காரின் விலை 20 லட்ச ரூபாய் தான், ஆனா பென்ஸ் கார்களுக்கே சவால் விடுது! காரை விட்டு இறங்க மனசே வரல!
மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் (Mahindra XUV 9S), எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் சந்தையில் மிக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்க்லோ (INGLO) பிளாட்ஃபார்மில் கட்டப்பட்ட இந்த புதிய 7 இருக்கைகள் கொண்ட எலெக்ட்ரிக் கார், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் எக்ஸ்இவி 9இ காருக்கு இணையான பிரீமியம் அனுபவத்தை வழங்குவதாக மஹிந்திரா உறுதியளித்துள்ளது. மேம்பட்ட தொழில்நுட்பம், விசாலமான உட்புறம் மற்றும் சிறந்த செயல்திறன் ஆகியவற்றின் கலவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த கார் உருவாக்கப்பட்டு உள்ளது.
குடும்பங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இது, திறமையான எலெக்ட்ரிக் காரை விரும்புவோரை இலக்காகக் கொண்டுள்ளது. இத்தகைய மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காரை நாங்கள் சமீபத்தில் சாலையில் ஓட்டி பார்த்து, இந்த கார் எப்படி செயல்படுகிறது என்பதை ஆராய்ந்தோம். அதன் மூலம் எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை இங்கு முழு டெஸ்ட் டிரைவ் (Test Drive) விமர்சனமாக வழங்கியுள்ளோம்.

மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் விமர்சனம் – வெளிப்புற அம்சங்கள்
மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் காரின் வெளிப்புற வடிவமைப்பு ஒரு நவீன தோற்றத்தை அளிக்கிறது. முன்புறத்தில் பகல்நேரத்திலும் இயங்கும் இணைக்கப்பட்ட எல்இடி விளக்குகள் (DRLs) மற்றும் இரு விதமாக செயல்படக்கூடிய எல்இடி ஹெட்லைட்கள் உள்ளன. மூடிய கிரில்லில் மஹிந்திரா இவி லோகோ பெருமையுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பக்கவாட்டில், இந்த காரின் வடிவமைப்பு எக்ஸ்இவி 9இ மற்றும் எக்ஸ்யூவி700 (XUV700) ஆகிய இரு மஹிந்திரா கார்களில் இருந்தும் ஹைலைட்களை பெற்றுள்ளது. எக்ஸ்யூவி 9எஸ் காரின் 18 அங்குல சக்கரங்கள் 235/60 அளவுள்ள ஆர்18 டயர்களைக் கொண்டுள்ளன; இவை ஒரு சமநிலையை அளிக்கின்றன. காரின் பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு ORVM-கள் இரு நிறங்களில், ஒருங்கிணைந்த டர்ன் இண்டிகேட்டர்களுடன் வருகின்றன.
பறித்து இழுக்கக்கூடியதான ஃப்ளஷ் கதவு கைப்பிடிகள் காரின் நேர்த்தியான தோற்றத்திற்கு பங்களிக்கின்றன. பனோரமிக் சன்ரூஃப் (Panoramic Sunroof) உட்புற கேபினின் காற்றோட்டத்தை அதிகரிக்கிறது. பின்புற வடிவமைப்பு சுத்தமாகவும் நேர்த்தியாகவும் உள்ளது, இதில் வ்ராப்-அரவுண்ட் டெயில்லைட்கள் உள்ளன. இது மிகவும் பிரகாசமான ஒளியைத் தவிர்க்கிறது.
மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் விமர்சனம் – உட்புற சிறப்பம்சங்கள்
காருக்கு உள்ளே நுழைந்ததும், மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ்-இன் தொழிற்நுட்ப அம்சங்கள் நிறைந்த மற்றும் ஆடம்பரமான கேபின் நம்மை வரவேற்கிறது. டாஷ்போர்டு மூன்று திரை அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பில் 12.3 அங்குல இன்போடெயின்மென்ட் சிஸ்டம், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் பிரத்யேக பயணிகள் திரை ஆகியவை அடங்கும்.

இதில் பயணிகள் திரை ஆனது ஓட்டுநரின் கவனம் சாலையில் இருந்து விலகாத வண்ணம் செய்திகள் மற்றும் பொழுதுபோக்குகளை வழங்குகிறது. ஸ்டீயரிங் சக்கரம் ஃப்ளாட்-பாட்டம் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஸ்டேரியங் சக்கரத்தில் சில கண்ட்ரோல்கள் உள்ளன. மேலும், ரீ-ஜெனெரேட்டிவ் பிரேக்கிற்கான பொத்தான்களும் உள்ளன.
மின்சாரத்தால் சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் மற்றும் இணை-பயணிக்கான இருக்கைகள் மட்டுமன்றி, முன் மற்றும் இரண்டாவது வரிசை இருக்கைகள் வெண்டிலேட்டட் (Ventilated) வசதி உடன் உள்ளன. இது இந்த காரின் குறிப்பிடத்தக்க பிரீமியம் அம்சமாகும். இரண்டாவது வரிசையில் மடிக்கக்கூடிய ஆர்ம்ரெஸ்ட் மற்றும் சரிசெய்யக்கூடிய மூன்று தலையணைகளும் உள்ளன.

"பாஸ் மோட்" (Boss Mode) பொத்தான், பின் இருக்கை பயணிகள் கால்களை நீட்டுவதற்கு வசதியாக முன் இருக்கைகளை சரிசெய்ய அனுமதிக்கிறது. அன்றாட நடைமுறைக்கு ஏற்ப அதிக ஸ்டோரேஜ் பகுதிகளை கொண்டுள்ள புதிய எக்ஸ்இவி 9எஸ் காரில் இரண்டு வயர்லெஸ் சார்ஜிங் பேட்கள் மற்றும் 12 வோல்ட் சாக்கெட்டுகளும் இடம்பெற்றுள்ளன.
ஆடியோ சிஸ்டத்தைப் பொறுத்தவரை, எக்ஸ்இவி 9எஸ் கார் 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டத்தைக் கொண்டுள்ளது. இது அதிவேக அனுபவத்திற்காக டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மஹிந்திராவின் செயற்கை நுண்ணறிவு (மாயா) அமைப்புடன் செயல்படுகிறது. இது விரைவாக ரெஸ்பான்ஸ் செய்யக்கூடிய மற்றும் மென்மையாக செயல்படக்கூடிய யூஸர் இண்டர்ஃபேஸ் (User Interface)-ஐ உறுதி செய்கிறது.

இவற்றுடன், இந்த எஸ்யூவி காரில் லெவல்-2 மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகளும் (ADAS) உள்ளன. இந்த தொகுப்பில் ஐந்து ரேடார்கள், 12 அல்ட்ராசோனிக் சென்சார்கள் மற்றும் நான்கு கேமராக்கள், ஓட்டுநர் சோர்வை கண்டறிதல் மற்றும் நேரடி 360-டிகிரி பார்வை போன்ற அம்சங்கள் உள்ளன. மேலும், 540-டிகிரி கேமரா ஆனது கண்காணிப்பு அமைப்பாக செயல்படுகிறது.
மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் விமர்சனம் – பரிமாண அளவுகள்
மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் கார் 4789 மிமீ நீளம், 1907 மிமீ அகலம் மற்றும் 1694 மிமீ உயரம் கொண்டது. இதன் வீல்பேஸ் (முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம்) 2775 மிமீ வரை நீண்டுள்ளது. தரையில் இருந்து காரின் அடிப்பகுதி 207 மிமீ உயரத்திலும், பேட்டரி 218 மிமீ உயரத்திலும் உள்ளது.

காரின் பின்பக்கத்தில் பூட் ஸ்பேஸ் 663 லிட்டர்கள் கொள்ளளவில் உள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளை மடித்தால், இது தோராயமாக 1200 லிட்டராக விரிவடையும். இது இல்லாமல், காரின் முன்பக்கத்தில் பொனெட்டிற்கு அடியில் 150 லிட்டர்கள் கொள்ளவிலும் இடவசதி உள்ளது. டர்னிங் சர்க்கிள் விட்டம் 10 மீட்டராகும். அதாவது, 10 மீட்டருக்குள் காரை முழுமையாக யு-டர்ன் செய்துவிட முடியும்.
மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் விமர்சனம் – டிரைவிங் அனுபவம்
மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் ஒரு சுத்திகரிக்கப்பட்ட ஓட்டுநர் அனுபவத்தை வழங்குகிறது. இது ஒரு சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் மோட்டாரால் இயக்கப்படுகிறது. இந்த மோட்டார் அதிகப்பட்சமாக 380 என்.எம் டார்க் திறனை வழங்குகிறது. பவர் வெளியீடு பேட்டரி பேக்கைப் பொறுத்து மாறுபடும். அதாவது, 59kWh பேட்டரியில் 231 எச்பி பவர் வரையிலும், 79kWh பேட்டரியில் 286 எச்பி பவர் வரையிலும் இயக்க ஆற்றல் கிடைக்கும்.

எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் கார் தோராயமாக 7.7 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ/மணி வேகத்தை எட்டுகிறது. இந்த காரின் அதிகப்பட்ச வேகம் 202 கிமீ/மணி ஆகும். பனி, அன்றாடம், விளையாட்டு மற்றும் ரேஸ் என நான்கு டிரைவிங் மோட்கள் இந்த எலெக்ட்ரிக் காரில் உள்ளன. சஸ்பென்ஷன் சிஸ்டம் பயண சவுகரியத்தை மேம்படுத்துகிறது.
காரின் முன்பக்கத்தில் உள்ள இண்டெலிஜென்ட் அடாப்டிவ் செமி-ஆக்டிவ் டேம்பர்ஸ் பள்ளம் மேடுகளில் 15 மில்லி விநாடிகளில் செயல்படுகிறது. பின்பக்கத்தில் ஸ்டாபிளைசர் பார் உடன் தன்னிச்சையாக செயல்படக்கூடிய 5-லிங்க் சஸ்பென்ஷன் உள்ளது. ஸ்டீயரிங் அமைப்பு இலகுவாக இருப்பதால் ஹேண்ட்லிங் நன்றாக இருக்கிறது. 10 மீட்டர் டர்னிங் ஆரம் ஆனது நகர்ப்புறத்தில் எளிதாக காரை ஓட்டுவதற்கு உதவுகிறது. லித்தியம்-இரும்பு-பாஸ்பேட் (LFP) பேட்டரி ஆனது அதிவேக சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

180kW DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் இந்த காரின் பேட்டரியை வெறும் 20 நிமிடங்களில் 0-80% வரை சார்ஜ் செய்யலாம். இதேபோல், காரின் ரேஞ்சும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 59kWh பேட்டரியில் அதிகப்பட்சமாக 521 கிமீ தொலைவிற்கும், 79kWh பேட்டரியில் 679 கிமீ தொலைவிற்கும் காரை இயக்கலாம் என MIDC சான்றளித்துள்ளது. காருக்குள் சூப்பர் சோனிக் சவுண்ட் சிஸ்டம் ஆனது காருக்கு வெளியில் இருந்து வரும் சத்தங்களையும் ஓட்டுநர் கேட்கக்கூடிய வகையில் பொருத்தப்பட்டுள்ளது.
மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் விமர்சனம் – டிரைவ்ஸ்பார்க் கருத்து
மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ், 7 இருக்கைகள் கொண்ட எலெக்ட்ரிக் எஸ்யூவியாக அதன் வாக்குறுதியை நிறைவேற்றுகிறது. இது மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் வசதி அம்சங்களை வலுவான செயல்திறனுடன் ஒருங்கிணைக்கிறது. அத்துடன், எக்ஸ்இவி 9எஸ் குறிப்பிடத்தக்க ரேஞ்சையும், அதிவேக சார்ஜிங் திறன்களையும் வழங்குகிறது.

குடும்பங்கள் அல்லது தொழில்நுட்ப ஆர்வலர்கள் ஒரு விசாலமான மற்றும் நன்கு தொழிற்நுட்ப அம்சங்கள் நிறைந்த எலெக்ட்ரிக் காரைத் தேடுகிறவர்களுக்கு, எக்ஸ்இவி 9எஸ் ஒரு சிறந்த தேர்வாகும். இதன் சவாலான விலை மற்றும் நவீன வசதிகள் அதன் பிரிவில் இந்த புதிய மஹிந்திரா எலெக்ட்ரிக் காரை ஒரு குறிப்பிடத்தக்க போட்டியாளராக முன் நிறுத்துக்கின்றன.


Click it and Unblock the Notifications









