Maruti FRONX கார் இப்படி இருக்கும்னு எதிர்பார்க்கல! முழு Review இதோ உங்களுக்காக!
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகி நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியைத் தனது நிறுவனத்தின் எஸ்யூவி கார்களுக்கான எதிர்காலத்தைக் காட்டும் வகையில் அமைத்தது.
இந்த கண்காட்சியில் அந்நிறுவனம் இவிஎக்ஸ், 5 டோர் ஜிம்னி ஆகிய காருடன், பலேனோவை அடிப்படையா கொண்ட பலேனோ கிராஸ் காராக ஃப்ரான்க்ஸ் காரை அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கான புக்கிங் அப்பொழுதே துவங்கியது. இந்த கார் விரைவில் விற்பனைக்கும் வருகிறது.

இந்நிலையில் மாருதி சுஸூகி நிறுவனம் எங்கள் குழுவை புதிய ஃப்ரான்க்ஸ் காரை ஓட்டி பார்க்க அழைத்தது. டிரைவ்ஸ்பார்க் குழுவும் நேரடியாக அந்த காரை ஓட்டி பார்க்கக் கோவா சென்றது. மாருதியின் புதிய கிராஸ் ஓவர் எஸ்யூவியான ஃப்ரான்க்ஸ் கார் எப்படி இருக்கிறது என்பதைத் தான் இங்குக் காணப்போகிறோம்.
இந்த ஃப்ரான்க்ஸ் காரை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தும்போதே இந்த கார் பிரிமியம் நெக்ஸா கார்களில் முக்கிய டிசைன்களை தேர்ந்தெடுத்துக் கலந்து செய்தது போல இருந்தது. முன்பக்கம் கிராண்ட்விட்டாரா எஸ்யூவி காரை போலவும், ஸ்பிலிட் ஹெட்லைட் டிசைன் உடன் இருக்கிறது.

மேலும் முன்பக்கம் 3 எல்இடி டிஆர்எல் ஸ்டிராப்புகள், சுஸூகி பேட்ஜ் உடன் கிரில்லின் மேல் பகுதியில் க்ரோம் பட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த க்ரோம் பட்டை வெளிப்பக்கம் பெரியதாகவும் சுஸூகி பேட்ஜை நோக்கி வரும் போது சிறியதாகவும் மாறிவருகிறது.
கிராண்ட் விட்டாரா காரை போல ஃப்ரான்க்ஸ் காரிலும் முன்பக்க பம்பரில் என் குலோஸர்கள் உள்ளது. கிரில்லிற்கு கீழே க்ரே நிறத்தில் ஆங்குலர் ஏர் டேம் செக்ஷன் இருக்கிறது. ஃபாக்ஸ் பாஷ் பிளேட் அதற்குக் கீழ் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த காரின் பக்கவாட்டு பகுதியைப் பொருத்தவரை மாருதியின் பிரிமியம் ஹேட்ச்பேக் காரான பலேனோ காரின் லுக்கை பெற்றுள்ளது. குறிப்பாக சி பில்லரில் பிளாக் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டுள்ளது ஃப்ளோட்டிங் ரூஃப் லுக்கை கொடுக்கிறது.
இந்த காரில் 16 இன்ச் அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது. ஃப்ரான்க்ஸ் காரின் பின்பக்கத்தைப் பொருத்தவரை புதிய ஜொமென்ட்ரிக் புரோஸெசன் கட் உருவாக்கப்பட்டுள்ளது. ஷார்ப் ரேக்டு விண்ட் ஸ்கிரீன் மற்றும் கனெக்டெட்ட எல்இடி ஆகிய இந்த காருக்கு ஒரு நல்ல லுக்கை கொடுக்கிறது.
இந்த காரின் கதவைத் திறந்து உள்ளே சென்றால், அப்படியே பலேனோ காரின் ஃபீலை தருகிறது. டேஷ்போர்டு பெரும்பாலும் பிளாஸ்டிக்காக வழங்கப்பட்டுள்ளது. சாஃப்ட் டச் மெட்டிரில் இல்லை. இது இந்த காரில் மிக முக்கியமான மிஸ், பின்பக்க சீட் சொகுசாக இருக்கிறது. மாருதி நிறுவனம் இதில் ஆர்ம் ரெஸ்டை சேர்த்திருக்கலாம்.
இந்த ஃப்ரான்க்ஸ் காரின் கேபின் டூயல்டோன் தீமில் உள்ளது. இதன் டேஷ்போ்டு 9 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே ஆகிய அம்சங்களுடன் இருக்கிறது.இந்த டிஸ்பிளே மூலம் சுஸூகி கனெக்ட் சூட் கண்ட்ரோலையும் இயக்க முடியும் சுமார் 40க்கும் அதிகமான கனெக்டெட் கார் தொழிற்நுட்பங்கள் இதில் இருக்கிறது.
இந்த ஸ்கிரீனில் 360 டிகிரி கேமராவையும் கையாள முடியும். இது போக இந்த காரின் முக்கியமான அம்சம் ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, வயர்லெஸ் போன் சார்ஜிங் பேட் மற்றும் ஆட்டோமெட்டிக் வேரியன்டிற்கான பெடல் ஸ்விஃப்டர் ஆகியன இந்த காரில் இருக்கிறது.
இந்த புதிய மாருதி ஃப்ரான்க்ஸ் காரில் மொத்தம் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், இஎஸ்பி, ஹில் ஹோல்டு அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள், முன்னரே குறிப்பிடப்பட்டிருந்த 360 டிகிரி கேமரா, டே/நைட் ஐவிஆர்எம், குழந்தைகள் சீட்டிற்கான ஐஎஸ்ஓ ஃபிக்ஸ் ஆங்கர் பாயிண்ட் ஆகிய அம்சங்கள் இதில் இருக்கிறது.
இந்த புதிய ஃப்ரான்க்ஸ் கார் மொத்தம் 6 விதமான சிங்கிள் டோன் கலர்,3 டூயல் டோன் கலர் ஆப்ஷன்களில் வருகிறது. நெக்ஸா ப்ளூ, ஆர்க்டிக் ஒயிட், கிரன்டிவர் க்ரே, ஈஸ்டர்ன் பிரெளன், ஒப்புலென்ட் ரெட் மற்றும் ஸ்பிளென்டிட் சில்வர் ஆகிய சிங்கிள் டோன் கலர்களும், ஈஸ்டர்ன் பிரெளன்,ஒப்புலென்ட் ரெட், ஸ்பிளென்டெட் சில்வர் ஆகிய நிறங்களுடன் ப்ளூயிஷ் பிளாக் நிறமும் சேர்ந்து வருகிறது.
ஸ்பெக்ஸ் மற்றும் டைமென்ஷன்: மாருதி சுஸூகி ஃப்ரான்க்ஸ் காரை பொருத்தவரை மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கிறது. 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு கே12சி இன்ஜின் மற்றும் பலேனோ ஆர்எஸ் காரில் உள்ள 998 சிசி 3 சிலிண்டர் டர்போ சார்ஜ் இன்ஜின் இருக்கிறது. இரண்டு இன்ஜினும் மைல்டு ஹைபிரிட் தொழிற்நுட்பத்தை உட்புகுத்தியுள்ளது.
இந்த 1.2 லிட்டர் இன்ஜினும் பலேனோ காரில் உள்ள இன்ஜின் தான் இந்த இன்ஜின் 88.5 பிஎச்பி பவரை 6000 ஆர்பிஎம்மிலும், 113 என்எம் டார்க் திறனை 4400 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் உடன் இருக்கிறது.
3-சிலிண்டர் பூஸ்டர்ஜெட் இன்ஜினை பொருத்தவரை 98.7 பிஎச்பி பவரை 5500 ஆர்பிஎம்மிலும், 147.6 என்எம் டார்க் திறனை 2000-4500 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது.
இந்த மாருதி ஃப்ரான்க்ஸ் காரின் அளவுகளைப் பொருத்தவரை 3995 மிமி நீளமும், 1765 மிமீ அகலமும், 1550 மிமீ உயரமும் கொண்டது. இந்த காரின் வீல் பேஸை பொருத்தவரை 2520 மிமீ நீளம் கொண்டது. இந்த கார் 190 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. 37 லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் 308 லிட்டர் பூட் வசதிகளைக் கொண்டுள்ளது.
இந்த ஃப்ரான்க்ஸ் காரின் எடையைப் பொருத்தவரை 1.2 லிட்டர் இன்ஜின் உடன் 965 -975 கிலோ வரை இருக்கிறது. டர்போ சார்ஜ்டு வெர்ஷனை பொருத்தவரை 1015 முதல் 1060 கிலோ வரை இருக்கிறது.
டிரைவிங் இம்பிரஷன்: எங்கள் குழுவிற்கு ஃபிரான்க்ஸ் பூஸ்டர் ஜெட் இன்ஜின் உடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்ட கார் வழங்கப்பட்டது. இந்த இன்ஜின் பெயர் தான் பூஸ்டர் என இருக்கிறது. ஆனால் உண்மையில் இது பூஸ்டிங்காக இருக்கவில்லை.
இந்த 3 சிலிண்டர் இன்ஜின் கொஞ்சம் பிக்கப் எடுக்க நேரம் எடுக்கிறது. ஆனால் மிதமான மற்றும் அதிக வேகத்தில் செல்லும் போது சிறப்பாக இருக்கிறது. அதிக வேகத்தில் செல்லும் போது இன்ஜினிலிருந்து சத்தம் வருகிறது. 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டரை பொருத்தவரை, ஆரம்பத்தில் மெதுவாக இருக்கிறது. ஆனால் செல்ல செல்ல கியர் சுலபமாக மாறுகிறது.
இந்த கியர் பாக்ஸை ஆட்டோமெட்டிக் மோடில் விடுவது தான் சிறந்தது. இல்லை உடனடியாக பிக்கப் வேண்டும் என்றால் நீங்கள் பெடல் ஸ்விஃப்டர்களை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆக்ஸிலரேட்டரை அதிகம் மிதித்தால் தானாக கியர் 2 குறைந்த பிக்கப் கிடைக்கிறது. ஆனால் மைலேஜ் வேண்டும் என்றால் ஆக்ஸிலரேட்டரை மெதுவாக அழுத்தி பயணம் செய்வது சிறந்தது.
பிரேக்கை பொருத்தவரை முன்பக்கம் டிஸ்க் மற்றும் பின்பக்கம் டிரம் பிரேக்குகள் உள்ளன. பிரேக் பெடலை மிதித்ததும் நல்ல ரெஸ்பான்ஸை கொடுக்கிறது. சஸ்பென்சன் தான் இந்த ஃப்ரான்க்ஸ் காரில் சிறப்பான அம்சம். இது கொஞ்சம் ஸ்டிஃப்பாக வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பள்ள மேடான ரோடுகளில் ஓடும் போது எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
ஆனால் கார்னர்களில் செல்லும் போது கொஞ்சம் பாடி ரோல் ஆகிறது. ஸ்டியரிங்கை பொருத்தவரை அதிக வேகத்தில் செல்லும் போது மிகவும் லைட்டாக இருக்கிறது. இதனால் கான்ஃபிடென்ஸ் சரியாக இல்லை. ஆனால் சிட்டி டிராஃபிக்கிற்குள் இந்த லைட் ஸ்டியரிங் சிறப்பாக இருக்கும். நாங்கள் கோவாவில் குறுகிய சாலைகளில் செல்லும் போது இந்த லைட் ஸ்டியரிங் மிகவும் உதவியாக இருந்தது.
இறுதி தீர்ப்பு: மாருதி சுஸூகி நிறுவனம் ஃப்ரான்க்ஸ் காரை பலேனோ காரை எடுத்து அதை உயரத்தை அதிகரித்து எஸ்யூவி லுக்கை கொடுத்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதை ஓட்டிய எங்களுக்கு இதில் ஸ்போர்ட் மோட் இல்லாததும், அதிக வேகத்திலும் ஸ்டியரிங் லைட்டாக இருப்பதும் ஒரு பிரச்சனையாகத் தெரிகிறது.
ஃப்ரான்க்ஸ் கார் அனைத்து விதமான வாகன ஓட்டிகளுக்கானது கிடையாது. இந்த கார் கிராஸ் ஓவர் ஹேட்ச்பேக் கார் என்ன செய்யுமோ அதைச் செய்யும். மாருதியின் மந்திரமே அதன் கார்களின் விலை தான். இந்த கார் இந்த மாத இறுதிக்குள் ஷோரூம்களில் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









