டாடாவுக்கு சவால்விடும் மஹிந்திராவின் புதிய எலக்ட்ரிக் கார்... முதல் ரிவியூ! கார் ஓடும் சவுண்ட் கூட கேட்கல!!
மஹிந்திரா (Mahindra), எலக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் நிறுவனங்களுள் ஒன்று. அடுத்ததாக, பிஇ 6இ (BE 6e) மற்றும் எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) என 2 புதிய எலக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டுவர உள்ளது. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி இங்கிலாந்தில் வெளியீடு செய்யப்பட்ட இந்த எலக்ட்ரிக் கார்கள் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டன. மஹிந்திராவின் டிசைனராக பொறுப்பேற்ற பின்னர் பிரதாப் போஸ் வடிவமைத்த எலக்ட்ரிக் கார்கள் இவை ஆகும். இதன் காரணமாகவே, இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் கார்கள் மீது கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இதில், பிஇ 6இ எலக்ட்ரிக் கார் ஆனது மஹிந்திராவின் எலக்ட்ரிக் கூபே எஸ்யூவி கார் ஆகும். பெரும்பான்மையான மக்களால் வாங்கக்கூடிய விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.18.90 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓட்டுவதற்கும், ஹேண்டில் செய்வதற்கும் எவ்வாறு உள்ளது என்பதை அறிய புதிய மஹிந்திரா பிஇ 6இ எலக்ட்ரிக் காரை சென்னையில் நாங்கள் ஓட்டி பார்த்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை ரிவியூவாக இந்த தொகுப்பில் வழங்கியுள்ளோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

வெளிப்பக்க தோற்றம்: கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியீடு செய்யப்பட்ட மஹிந்திரா பிஇ 6இ கான்செப்ட்டை தோற்றத்தில் கிட்டத்தட்ட ஒத்ததாக பிஇ 6இ எலக்ட்ரிக் கார் உள்ளது. இதனால், பிஇ 6இ கான்செப்ட்டை பார்த்தவர்களுக்கு பிஇ 6இ எலக்ட்ரிக் கார் தோற்றத்தில் பெரியதாக வித்தியாசமாக தெரியாது.
காருக்கு முன்பக்கத்தில் C-வடிவில் எல்இடி டி.ஆர்.எல்-கள் நமது கவனத்தை ஈர்க்கின்றன. காரின் முழு அகலத்திற்கு வழங்கப்பட்டுள்ள லைட் பார், இண்டிகேட்டர்களாகவும் செயல்படுகின்றன. இதற்கு இரு பக்கங்களிலும் எல்இடி ஹெட்லைட்கள் உள்ளன. ஃபாக் விளக்குகளை முன் பம்பருக்கு கீழே கொடுத்துள்ளனர். ஃபாக்ஸ் பேஷ்பிளேட்டை இந்த எலக்ட்ரிக் காரின் முன்பக்கத்தில் பார்க்க முடிகிறது.

இவை எல்லாவற்றையும் விட நம்மை வசீகரிப்பது, இறக்கை-போன்றதான டிசைனில் உள்ள காரின் பொனெட் பகுதி ஆகும். இது எங்களுக்கு ஃபெராரி 488 பிஸ்டா காரை ஞாபகப்படுத்துகிறது. எலக்ட்ரிக் கார்களுக்கான மஹிந்திராவின் புதிய 'BE' லோகோவை பொனெட்டில் காண முடிகிறது. எலக்ட்ரிக் கார் என்பதால், பொனெட்டின் மூடியை திறந்தால் உள்ளே என்ஜின் எதுவுமில்லை; அதற்கு பதிலாக அந்த இடத்தில் 45 லிட்டர்கள் கொள்ளளவில் பொருட்களை வைக்க இடவசதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய பிஇ 6இ காரின் பக்கவாட்டில் கருப்பு நிறத்தில் பேனல்கள் முன்பக்க பம்பரில் இருந்து பின்பக்க பம்பர் வரையில் செல்கின்றன. அதில்தான், வீல் ஆர்ச்சுகளும் அமைந்துள்ளன. இதில், இடதுப்பக்க பின் சக்கரத்திற்கு மேலே உள்ள வீல் ஆர்ச்சில் சார்ஜிங் பாயிண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சார்ஜிங் பாயிண்ட்டை அணுக, பேனல் ஒன்றை திறக்க வேண்டும். சார்ஜ் ஏறுகிறதா என்பதை அறிய மொபைல் போன் & லேப்டாப்களில் வழங்கப்படுவதை போன்று லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

முன்பக்கத்தை போன்று, காரின் பக்கவாட்டிலும் காரின் டிசைன் சூப்பராக உள்ளது. டிசைனர் பிரதாப் போஸின் கை வண்ணம் மிளிர்கிறது. இதேபோன்றதான டிசைனில் தான் எக்ஸ்.இ.வி 9இ காரும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிஇ 6இ காரில் 19-இன்ச்சில் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. தேவையென்றால் இதனை 20-இன்ச்களாகவும் மாற்றிக் கொள்ள முடியும்.
காரின் A-பில்லர் மற்றும் முன்பக்க விண்ட்ஸ்க்ரீன் அற்புதமாக இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன், மேற்கூரையும் சாய்வாக வழங்கப்பட்டுள்ளதால், பிஇ 6இ எலக்ட்ரிக் காருக்கு கூபே தோற்றம் கிடைத்துள்ளது. இருப்பினும், இதன் விளைவாக பின்பக்க ஜன்னல் கண்ணாடிகள் சற்று சிறியதாக உள்ளன. காரின் அடிப்பகுதிக்கும், தரைக்கும் இடையே போதுமான இடைவெளியை கொடுத்துள்ளனர். இது, நம்ம ஊர் சாலைகளுக்கு தேவையான ஒன்றாகும்.

காரின் பின்பக்கத்தில் விண்ட்ஸ்க்ரீனுக்கு மேலே ட்யூயல் ஸ்பாய்லர் செட்-அப் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், பூட் லிட் பகுதியிலும் இன்னொரு ஸ்பாய்லர் உள்ளது. பூட் லிட் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள மஹிந்திரா இன்ஃபினிட்டி லோகோ ஆனது ஒளிரும் தன்மை கொண்டதாக உள்ளது. காருக்கு பின்பக்கத்தில் உள்ள C-வடிவிலான டெயில்லைட்களில் 3வது பிரேக் லைட்டை பார்க்க முடிகிறது.
இவற்றிற்கு கீழே இரட்டை டிஃப்யூஸர் எலிமெண்ட்களையும் பார்க்க முடிகிறது. இந்த எலிமெண்ட்கள் பின்னால் வரும் வாகனங்களுக்கு ஒளி எதிரொலிப்பானாக செயல்படும். எலக்ட்ரிக் மூலமாக திறந்து மூடக்கூடிய பூட் ஸ்பேஸ் ஆனது 455 லிட்டர்கள் கொள்ளளவில் உள்ளது. 455 லிட்டர்கள் என்பது குறைவும் என்றும் சொல்ல முடியாது; அதேநேரம் அதிகம் என்றும் சொல்ல முடியாது. போதுமான அளவிற்கு கணக்கச்சிதமாக காரின் தோற்றத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

உட்புற தோற்றம் & வசதிகள்: மஹிந்திரா பிஇ இ6 காருக்குள் நுழைந்து டிரைவர் இருக்கையில் அமர்ந்தால், ஏதோ விமானத்தின் காக்பிட்டிற்குள் அமர்ந்தது போன்ற உணர்வு கிடைக்கிறது. இதற்கேற்ப, டிரைவரின் தலைக்கு மேலே சில ஸ்விட்ச் மற்றும் சிறிய திரை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், கியர் லிவரும் விமானத்தில் வழங்கப்படுவதை போன்று கொடுக்கப்பட்டுள்ளதால், பிஇ 6இ காரின் வெளிப்பக்கம் தான் அசத்தலாக உள்ளது என்று பார்த்தால், உட்புற கேபின் அதனை காட்டிலும் அசத்தலாக உள்ளது.
இதற்கேற்றவாறு, டிரைவரை சுற்றிலும் சிறு, சிறு விளக்குகள் பார்ப்பவரை பரவசப்படுத்துகின்றன. கியர் லிவருக்கு அருகே வழங்கப்பட்டுள்ள பொத்தான் ஆனது பார்க்கிங் பிரேக்கிற்கானது ஆகும். டேஸ்போர்டில் 12.3-இன்ச்சில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு ஒன்று, இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு ஒன்று என இரு திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் பல மாடர்ன் வசதிகளை கொண்டுள்ளது.

அவற்றுள் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், 5ஜி கனெட்டிவிட்டி வசதி, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே வசதிகளை சொல்லலாம். காரின் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. டோல்பி அட்மோஸ் வசதியை கொண்ட இந்த சவுண்ட் சிஸ்டம் மிகவும் அருமையான வகையில் ஒலியை பரப்புகிறது.
அதேபோல், காரின் என்ஜினை ஸ்டார்ட் & ஸ்டாப் செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள பொத்தானை பற்றி சொல்லியே ஆக வேண்டும். ஏனெனில் இது, அழுத்துவதை போல் இல்லாமல், தொடுவதன் மூலமாக செயல்படுகிறது. ஆனால், எக்ஸ்.இ.வி 9இ காருடன் ஒப்பிடுகையில், பிஇ 6இ காரினுள் நிறைய புஷ்-பொத்தான்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மாடர்ன் டிசைனில் உள்ள இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தில் நிறைய பொத்தான்களை பார்க்க முடிகிறது.

அதேபோல், ஏசி, டிரைவ் மோட்களை கண்ட்ரோல் செய்ய பொத்தான்கள் தான் வழங்கப்பட்டுள்ளன என்பதால், அவற்றை கண்ட்ரோல் செய்வது கொஞ்சம் எளியதாக உள்ளதுபோல் எங்களுக்கு தோன்றுகிறது. கதவுகளில் வழங்கப்பட்டுள்ள மென்மையான துணி ஆனது விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களில் உள்ளதை போன்று மிகவும் மென்மையாக உள்ளது. இந்த எலக்ட்ரிக் காரில் இருக்கைகளின் கவர்கள் துணி மற்றும் லெதர் கலந்த கலவையாக உள்ளன.
இதனால், இருக்கைகள் 2 விதமான நிறங்களில் காட்சியளிக்கின்றன. இந்த ட்யூயல்-டோன் இருக்கைகள் முற்றிலும் கருப்பு நிறத்திலான காரின் கேபினுக்கு மேட்சிங்காக உள்ளன. பயண சவுகரியத்தை பொறுத்தவரையில், முன் இருக்கைகள் கூடுதல் சவுகரியத்தை வழங்குவது போன்று உள்ளன. குறிப்பாக, டிரைவர் இருக்கை ஆனது எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ் செய்யக்கூடியதாக உள்ளதால், பொருத்தமான டிரைவிங் பொசிஷனில் அமர்வது எளியதாகிறது.

மேலும், முன் இருக்கைகளில் தலையணைகள் பயணிகளின் கழுத்திற்கும், தலைக்கும் சிறப்பான சவுகரியத்தை வழங்குகின்றன. பின் இருக்கைகளை பொறுத்தவரையில், உயரமான டிரைவர் அமர்ந்தால் அவருக்கு பின்னால் அமர்வது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. பின் இருக்கை பயணிகளின் கால்முட்டி மற்றும் தலைப்பகுதிக்கு போதுமான இடவசதி கிடைக்கிறது என்றாலும், கால் தொடை பகுதியில் கூடுதல் குஷின்களை வைத்துக் கொண்டால் மட்டுமே பயணம் இன்னும் சவுகரியமாக இருக்கும்.
அதேபோல், பின் இருக்கைகளில் அமர்பவர்கள் சறுகலான மேற்கூரையினால் தங்களது தலையை இடித்துக் கொள்ளாமல் காருக்குள் இறங்கவும்/ ஏறவும். நன்கு உயரமானவர்கள் இந்த காரில் பின் இருக்கைகளில் அமர வேண்டாம் என்பது எங்களது பரிந்துரைப்பு. ஏனெனில், பின் ஜன்னல் கண்ணாடிகளும் சிறியதாக வழங்கப்படுகின்றன. காருக்குள் பெரிய அளவில் பனோராமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், காருக்குள் வழங்கப்பட்டுள்ள லைட் செட்-அப் கொஞ்சம் எரிச்சலூட்டுவதாக உள்ளது. இதற்கு பதிலாக வேறு ஏதேனும் லைட் செட்-அப் ஆப்ஷன்களை மஹிந்திரா வழங்கினால் நன்றாக இருக்கும். டேஸ்போர்டுக்கு உள்ளே கூல்டு பகுதி ஆனது நாங்கள் எதிர்பார்த்ததை காட்டிலும் சற்று சிறியதாக உள்ளது. அதேபோல், பொருட்களை வைப்பதற்கு கதவுகளில் கொடுக்கப்படும் ஸ்டோரேஜ் வசதியும் சற்று சிறியதாக உள்ளது.
இந்த சிறு, சிறு குறைப்பாடுகள் இருந்த போதிலும், காருக்குள் 2-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம் நம்மை கவர்கிறது. இந்த ஸ்டேரிங் சக்கரத்தில் சில கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒரு பொத்தானின் மூலமாக, ஒற்றை-பெடல் உதவியுடன் இந்த காரை ஓட்ட முடிகிறது. இவற்றுடன், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே மற்றும் 360-டிகிரி கேமரா உள்ளிட்டவை இந்த எலக்ட்ரிக் காரினுள் வழங்கப்பட்டுள்ள மற்ற சிறப்பம்சங்கள் ஆகும்.

பின்பக்க விண்ட்ஸ்க்ரீன் சிறியதாக வழங்கப்பட்டுள்ளதால், ரிவர்ஸில் காரை பார்க் செய்வதற்கு 360-டிகிரி கேமராவை பயன்படுத்தியே ஆக வேண்டும். மஹிந்திரா எக்ஸ்.இ.வி 9இ காரில் வழங்கப்பட்டதை போன்று, பிஇ 9இ காரிலும் ஏகப்பட்ட பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுள் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், லெவல் 2+ அடாஸ் (ADAS)-ஐ சொல்லலாம். ரேடார் மற்றும் கேமராக்கள் உடன் அடாஸ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 7 ஏர்பேக்குகள் (ஒன்று டிரைவரின் கால்முட்டிகளுக்கு), டிரைவரை எச்சரிக்கும் சிஸ்டம், டிரைவர் பிளைண்ட்-ஸ்பாட் மானிடரிங், ஆட்டோ பார்க்கிங், இபிடி உடன் ஏபிஎஸ், ஹில் ஹோல்ட் கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவையும் பிஇ 6இ எலக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், உங்களது செல்ல பிராணிகளை பத்திரமாக கொண்டு செல்லவும் பாவ்பல் என்கிற பெயரில் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

பரிமாண அளவுகள் & பவர்டிரெயின்: மஹிந்திராவின் இன்க்லோ ஸ்கேட்போர்டு பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டுள்ள பிஇ 6இ எலக்ட்ரிக் காரின் நீளம் 4,371மிமீ, அகலம் 1,907மிமீ மற்றும் உயரம் 1,627மிமீ ஆகும். முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 2,775மிமீ ஆகவும், கிரவுண்ட் கிளியரென்ஸ் எனப்படும் தரையில் இருந்து காரின் அடிப்பகுதியின் உயரம் 207மிமீ ஆகவும் உள்ளது.
வெறும் 10 மீட்டர் நீளமுள்ள இடத்தில் கூட இந்த எலக்ட்ரிக் காரை திருப்பிவிட முடியும் என்கிறது மஹிந்திரா. 59kWh மற்றும் 79kWh என 2 விதமான பேட்டரி ஆப்ஷன்களை பிஇ 6இ எலக்ட்ரிக் காரில் மஹிந்திரா வழங்கியுள்ளது. இதில் 59kWh பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 535கிமீ தொலைவிற்கும், 79kWh பேட்டரியில் 682கிமீ தொலைவிற்கும் பயணிக்கலாம் என MIDC மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதில், 59kWh பேட்டரியை 140 கிலோவாட்ஸ் டிசி ஃபாஸ்ட் சார்ஜரின் உதவியுடன் வெறும் 20 நிமிடங்களில் 20%-இல் இருந்து 80% சார்ஜ் நிரப்பிவிட முடியும். அதுவே, 7.2 கிலோவாட்ஸ் ஏசி சார்ஜரில் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்ப 8.7 மணிநேரமும், 11 கிலோவாட்ஸ் சார்ஜரில் 6 மணிநேரமும் தேவைப்படும். 79kWh பேட்டரியை 175 கிலோவாட்ஸ் டிசி ஃபாஸ்ட் சார்ஜரின் உதவியுடன் 20 நிமிடங்களில் 20%-இல் இருந்து 80% சார்ஜ் நிரப்பிவிடலாம்.
அதுவே, 7.2 கிலோவாட்ஸ் ஏசி சார்ஜரின் மூலம் 11.7 மணிநேரத்திலும், 11 கிலோவாட்ஸ் ஏசி சார்ஜரின் மூலம் 8 மணிநேரத்திலும் சார்ஜ் நிரப்பிவிடலாம். பிஇ 6இ எலக்ட்ரிக் காரின் இரு பேட்டரிகளும் சீனாவின் பிஒய்டி நிறுவனத்தின் பிளேட் டெக்னாலஜி மற்றும் லித்தியம்-இரும்பு-பாஸ்பேட் வேதியியலை பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளன. இந்த இரு பேட்டரிகளும் காருக்கு பின்பக்கத்தில் பொருத்தப்பட்ட சிங்கிள் எலக்ட்ரிக் மோட்டாருக்கு ஆற்றலை வழங்குகின்றன.

59kWh பேட்டரி உடன் எலக்ட்ரிக் மோட்டாரில் இருந்து அதிகப்பட்சமாக 228 பிஎச்பி மற்றும் 380 என்.எம் டார்க் திறன் வரையிலும், 79kWh பேட்டரி உடன் எலக்ட்ரிக் மோட்டாரில் இருந்து 281.6 பிஎச்பி வரையிலும் இயக்க ஆற்றலை பெறலாம். டார்க் திறனில் இரு பேட்டரிகளுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. பிஇ 6இ காரில் 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 6.7 வினாடிகளில் எட்டிவிடலாம்.
எக்ஸ்.இ.வி 9இ எலக்ட்ரிக் காரை போன்று, இந்த காரிலும் முன்பக்கத்தில் மெக்பெர்சன் ஸ்ட்ரட் ஐ-லிங்க் இண்டிபெண்டெண்ட் சஸ்பென்ஷன் மற்றும் ஸ்டெபிளைசர் பார் உடன் செமி-ஆக்டிவ் டேம்பர்ஸ்-உம், பின்பக்கத்தில் 5-லிங்க் இண்டிபெண்டெண்ட் சஸ்பென்ஷன் & ஸ்டெபிளைசர் பாரும் கொடுக்கப்பட்டுள்ளன. பிரேக் பணிகளுக்கு, ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பிரேக் கொடுக்கும்போது வீணாகும் சார்ஜை ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் ஆனது மீண்டும் பேட்டரிக்கே வழங்குகிறது.

டிரைவிங் இம்பிரெஷன்ஸ்: சென்னை சாலைகளில் மஹிந்திரா பிஇ 6இ காரை ஓட்டி செல்லும்போது சிலர் காரை ஆச்சிரியத்துடன் பார்ப்பதை காண முடிந்தது. சில வாகன ஓட்டிகள் கூட காரை விசித்திரமாக பார்த்தனர். ஏனெனில், சாலையில் இயக்கும்போது இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் கார் அந்த அளவிற்கு, எதிர்காலத்தில் இருந்து வந்த கார் போன்று காட்சியளிக்கிறது.
காருக்குள் மிகவும் சிறந்த இருக்கை என்றால், அது டிரைவர் இருக்கை தான். பார்க்கிங் பிரேக்கை கொடுக்காமல், ரேஸ் மோடில் சென்றால் எளிதாக 100kmph வேகத்தை எட்ட முடிகிறது. சென்னைக்கு அருகே உள்ள மஹிந்திரா தொழிற்சாலையில் பிஇ 6இ காரை ஓட்டிய போது, நாங்கள் அதிகமாக ரேஸ் மோடில் தான் காரை ஓட்டினோம்.

எக்ஸ்.இ.வி 9இ காரை காட்டிலும் இந்த எலக்ட்ரிக் காரில் சஸ்பென்ஷன் சற்று கூடுதல் விரைப்பானதாக உள்ளது. ரேஸ் மோடில் வேகமாக வளைவுகளில் திரும்பும்போது விரைப்பான சஸ்பென்ஷன் செட்-அப்பை எங்களால் உணர முடிந்தது. இருப்பினும், முன்பக்க சஸ்பென்ஷனின் செமி-ஆக்டிவ் அட்ஜெஸ்டபிள் டேம்பிங் சாலையில் உள்ள பள்ளம், மேடுகளை எளிதாக கையாள்கிறது.
காருக்குள் சதுரமான ஃபிளேட்-பாட்டம் ஸ்டேரிங் சக்கரம் பயன்படுத்துவதற்கு ஆரம்பத்தில் எங்களுக்கு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. ஆனால், போக, போக பயன்படுத்துவதற்கு எடை குறைவானதாகவும், எளியதாகவும் இருந்தது. நெடுஞ்சாலைகளில் செல்லும்போது வெறும் 1 விரலில் ஸ்டேரிங் சக்கரத்தை பயன்படுத்த முடிகிறது. பிஇ 6இ காரின் எடை 2.2 டன்களாக இருப்பினும், ஓட்டும்போது கார் அந்த அளவிற்கு அதிக எடை உடன் இருப்பதுபோல் தெரியவில்லை.

அதிவேகமாக செல்லும்போது, அதற்கேற்ப ஸ்டேரிங் சக்கரத்தின் எடையும் அதிகரிக்கிறது. சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகளுடன் பிரேக்-பை-வயர் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளதால், பிரேக் கொடுக்கும்போது ஆரம்பத்தில் அதிக பிரேக் கிடைக்கிறது. லெவல் 3-இல் ரீஜெனரேட்டிவ் பிரேக் சிஸ்டம் சிறப்பாக செயல்படுகிறது. இருப்பினும், மென்மையான பயணத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு ரீஜெனரேட்டிவ் சிஸ்டத்தின் செயல்பாடு கொஞ்சம் ஆக்ரோஷமானதாக தோன்றலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையை சொல்ல வேண்டுமென்றால், புதிய மஹிந்திரா பிஇ 6இ எலக்ட்ரிக் காரை இன்னும் கூடுதல் விலையுடன், கூடுதல் சொகுசு வசதிகள் உடன் எதிர்பார்த்தோம். ஆனால், மஹிந்திரா நிறுவனம் இந்த எலக்ட்ரிக் காரை அப்பர்-மிடில் கிளாஸ் மக்களும் வாங்கக்கூடிய வகையில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. மற்ற எலக்ட்ரிக் கார்களை காட்டிலும் ஓட்டுவதற்கு இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் கார் வித்தியாசமாக உள்ளதை கூறியே ஆக வேண்டும்.

சறுகலான மேற்கூரையினால், பின் வரிசை இருக்கையில் போதுமான இடவசதி கிடைக்காதது உள்பட இந்த காரில் சில குறைப்பாடுகளும் உள்ளதை மறுப்பதற்கில்லை. ஏற்கனவே கூறியதுபோல், இந்த காரை சிங்கிள்-பெடலில் டிரைவ் செய்யலாம். ஆனால், இந்த வசதியை சோதித்து பார்க்கும் அளவிற்கு எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.


Click it and Unblock the Notifications









