிக்கச் செய்ய தூண்டும் வகையில் இருக்கின்றது.

Honda elevate rear bumper

ஆனால், நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் மோட்டார் 7,000 ஆர்பிஎம்மோடு முட்டுக் கட்டையைப் போட்டுவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் கியரையும், ரெவ்களையும் உயர்த்தும்போதும் எந்தவொரு அசௌகரியமான உணர்வையும் எலவேட் எங்களுக்கு வழங்கவில்லை. அது ஸ்டெடியாகவே பயணித்தது. ஆனால், என்ன செங்குத்தான மலை பாதைகளில் இந்த திறன் போதாததைப் போல நாங்கள் உணர்ந்தோம்.

அதேவேளையில், இந்த காரில் கியரை மாற்றுவது மிகவும் சுலபமாக இருந்தததை நாங்கள் உணர்ந்தோம். எலவேட்டின் லைட் கிளட்ச் மற்றும் ஷார்ட் த்ரோ கியர்பாக்ஸே இதற்கு மிகுந்த உதவியாக இருந்திருக்கின்றது. இத்துடன், கார் 3,500 ஆர்பிஎம்மில் இயங்கும்போது லேசாக காருக்குள் இரைச்சல் ஏற்படுவதை நாங்கள் உணர்ந்தோம்.

Honda elevate rear hand rest

ஆகையால், கேபினின் அமைதித் தன்மை மேலும் வலுவூட்டப்பட்டிருக்கலாம் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு. ஆனால், இட வசதி எங்களை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. ஆறு பேர் வரை இந்த காரில் அமர்ந்து பயணிக்க முடியும். நல்ல பெரிய அளவில் ஸ்பேஸை எலவேட் கொண்டிருக்கின்றது. இதேபோல், இந்த காரின் இருக்கைகளும் அதிக கம்ஃபோர்ட்டான அமரும் அனுபவத்தை வழங்கக் கூடியதாக இருக்கின்றன.

ஆகையால், நீங்கள் இந்த காரை ஓட்டுபவராக இருந்தாலும் சரி, பின்னால் அமர்ந்துக் கொண்டு பயணிப்பவராக இருந்தாலும் சரி, உங்கள் ரைடு மிகுந்த சௌகரியமானதாக இருக்கும். ஏன் சாலையில் உள்ள பள்ளம் மேடுகளைக்கூட நீங்கள் உணர மாட்டீர்கள் அந்த அளவிற்கு ஹோண்டா சஸ்பென்ஷனை மென்மையானதாக பயன்படுத்தி இருக்கின்றது.

Honda elevate tracking shot

ஆகையால், மிகுந்த லக்சூரியான பயண அனுபவம் உங்களுக்கு மிக தாராளமாகக் கிடைக்கும். இதில் ஒரே ஒரு அசௌகரியம் என்னவென்றால் கார் திருப்பத்தின்போதும், வளைவுகளிலும் பயணிகளை உருளை செய்கின்றது. கூடுதல் கிரவுண்ட் கிளிரயன்ஸாலேயே இந்த உணர்வு ஏற்படுகின்றது. எலவேட்டின் ஸ்டியரிங் வீல் பயன்பாட்டிற்கு மிகவும் இலகுவானதாக இருக்கின்றது.

நகர்புறத்தில் சீறி பாய போறீங்களா அதற்கும் இது ஓகேவானதாக இருக்கும், இல்லை மெல்ல மெல்ல ஆமை போல நகர வேண்டுமா அதற்கும் இந்த ஸ்டியரிங் வீல் மிக சிறந்த இயக்க அனுபவத்தை வழங்கும். அதாவது, சுலபமாக வலது-இடதுகளை திருப்பிக் கொள்ள உதவியாக இருக்கும்.

Honda elevate safety

அதேநேரத்தில், வேகம் அதிகரித்த உடன் ஸ்டியரிங் வீலின் எடையும் கூடி விடுகின்றது. இந்த நிலை மேலும் அதிக உத்வேகத்துடன் செல்ல வேண்டும் என்பதைத் தூண்டும் வகையில் இருக்கின்றது. இந்த காரில் மிக சிறந்த பிரேக்கிங் வசதியை வழங்கும் விதமாக பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. நங்கூரம் போட்டதைப் போல் காரை மிகவும் சேஃபாக நிறுத்த அது அனுமதிக்கின்றது.

முன் பக்கத்தில் டிஸ்க்குகளும், பின் பக்கத்தில் டிரம் பிரேக்கே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஹோண்டா சென்ஸ் டிரைவர் பாதுகாப்பு செட்-அப்பில் ரேடார் அம்சம் வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக கேமிராக்கள் நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றன. இது ரேடாரைக் காட்டிலும் பயன்பாட்டின்போது மிக சிறப்பாக செயல்படுவதை நாங்கள் உணர்ந்தோம். குறிப்பாக, தானியங்கி பிரேக்கிங் ஹாலிவுட் படத்தில் வரும் த்ரில் சீனைக் கண் முன் கொண்டு வரும் வகையில் இருந்தது.

Honda elevate window power button

ஒட்டுமொத்தமாக எலவேட்டை ஓட்டி பார்த்த பின்னர் இதுதான் எங்களின் முடிவு: இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவில் ஏற்கனவே போட்டி அதிகரித்துக் காணப்படுகின்றது. மாருதி சுஸுகி, ஹூண்டாய், கியா மற்றும் டொயோட்டா ஆகியவை இந்த சந்தையை ஏற்கனவே பல ஆக்கிரமிப்பு செய்துக் கொண்டிருக்கும் சூழலிலேயே எலவேட் அதன் கால் தடத்தை பதித்து இருக்கின்றது.

இதை ஓட்டி பார்த்ததில் பெரிய அளவில் குறைகள் இருப்பதாக தெரியவில்லை. அதேவேளையில், இதன் போட்டியாளர்கள் அதிக சக்தி வாய்ந்த மோட்டார் திறன் கொண்ட தயாரிப்புகளை காம்பேக்ட் எஸ்யுவி கார் பிரிவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுடன் மோதி பார்க்க வேண்டும் எனில் ஹோண்டா இக்காரை மிகவும் போட்டியான விலையில் விற்பனைக்குக் கொண்டு வந்தால் மட்டுமே சந்தையில் வெற்றி காண முடியும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 1, 2023, 11:00 [IST]
English summary
Honda elevate suv review engine spec feature all other details we explained here
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X