மஹிந்திரா ஷோரூமுக்கு மக்கள் படையெடுக்க போறாங்க!! காரில் இல்லாத விஷயம் என்று எதையும் சொல்ல முடியாது...
மஹிந்திரா (Mahindra), எஸ்யூவி கார்களை வடிவமைப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனம் என்பது ஊரறிந்த விஷயம். டாடா மோட்டார்ஸை போன்று எலக்ட்ரிக் கார்கள் விஷயத்திலும் ஆர்வமாக இருக்கும் மஹிந்திரா நிறுவனம் தனது பிரபலமான கார்களை அவ்வப்போது அப்டேட் செய்வதையும் மறப்பதில்லை. அந்த வகையில் தற்போது, மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் மேம்படுத்தப்பட்டு உள்ளது.
மஹிந்திராவின் சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரான எக்ஸ்யூவி300 -இன் நெக்ஸ்ட் ஜென்ரேஷன் மாடல் 'எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ' (XUV 3XO) என்கிற பெயரில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் எஸ்யூவி கார்களுள் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகும். இருப்பினும், தைரியமாக காரின் பெயரை மஹிந்திரா நிறுவனம் மாற்றியுள்ளது.

எக்ஸ்யூவி300 காரை மஹிந்திரா நிறுவனம் முற்றிலுமாக மெருக்கேற்றி உள்ளதாக கூறப்படுகிறது. உண்மையில், எக்ஸ்யூவி300 கார் முழுவதுமாக மேம்படுத்தப்பட்டுள்ளதா? புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ பார்ப்பதற்கும், ஓட்டுவதற்கும் எப்படி உள்ளது? இந்த கேள்விகளுக்கான பதில்களை கண்டறியும் முயற்சியாக, புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரை நாங்கள் ஓட்டி பார்த்தோம். எங்களது ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூவை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
வெளிப்பக்க தோற்றம்: பழைய எக்ஸ்யூவி300 மற்றும் புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ இவை இரண்டும் அவற்றின் வெளிப்பக்க தோற்றத்தில் தான் முற்றிலுமாக வேறுப்படுகின்றன. ஏனெனில், எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரின் வெளிப்பக்கத்தை புதுமையானதாக மஹிந்திரா நிறுவனம் வடிவமைத்துள்ளது. புதிய மாடலின் தோற்றம் புதுமையானதாகவும், மாடர்ன் தரத்திலும் உள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரின் தோற்றம் எங்களை மிகவும் கவர்ந்துவிட்டது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள், சிலர் அந்த காரை நேரில் பார்த்திருப்பீர்கள். கிட்டத்தட்ட எக்ஸ்யூவி700 காரின் முன்பக்கத்தை தான் கொஞ்சம் மாற்றங்களை செய்து புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காருக்கு மஹிந்திரா நிறுவனம் வழங்கியுள்ளது. ஆனால், எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார் அளவில் சிறியதாக உள்ளதால், எக்ஸ்யூவி700 காரை காட்டிலும் முகப்பு பகுதி இந்த புதிய காரில் அருமையானதாக உள்ளது.
ஆனால், எக்ஸ்யூவி700 காரின் ஹெட்லைட்ஸ் மற்றும் டி.ஆர்.எல்-கள் புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரில் அந்த அளவிற்கு எடுப்பாக இல்லை. அதேபோல், எக்ஸ்யூவி700 காரின் க்ரில் டிசைனும், எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரின் அகலத்திற்கு பொருத்தமானதாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பம்பரின் பாதி கீழ்பகுதியில் காற்று உள்ளே செல்வதற்காக ஏர் இண்டேக் கொடுக்கப்பட்டுள்ளது. காரின் சைடு பகுதியில் பெரியதாக மாற்றமில்லை. வழக்கம்போல், எளிமையாகவும், நேர்த்தியாகவும் உள்ளது.

இருப்பினும், புதிய டிசைனிலான 17-இன்ச் அலாய் சக்கரங்களின் டிசைன் எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. கருப்பு நிறத்திலான ரூஃப் மற்றும் ஸ்பாய்லர் காரின் பின்பக்கத்துடன் அழகாக ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. "இன்ஃபினிட்டி" எல்இடி டெயில்லைட்களை இணைக்கும் விதத்தில் வழங்கப்பட்டுள்ள லைட்பார் புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காருக்கு மாடர்ன் தோற்றத்தை வழங்குகிறது.
உட்பக்க தோற்றம் & வசதிகள்: புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காருக்குள் நுழைந்துவிட்டீர்கள் எனில், காரின் வெளிப்பக்க தோற்றத்தை மறந்துவிடுவீர்கள். ஏனெனில், அந்த அளவிற்கு இந்த புதிய காரின் உட்பக்கம் மிகவும் கவர்ச்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காருக்குள் டேஸ்போர்டு மற்றும் டோர் கார்ட்கள் மட்டுமே கருப்பு நிறத்தில் உள்ளன. இவை தவிர்த்து, புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரின் கேபின் முழுவதுமாக வெள்ளை நிறத்தில் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

காருக்குள் டேஸ்போர்டின் டிசைன் நமக்கு மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் காரை ஞாபகப்படுத்துகிறது. டேஸ்போர்டில் இன்ஃபோடெயின்மெண்ட்டிற்கு ஒன்று, இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு ஒன்று என 10.25 இன்ச்சில் இரு திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளேவை ஏற்கக்கூடியதாக உள்ள இன்ஃபோடெயின்மெண்ட் பொழுதுப்போக்கு திரை உடன் 7 ஸ்பீக்கர்களை கொண்ட ஹர்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், மஹிந்திராவின் அட்ரெனாக்ஸ் கனெக்டட் கார் செட்-அப்பை இந்த இன்ஃபோடெயின்மெண்ட் திரை கொண்டுள்ளதால், இதன் மூலமாக உங்களது எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரை கண்ட்ரோல் செய்யலாம். இந்த புதிய காரில் 940மிமீ x 870மிமீ அளவிற்கு நன்கு பெரியதான சன்ரூஃப் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரில் உள்ள ட்யூயல்-ஸோன் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டத்தை ரிமோட் மூலமாக கண்ட்ரோல் செய்யலாம்.

இவற்றுடன், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், வயர்லெஸ் போன் சார்ஜர், மல்டிபிள் டைப் ஏ மற்றும் டைப் சி (65 வாட்ஸ் வரையில்) யுஎஸ்பி சார்ஜிங் வசதிகள், கேபினை சுற்றிலும் விளக்குகள், 360-டிகிரி சரவுண்ட் கேமரா மற்றும் லெதரேட் இருக்கைகள் உள்ளிட்டவையும் புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரில் உள்ளன. பயணிகளின் பாதுகாப்பிற்காக, 6 ஏர்பேக்ஸ், 4-வீல் டிஸ்க் பிரேக், இபிடி உடன் ஏபிஎஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைக்கான ஆங்கர் பாயிண்ட்ஸ் மற்றும் லெவல்-2 அடாஸ் வசதிகள் இடம்பெற்றுள்ளன.
என்ஜின் & கியர்பாக்ஸ் சிஸ்டம்: புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரில் என்ஜின் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் கிடையாது. 1.2 லிட்டர் எம்.பி ஃபியுயல்-இன்ஜெக்டட் பெட்ரோல், 1.2 லிட்டர் டி.ஜி.டி.ஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் பழைய எக்ஸ்யூவி300 காரில் வழங்கப்பட்டு வந்தன. இவை அப்படியே புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரிலும் தொடரப்பட்டுள்ளன.

இதில் 1.2 லிட்டர் எம்.பி ஃபியுயல்-இன்ஜெக்டட் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 109 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த பெட்ரோல் என்ஜினை 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது புதிய 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வாங்கலாம். இதில், மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் 18.89kmpl வரையிலான மைலேஜும், டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனில் 17.96kmpl வரையிலான மைலேஜும் கிடைக்கும்.
1.2 லிட்டர் டிஜிடிஐ டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 129 பிஎச்பி மற்றும் 230 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த டர்போ என்ஜின் வழங்கும் ஆற்றல்கள் காரின் முன் சக்கரங்களுக்கு செல்கின்றன. மேலே கூறப்பட்ட 1.2 லிட்டர் எம்.பி என்ஜினை போலவே, இந்த டர்போ பெட்ரோல் என்ஜினையும் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வாங்கலாம்.

இதில் மேனுவல் ஆப்ஷனில் அதிகப்பட்சமாக 20.10kmpl வரையிலான மைலேஜை பெறலாம். ஆட்டோமேட்டிக் ஆப்ஷனில் 18.20kmpl வரையிலான மைலேஜ் கிடைக்கும். எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரில் கிடைக்கும் ஒரேயொரு டீசல் என்ஜின் ஆப்ஷனான 1.5 லிட்டர் எம் ஹாவ்க் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 115 பிஎச்பி மற்றும் 300 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
இந்த டீசல் என்ஜினின் பவர் அவுட்-புட்டும் காரின் முன் சக்கரங்களுக்கு செல்லும் வகையில் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெறலாம். இதில் மேனுவல் ஆப்ஷனில் 20.60kmpl வரையிலான மைலேஜையும், ஏஎம்டி ஆப்ஷனில் 21.20kmpl வரையிலான மைலேஜையும் பெற முடியும்.

டிரைவிங் அனுபவம்: நாங்கள் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரின் ஏ.எக்ஸ்7 எல் ஆட்டோமேட்டிக் வேரியண்டை ஓட்டி பார்த்தோம். இந்த காரில் 1.2 லிட்டர் டிஜிடிஐ டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு இருந்தது. ஏற்கனவே கூறியதுபோல், இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 128 பிஎச்பி மற்றும் 230 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருந்தது. ஜிப், ஜாப் மற்றும் ஸூம் என 3 விதமான டிரைவிங் மோட்கள் எங்களது காரில் இருந்தன. இதில் ஒவ்வொரு டிரைவிங் மோட்-ஐயும் மாற்றும்போது காரின் த்ரோட்டல் பெடலின் செயல்பாடு மற்றும் ஸ்டேரிங் சக்கரத்தின் விரைப்பு தன்மை உள்ளிட்டவை மாற்றமடைகின்றன.

இதில், ஸூம் டிரைவிங் மோட் ஆனது அதிவேகத்தில் காரை ஓட்டுவதற்கு ஏற்றதாக உள்ளது. இந்த டிரைவிங் மோட்-இல் த்ரோட்டல் நல்ல ரெஸ்பான்ஸை கொடுக்கிறது. அதேபோல், ஸ்டேரிங் சக்கரம் நன்கு விரைப்பாக மாறுகிறது. இதனால், ஸூம் மோடில் காரின் எடை அதிகரித்தது போன்று ஓர் உணர்வு கிடைப்பதால், காரை கண்ட்ரோல் செய்வது எளிதாகிறது. மேலும், இந்த மோடில் அதிவேகமாக பயணித்தாலும் சாலையில் பாதையை மாற்றுவது எளிதாகவே உள்ளது.
டர்போ என்ஜின் உடன் புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரை ஓட்டுவதற்கு மிகவும் ஜாலியாக இருந்தது. 0-இல் இருந்து 60kmph வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த மாடர்ன் எஸ்யூவி காரில் ஹைவேயில் எளிதாகவும், விரைவாகவும் 100kmph வேகத்தை எட்ட முடிகிறது. அதிவேகத்தில் ஓட்டினாலும், புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார் எந்தவொரு அதிர்வுகளும் இன்றி சீரான வேகத்தில் செல்கிறது.

அதிவேகத்தில் சென்றாலும், பழைய எக்ஸ்யூவி300 காரை காட்டிலும் விரைவாக நம்மால் இந்த காரை நிறுத்த முடிகிறது. இதற்கு, காரின் 4 சக்கரங்களிலும் வழங்கப்பட்டுள்ள டிஸ்க் பிரேக்குகள் தான் நாம் நன்றி சொல்லியாக வேண்டும். புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரின் சஸ்பென்ஷன் செட்-அப் சாலையில் உள்ள பள்ளம், மேடுகளை எளிதாக கையாள்கிறது. இருப்பினும், உடனடியாக காரை திருப்பும்போது சில தடுமாற்றங்களை நாங்கள் உணர்ந்தோம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய பெயர் மூலமாக, எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரை முற்றிலும் புதிய காராக காட்ட மஹிந்திரா முயற்சித்தாலும், புதிய முன் மற்றும் பின் பகுதியை தவிர்த்து காரில் வேறெந்த புதுமையான விஷயமும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த காரின் முன்பகுதி கூட நிறைய கஸ்டமர்களை ஈர்க்காது என்றே தெரிகிறது.

இருப்பினும், இந்தியாவில் 4 மீட்டர்களுக்கு குறைவான நீளத்தில் வாங்குவதற்கு இப்போதும் சிறந்த எஸ்யூவி கார் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ ஆகும். முடிந்த வரையில் இந்த காரின் விலையுயர்ந்த டாப் வேரியண்ட்டை வாங்க பாருங்கள். ஏனெனில், இவ்வாறான சிறிய அளவிலான கார்களை ஆற்றல்மிக்க என்ஜின் உடன் ஓட்டுவது இன்னும் ஜாலியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









