காரா இல்ல கப்பலா? ஊரே இப்படி ஒரு காருக்காக தான் வெயிட்டிங்! இந்த கார்ல அப்படி என்ன இருக்குது?
எம்ஜி எம்9 பிரசிடென்ஷியல் லிமோசின், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சொகுசு எலெக்ட்ரிக் MPV கார் ஆகும். இது தொழில் ரீதியிலான நிர்வாக பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் மார்கெட்டில் அதிக அகலம் மற்றும் நீளமான MPV கார் ஆகும். இதன் முக்கிய அம்சங்களாக எலெக்ட்ரிக் டிரைவ், பிரீமியமான உட்புற வசதிகள் மற்றும் டிரைவர்கள் மற்றும் பயணிகளுக்கு அதிகபட்ச வசதியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம். .
எம்9 காரின் வெளிப்புறம் கவர்ச்சிகரமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதில் நிறைய குரோம் அம்சங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன் பகுதியில் எல்இடி ஹெட்லைட்கள், எம்ஜி பேட்ஜ், பார்க்கிங் கேமரா மற்றும் ADAS அம்சங்களுக்கான ரேடார் உபகரணங்கள் உள்ளன. கிரில் பெரியதாக உள்ளது. இது லிமோசினின் பிரீமியம் தோற்றம் மேலும் மேம்படுத்துகிறது.

பக்கவாட்டில், 19-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் 235/55 R19 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. கீழ் பகுதியில் மற்றும் ஜன்னல் பகுதியில் குரோம் டிசைன்கள் உள்ளன. பெரிய கால் வைக்கும் பகுதி மற்றும் ஸ்லைடிங் டோர்கள் இதன் கிளாஸை எடுத்துக்காட்டுகின்றன. பின்புறத்தில், 'நீர்வீழ்ச்சி’ பாணியிலான எல்இடி டெயில் லைட்டுகள், EV பேட்ஜிங் மற்றும் பவர்டு டெயில் கேட் மற்றும் கூடுதல் குரோம் ட்ரிம் ஆகியவை உள்ளது.
எம்9-இன் உட்புறம் மென்மையான டச் பொருட்கள் மற்றும் 64 வண்ணங்களில் ஆம்பியன்ஸ் லைட்டுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிரைவர் மற்றும் முன் சீட்டில் உள்ள பயணிக்கு 8-வழிகளில் எலெக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட் செய்யும் முறையில் சீட்டுகள் உள்ளன. இதில் ஹீட், வென்டிலேட்டட் மற்றும் மசாஜ் செயல்பாடுகள், மெமரி ஃபங்சன்களுடன் உள்ளன. இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தில் 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் 7-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை உள்ளன. இது பெரும்பாலான வாகன செயல்பாடுகளைக் காண்பிக்கும்.

இரண்டாவது வரிசையில், இரண்டு சாய்வான கேப்டன் சீட்கள் உள்ளன. இவை 16-வழிகளில் எலெக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட் செய்யக்கூடியவை . இதில் வென்டிலேஷன், 8 வழிகளில் பயன்படுத்தக்கூடிய மசாஜ், வெப்பமூட்டும் மற்றும் நீட்டிக்கக்கூடிய கால் சப்போர்ட் போன்ற வசதிகள் உள்ளன. ஒவ்வொரு இருக்கையிலும் 5.2-இன்ச் டச் கண்ட்ரோல் பேனல், கப் ஹோல்டர்கள், USB Type-A மற்றும் Type-C சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் உள்ளது. டுயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், ஒரு பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ஒரு பிரீமியம் JBL சவுண்ட் சிஸ்டம் ஆகியவை இதில் உள்ளன.
மூன்றாவது வரிசையில், எம்9 இரண்டு பயணிகளுக்கான அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய தலை ஓய்வுகளுடன் போதுமான முழங்கால் மற்றும் ஹெட்ரூம் இடத்தையும் வழங்குகிறது. சேமிப்பு மற்றும் சார்ஜிங் பாயிண்ட்களும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் 3வரிசை சீட்டின் அருகே உள்ள ஜன்னல் பகுதிக்கு சன் ஷேடு வழங்கப்படவில்லை.

எம்ஜி எம்9 கார் ஒரு சிங்கிள் எலெக்ட்ரிக் மோட்டாரால் இயக்கப்படுகிறது. இது 90 kWh பேட்டரி பேக்கிலிருந்து ஆற்றலை பெறுகிறது. இந்த மோட்டார் 245 PS பவரை உருவாக்குகிறது. அதிகாரப்பூர்வ ரேஞ்ச் விவரங்கள் மற்றும் சார்ஜிங் நேரம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், ரியல் டைம் ரேஞ்ச் என்பது ஒருமுறை சார்ஜ் செய்தால் 450 கிமீ முதல் 500 கிமீ வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாகனம் ஃபாஸ்ட் மற்றும் ஏசி சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. 55 லிட்டர் ஃப்ரங்க் மற்றும் 465–1,700 லிட்டர் பூட் ஸ்பேஸ், லக்கேஜ் மற்றும் உபகரணங்களுக்கு போதுமான இடத்தை உறுதி செய்கிறது.
சாலையில், எம்9 பயணிகளுக்கு வசதியை அளிக்கும் வகையில் மென்மையான சஸ்பென்ஷன் செட்டப்பை கொண்டுள்ளது. இதன் அளவு மற்றும் எடை காரணமாக கொஞ்சம் பாடி ரோல் உள்ளது, ஆனால் பயணத்தின் தரம் சீராக இருக்கும். ஸ்டீயரிங் வெயிட்டை சிட்டி மற்றும் நெடுஞ்சாலைகளில் ஓட்டுவதற்கு ஏற்றது போல அட்ஜெஸ்ட் செய்ய முடியும். மூன்று ஓட்டுநர் மோடுகள் உள்ளன. அதன்படி நார்மல், எக்கோ மற்றும் ஸ்போர்ட், தேவைக்கேற்ப த்ரோட்டில் ரெஸ்பான்ஸை மாற்றும். இந்த பெரிய சைஸ் வாகனத்திற்கு அது வெளிப்படுத்தும் வேகம் அதிகம் தான். இருப்பினும், 0-100 கிமீ/மணி நேரத்தை அடைய ஆகும் நேரம் குறித்த தகவல் இன்னும் கிடைக்கவில்லை.

டிரைவருக்கு நிலை நல்ல விசிபிளிட்டி இருக்கிறது எம்9 பெரிய ஜன்னல்கள் மற்றும் கண்ணாடிகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் எம்9 காரை வாங்கி சொந்தமாக டிரைவ் செய்யாமல் டிரைவர் மூலம் இயக்கப்படும் வாகனமாகப் பயன்படுத்த எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இந்த காரை ஓட்டுபவர்களுக்கு டிரைவிங் அனுபவம் இனிமையானதாக இருக்கும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எம்ஜி எம்9 பிரசிடென்ஷியல் லிமோசின் எலெக்ட்ரிக் MPV பிரிவில் இடம், ஆடம்பரம் மற்றும் தொழிற்நுட்பத்தின் கலவையை வழங்குகிறது. பெரிய மற்றும் ஃபிளக்ஸிபிளான கேபின், அதிகபட்ச வசதி மற்றும் 7 ஏர்பேக்குகள், ADAS மற்றும் சோர்வு அலர்ட் சிஸ்டம் போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இதன் சிறப்பம்சங்களாகும். இந்த காரின் விலை ₹75 லட்சம் முதல் ₹80 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின் சீட்டில் வசதியை விரும்புபவர்களுக்கு, எம்9 ஒரு சிறந்த தேர்வாக இருக்கும், குறிப்பாக இந்தியாவில் பிஸ்னஸ் ரீதியிலான அல்லது அதிக நபர்கள் பயணிக்கும் குடும்பப் பயணங்களுக்கு இது ஏற்றது. இந்த கார் மார்கெட்டில் சிறப்பான வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பணக்காரர்கள் பலர் இப்படியான கார்களை தான் எதிர்பார்க்கின்றனர். முக்கியமான பயணங்களில் போனது பிஸ்னஸ் மீட்டிங்களை நடத்தவும், சொகுசான பயணங்களுக்கு ஏற்ற வாகனங்களை தேடி வருகின்றனர். அவர்களுக்கு இந்த கார் ஏற்றதாக இருக்கும். இதன் வடிவமைப்பே கப்பல் போல இருப்பதால் இதன் வசதிக்காக விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









