சபாஷ், சரியான போட்டி... மாருதி எஸ் க்ராஸ் Vs ஹூண்டாய் க்ரெட்டா ஒப்பீடு
நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதியும், அதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ள ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனமும் ஒரே சமயத்ததில் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் களம் புகுந்துள்ளன. பட்ஜெட் கார் தயாரிப்பாளர் என்ற பிம்பத்தை போக்குவதற்காக, நெக்ஸா என்ற புதிய பிரிமியம் கார் ஷோரூம்களையும் திறந்து அதன் வழியாக தனது எஸ் க்ராஸ் என்ற புதிய க்ராஸ்ஓவர் மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
விற்பனையில் முன்னிலை வகிக்கும் இரு நிறுவனங்களும் ஒரே நேரத்தில் காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களை களமிறக்கி இருப்பதால் வாடிக்கையாளர்கள் திக்குமுக்காடி போயிருப்பதோடு, எந்த மாடலை தேர்ந்தெடுப்பது என்பதிலும் சற்று குழப்பமான நிலையில் இருக்கின்றனர். இந்த குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில், இரண்டில் எது பெஸ்ட் என்பதை கண்டறியும் விதத்தில் இந்த செய்தித் தொகுப்பை வழங்குகிறோம்.

விலை ஒப்பீடு
மாருதி எஸ் க்ராஸ்:
ரூ.8.34 லட்சம் முதல் ரூ.13.74 லட்சம் வரை
ஹூண்டாய் க்ரெட்டா:
ரூ.8.59 லட்சம் முதல் 13.60 லட்சம் வரை
அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலைகள்

டிசைன்: மாருதி எஸ் க்ராஸ்
இது க்ராஸ்ஓவர் மாடல் என்பதால், முழுமையான எஸ்யூவி போன்று கம்பீரமாக இல்லாமல் சாந்தமான வடிவமைப்பை பெற்றிருக்கிறது. அதேநேரத்தில், பிரிமியம் கார் மாடலுக்கு உண்டான அம்சங்களுடன் கவர்கிறது. இரட்டை க்ரோம் பட்டை க்ரில் அமைப்பு, பிளாஸ்டிக் கிளாடிங்குகள், ஸ்கிட் பிளேட், ரூஃப் ரெயில் போன்றவை எஸ்யூவி மாடலுக்குண்டான அம்சங்களாகவும், இதன் பாடி ஸ்டைல் செடான் மற்றும் எஸ்யூவி மாடலின் கலப்பு என்பதையும் தெளிவாக உணர்த்துகிறது.

டிசைன்: ஹூண்டாய் க்ரெட்டா
பர்ஃபெக்ட் எஸ்யூவி என்று ஓர் முழுமையான எஸ்யூவி மாடலாகவே இதனை ஹூண்டாய் மோட்டார்ஸ் பிரபலப்படுத்தி வருகிறது. ஹூண்டாய் கார்களுக்கே உரித்தான தனித்துவமான டிசைன் அம்சங்கள் இதிலும் உண்டு. இந்த எஸ்யூவியும் புளூயிடிக் ஸ்கல்ப்ச்சர் 2.0 டிசைன் தாத்பரியத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஒரு நவீனத்துவத்துடன் கவர்கிறது. டிசைனை பொறுத்தவரை, ஹூண்டாய் க்ரெட்டா வெற்றி பெறுகிறது.

எஞ்சின்: மாருதி எஸ் க்ராஸ்
இரண்டுவிதமான டீசல் எஞ்சின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இரண்டுமே ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் டீசல் எஞ்சின்கள்தான். இதில், 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானதுடன், இந்தியர்களின் நம்பிக்கையை வெகுவாக தக்க வைத்து வருகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது. அடுத்ததாக, 1.6 லிட்டர் டிடிஐஎஸ் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 320என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது.

எஞ்சின்: ஹூண்டாய் க்ரெட்டா
ஒரு பெட்ரோல் மற்றும் இரண்டுவிதமான டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அதிகபட்சமாக 122 பிஎச்பி பவரை அளிக்கும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 89 பிஎச்பி பவரை அளிக்கும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின், 126 பிஎச்பி பவரை அளிக்கும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது. எஞ்சின் ஆப்ஷனை பொறுத்தவரையில், இரண்டுமே இந்தியர்களின் நம்பகத்தன்மையை பெற்றவையே. ஆனால், மைலேஜ்தான் வித்தியாசப்படுத்துகிறது.

மைலேஜ்: மாருதி எஸ் க்ராஸ்
மாருதி எஸ் க்ராஸ் காரின் 1.3 லிட்டர் டீசல் மாடல் லிட்டருக்கு 23.65 கிமீ மைலேஜையும், 1.6 லிட்டர் மாடல் லிட்டருக்கு 22.07கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மைலேஜ்: ஹூண்டாய் க்ரெட்டா
ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் 1.6 லிட்டர் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 15.29 கிமீ மைலேஜையும், 1.4 லிட்டர் டீசல் மாடல் லிட்டருக்கு 21.38 கிமீ மைலேஜையும், 1.6 லிட்டர் டீசல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 19.67 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 17.01 கிமீ மைலேஜையும் தருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இங்குதான் மாருதியின் மாடல் என்பதை பரைசாற்றி, மைலேஜில் சற்று முன்னிலை பெறுகிறது மாருதி எஸ் க்ராஸ்.

முக்கிய வசதிகள்: மாருதி எஸ் க்ராஸ்
மாருதி எஸ் க்ராஸ் பிரிமியம் மாடல் என்பதை அதன் வசதிகளும் உணர்த்துகின்றன. க்ரூஸ் கன்ட்ரோல், மழை வந்தால் தானாக இயங்கும் வைப்பர்கள், எச்ஐடி ஹெட்லைட்ஸ், ஸ்மார்ட்ப்ளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, புஷ் பட்டன் ஸ்டார்ட் போன்ற பல நவீன தொழில்நுட்பங்கள் உள்ளன.

முக்கிய வசதிகள்: ஹூண்டாய் க்ரெட்டா
ஆடியோ நேவிகேஷன் சிஸ்டம், 5 இன்ச் டச்ஸ்கிரீன் ஆடியோ சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் சாவி, 17 இன்ச் டைமன்ட் கட் அலாய் வீல்கள், புராஜெக்டர் ஹெட்லைட்ஸ் போன்றவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. வசதிகளில் ஒன்றுக்கொன்று குறைவில்லை.

பாதுகாப்பு அம்சங்கள்
மாருதி எஸ் க்ராஸ் காரில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக்ஸ் போன்றவை உள்ளன. அதேநேரத்தில், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியில் வெகிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் மற்றும் ஏர்பேக்ஸ் உள்ளன. மேலும், சைடு கர்டெயின் ஏர்பேக்குகளும் ஹூண்டாய் க்ரெட்டாவில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு
சிறந்த டீசல் எஞ்சின்கள், மைலேஜ், புதிய நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட்டாலும், மாருதியின் விற்பனைக்கு பிந்தைய சேவையின் மீதுள்ள நம்பிக்கையை வைத்து முடிவு எடுக்கலாம். அதேநேரத்தில், கவர்ச்சிகரமான டிசைன், வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் போன்றவை ஹூண்டாய் க்ரெட்டாவின் வலு சேர்க்கும் அம்சங்களாக உள்ளன. விலையிலும் இரு மாடல்களுக்கும் சிறிய அளவிலான வித்தியாசம் மட்டுமே. எனவே, அனைத்து விதத்திலும் ஓர் பர்ஃபெக்ட் காம்பேக்ட் எஸ்யூவியை விரும்புவோர்க்கு ஹூண்டாய் க்ரெட்டாதான் சிறந்ததாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








